CSK vs KKR: கெய்க்வாட், ஜடேஜா விளாசலால் வென்ற சென்னை - மீண்டும் தோனியை வீழ்த்திய வருண் சக்ரவர்த்தி

பட மூலாதாரம், BCCI/IPL
- எழுதியவர், சிவக்குமார் உலகநாதன்
- பதவி, பிபிசி தமிழ்
'இப்ப இருக்கிற ஆர்வத்தோடு ஸ்கூல், காலேஜ் காலத்துல படிச்சிருந்தா நான் எப்படி வந்திருப்பேன் தெரியுமா?' என பலரும் தங்கள் கடந்த காலம் குறித்த ஏக்கத்தை வெளிப்படுத்துவதுண்டு.
2020 ஐபிஎல் தொடரில் பிளே ஆஃப் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை இழந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, துபையில் கொல்கத்தா அணிக்கு எதிராக நடந்த போட்டியில் கடைசி பந்தில் வென்ற தருணத்தில், அந்த அணியின் ரசிகர்கள் மேற்கூறியவாறு எண்ணியிருக்கக்கூடும்.
நிச்சயம் வெற்றி, அட தோல்வி தான், இல்லை இல்லை இறுதி கட்டத்தில் வெற்றி - இந்த பாணி கடந்த பத்தாண்டுகளாக சிஎஸ்கே விளையாடிய பல போட்டிகளில் நடந்துள்ளது.
13-3 ஓவர்களில், ஒரு விக்கெட் மட்டும் இழந்து 118 ரன்களை எடுத்த சிஎஸ்கே நிச்சயம் வென்றுவிடும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், அடுத்த 5 ஓவர்களில் நிலைமை முற்றிலுமாக மாறியது.
தடுமாறிய கரண், ஜொலித்த ஜடேஜா
கடைசி இரண்டு ஓவர்களில் 30 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற அழுத்தம் அதிரடி வீரரான சாம் கரணை பாதித்தது.
அவரால் எதிர்பார்த்தபடி பவுண்டரி மற்றும் சிக்ஸர்கள் அடிக்க முடியவில்லை. ஆனால், அப்போது தான் களமிறங்கிய ரவீந்திர ஜடேஜா எந்த பதற்றமும் இல்லாமல் ஆடிய அதிரடி பேட்டிங், சென்னை அணியின் வெற்றியை உறுதி செய்தது.

பட மூலாதாரம், BCCI/IPL
மிகவும் பரபரப்பான இறுதி ஓவரில், கடைசி இரண்டு பந்திலும் ஜடேஜா சிக்ஸர் அடித்தார். 11 பந்துகளில், அவர் 31 ரன்கள் எடுத்தார்.
முன்னதாக, 173 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சூழலில் களமிறங்கிய சிஎஸ்கே, தனது முதல் விக்கெட்டை 7-வது ஓவரில் இழந்தது.
தொடக்கத்தில் இருந்து தடுமாறிய வாட்சன் ஆட்டமிழந்த நிலையில், களமிறங்கிய அம்பத்தி ராயுடு, ருத்ராஜ் கெய்க்வாட்டுடன் இணை சேர்ந்தார்.
மீண்டும் அசத்திய கெய்க்வாட்
பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் 65 ரன்கள் எடுத்த கெய்க்வாட், நேற்றைய போட்டியிலும் மிக சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தினார்.
மிக தேர்ந்த பேட்ஸ்மேனாக, அனுபவம் வாய்ந்த பந்துவீச்சாளர்களை எதிர்கொண்ட அவர், 53 பந்துகளில் 72 ரன்கள் எடுத்து ஆட்ட நாயகன் விருதை வென்றார்.
ஆக்ரோஷம் எதுவுமின்றி அவர் அடித்த சிக்ஸர்கள் மற்றும் பவுண்டரிகள் வர்ணனையாளர்கள் மற்றும் கிரிக்கெட் நிபுணர்களின் பாராட்டுக்களை பெற்றது.
ஆட்ட நாயகன் விருதை வென்ற கெய்க்வாட், கோவிட் பொதுமுடக்கம் தனது மன உறுதியை அதிகரித்துள்ளதாக குறிப்பிட்டார்.
மீண்டும் ஏமாற்றமளித்த தோனி
அதேவேளையில் நேற்றைய போட்டியில் தோனியின் பேட்டிங் மற்றும் கேப்டன்ஷிப் ஏமாற்றமளித்தது என்றே கூறலாம்.

பட மூலாதாரம், Getty Images
கடந்த முறை சென்னை மற்றும் கொல்கத்தா அணிகள் விளையாடியபோது, தோனியின் விக்கெட்டை வீழ்த்திய வருண் சக்ரவர்த்தி, நேற்றைய போட்டியிலும் தோனியை போல்ட் செய்தார்.
ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் இந்திய அணியின் சார்பாக விளையாட தேர்வு செய்யப்பட்டுள்ள வருண், மிகவும் துல்லியமாக பந்துவீசி இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா, தொடக்கத்தில் சிறப்பாக பேட்டிங் செய்த நிலையில், இரண்டு விக்கெட்டுகளை தொடர்ந்து இழந்ததால், அதன் ரன் குவிப்பு வேகம் சற்றே குறைந்தது.
கொல்கத்தா அணியின் நிதேஷ் ராணா மிக சிறப்பாக விளையாடி, 87 ரன்கள் குவித்தார். ராணா சுழல் பந்துவீச்சாளர்களுக்கு எதிராக சிறப்பாக விளையாடிய நிலையில், பவர் பிளேயில் சான்டனரை தோனி பந்துவீச அழைத்தது பாதகமாக அமைந்தது.
அதேபோல் சாம் கரணுக்கு 4 ஓவர்கள் அளிக்காத தோனி, கரண் சர்மாவை முக்கிய கட்டத்தில் பந்துவீச செய்தது கொல்கத்தா அதிக ரன்கள் பெற உதவியது.
2020 ஐபிஎல் தொடரில் முதல்முறையாக சிஎஸ்கே அணி தொடர்ச்சியாக இரண்டு போட்டிகளில் வென்றுள்ள நிலையில், இந்த முடிவால், கொல்கத்தா அணி அடுத்த சுற்றுக்கு செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
அதேவேளையில், நேற்றைய போட்டியின் முடிவால், நடப்பு தொடரில் பிளே ஆஃப் சுற்றுக்கு செல்லும் முதல் அணி என்ற பெருமை மும்பை அணிக்கு கிடைத்துள்ளது.
தோனி எதிர்பார்த்த ஸ்பார்க்கை தொடர்ந்து இரண்டாவது முறையாக கெய்க்வாட் வெளிப்படுத்தியுள்ளார். ஆனால் இவருக்கும், ஜெகதீசன் போன்ற இளம் வீரர்களுக்கும் தொடரின் தொடக்கத்தில் வாய்ப்பு அளிக்கப்பட்டிருக்க வேண்டும் என்ற குரல் இனி கூடுதலாக ஒலிக்கக்கூடும்.
பிற செய்திகள்:
- ரஜினிகாந்த் அரசியல் நுழைவு: சமூக ஊடகத்தில் பரவும் அறிக்கை பற்றி என்ன சொல்கிறார்?
- அபிநந்தன் விடுதலை: எம்.பியின் பேச்சால் பதறிய பாகிஸ்தான் ராணுவம் - என்ன நடந்தது?
- 7.5% இடஒதுக்கீடு: மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு இடங்கள் - அரசாணையை வெளியிட்டது தமிழக அரசு
- கொரோனா வைரஸ் இரண்டாம் அலை - பல ஐரோப்பிய நாடுகளில் மீண்டும் பொதுமுடக்கம்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :












