இரான் போர் இந்தியாவில் ஒவ்வொரு குடும்பத்தையும் எவ்வாறு பாதிக்கும்?

இரான் - அமெரிக்கா, இஸ்ரேல், இந்தியா, வளைகுடா நாடுகள், சௌதி அரேபியா, யுஏஇ, மத்திய கிழக்கு

பட மூலாதாரம், NurPhoto via Getty Images

படக்குறிப்பு, இந்தியா தான் பயன்படுத்தும் எண்ணெயில் 90% வரை இறக்குமதி செய்கிறது
    • எழுதியவர், சௌதிக் பிஸ்வாஸ்
    • பதவி, பிபிசி நியூஸ்
  • வாசிக்கும் நேரம்: 7 நிமிடங்கள்

அமெரிக்காவும் இஸ்ரேலும் இரான் மீது போர் தொடுத்து வரும் நிலையில், அதன் அதிர்வுகளை இந்தியா உள்நாட்டில் உணரத் தொடங்கியுள்ளது.

இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதியில் பாதியளவு, திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு (எல்என்ஜி) மற்றும் திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய எரிவாயு (எல்பிஜி) ஆகியவற்றின் பெரும் பகுதி, வழக்கமாக ஹோர்முஸ் நீரிணை வழியாகவே வருகின்றன.

பாரசீக வளைகுடாவின் இந்தக் குறுகிய பாதை தற்போது மோதலால் மூடப்பட்டுள்ளது. இந்தப் பிராந்தியத்துடனான இந்தியாவின் உறவு எரிசக்தியைத் தாண்டியது.

சுமார் ஒரு கோடி இந்தியர்கள் வளைகுடா நாடுகளில் வசித்து வேலை செய்கிறார்கள். அவர்கள் அதிகளவில் இந்தியாவுக்கு அனுப்பும் பணம் லட்சக்கணக்கான குடும்பங்களுக்கு ஆதரவாக இருப்பதோடு, இந்தியாவின் வெளிநாட்டுக் கணக்குகளின் பெரும் பகுதியை ஈடுகட்டவும் உதவுகிறது.

இன்னும் விரிவாகக் கூறினால், மத்திய கிழக்கு நாடுகளுடன் இந்தியாவின் பொருளாதாரத் தொடர்புகள் மிகவும் ஆழமானவை.

ஜெஃபரிஸ் என்ற தரகு நிறுவனத்தின்படி, இந்தியாவின் ஏற்றுமதியில் 17% இந்தப் பிராந்தியத்தைச் சார்ந்துள்ளது, இது இந்தியாவின் கச்சா எண்ணெய் தேவையில் 55%ஐ வழங்குகிறது மற்றும் இந்தியாவின் மொத்த வெளிநாட்டுப் பண வரவில் 38% பங்கு வகிக்கிறது.

எனவே, வளைகுடாவில் விரிவடையும் போர் இந்தியாவின் பல துறைகளை பாதிக்கலாம். எரிசக்தி விநியோகம், புலம்பெயர்ந்தோர் அனுப்பும் பணம், அமெரிக்கா, இரான் மற்றும் அரபு வளைகுடா நாடுகளுக்கு இடையே இந்தியா மேற்கொள்ளும் நுட்பமான ராஜ்ஜீய சமநிலை எனப் பலவற்றை அது பாதிக்கக்கூடும்.

இப்போதைக்கு இந்தியா எச்சரிக்கையாக உள்ளது.

அதிகரித்து வரும் நிச்சயமற்ற நிலைக்கு மத்தியில் இந்தியா "காத்திருந்து கவனிக்கும்" நிலையில் இருப்பதாக அப்சர்வர் ரிசர்ச் ஃபவுண்டேஷன் என்ற சிந்தனைக் குழுவைச் சேர்ந்த ஹர்ஷ் வி பந்த் கூறுகிறார்.

அரபு வளைகுடா நாடுகளை இரான் இலக்கு வைத்திருப்பது இந்தியாவின் கவலைகளை அதிகரித்துள்ளது. அரபு உலகில் இந்தியாவின் நலன்கள், புலம்பெயர்ந்தோர், பண வரவு, எரிசக்தி, வர்த்தகம் மற்றும் நிறுவன உறவுகள் போன்றவை மிகவும் ஆழமானவை என்று பந்த் குறிப்பிடுகிறார். அதனால் தான் அங்கு ஏற்பட்டுள்ள "சேதம் மற்றும் அழிவு" குறித்து இந்தியா அதிகமாகக் குரல் கொடுத்து வருகிறது.

இந்த நெருக்கடி நீடித்தால், அது "அந்தப் பிராந்தியத்துடனான இந்தியாவின் நீண்டகால ஈடுபாட்டின் அடிப்படையில் அதிக பாதிப்பை ஏற்படுத்தும்" என்று பந்த் எச்சரிக்கிறார்.

இந்தியா-இரான் உறவுகளைப் பற்றிய அனைத்து விவாதங்களுக்கும் மத்தியில், உலகப் பொருளாதாரத்தில் இரான் ஓரங்கட்டப்பட்டதன் காரணமாக அந்த உறவுகள் நீண்ட காலமாகவே மட்டுப்படுத்தப்பட்டே வந்துள்ளதாக பந்த் சுட்டிக்காட்டுகிறார்.

அந்த யதார்த்தம் இந்தியாவை முக்கிய வளைகுடா நாடுகளுடன் கூட்டாண்மைகளை ஆழப்படுத்தத் தூண்டியுள்ளது. அதாவது அங்கு நிலவும் உறுதியற்ற தன்மை இந்தியாவில் மிகவும் கூர்மையாகக் கவனிக்கப்படும்.

ஆனால் இந்தியா ராஜ்ஜீய ரீதியாகவும் இழப்புகளைச் சந்திக்க நேரிடும் என்று இரானுக்கான முன்னாள் இந்திய தூதர் கே.சி.சிங் கூறுகிறார்.

"தாக்குதல்கள் தொடங்குவதற்கு சில நாட்களுக்கு முன்பு பிரதமர் நரேந்திர மோதி மேற்கொண்ட பயணத்தின்போது இஸ்ரேலை விமர்சிக்கத் தயங்கியது இந்தியாவின் நடுநிலைமையைப் பறித்துவிட்டது. இரான் அதை மறக்க வாய்ப்பில்லை," என்று தி ட்ரிப்யூன் இதழில் சிங் எழுதியுள்ளார்.

எரிசக்தி, பண வரவு, வளைகுடா நாடுகளில் உள்ள புலம்பெயர்ந்தோர் மற்றும் இரானில் உள்ள ஒரு மூலோபாய துறைமுகம் என இந்தியாவுக்கான பாதிப்புகள் நான்கு விதங்களில் வெளிப்படலாம்.

இரான் - அமெரிக்கா, இஸ்ரேல், இந்தியா, வளைகுடா நாடுகள், சௌதி அரேபியா, யுஏஇ, மத்திய கிழக்கு

பட மூலாதாரம், AFP via Getty Images

படக்குறிப்பு, இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதியில் பாதி ஹோர்முஸ் நீரிணை வழியாகவே வருகிறது.

எண்ணெய் மற்றும் எரிவாயு

இந்தியா எரிபொருள் பற்றாக்குறையை நோக்கிச் செல்கிறதா?

இன்னும் இல்லை.

ஆனால், ஹோர்முஸ் நீரிணையைச் சுற்றியுள்ள போர், நாட்டின் எரிசக்தி பாதுகாப்பு எவ்வளவு நெருக்கமாக ஒரு குறுகிய நீர்ப்பரப்புடன் பிணைக்கப்பட்டுள்ளது என்பதை வெளிப்படுத்தியுள்ளது.

உலகின் எண்ணெய் மற்றும் எரிவாயுவில் ஏறக்குறைய ஐந்தில் ஒரு பங்கு பொதுவாக ஹோர்முஸ் வழியாகவே செல்கிறது.

சமீப நாட்களில், கப்பல்கள் மீதான தாக்குதல்கள் மற்றும் நீரிணையைக் கடக்க முயலும் கப்பல்கள் இலக்கு வைக்கப்படலாம் என இரானிடம் இருந்து வந்த எச்சரிக்கைகள், உலகின் மிக முக்கியமான எரிசக்திப் பாதைகளில் ஒன்றின் போக்குவரத்தை திறம்பட நிறுத்தியுள்ளன.

தனது எண்ணெய் தேவையில் 90 சதவிகிதத்தை இறக்குமதி செய்யும் இந்தியாவுக்கு, இதன் பாதிப்பு கணிசமானது. அதன் கச்சா எண்ணெய் இறக்குமதியில் சுமார் பாதி, அதாவது ஒரு நாளைக்கு சுமார் 2.5 முதல் 2.7 மில்லியன் பீப்பாய்கள் பெரும்பாலும் இராக், சௌதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், குவைத் ஆகியவற்றிலிருந்து இந்த நீரிணை வழியாகவே வருகின்றன.

ஜெஃபரிஸ் நிறுவனத்தின் கருத்துப்படி, எண்ணெய் விலை ஒரு பேரலுக்கு 10 டாலர் உயர்ந்தால், அதன் தாக்கம் நுகர்வோர் மீது சுமத்தப்படும் பட்சத்தில் பணவீக்கத்தை சுமார் 0.2-0.25 சதவிகிதம் அதிகரிக்கக்கூடும்.

இந்த பாதிப்பைக் குறைக்க அரசாங்கம் எரிபொருள் மீதான வரிகளைக் குறைத்தால், நிதிப் பற்றாக்குறை, அதாவது அரசாங்கத்தின் மொத்த செலவுக்கும் அதன் வருவாய்க்கும் இடையிலான இடைவெளி, அதற்கு இணையான பாதிப்பைச் சந்திக்கும். ஆனால், கச்சா எண்ணெய் மட்டுமே உடனடி கவலையாக இருக்காது.

"ஹோர்முஸை சுற்றியுள்ள அபாயங்கள் கவலைக்குரியவை" என்று கடல்சார் உளவு நிறுவனமான கெப்ளரின் ஆய்வாளர் சுமித் ரிடோலியா கூறுகிறார்.

"கச்சா எண்ணெயைப் பற்றி நான் அவ்வளவு கவலைப்படவில்லை, ஆனால் எல்பிஜி, எல்என்ஜி பற்றி கவலைப்படுகிறேன்" என்கிறார் அவர்.

இது இந்தியாவின் எரிசக்தி பயன்பாட்டில் ஏற்பட்டுள்ள ஒரு கட்டமைப்பு மாற்றத்தைப் பிரதிபலிக்கிறது. அரசாங்கத் திட்டங்கள் சமையலுக்கான எல்பிஜி பயன்பாட்டை வேகமாக விரிவுபடுத்தியுள்ளன, இது பாரம்பரிய உயிரி எரிபொருட்களை இடமாற்றம் செய்து தேவையைக் கடுமையாக உயர்த்தியுள்ளது.

இன்று இந்தியா தான் பயன்படுத்தும் எல்பிஜியில் 80-85 சதவிகிதத்தை இறக்குமதி செய்கிறது, இது சீனாவுக்கு அடுத்தபடியாக உலகிலேயே இரண்டாவது பெரிய எல்பிஜி இறக்குமதியாளராக இந்தியாவை மாற்றியுள்ளது.

அந்த ஏற்றுமதிகள் அனைத்தும் கத்தார், சௌதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், குவைத் போன்ற வளைகுடா உற்பத்தியாளர்களிடம் இருந்து வருகின்றன. அவை அனைத்தும் ஹோர்முஸ் வழியாகவே கடந்து வருகின்றன.

எல்என்ஜி கதையும் இதே போன்றதுதான். மின் உற்பத்தி, உரங்கள், நகர விநியோகம், போக்குவரத்து மற்றும் தொழில்துறைக்கு எரிவாயுவை அதிகளவில் நம்பியிருக்கும் ஒரு பொருளாதாரத்தில், இந்தியாவின் உள்நாட்டு எரிவாயு உற்பத்தி, தேவையில் ஒரு சிறிய பகுதியை மட்டுமே பூர்த்தி செய்கிறது.

இந்தியா கடந்த ஆண்டு சுமார் 25 மில்லியன் டன் எல்என்ஜியை இறக்குமதி செய்தது, அதில் சுமார் 14 மில்லியன் டன் ஹோர்முஸ் வழியாக வந்தது. இது சீனா, ஜப்பான், தென் கொரியா ஆகியவற்றுடன் சேர்ந்து உலகில் மிகப்பெரிய அளவில் எல்என்ஜி வாங்கும் நாடுகளில் ஒன்றாக இந்தியாவை மாற்றுகிறது.

இரான் - அமெரிக்கா, இஸ்ரேல், இந்தியா, வளைகுடா நாடுகள், சௌதி அரேபியா, யுஏஇ, மத்திய கிழக்கு

பட மூலாதாரம், NurPhoto via Getty Images

படக்குறிப்பு, அரசாங்கத் திட்டங்கள் சமையலுக்கு எல்பிஜி பயன்பாட்டை விரைவாக விரிவுபடுத்தியுள்ளன.

எல்பிஜி விநியோகத்தை பாதிக்கக்கூடியது என்னவென்றால், அதற்கான கையிருப்புகள் இல்லாததுதான்.

கச்சா எண்ணெயைப் போலன்றி, இந்தியாவிடம் குறிப்பிடத்தக்க மூலோபாய எல்பிஜி இருப்புகள் இல்லை, அதேபோல் சேமிப்புத் திறனும் குறைவாகவே உள்ளது.

இறக்குமதிகள் தடைபட்டால், சுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் விநியோகஸ்தர்களிடம் உள்ள இருப்புகள் இரண்டு முதல் மூன்று வார காலத் தேவையை மட்டுமே பூர்த்தி செய்ய முடியும்.

இதற்கு நேர்மாறாக, கச்சா எண்ணெய் நிலைமை சற்று சமாளிக்கக் கூடியதாக உள்ளது.

இந்தியாவின் சுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் வணிகக் கிடங்குகளில் சுமார் 100 மில்லியன் பேரல்கள் கையிருப்பில் உள்ளன, இதில் சுமார் 80% பயன்படுத்தக் கூடியவை. இது "30 முதல் 35 நாட்கள்" வரையிலான தேவையை ஈடுகட்டப் போதுமானது என்று ரிடோலியா கூறுகிறார்.

டீசல் மற்றும் ஜெட் எரிபொருள் போன்ற சுத்திகரிக்கப்பட்ட எரிபொருட்களின் முக்கிய ஏற்றுமதியாளராக இருப்பதால், தேவைப்பட்டால் விநியோகத்தைப் பாதுகாக்க அந்தப் பொருட்களின் ஏற்றுமதியை இந்தியா கட்டுப்படுத்தலாம்.

மாற்று வழிகள்

ரஷ்யாவிடம் இருந்தோ அல்லது அமெரிக்கா, மேற்கு ஆப்பிரிக்கா மற்றும் லத்தீன் அமெரிக்கா உள்ளிட்ட அட்லாண்டிக் பகுதியில் இருந்தோ இந்தியா கொள்முதலை அதிகரிக்கலாம்.

ஆனால் கெப்ளர் நிறுவனத்தின்படி, வளைகுடா நாடுகளில் இருந்து வர ஐந்து முதல் ஏழு நாட்கள் ஆகும் நிலையில், இந்தப் பகுதிகளில் இருந்து சரக்குகள் வந்து சேர 25-45 நாட்கள் ஆகும். இது விநியோகச் சங்கிலியை நீட்டிப்பதோடு சரக்குக் கட்டணத்தையும் உயர்த்தும்.

நிலைமை மோசமானால், இந்தியா மீண்டும் ரஷ்ய கச்சா எண்ணெயை நோக்கித் திரும்ப முடியும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.

"சுமார் 25-30 மில்லியன் ரஷ்ய எண்ணெய் பேரல்கள் தற்போது இந்திய பெருங்கடலில் கப்பல்களில் மிதந்து கொண்டிருக்கின்றன. இந்தியா மற்றும் சீனா மட்டுமே அங்கிருந்து வாங்கும் முக்கிய நாடுகளாக இருப்பதால், அந்த பேரல்கள் உடனடி மாற்றுத் தேர்வாக உள்ளன" என்று ரிடோலியா கூறுகிறார்.

இரான் - அமெரிக்கா, இஸ்ரேல், இந்தியா, வளைகுடா நாடுகள், சௌதி அரேபியா, யுஏஇ, மத்திய கிழக்கு

இப்போதைக்கு இந்த முதல் பாதிப்பானது, பொருட்களின் தட்டுப்பாடாக இல்லாமல் நிதிரீதியான பாதிப்பாகவே இருக்கும் என்று சந்தைகள் எதிர்பார்க்கின்றன.

ப்ரெண்ட் கச்சா எண்ணெய் விலை, கப்பல் கட்டணங்கள் மற்றும் போர்-ஆபத்து காப்பீட்டு பிரீமியங்கள் உயர வாய்ப்புள்ளது. இது குறுகிய காலத்தில் உண்மையான விநியோகம் குறையவில்லை என்றாலும் இந்தியாவின் இறக்குமதிச் செலவை அதிகரிக்கும்.

ஹோர்முஸ் நீரிணை நீண்ட காலத்திற்கு முழுமையாக மூடப்படும் என்று கெப்ளர் எதிர்பார்க்கவில்லை.

"தற்காலிக தாமதங்கள், கப்பல்கள் மாற்றுப் பாதையில் செல்வது அல்லது தீவிரமான கடல்சார் பாதுகாப்பு சோதனைகள் நடக்கவே அதிக வாய்ப்புள்ளது" என்று அந்த நிறுவனம் ஒரு குறிப்பில் தெரிவித்துள்ளது.

எண்ணெய் மற்றும் எல்என்ஜி விலை குறுகிய காலத்தில் "கடுமையாக உயரும்" என்று ஜெஃபரிஸ் ஆய்வாளர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

அதே நேரம், எந்தவொரு தடையுமே தற்காலிகமாகத்தான் இருக்கும் என்று அவர்கள் கருதுகிறார்கள். இருப்பினும், இந்த நெருக்கடி நீடித்தால் அதனால் ஏற்படும் அழுத்தம் இன்னும் தெளிவாகத் தெரியும்.

எண்ணெய் விநியோகம் தொடர்ந்து கிடைக்கக்கூடும், ஆனால் உலகின் மிக முக்கியமான இந்த எரிசக்தி வழித்தடம் தொடர்ந்து மூடப்பட்டிருந்தால், சமையலறைகளில் உள்ள எல்பிஜி சிலிண்டர்கள் மற்றும் மின் உற்பத்தி நிலையங்களுக்கான எல்என்ஜி விநியோகம் மிக விரைவாகத் தட்டுப்பாட்டைச் சந்திக்க நேரிடும்.

இரான் - அமெரிக்கா, இஸ்ரேல், இந்தியா, வளைகுடா நாடுகள், சௌதி அரேபியா, யுஏஇ, மத்திய கிழக்கு

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, வளைகுடாவின் ஆறு பகுதிகளில் சுமார் ஒரு கோடி இந்தியர்கள் வசித்து வருகின்றனர்.

புலம்பெயர் சமூகம்

இந்தியாவின் புலம்பெயர்ந்தோர் மக்கள் தொகை அமைதியாகவும் அதே நேரம் வியத்தகு முறையிலும் வளர்ந்துள்ளது. 1990ஆம் ஆண்டில் சுமார் 6.6 மில்லியனாக இருந்த வெளிநாடு வாழ் இந்தியர்களின் எண்ணிக்கை, இன்று தோராயமாக 18.5 மில்லியனாக உயர்ந்துள்ளது.

இது உலகின் மிகப்பெரிய வெளிநாடுவாழ் மக்கள் தொகையாகும்.

சுமார் ஒரு கோடி இந்தியர்கள் வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சிலின் ஆறு நாடுகளான சௌதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், கத்தார், குவைத், ஓமன், பஹ்ரைன் ஆகியவற்றில் வசித்து வேலை செய்கிறார்கள். இது இந்தியாவின் ஒட்டுமொத்த உலகளாவிய புலம்பெயர்ந்தோர் எண்ணிக்கையில் பாதி.

பல ஆண்டுகளுக்கு முன்பு தற்காலிக தொழிலாளர் இடப்பெயர்வாகத் தொடங்கியது, இப்போது மிகவும் நிலையான ஒன்றாக மாறியுள்ளது. 2025ஆம் ஆண்டில், ஐக்கிய அரபு எமிரேட்ஸில் மட்டும் 2,47,000க்கும் மேற்பட்ட இந்திய பள்ளி மாணவர்கள் சேர்ந்துள்ளனர். சௌதி அரேபியா, கத்தார் மற்றும் குவைத்திலும் கணிசமான எண்ணிக்கையில் மாணவர்கள் உள்ளனர்.

இது பல குடும்பங்கள் குறுகிய கால தொழிலாளர்களாக வந்து செல்வதற்குப் பதிலாக, அங்கேயே வேரூன்றி வருவதற்கான சான்றாகும். இந்திய அரசாங்கத்தைப் பொறுத்தவரை, இந்தச் சமூகத்தின் பாதுகாப்பு ஓர் உத்தி சார்ந்த கவலையாக மாறியுள்ளது.

"வளைகுடா பிராந்தியத்தில் வசித்து வேலை செய்யும் இந்திய குடிமக்கள் கிட்டத்தட்ட ஒரு கோடி பேர் உள்ளனர். அவர்களின் பாதுகாப்பு மற்றும் நலமே முதன்மையான முன்னுரிமை" என்று இந்தப் பிராந்தியத்தில் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் இந்த வாரம் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதன் பொருளாதார பங்களிப்பு மிக முக்கியமானது. 2024-2025ஆம் ஆண்டில் இந்தியா 135 பில்லியன் டாலர் என்ற மிகப்பெரும் அளவிலான பண வரவைப் பெற்றது. இந்த வகையில் உலகிலேயே அதிக பண வரவைப் பெறும் நாடாக இந்தியா தனது இடத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது.

இந்தப் பண வரவு இந்தியாவின் வர்த்தகப் பற்றாக்குறையில் பாதியை ஈடுகட்டுவதோடு, நாட்டின் வெளிநாட்டுக் கணக்குகளை ஆதரிக்கிறது. வளைகுடா நாடுகளில் பணிபுரியும் இந்திய தொழிலாளர்களே இந்தப் பண வரவில் பெரும் பகுதியை அளிக்கிறார்கள்.

அவர்கள் கட்டுமானம், சேவைத் துறை, எரிசக்தி மற்றும் அதிகரித்து வரும் திறன் சார்ந்த தொழில்களில் ஆதிக்கம் செலுத்துகிறார்கள். இந்தியா முழுவதும் உள்ள தங்களது வீடுகளுக்கு பில்லியன்கணக்கான டாலர்களை அனுப்புகிறார்கள்.

கேரளா மட்டுமே இந்தியாவின் மொத்த பண வரவில் ஐந்தில் ஒரு பங்கைப் பெறுகிறது, இது நாட்டின் சில பகுதிகள் வளைகுடா இடப்பெயர்வை எவ்வளவு ஆழமாக நம்பியுள்ளன என்பதை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

இந்தப் பிராந்தியத்தில் நீடிக்கும் நெருக்கடி, மக்களை வெளியேற்ற வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தலாம், வெளிநாடுவாழ் இந்தியர்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பைப் பாதிக்கலாம் மற்றும் இந்தியாவுக்கு வரும் பண வரவின் வேகத்தைப் பாதிக்கலாம்.

இந்தியாவை பொறுத்தவரை, வளைகுடா என்பது வெறும் எண்ணெய் இறக்குமதி சார்ந்தது மட்டுமல்ல. அது வாழ்வாதாரங்கள், வீட்டு வருமானங்கள் மற்றும் இந்தியாவின் வெளிநாட்டு பொருளாதார நிலைத்தன்மை பற்றியது.

"வளைகுடா ஒரு பாதுகாப்பான புகலிடம் என்ற கருத்து இப்போது சீர்குலைந்துள்ளது" என்று திருவனந்தபுரத்தை மையமாகக் கொண்ட புலம்பெயர்வு மற்றும் மேம்பாட்டிற்கான சர்வதேச நிறுவனத்தைச் சேர்ந்த எஸ். இருதயராஜன் கூறுகிறார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், "இது சமூக ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் விளைவுகளை ஏற்படுத்தும். வெளிநாட்டில் இருக்கும் பிள்ளைகளைப் பற்றிக் கவலைப்படும் பெற்றோர்கள் மற்றும் தாயகம் திரும்புவதைப் பற்றிச் சிந்திக்கும் புலம்பெயர்ந்தோர் என இந்தச் சூழல் அமையும்" என்றார்.

இரான் - அமெரிக்கா, இஸ்ரேல், இந்தியா, வளைகுடா நாடுகள், சௌதி அரேபியா, யுஏஇ, மத்திய கிழக்கு

பட மூலாதாரம், Anadolu Agency/Getty Images

படக்குறிப்பு, இந்தியா ஆப்கானிஸ்தானுக்கு கோதுமை மற்றும் மனிதாபிமான பொருட்களை அனுப்ப சாபஹார் துறைமுகத்தைப் பயன்படுத்தியுள்ளது.

சாபஹார் துறைமுகம்

இரானின் சாபஹார் துறைமுகத்தின் மீது இந்தியா பத்தாண்டு காலமாக மேற்கொண்டு வந்த முயற்சி, அதாவது பாகிஸ்தானை தவிர்த்து ஆப்கானிஸ்தான் மற்றும் மத்திய ஆசியாவுக்கு செல்வதற்கான மூலோபாய நுழைவாயில் இப்போது அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளால் சிக்கலை சந்தித்துள்ளது.

கடந்த 2016இல் மேம்பாட்டு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டது முதல், இந்தியா இந்தத் துறைமுகத்தைத் தனது பிராந்திய இணைப்பு உத்தியின் ஒரு முக்கிய அங்கமாகவும், நிலத்தால் சூழப்பட்ட ஆப்கானிஸ்தான் மற்றும் அதற்கு அப்பால் உள்ள பகுதிகளுக்குச் செல்வதற்கான ஒரு அரிய பாதையாகவும் கருதி வருகிறது.

சமீபத்திய ஆண்டுகளில், இந்தியா இந்தத் துறைமுகத்தைப் பயன்படுத்தி ஆப்கானிஸ்தானுக்கு கோதுமை மற்றும் மனிதாபிமான உதவிகளை அனுப்பி வருகிறது, அதேநேரத்தில் துறைமுகத்தின் ஷாஹித் பெஹெஷ்டி முனையத்தின் மேம்பாட்டிலும் முதலீடு செய்து வருகிறது.

ஆனால், இரானுக்கு எதிரான அழுத்தத்தின் ஒரு பகுதியாக, 2025 செப்டம்பரில் அமெரிக்கா நீண்ட காலமாக வழங்கி வந்த பொருளாதாரத் தடை விலக்கை ரத்து செய்த பிறகு பிறகு, அந்த உத்தி ஆபத்தானதாக மாறியது.

பின்னர் , ஒரு ராஜ்ஜீய நிவாரணமாக, அமெரிக்கா இந்தியாவுக்கு நிபந்தனையுடன் கூடிய ஆறு மாத கால விலக்கை அளித்தது.

இது பேச்சுவார்த்தைகள் தொடரும் வரை, 2026 ஏப்ரல் 26 வரை அந்த முனையத்தில் செயல்பாடுகள் தொடர அனுமதி அளிக்கிறது. இந்த ஏற்பாடு ஒரு சிறிய அவகாசத்தைத் தருகிறது, ஆனால் உறுதியைத் தரவில்லை.

தற்போதைய போர், விஷயங்களை இன்னும் சிக்கலாக்கியுள்ளது. இப்போதைக்கு எச்சரிக்கையே மேலோங்கியுள்ளது. இரானை சுற்றியுள்ள பதற்றங்கள் தணிந்தால் மட்டுமே இந்தியாவால் நம்பிக்கையுடன் சாபஹாரை மீண்டும் அணுக முடியும்.

இரான் - அமெரிக்கா, இஸ்ரேல், இந்தியா, வளைகுடா நாடுகள், சௌதி அரேபியா, யுஏஇ, மத்திய கிழக்கு
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

அமெரிக்கா-இரான் மோதல் நீடிக்கும் வரை, சாபஹர் துறைமுகத்துடனான இந்தியாவின் ஈடுபாடு நடைமுறை மற்றும் செயல்பாட்டுக் கட்டுப்பாடுகளால் வரையறுக்கப்பட்டதாகவே இருக்கும் என்று பந்த் கூறுகிறார்.

இந்தியா தொடர்ந்து பேச்சுவார்த்தை மற்றும் பதற்றத்தைக் குறைப்பதற்கே அழைப்பு விடுக்கும். ஆனால் நடைமுறையில், இந்தியா இப்போது எல்லாவற்றையும்விட அரபு உலகில் என்ன நடக்கிறது என்பது குறித்தே "அதிக கவலையடைந்துள்ளது" என்று பந்த் குறிப்பிடுகிறார்.

நிச்சயமாக, மத்திய கிழக்கு மீதான இந்தியாவின் சார்புநிலை என்பது எண்ணெய் மற்றும் பண வரவைத் தாண்டியது. 2025இல் இந்தியா இந்தப் பிராந்தியத்தில் இருந்து உரங்கள் மற்றும் பெட்ரோகெமிக்கல்கள் முதல் தொழில்துறை தாதுக்கள் வரை கிட்டத்தட்ட 100 பில்லியன் டாலர் மதிப்புள்ள பொருட்களை இறக்குமதி செய்தது.

இது விவசாயம் மற்றும் பிளாஸ்டிக் முதல் கட்டுமானம் மற்றும் வைரப் பட்டை தீட்டுதல் வரையிலான துறைகளை விநியோக பாதிப்புகளுக்கு உள்ளாக்குகிறது.

"ஹோர்முஸ் நீரிணை வழியாகக் கப்பல் போக்குவரத்தில் ஏற்படும் இடையூறுகள் ஒரு வாரத்திற்கு மேல் நீடித்தால், அதன் விளைவுகள் எரிசக்தி சந்தைகளில் இருந்து உர விநியோகம், உற்பத்தி உள்ளீடுகள், கட்டுமானப் பொருட்கள், வைரங்கள் போன்ற ஏற்றுமதித் தொழில்களுக்கு விரைவாகப் பரவக்கூடும்" என்று முன்னாள் இந்திய வர்த்தக அதிகாரியும், குளோபல் டிரேட் ரிசர்ச் இனிஷியேட்டிவ் சிந்தனைக் குழுவின் தலைவருமான அஜய் ஸ்ரீவஸ்தவா கூறுகிறார்.

தொடர்ந்து பேசிய அவர், "ஒரு பிராந்திய மோதலாகத் தொடங்குவது இந்திய பொருளாதாரத்திற்கு ஒரு பரந்த விநியோகப் பாதிப்பாக விரைவாக மாறக்கூடும்" என்றும் குறிப்பிட்டார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு