ஐபிஎல் 2020: வெற்றி பெற்ற சிஎஸ்கே - இனி எந்த அணிக்கு பிளே ஆஃப் செல்லும் வாய்ப்பு அதிகம்?

    • எழுதியவர், விவேக் ஆனந்த்
    • பதவி, பிபிசி தமிழ்

ஐபிஎல் போட்டி

பட மூலாதாரம், BCCI/IPL

கடைசி பந்தில் சிக்ஸர் அடித்து அணியை வெற்றிபெறச் செய்வது என்பது சினிமாவில் வேண்டுமானால் பார்க்க எளிதாக தோன்றலாம். ஆனால் நிஜத்தில் அப்படி அல்ல. கிட்டத்தட்ட 600க்கும் அதிகமான ஐபிஎல் போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. இதில் 10 போட்டிகளில்தான் பேட்ஸ்மேன்கள் இறுதி பந்தில் சிக்ஸர் அடித்து அணி வென்றுள்ளது. அந்த பட்டியலில் இன்று ஜடேஜா இணைந்துள்ளார்.

மிகப் பதற்றமான கடைசி 2 பந்துகளில் அடுத்தடுத்து சிக்ஸர் விளாசி சென்னையின் வெற்றியை உறுதி செய்திருக்கிறார் ஜடேஜா. கடைசி 2 ஓவர்களில் ஜடேஜாவின் அதிரடி காரணமாக கொல்கத்தாவை வீழ்த்தியிருக்கிறது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. இதன் மூலம் கொல்கத்தாவுக்கு சிக்கல் உருவாகியிருக்கிறது.

யாருக்கு பிளே ஆஃப் வாய்ப்பு?

சென்னை அணி இந்த போட்டியில் வென்றபோதும் புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கிறது.

சென்னை அணியின் வெற்றியால் முதல் அணியாக மும்பை அணி அதிகாரப்பூர்வமாக பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்துவிட்டது, ஆனால் மீதி மூன்று இடங்களுக்கு இன்னும் ஆறு அணிகள் போட்டி போடுகின்றன. இதில் பெங்களூரு மற்றும் டெல்லி அணிகள் மீதமுள்ள இரு போட்டிகளில் ஒன்றில் வென்றால் கூட பிளே ஆஃப் வாய்ப்பை உறுதி செய்துவிடும். இதில் தொடர்ந்து 3 போட்டிகளில் தோல்வியை தழுவியுள்ள டெல்லி அடுத்ததாக பெங்களூரு மற்றும் மும்பை அணிகளை எதிர்கொள்கிறது.

பெங்களூரு அணி டெல்லி மற்றும் ஹைதராபாத் அணிகளை எதிர்கொள்ளவிருப்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக டெல்லி பெங்களூரு அணிகள் மோதும் போட்டியில் எந்த அணி வெல்கிறதோ அந்த அணிக்கு பிளே ஆஃப் வாய்ப்பு சென்றுவிடும்.

இந்த இரு அணிகளுக்கும் பிளே ஆஃப் வாய்ப்பு அதிகமாகவே இருக்கிறது.

பஞ்சாப் அணியின் வாய்ப்பு எப்படி உள்ளது?

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 12 போட்டிகளில் 12 புள்ளிகள் பெற்றுள்ளது. பஞ்சாப் அணி ராஜஸ்தான், சென்னை சூப்பர் கிங்ஸ் என இரு அணிகளுடன் மோதுகிறது. இதில் இரண்டிலும் வென்றால் எந்த கவலையும் தேவை இல்லை பிளே ஆஃப் வாய்ப்பு உறுதியாகிவிடும்.

ஆனால் ஒன்றில் மட்டுமே வெல்கிறது எனில் ராஜஸ்தான், ஹைதராபாத் அணிகள் மீதமுள்ள 2 போட்டிகளில் ஏதாவது ஒன்றிலாவது தோல்வியைத் தழுவும் பட்சத்தில், அந்த அணிகள் 12 புள்ளிகள் மட்டுமே பெற்றிருக்கும் என்பதால் 14 புள்ளிகளோடு பஞ்சாப் பிளே ஆஃப் செல்லும் வாய்ப்பு அதிகரிக்கும்.

ஒருவேளை கொல்கத்தா கடைசி போட்டியில் வென்றுவிட்டால் ரன்ரேட் விகிதத்துக்காக காத்திருந்துதான் பிளே ஆஃபுக்கு தகுதி பெற முடியும்.

ஒரு வேளை பஞ்சாப் 2 போட்டிகளிலும் தோல்வியை தழுவினால், நிலைமை சிக்கல் தான்.

பிளே ஆஃப் வாய்ப்பை தீர்மானிக்கும் ஆட்டங்கள்

கொல்கத்தா அணியின் பிளே ஆஃப் வாய்ப்பு எப்படி இருக்கிறது எனப் பார்ப்போம். 13 போட்டிகளில் 12 புள்ளிகள் பெற்றுள்ள, கொல்கத்தா தனது கடைசி போட்டியில் ராஜஸ்தான் அணியுடன் விளையாடுகிறது. இந்த போட்டியில் தோற்றுவிட்டால் கொல்கத்தா வெளியேற வேண்டியதுதான். ஒருவேளை மிகப்பெரிய வெற்றியடையும் பட்சத்தில் சில முடிவுகளுக்காகக் காத்திருக்க வேண்டும். அதாவது ராஜஸ்தான் மற்றும் ஹைதராபாத் அணிகள் மீதமுள்ள 2 போட்டிகளில் ஒன்றிலாவது தோல்வியைத் தழுவ வேண்டும் மேலும் பஞ்சாப் அணி தனது கடைசி இரு போட்டிகளில் தோல்வியடைய வேண்டும். இது சாத்தியமானால் பஞ்சாப், ஹைதராபாத், ராஜஸ்தான் ஆகிய மூன்று அணிகள் 12 புள்ளிகள் மட்டுமே பெற்றிருக்கும். கொல்கத்தா 14 புள்ளிகளோடு எளிதில் பிளே ஆஃப் சென்றுவிடும்.

ஒருவேளை பஞ்சாப் ஒரு போட்டியில் வென்றாலோ, ஹைதராபாத் இரு போட்டிகளில் தொடர்ந்து வென்றாலோ ரன்ரேட் அடிப்படையில்தான் கொல்கத்தாவின் பிளே ஆஃப் வாய்ப்பு அமையும். கொல்கத்தாவின் ரன் ரேட் தற்போது மிக மோசமான நிலையில் இருக்கிறது என்பதால் சற்று கடினம் தான்.

ஹைதராபாத் அணியைப் பொறுத்தவரை மிக எளிமையான கணக்குதான். அந்த அணி அடுத்து ஆடவுள்ள பெங்களூரு மற்றும் மும்பை அணிக்கு எதிரான போட்டிகள் இரண்டிலும் வெற்றி பெறவேண்டும். அதே சமயம் பஞ்சாப் ஒரு போட்டியிலாவது தோற்க வேண்டும். இவை நடந்தால் ஹைதராபாத் எளிதில் பிளே ஆஃப் சென்றுவிடும்.

ஐபிஎல் போட்டி

பட மூலாதாரம், BCCI/IPL

டெல்லி, பெங்களூரு, பஞ்சாப் அணிகளை விட தற்போது ரன்ரேட்டில் நல்ல முன்னிலையில் இருப்பதால் ஹைதராபாத் அணி இரு போட்டிகளில் வென்றால் மட்டும்போதும் ரன்ரேட் கவலை தேவை இல்லை. ஒருவேளை ஒன்றில் தோல்வி என்றாலும் வெளியேறிவிடும்.

ராஜஸ்தான் அணி கொல்கத்தா மற்றும் பஞ்சாப் அணிகளுடன் மோதவிருக்கிறது. இந்த இரு போட்டிகளிலும் ராஜஸ்தான் வெல்லும் பட்சத்தில், கொல்கத்தா எளிதில் வெளியேறிவிடும், அதே சமயம் பஞ்சாப் அணி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிடம் தோல்வி அடையவேண்டும், ஹைதராபாத் அணி மீதமுள்ள இரு போட்டிகளில் ஒன்றிலாவது தோல்வி அடைய வேண்டும். இப்படி ஒரு சூழல் ஏற்படும் பட்சத்தில் பஞ்சாப், கொல்கத்தா, ஹைதராபாத் 12 புள்ளிகள் மட்டுமே பெற்றிருக்கும். 14 புள்ளிகளோடு ராஜஸ்தான் எளிதில் பிளே ஆஃப் வாய்ப்பு பெறும்.

ஒருவேளை ஒரு போட்டியில் தோற்றால் கூட ராஜஸ்தான் வெளியேறிவிடும்.

ஆகவே இனி வரும் ஐபிஎல் போட்டிகளின் முடிவுகள் ஒவ்வொன்றுமே பிளே ஆஃப் வாய்ப்பை தீர்மானிக்க கூடியவையாக இருக்கும்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :