7.5% இடஒதுக்கீடு: மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு இடங்கள் ஒதுக்கும் அரசாணையை வெளியிட்டது தமிழக அரசு

மாணவர்

பட மூலாதாரம், Getty Images

தமிழ்நாடு அரசு நடத்தும் மருத்துவ கல்லூரிகளில் நடத்தப்படும் மருத்துவ படிப்புகளில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீட்டை வழங்குவதற்கான அரசாணையை தமிழக அரசு வியாழக்கிழமை வெளியிட்டுள்ளது. இது தொடர்பான மசோதா ஆளுநரிடம் நிலுவையில் இருந்த நிலையில் இந்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு தேசிய அளவிலான தகுதித் தீர்வு - நீட் - கட்டாயமாக்கப்பட்டு விட்ட நிலையில், அரசு மருத்துவ கல்லூரிகளில் அரசு பள்ளி மாணவர்களுக்கு போதுமான இடங்கள் கிடைப்பதில்லை என்ற விமர்சனங்கள் எழுந்தன. இதையடுத்து அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கும் வகையில் தமிழ்நாடு அரசு சட்டம் ஒன்றை இயற்றியது.

அவகாசம் கோரிய ஆளுநர்

அந்தச் சட்டத்துக்கு ஒப்புதலைப் பெறுவதற்காக அதன் கோப்புகள் ஆளுநருக்கு அனுப்பப்பட்டுள்ளன. இந்த சட்டத்திற்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இதுவரை ஒப்புதல் அளிக்கவில்லை. இந்தச் சட்டம் குறித்து பரிசீலிக்க தனக்கு 3-4 வாரங்கள்வரை தேவை என்றும் ஆளுநர் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், இது தொடர்பாக அரசாணை ஒன்றை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. நீட் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுவிட்ட நிலையில், இந்த விவகாரம் குறித்து முடிவெடுக்க வேண்டிய அவசரம் ஏற்பட்டிருப்பதாலும் அரசியல் சாசனத்தின் 162வது பிரிவு அளிக்கும் அதிகாரங்களின்படியும் இந்த உத்தரவை வெளியிடுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

அதன்படி, ஆறாம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளிக்கூடங்களில் படித்து நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., பிஎஸ்எம்எஸ், பிஏஎம்எஸ், பியுஎம்எஸ், பிஎச்எம்எஸ் ஆகிய படிப்புகளில் 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கப்படும். தமிழக அரசு பின்பற்றிவரும் 69 சதவீத இடஒதுக்கீட்டிற்குள், ஒவ்வொரு பிரிவுக்குள்ளும் இது செயல்படுத்தப்படும் என அரசாணை தெரிவிக்கிறது.

பஞ்சாயத்து பள்ளிகள், ஆரம்ப, நடுநிலை, மேல்நிலை பள்ளிகள், முனிசிபல், மாநகராட்சி பள்ளிகள், ஆதிதிராவிடர் நலப் பள்ளிகள், பழங்குடியினர் நலப் பள்ளிகள் உள்ளிட்ட பள்ளிக்கூடங்கள் அரசுப் பள்ளிக்கூடங்களாகக் கருதப்படும். பின்தங்கியவர்களாக இருந்து, கல்வி உரிமைச் சட்டத்தின் கீழே தனியார் பள்ளியில் 8ஆம் வகுப்புவரை படித்தவர்களும் அரசுப் பள்ளியில் படித்தவர்களாகக் கருதப்படுவார்கள்.

இந்த இட ஒதுக்கீடு, அரசு மருத்துவக் கல்லூரிகள் தவிர, சுயநிதிக் கல்லூரிகளில் அரசுப் பிரிவுக்கு ஒதுக்கப்படும் இடங்களுக்கும் பொருந்தும். இந்த இட ஒதுக்கீடு தவிர, பொதுவான இடங்களுக்கும் அரசுப் பள்ளிகளில் படித்த மாணவர்கள் போட்டியிடலாம் என்றும் இந்த அரசாணை தெரிவிக்கிறது.

பிரச்சனையின் பின்னணி

இந்தியா முழுவதும் மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கு தேசிய தகுதித் தேர்வு - நீட் - கட்டாயமாக்கப்பட்டுவிட்ட நிலையில், தமிழக அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் சமூக - பொருளாதார நிலையில் மிகவும் பின்தங்கியவர்கள் என்பதால், அவர்களை பிற மாணவர்களுடன் ஒரே நிலையில் வைத்து வகைப்படுத்த முடியாது என்பதால், அவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க தமிழக அரசு முடிவுசெய்தது.

இது தொடர்பாக தமிழக சட்டப்பேரவையில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிச்சாமி, "அரசுப் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்புவரை பயின்று நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு பிரத்யேகமாக ஒரு உள் ஒதுக்கீடு கொடுக்க வகை செய்யும் சிறப்புச் சட்டம் ஒன்றை இயற்றத் தேவைப்படும் அனைத்துப் புள்ளிவிவரங்களையும் தொகுத்து, உரிய பரிந்துரையை தமிழ்நாடு அரசுக்கு வழங்க, ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் ஒரு ஆணையம் அமைக்கப்படும்" என அறிவித்தார்.

இதையடுத்து, ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி பி.கலையரசன் அவர்கள் தலைமையில் இது குறித்துப் பரிசீலிக்க கடந்த மார்ச் மாதம் ஒரு ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த ஆணையம் கடந்த ஜூன் 8ஆம் தேதியன்று தனது பரிந்துரையை தமிழ்நாடு அரசுக்கு அளித்தது. அதில் 10 சதவீதத்திற்குக் குறையாமல் அரசு பள்ளிகளில் பயின்ற மாணவர்களுக்கு உள்ஒதுக்கீடு அளிக்கலாம் என்றும் ஐந்தாண்டுகள் கழிந்த பிறகு, அரசுப் பள்ளி மாணவர்களின் சேர்க்கையை அளவிடலாம் என்றும் பரிந்துரைத்தது.

இது தொடர்பாக ஜூன் 15, ஜூலை 14 ஆகிய தேதிகளில் அமைச்சரவைக் கூட்டம் விவாதித்தது. இதற்குப் பிறகு, அதன்படி தமிழக அரசுப் பள்ளிக்கூடங்களில் படிக்கும் மாணவர்களுக்கு நடப்பு ஆண்டு முதல் மருத்துவப் படிப்பில் உள் ஒதுக்கீடாக 7.5 சதவீத ஒதுக்கீடு அளிக்க மாநில அரசு முடிவு செய்தது. அதற்கான சட்டம் செப்டம்பர் 15ஆம் தேதி சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது.

உயர் நீதிமன்றத்தில் விசாரணை

ஆனால், அந்தச் சட்டத்திற்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இதுவரை தனது ஒப்புதலைத் தரவில்லை. இது தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் விசாரணைக்கு வந்தபோது, இந்தச் சட்டத்திற்கு ஆளுநரின் ஒப்புதலைப் பெறாமல் மருத்துவக் கலந்தாய்வு நடக்காது என அரசு வழக்கறிஞர் தெரிவித்தார்.

இதற்குப் பிறகு, அமைச்சர்கள், ஆளுரைச் சந்தித்து சட்டத்திற்கு ஒப்புதல் வழங்கும்படி வலியுறுத்தினர். அப்போது இந்த மசோதா தொடர்பாக முடிவெடுக்க தனக்கு 3-4 வாரங்கள் தேவை என ஆளுநர் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில்தான், இந்த உள் ஒதுக்கீட்டை செயல்படுத்துவது தொடர்பான அரசாணை ஒன்றை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள மருத்துவ இடங்களில், மாநில அரசின் ஒதுக்கீடாக 4,043 இடங்கள் உள்ளன. 7.5 சதவீதம் ஒதுக்கீட்டு வழங்கப்பட்டால் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு சுமார் 300 இடங்கள் கிடைக்கக்கூடும்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :