7.5% ஒதுக்கீடு: அரசு பள்ளிகளில் படித்த மருத்துவர்கள் எழுப்பும் ஆதரவுக்குரல்கள்

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஏன் இடஒதுக்கீடு தேவை?

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், பிரமிளா கிருஷ்ணன்
    • பதவி, பிபிசி தமிழ்

நீட் தேர்வின் மூலம் மருத்துவ கல்லூரிகளுக்கு சேர்க்கை நடக்கும்போது அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வழி செய்யும் மசோதா ஒன்றினை நிறைவேற்றி ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பியுள்ளது தமிழ்நாடு சட்டமன்றம்.

இந்த மசோதாவுக்கு ஒப்புதல் வழங்க தமிழக ஆளுநர் தாமதம் செய்யக்கூடாது என அரசு பள்ளிகளில் படித்து மருத்துவர் ஆனவர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

மருத்துவ படிப்பில் சேர நீட் தகுதித் தேர்வு கட்டாயமாக்கப்பட்டதில் இருந்து, மருத்துவ படிப்புகளில் அரசு பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளதை சுட்டிக்காட்டி, தமிழக அரசு சிறப்பு மசோதா ஒன்றை கொண்டுவந்தது.

அதன்படி, மருத்துவ படிப்புக்கான மாணவர் சேர்க்கையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு தருவதற்கு சட்டமன்றத்தில் அனைத்து கட்சிகளும் ஒருமனதாக ஒப்புதல் அளித்து நிறைவேற்றின. ஆளுநர் ஒப்புதல் அளித்த பிறகே இந்த மசோதா சட்டமாகும்.

மசோதா ஆளுநருக்கு அனுப்பப்பட்டு ஒரு மாதம் ஆகியும் ஒப்புதல் அளிக்கப்படவில்லை என்பதால் எதிர்கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றன. அரசுப்பள்ளி மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்கும் மசோதாவில் தாமதம் செய்வதால் பல மாணவர்களின் மருத்துவக் கனவு பொய்யாகும் சூழல் உள்ளது என்று திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தெரிவித்துவருகின்றன.

அரசு பள்ளிகளில் படித்து மருத்துவர்கள் ஆன பலரும் இந்த உள் ஒதுக்கீடு அவசியம் என்றும் விரைவில் அது செயல்பாட்டுக்கு வரவேண்டும் என்றும் கருத்துத் தெரிவிக்கின்றனர். இந்த இட ஒதுக்கீடு ஏன் அவசியம், அது ஏற்படுத்தும் மாற்றம் என்னவாக இருக்கும் என அரசுப் பள்ளியில் படித்து மருத்துவர்களாக ஆகியுள்ள சில மாணவர்களிடம் பிபிசி தமிழ் பேசியது.

சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் மயக்க மருந்தியல் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றுகிறார் மகாலிங்கம்(38). கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளியில் படித்த இவர், "பொருளாதார நெருக்கடிகளைத் தாண்டி மருத்துவக் கல்லூரி படிப்பை பெறுவதற்கு அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு தேவை," என்கிறார்.

''கிருஷ்ணகிரி மாவட்டத்தில் காவேரிப்பட்டினம் கிராமத்தில் உள்ள அரசுப் பள்ளியில் படித்தேன். என் குடும்பத்தின் முதல் தலைமுறை பட்டதாரி நான். என் உறவினர் வட்டத்தில் மருத்துவம் படித்த முதல் மாணவன் நான். குடும்பச் சூழலை தாண்டி பள்ளிப்படிப்பை முடிப்பது என்பதே பெரிய சவாலாக இருந்தது. அதுவும் மருத்துவம் படிக்க வாய்ப்பு கிடைத்தது பெரிய வெற்றியாக அமைந்தது. முன்னர் தமிழக அரசு நடத்திய நுழைவுத் தேர்வில் இட ஒதுக்கீடு முறை பின்பற்றப்பட்டதால், எனக்கு மருத்துவம் படிக்க வாய்ப்பு கிடைத்தது. அந்த நுழைவுத் தேர்வு எழுதுவதற்கு தயார் செய்வதற்கு பள்ளிக்கூட புத்தகங்களை தவிர வேறு எதுவும் என்னால் வாங்கமுடியவில்லை. என்னைப் போல பின்தங்கிய குடும்பங்களில் இருந்து கல்வி கற்பவர்களுக்கு இட ஒதுக்கீடு தந்தால்தான் மருத்துவம் போன்ற சிறப்பு படிப்புகளைப் படிக்க அவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும்,'' என்கிறார் மகாலிங்கம்.

தனியார் பயிற்சி மையங்களில் படிப்பவர்களுக்கும், அரசு பள்ளிகளில் வசதியின்றி தாங்களாகவே தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கும் வித்தியாசம் உள்ளது என்கிறார் மகாலிங்கம். ''தனியார் பள்ளிகள் மற்றும் பயிற்சி மையங்களில் நீட் தேர்வுக்கு தயார் செய்ய பல உதவிகள் கிடைக்கும் மாணவர்களுக்கும், எந்தவித உதவியும் கிடைக்காமல் தேர்வுக்கு தயாராகவேண்டும் என்ற நிலையில் உள்ள மாணவர்களுக்கும் ஒரே மாதிரியான அளவீடுகளை வைப்பது சரியல்ல. விரைந்து இந்த இட ஒதுக்கீட்டு மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் தரவேண்டும்,'' என்கிறார் மகாலிங்கம்.

தான் மருத்துவராக இருப்பது, தனது கிராமத்தில் பிற மாணவர்களையும் ஊக்குவித்தது என்றும் அரசுப்பள்ளியில் படித்தவர்கள் தொழில்முறை (professional courses) படிப்புகளில் சாதிக்கமுடியும் என்ற எண்ணத்தை பல மாணவர்களுக்கு ஏற்படுத்தியது என்றும் கூறுகிறார் அவர் .

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஏன் இடஒதுக்கீடு தேவை?

பட மூலாதாரம், Getty Images

மற்றொரு அரசுப்பள்ளி மாணவரான ஜானகிராமனிடம் பேசியபோது "மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க காலம் எடுத்துக்கொள்ளும் ஆளுநர் அலுவலகம், இடஒதுக்கீட்டை எவ்வாறு உண்மையான மாணவனுக்கு உதவும் வகையில் செயல்படுத்தலாம் என பரிந்துரை செய்யவேண்டும்" என்று கருத்து தெரிவித்தார்.

மதுரையைச் சேர்ந்த மருத்துவர் ஜானகிராமன், 2006ல் மருத்துவப் படிப்புக்கான தமிழக அரசின் நுழைவு தேர்வில், மேலூர் கல்வி மாவட்டத்தில் தேர்வான இரண்டு அரசுப் பள்ளி மாணவர்களில் ஒருவர்.

''நான் அரசு உதவி பெறும் பள்ளியில் படித்தேன். நானும் மற்றொரு மாணவர் மட்டுமே மேலூர் கல்வி மாவட்டத்தில் தேர்வானோம். இட ஒதுக்கீடு இருந்ததால் எனக்கு வாய்ப்பு கிடைத்தது. தற்போது நீட் தேர்வில் இந்த உள் ஒதுக்கீட்டை அமல்படுத்தினால், 7.5 சதவீதம் என்றபோதும் ஒரு சிறிய அளவில் ஊரக மாணவர்கள் மருத்துவம் பயில பெரிய வாய்ப்பு கிடைக்கும். அதிலும் குறிப்பாக அரசுப்பள்ளியில் குறைந்தது 6 ஆண்டுகளாவது படித்திருக்கவேண்டும் என்ற கட்டுப்பாடு கொண்டுவரவேண்டும். ஏனெனில், அரசுப்பள்ளி மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு என்று கொண்டுவந்தால், இந்த இடஒதுக்கீடை பெறுவதற்காக 11, 12ம் வகுப்பு மட்டும் அரசுப் பள்ளியில் படித்துவிட்டு மருத்துவப் படிப்பை பெறலாம் என்ற வழியை சில மாணவர்கள் தேர்வு செய்ய வாய்ப்புள்ளது,'' என்கிறார் ஜானகி ராமன்.

12ம் வகுப்பு மதிப்பெண்ணுக்குப் பதிலாக நீட் தேர்வு மதிப்பெண்ணை வைத்து மருத்துவ சேர்க்கை நடப்பதால், பலரும் இந்த உள் ஒதுக்கீட்டு வழியில் மருத்துவப் படிப்புக்கு இடம் கிடைக்கும் என முயற்சி செய்ய வாய்ப்புள்ளது என்கிறார் ஜானகி ராமன். ''தற்போதைய நிலையில், அரசுப்பள்ளிகளில் படித்தவர்களில் ஒரு சாரார், மருத்துவம் படிப்பதற்கு நீட் தேர்வு கட்டாயம் என்ற காரணத்தினால் அதனை விடுத்து பிற பட்டபடிப்புகளுக்கு செல்கிறார்கள். திறமையான மாணவர்களாக இருந்தாலும், அவர்களால் முதல் முறையில் நீட் தேர்ச்சி பெறமுடியாமல் போனால், அடுத்தடுத்த ஆண்டுகளை நீட் தேர்வுக்காக செலவிடமுடியாத குடும்பச் சூழலில் இருப்பார்கள். அரசுப்பள்ளி மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு அவசியம், அதேநேரம் அதனை கொண்டுவரும்போது, உரிய மாணவர்களுக்கு அந்த இடங்கள் கிடைப்பதை உறுதி செய்யவேண்டும்,'' என்கிறார் ஜானகி ராமன்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: