பிகார் தேர்தல் 2020: சாதிகள் Vs பாஜகவின் இந்துத்துவ கொள்கைகள் - வரலாறு உணர்த்தும் குறிப்புகள்

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், ஜனீஷ் குமார்
- பதவி, பிபிசி செய்தியாளர், பிகார்
பிகாரில், 1995ஆண் ஆண்டு சட்டமன்ற தேர்தலின் மூன்றாம் கட்டம் முடிந்திருந்தது. சில பத்திரிகையாளர்கள் லாலு பிரசாத் யாதவை சந்திக்க சென்றனர். அவர்களில் ஒருவர் இந்துஸ்தான் டைம்ஸின் பத்திரிகையாளர் சஞ்சய் சிங் ஆவார்.
யாதவ் அல்லாத பிற பிற்படுத்தப்பட்டோர் (ஓபிசி) வாக்காளர்கள், குறிப்பாக கொய்ரி மற்றும் குர்மி இனத்தவர்கள் தன்னிடமிருந்து விலகிச்சென்றுவிட்டார்கள் என்பதை லாலு உணர்ந்தார். உயர்சாதியினரும் லாலுவுக்கு எதிராக ஒன்றிணைய ஆரம்பித்தனர். அடுத்த நாள் 'இந்துஸ்தான் டைம்ஸ்' செய்தித்தாளில் ஒரு செய்தி வெளிவந்தது.
லாலு யாதவ், குர்மி-கொய்ரி இனத்தவர்களுக்கு எதிராக தகாத மொழியைப் பயன்படுத்தியதாகவும், உயர் சாதியினரும் அவர்களுடன் அணிதிரண்டு வருவதாக அவர் கூறியதாகவும் அந்த செய்தி இருந்தது.

பட மூலாதாரம், Getty Images
இந்த அறிக்கை குறித்து நான் சஞ்சய் சிங்கிடம் கேட்டபோது, "லாலு யாதவ் அப்படித்தான் சொன்னார், அதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் லாலு யாதவ் இதை ஒரு சாதாரண முறையிலான சந்திப்பின்போது கூறினார், நான் அதை பிரசுரித்திருக்கக்கூடாது," என்று கூறினார். ஆனால் இந்துஸ்தான் டைம்ஸில் ஒரு பத்தி இருந்தது. அதில் 'அரசியல் வதந்திகள்' இடம்பெறும். லூலு குறித்த இந்த செய்தி என் பெயரில் அச்சிடப்பட்டது. 'என்று அவர் மேலும் தெரிவித்தார்.
"தேர்தல்களுக்கு மத்தியில் இதுபோன்ற ஒரு செய்தி, எந்தவொரு தலைவருக்கும் கோபத்தை ஏற்படுத்த போதுமானது. லாலு யாதவ் என் மீது மிகுந்த கோபத்தில் இருந்தார். ஆனால் அவரது நல்ல குணம் என்னவென்றால், பத்திரிகையாளர்கள் செய்யும் பணிக்காக அவர்களை எப்போதுமே குறிவைக்கமாட்டார். 1995 தேர்தலில், யாதவர்களுக்கும், கொய்ரி-குர்மிகளுக்கும் இடையே ஒரு பிளவு ஏற்பட்டது. லாலு யாதவ் மற்றும் நிதீஷ் குமார் இந்த இரண்டு சாதியினரையும் பிரதிநிதித்துவப்படுத்தினர்,'' என்று சஞ்சய் சிங் தெரிவிக்கிறார்.
1995ஆம் ஆண்டு, பிகார் சட்டமன்றத் தேர்தலில் லாலு யாதவும், நிதீஷ் குமாரும் பிரிந்தனர். 1990ஆவது ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் காணப்பட்ட ,உயர் சாதியினர் என்று அழைக்கப்படுபவர்களுக்கு எதிராக பின்தங்கிய சாதிகளை அணி திரட்டும் செயலானது, நிதீஷ் மற்றும் லாலு பிரிந்ததன் காரணமாக உடைந்து விட்டதுபோல தெரிந்தது.
பிகாரில் பின்தங்கிய சாதியினரிடையே யாதவ் மற்றும் கொய்ரி-குர்மி மிகவும் செல்வாக்குள்ள சாதிகள். ஆனால் 1995ஆம் ஆண்டு, சட்டமன்றத் தேர்தலில் இருவரின் தலைமையும் பிரிந்தது. கொய்ரி-குர்மி மற்றும் யாதவர்களுக்கிடையில் உயர் சாதியினருக்கு எதிராக ஒற்றுமை இருந்தது, ஆனால் பின்னர் இரு தரப்பினரின் குறிக்கோள்களும் மோதத் தொடங்கின.
இருப்பினும், 1995ஆம் ஆண்டு தேர்தலில் நிதீஷ்குமாரால் சிறப்பாக எதையும் சாதிக்க முடியவில்லை. அவரது சமதா கட்சிக்கு ஏழு இடங்கள் மட்டுமே கிடைத்தன. ஆனால் 2000 வது ஆண்டு சட்டமன்றத் தேர்தல்கள் வந்தவுடன், யாதவர்களின் ஆதிக்கம் தொடர்பாக பின்தங்கிய சாதியினரிடமிருந்து எதிர்ப்பு குரல்கள் ஒலிக்கத்தொடங்கின.
நிதீஷ் குமார் ,யாதவ் அல்லாத ஓபிசி சாதியினரை ஒருஅணியில் சேர்க்கத்தொடங்கினார். இந்த அரசியலில் பிகாரின் உயர் சாதிகள் என்று அழைக்கப்படுபவர்களின் ஆதரவும் அவருக்கு கிடைத்தது.
இந்த அரசியல் விளையாட்டில், காங்கிரஸும் இடது சாரி கட்சிகளும் மிகவும் பாதிக்கப்பட்டன. இருவரும் தொடர்ந்து ஓரங்கட்டப்பட்டனர். காங்கிரஸுக்கு, லாலுவின் ஆதரவை நாடவேண்டிய நிலை வந்தது. அதே நிலைமை இன்றும் தொடர்கிறது. 1994இல் நடந்த குர்மிகளின் பேரணியில் நிதீஷ் குமார் கலந்து கொண்டு, அவர்களின் நலன்களை அடிக்கோடிட்டுக் காட்டினார்.
பின்தங்கிய சாதிகளின் ஒற்றுமை உடைந்தது
1995ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் தோல்வியடைந்த பின்னர், பிகாரில் தனியாக லாலு யாதவை எதிர்த்துப் போட்டியிட முடியாது என்று நிதீஷ் குமார் உணர்ந்தார். 1996 மக்களவைத் தேர்தலில் நிதீஷ் குமார், இந்துத்துவ கட்சியான பாஜகவுடன் கூட்டணி அமைத்தார். ராமர் கோவில் இயக்கத்தின் போது ,பாஜக ஒரு 'வகுப்புவாதக் கட்சி' என்று சொல்லிக்கொண்டிருந்த நிதீஷ்குமார், 1996ல் லாலுவைத் தோற்கடிக்கும் எண்ணத்துடன், அக்கட்சியுடன் கூட்டு சேர்ந்தார்.

பட மூலாதாரம், Seetu Tiwari
"இன மேலாதிக்கத்தின் அரசியல் 90 களில் முடிவடையவில்லை. ஆனால் மாறிக்கொண்டிருந்தது. இந்த மாற்றத்தின் விளைவாக, பிகாரில் பின்தங்கிய சாதிகளின் ஒற்றுமை உடைந்தது. மேலும், நிதீஷ் மற்றும் லாலுவின் பாதை பிரிந்தது," என்று ஆர்.ஜே.டி (ராஷ்ட்ரிய ஜனதா தள்) தலைவர் பிரேம் குமார் மணி குறிப்பிட்டார்.
"பிகாரில் லாலு மற்றும் பாஜக, இருவரையும் நிதீஷால் ஒன்றாக எதிர்க்க முடியவில்லை, எனவே அவர் ஒருவருடன் செல்ல வேண்டியிருந்தது."என்று பிரேம் குமார் மணி மேலும் கூறினார்.
2000 வது ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் நிதீஷ்குமார் மற்றும் பாஜக கூட்டணி, 121 இடங்களை வென்றன. நிதீஷ் குமார் பெரும்பான்மை வலு இல்லாமல் முதல்வராக ஆனார். இந்த நிலையில் ஒரு வாரத்திற்குள் நிதீஷ் பதவி விலக வேண்டியிருந்தது.
இதன் பின்னர், காங்கிரஸின் ஆதரவுடன் ராப்ரி தேவி மீண்டும் முதல்வரானார். 2000 வது ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் தனியாக போட்டியிட்டது. ஆனால் தேர்தலுக்குப் பிறகு லாலுவுடன் கைகோர்த்தது. காங்கிரஸ் 23 இடங்களை வென்று ராப்ரி தேவியின் அரசில், கூட்டணி கட்சியாக மாறியது.
அந்த நேரத்தில் ஆர்ஜேடியுடன் காங்கிரஸ் சேர்ந்தது, தற்கொலை நடவடிக்கைக்கு ஒப்பானது என்று சஞ்சய் சிங் கூறுகிறார். "காங்கிரஸுடன் இருந்த எல்லா உயர் சாதியினரும் , நிதீஷ் குமார் தலைமையிலான என்.டி.ஏ (தேசிய ஜனநாயக கூட்டணி) பக்கம் சென்றுவிட்டனர். லாலு குடும்பத்தின் ஆட்சி முடிவுக்கு வரும் என்று உயர் சாதியினர் 2000 வது ஆண்டில் நினைத்தனர். ஆனால் காங்கிரஸ் இதை நடக்க விடவில்லை. அத்தகைய சூழ்நிலையில், உயர் சாதியினர் காங்கிரஸின் மீது கோபமடைந்தது இயல்புதான், "என்று அவர் தெரிவித்தார்.
2000 வது ஆண்டு வாக்கில், மண்டல் அரசியல் (பின்தங்கிய வகுப்பினருக்கான இட ஒதுக்கீடு அரசியல்) முற்றிலும் சிதைந்து போனது. ஆனால் கமண்டல அரசியல் அதன் சொந்த வேகத்தில் முன்னேறிக்கொண்டிருந்தது. பாஜகவின் அரசியலான கமண்டலம், லாலுவை எதிர்த்துப் போராடுவதற்கு நிதீஷின் தலைமையை ஏற்றுக்கொண்டது. லாலுவை தோற்கடிக்க நிதீஷும் பாஜகவுடன் கைகோர்த்தார்.
இறுதியில், நிதீஷ் குமார் 2005 ல் பிகார் முதல்வரானார். 2005 அக்டோபர் மாதம் நடந்த சட்டமன்றத் தேர்தலில், பாஜக 55 இடங்களையும், ஜேடியு (ஐக்கிய ஜனதா தளம்) 88 இடங்களையும் வென்று ஒரு முழுமையான பெரும்பான்மை வலுவுடன் கூட்டணி அரசை அமைத்தது.
நிதீஷ்குமாரின் இந்த அரசில், பாஜக ஒரு இளைய கட்சி போலவே இருந்தது. அந்த நேரத்தில், அத்வானி பாஜகவில் செல்வாக்குடைய தலைவராக இருந்தார். நரேந்திர மோதி குஜராத் முதல்வராக இருந்தார். நிதீஷ் குமார், பாஜகவுடன் இருந்தபோதிலும், தனது சமயசார்பற்ற பிம்பத்தை கவனித்துக்கொண்டதோடு கூடவே, பாஜகவின் இந்துத்துவ அரசியலில் இருந்தும் தூரத்தை பராமரித்து வந்தார்.
2002 ல் குஜராத் கலவரம் காரணமாக பிகாரில் பிரச்சாரம் செய்ய நரேந்திர மோதியை கூட அவர் அனுமதிக்கவில்லை. மோதியுடன் மேடையை பகிர்ந்து கொள்ள நிதீஷ்குமார் தயாராக இல்லை. மோதியுடன் அவரது படம் அச்சிடப்பட்டால், அவர் கோபமடைவார்.
2010 சட்டமன்றத் தேர்தலில் நிதீஷ்குமாருக்கு மாபெரும் வெற்றி கிடைத்தது. லாலு யாதவ்-ராம் விலாஸ் பாஸ்வான் கூட்டணிக்கு 25 இடங்கள் மட்டுமே கிடைத்தன. 243 இடங்கள் கொண்ட சட்டமன்றத்தில் என்டிஏ 206 இடங்களை வென்றது. ஐக்கிய ஜனதா தளம் 115 இடங்களையும் பாஜக 91 இடங்களையும் கைப்பற்றின.
இது லாலு யாதவுக்கு பெரும் தோல்வியாக அமைந்தது. ஆனால் இது நிதீஷின் வெற்றியுடன் கூடவே இந்துத்துவ அரசியலுக்கு கிடைத்த பெரிய வெற்றியாகவும் ஆனது.
1990 முதல், பாஜகவின் வாக்குகள் பங்கு படிப்படியாக அதிகரித்துள்ளது. 2010 வெற்றிக்கு பின்னர் கூட நிதீஷ் குமார் தனது சமயசார்பற்ற தோற்றத்தையே பிரதிபலித்து வந்தார்.
இந்த வெற்றிக்குப் பின்னர், பாஜக இல்லாமல் கூட பிகார் அரசியலில் தனித்து ஆட்சி செய்ய முடியும் என்று நிதீஷ் குமார் நினைத்ததாக சஞ்சய் சிங் கூறுகிறார். ஆனால் இது அவரது தவறான மதிப்பீடாக அமைந்தது.
நிதீஷும் லாலுவும் ஒன்றாக சேர்ந்த தருணம்

பட மூலாதாரம், Getty Images
2014 மக்களவைத் தேர்தலுக்கான பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோதியை பாஜக அறிவித்தது. 2013 ல் இந்த அறிவிப்பு வந்தவுடன் நிதீஷ் குமார் பாஜகவிடமிருந்து பிரிந்தார்.
அதன்பிறகு நிதீஷ் குமாரை கடுமையாக தாக்கத் தொடங்கிய நித்யானந்த் ராய், கிரிராஜ் சிங் போன்ற தலைவர்களை பாஜக முன்வைத்தது. இரு தலைவர்களின் அறிக்கைகளிலும் இந்து-முஸ்லிம்கள் பற்றிய பேச்சும் இருந்தது.
2014 மக்களவைத் தேர்தலில் பாஜகவிடமிருந்து பிரிந்ததன் விளைவை நிதீஷ்குமார் சந்திக்க வேண்டியிருந்தது. நிதீஷின் ஜே.டி.யு இரண்டு இடங்களை மட்டுமே வெல்ல முடிந்தது. அதே நேரத்தில் பாஜக, 30 மக்களவை இடங்களுக்கு வேட்பாளர்களை நிறுத்தி 22 இடங்களை வென்றது.
எந்த நரேந்திர மோதிக்கு எதிராக நிதீஷ் குமார் கொடி உயர்த்தினாரோ அதே மோதி, வலுவான பெரும்பான்மையுடன் நாட்டின் பிரதமமந்திரியானார். பிகாரில், லாலு மற்றும் பாஜக இருவரையும் ஒன்றாக எதிர்த்துப் போராட முடியாது என்பதை நிதீஷ் குமார் உணர்ந்தார்.
அதன்பிறகு அவர் 2015 சட்டமன்றத் தேர்தலில் ஆர்.ஜே.டி.(ராஷ்ட்ரிய ஜனதா தள்) யுடன் கூட்டு சேர்ந்தார். இந்தக் கூட்டணி பாஜகவுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. பாஜக வெறும் 53 இடங்களை மட்டுமே பெற முடிந்தது.
நிதீஷ் குமார் ஆர்ஜேடியுடன் வெறும் 16 மாதங்களே உடனிருந்தார். பின்னர் அவர் மீண்டும் பாஜகவிடமே வந்துவிட்டார். ஆனால் இந்த முறை நிதீஷ்குமார், மோதியின் பாஜகவுக்கு திரும்பினார். இதனால் அவரது சமய சார்பற்ற தோற்றம் ஆட்டங்கண்டது. பிகாரில், பாஜக தலைவர்கள் வெளிப்படையாக இந்து-முஸ்லிம் குறித்து அறிக்கைகளை வெளியிடத் தொடங்கினர்.
நாரேந்திர மோதியை எதிர்ப்பவர்களை பாகிஸ்தானுக்கு அனுப்ப வேண்டும் என்று கிரிராஜ் சிங், 2014 ஏப்ரல் 19 ஆம் தேதி ஜார்க்கண்டின் தியோகரில் கூறினார். கிரிராஜ் சிங் , நிதீஷ் குமார் அரசில், பாஜக தரப்பிலிருந்து அமைச்சராகவும் இருந்துள்ளார்.
2015 டிசம்பரில் நடந்த பிகார் சட்டமன்றத் தேர்தலின் போது நடந்த பேரணியில் உரையாற்றிய அப்போதைய பாஜக தலைவர் அமித் ஷா, "பிகாரில் பாஜக தவறுதலாக தோற்றால் கூட , பாகிஸ்தானில் பட்டாசு வெடிக்கும்" என்றார்.
இது தவிர, 2018 ல் நிதீஷ்குமார் முதலமைச்சராக இருந்தபோது, ராமநவமி பண்டிகை காலத்தில் பிகாரின் பல நகரங்களில் கலவரங்கள் நடந்தன. அவுரங்காபாத், நவாடா, ரோஸ்டா மற்றும் பாகல்பூரில் வகுப்புவாத வன்முறை நிகழ்ந்தன மற்றும் மசூதிகள் குறிவைக்கப்பட்டன. அவுரங்காபாத், நவாடா மற்றும் பாகல்பூரில், பாஜக தலைவர்களுடன் தொடர்புடைய அமைப்புகள் மீது கலவரத்தைத் தூண்டியதாக குற்றம் சாட்டப்பட்டது. நிதீஷ்குமார் முதல்வராக இருந்தபோது வகுப்புவாத வன்முறை நடந்தது இதுவே முதல் முறையாகும்.
சாதி ஒடுக்குமுறையை அடிப்படையாகக் கொண்ட இன அடையாள அரசியல், 2014 ல் பாஜகவின் இந்துத்துவ அரசியலுக்கு முன்னால் மோசமாக தோற்கடிக்கப்பட்டது என்று பிகாரில் பலர் நம்புகிறார்கள்.
இந்துத்துவ கட்டம்
மதத்தை அடிப்படையாகக் கொண்ட அரசியலை எதிர்த்துப் போராடுவதற்கு இன அடையாளத்தின் அரசியல் ஒரு சிறந்த ஆயுதமாக இருக்க முடியாது என்று பாட்னாவின் மூத்த பத்திரிகையாளர் ஃபைசான் அகமது கூறுகிறார். இதன் விளைவை நாம் கண்கூடாக காண்கிறோம் என்று அவர் குறிப்பிடுகிறார்.

பட மூலாதாரம், Getty Images
பாஜக, சாதி மற்றும் மதம் ஆகிய இரண்டையும் அதன் வழியில் கையாண்டுள்ளது என்றும் இந்த விஷயத்தில் மண்டல்வாத அரசியல் அதை எதிர்த்துப் போராடத் தவறிவிட்டதாகவும் ஃபைசன் அகமது கூறுகிறார். மண்டல் அரசியலில் காங்கிரஸ் மற்றும் இடது சாரிகட்சிகள் பிகாரில் வீழ்ச்சிகண்டதைப் போலவே இதுவும் உள்ளது. இப்போது இந்துத்துவ அரசியலால், மண்டல் அரசியல் முடிவுக்கு வருவது போல காணப்படுகிறது.
1989 ல் பிகாரில் பாகல்பூரில் நடந்த கலவரங்களுக்குப் பிறகு, காங்கிரஸ் இன்றுவரை ஆட்சிக்கு வரமுடியவில்லை. கலவரத்தின் போது காங்கிரஸ் ஆட்சியில் இருந்தது. முதல்வராக சத்யேந்திர நாராயண் சிங் இருந்தார். இந்த கலவரத்திற்குப் பிறகு பிகார் அரசியலில் இருந்து சத்யேந்திர நாராயண் சிங் காணாமல் போனார். பாகல்பூர் கலவரத்திற்குப் பிறகு, பிகார் மக்கள் காங்கிரஸை திரும்பிக்கூட பார்க்கவில்லை.
அது ஏன்? அந்த நேரத்தில் பாகல்பூர் கலவரம் பற்றிய செய்திகளை நேரில் சென்று சேகரித்த பத்திரிக்கையாளர் மனாசிர் ஆஷிக் ஹர்தான்வி கூறுகையில், 1989 ஆம் ஆண்டு நடந்த கலவரங்கள், காங்கிரஸின் உள் தலைமை அதிகாரத்தை பறிக்கவும், கவிழ்க்கவும் நடந்த போட்டியின் விளைவாகும் என்கிறார்.
"கட்சிக்குள் இருந்த பிராமணர்களின் குழுவுக்கு, சத்யேந்திர நாராயண் சிங்கை பிடிக்காமல் இருந்தது. இந்தப்பிரிவினர்தான் கலவரத்தை தூண்டிவிட்டனர் ," என்று மனாசிர் ஆஷிக் கூறுகிறார். பாகல்பூரின் அப்போதைய காவல்துறை கண்காணிப்பாளர் ,கே.எஸ். திவேதி மற்றும் மாவட்ட ஆட்சியர் டி.எம்.அருண் ஜா ஆகியோரை நீக்க ,அதே பிரிவு அனுமதிக்கவில்லை. அப்போதைய பிரதமர் ராஜிவ் காந்தியும் இந்த பிரிவுக்கு தலைவணங்கினார்.
1989ஆம் ஆண்டு அக்டோபர் 26 அன்று, ராஜீவ் காந்தி சத்தியேந்திர நாராயண் சிங்குடன் கலவரங்களுக்கு மத்தியில், பாகல்பூரை அடைந்தார். பாகல்பூரை அடைந்ததும், ராஜீவ் காந்தி முன்னிலையில், கே.எஸ். திவேதியை அங்கிருந்து மாற்றுவதற்கு எதிராக போலீசார் கோஷங்களை எழுப்பத் தொடங்கினர். கே.எஸ். திவேதியின் இடமாற்ற முடிவை ரத்து செய்ததன்மூலம், ராஜீவ் காந்தி ஒரு பெரிய தவறை செய்ததாக, மனாசிர் ஆஷிக் கூறுகிறார்.
சத்யேந்திர நாராயண் சிங் தனது அரசியல் வாழ்க்கை குறித்து ' எனது நினைவுகள், எனது தவறுகள்' என்ற புத்தகத்தை எழுதியுள்ளார். பாகல்பூர் கலவரம் பற்றி இந்த புத்தகத்தில் ஒரு அத்தியாயம் இருந்தது. இந்த அத்தியாயத்தில் கலவரங்கள் பற்றி விரிவாகக் கூறப்பட்டிருந்தன. ஆனால் ராஜிவ் காந்தியின் பெயர் மோசமடைந்துவிடும் என்ற பயம் இருந்ததால் , பாகல்பூர் கலக அத்தியாயம் புத்தகத்திலிருந்து நீக்கப்பட்டது. இந்த புத்தகத்தின் அசல் நகலைக் கண்டுபிடிக்க நிறையவே சிரமங்களை சந்திக்க வேண்டியிருந்தது.
சத்யேந்திர நாராயண் சிங் அரசில் தலைமை செயலராக இருந்த ராம் உபதேஷ் சிங், இந்த புத்தகத்தின் கையெழுத்துப் பிரதியைத் தயாரித்திருந்தார். அவரை தொடர்பு கொண்டபோது, கையெழுத்துப் பிரதியைக் கொடுக்க ஒப்புக்கொண்டார்.
"பாகல்பூருக்கு பிரதமர் ராஜிவ் காந்தி வருவதற்கு முன்பே, கே.எஸ். திவேதியை அங்கிருந்து மாற்றுவதற்கான முடிவு எடுக்கப்பட்டுவிட்டது. வகுப்புவாதத்தை ஆதரிப்பவராக அவரது தோற்றம் ஏற்கனவே ஆகிவிட்டது. பாகல்பூரின் எஸ்.பி, தங்களுக்கு எதிரானவர் என்ற கருத்து, சிறுபான்மையினரின் மனதில் பதிந்துவிட்டது. நிர்வாகத்தின் நடுநிலையை கருத்தில் கொண்டு, எஸ்.பி ஐ பணியிடமாற்றம் செய்வதற்கான உத்தரவை நான் அளித்திருந்தேன்," என்று இந்தப்புத்தகத்தில், சத்யேந்திர நாராயண் சிங் குறிப்பிட்டுள்ளார்.

பட மூலாதாரம், Getty Images
"பாகல்பூரின் அப்போதைய மாவட்ட ஆட்சியர் அருண் ஜாவை மாற்றவும் நான் விரும்பினேன், ஆனால் அவர் பகவத் ஜா ஆசாத்திற்கு விருப்பமானவர். மக்களவைத் தேர்தலில் தேர்தல் அதிகாரியாகவும் அருண் ஜா நியமிக்கப்பட்டார். எனவே, தேர்தல் ஆணையத்தின் அனுமதியின்றி அவரது இடமாற்றம் சாத்தியமில்லை. அக்டோபர் 24 அன்று, ராஜிவ் காந்தியுடன் நானும் பாகல்பூருக்கும் சென்றேன். பாகல்பூர் விமானஓடு பாதையில் இருந்து சர்க்யூட் ஹவுஸுக்கு செல்லும் வழியில், கட்டுக்கடங்காத சில நபர்கள் இருந்தனர். அவர்கள் விஸ்வ இந்து பரிஷத் மற்றும் காவல்துறையை சேர்ந்தவர்கள். ராஜிவ் காந்தியின் முன்னிலையில், கே.எஸ். திவேதியின் இடமாற்றத்திற்கு எதிராக குரல் கொடுத்தனர். மக்களின் கோபத்தைப் பார்த்த ராஜிவ் அவர்கள், என்னைக் கலந்தாலோசிக்காமல் துரதிருஷ்டவசமாக எஸ்.பியின். இடமாற்றத்தை நிறுத்துவதாக அறிவித்தார். இந்த அறிவிப்புக்குப் பிறகு, ராஜிவ் காந்திக்கு, அபாரமான கைதட்டலுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது . எஸ்பியின் இடமாற்றத்தை நிறுத்துவது, முஸ்லிம்களுக்கு தவறான செய்தியை அனுப்பும் என்றும் போலிஸ் படையில் ஒழுக்கமின்மை அதிகரிக்கும் என்றும் நான் நம்பினேன். உண்மையில், கே.எஸ். திவேதியின் இடமாற்றல் தடுப்பை அடுத்து,காங்கிரஸுடன் முஸ்லிம்களின் அதிருப்தி தொடங்கியது. ராஜிவ் அவர்களின் இந்த அறிவிப்பால் நான் அதிர்ச்சி அடைந்தேன். ஆத்திரத்தில் காரிலேயே அமர்ந்திருந்தேன்,"என்று சத்யேந்திர சிங் மேலும் எழுதியுள்ளார்.
"எனது அரசியல் சகாக்கள் சிலர் பொறாமை காரணமாக கலவரத்தை மேலும் தூண்டினர். கலவரத்தின் போது எனது அரசியல் நண்பர்கள் சிலர் பாகல்பூரில் இருந்தனர். ஆனால் நிலைமையைக் கட்டுப்படுத்துவதற்குப் பதிலாக, அவர்கள் தீயில் எண்ணெய் ஊற்றிக் கொண்டிருந்தார்கள். அந்த நேரத்தில் என் நிலை மஹாபாரதத்தின் அபிமன்யு போல இருந்தது. நாலாபுறமும் என் சொந்தமக்களே என்னை சூழ்ந்தனர்," என்று அவர் மேலும் எழுதியுள்ளார்.
பாகல்பூர் கலவரத்தின் தாக்கம் மக்களின் மனதில் இருந்து அழிந்துவிட்டது என்று கருத முடியாது. பூர்னியாவின் எந்த ஹோட்டலில் உட்கார்ந்து, நான் இதை எழுதிக்கொண்டிருக்கிறேனோ, அது பிகாரின் முதலாவது முதலமைச்சர் ஸ்ரீ கிருஷ்ணா சிங்கின் மருமகனுக்கு சொந்தமானது. இந்த ஹோட்டல் உணவகத்தின் கவுண்டரில் அமர்ந்திருக்கும் சஞ்சய் குன்வாருடனான உரையாடலின் போது, அவர் பாகல்பூரைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்தது.
கலவரம் குறித்து அவரிடம் கேட்டபோது, "பாகல்பூரின் ததர்பூர் மொஹல்லா, ஒரு மினி பாகிஸ்தான். அதனால்தான் கலவரம் நடந்தது" என்று உணர்ச்சிபூர்வமாக அவர் கூறினார்."
இந்தியாவில் பெருமளவு முஸ்லிம் மக்கள் வசிக்கும் பகுதியை 'மினி பாகிஸ்தான்' என்று அழைக்கும் மனநிலை புதியதல்ல. நான் இந்துவா முஸ்லிமா என்று அறிய சஞ்சய் முதலில் என் பெயரைக் கேட்டார். அதன்பிறகு அவர் தனது கருத்துக்களை வெளிப்படையாக கூறத்தொடங்கினார்.
"நான் பூமிஹார் வகுப்பை சேர்ந்தவன். ஆனால் கலவரத்திற்குப் பிறகு, பாஜகவின் தாமரை மலர், யாருடைய கைகளில் இருந்தாலும் நாங்கள் அவர்களுக்கு வாக்களிக்கிறோம்" என்று சஞ்சய் கூறினார்.
ராஜிவ் காந்தி முன்னதாக,ஷாபானோ வழக்கின் மீதான நெருக்குதலை குறைக்கும் முயற்சியாக, ராமர் கோயிலின் பூட்டைத் திறந்து, தனக்கு தெரியாமலேயே வருங்கால அரசியலுக்கு அடித்தளம் அமைத்திருந்தார்.
சமூக நீதிக்கு எதிராக இந்து ஒற்றுமை
பாகல்பூர் கலவரம் பிகாரில் இந்துத்துவ அரசியலுக்கு நிலம் கொடுத்தது. ஆனால் லாலு பிரசாத் யாதவின் அரசியல் இந்த நிலத்தை வளமானதாக மாற்ற அனுமதிக்கவில்லை என்று ஏ.என்.சின்ஹா சமூக ஆய்வு நிறுவனத்தின் முன்னாள் இயக்குனர் டி.எம். திவாகர் கூறுகிறார்.
"ஒரு புறம், காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது ஏற்பட்ட கலவரத்தை மீண்டும் நடக்க அனுமதிக்க மாட்டேன் என்றும் பாஜகவின் இந்துத்துவ கொள்கையை கண்டிப்பாக கட்டுப்படுத்துவதாகவும் லாலு யாதவ் முஸ்லிம்களுக்கு உறுதியளித்தார். மறுபுறம், காங்கிரஸ் ஆட்சியின் போது இருந்த உயர் சாதியினரின் ஆதிக்கத்தை லாலு பிரசாத் உடைத்தார். 1990 முதல் எந்த உயர் சாதித் தலைவரும் பிகார் முதல்வராக ஆக முடியவில்லை. இந்த நிலை இன்றும் தொடர்கிறது," என்று டி.எம். திவாகர் கூறுகிறார் .
1990 மார்ச் 10 ஆம் தேதி லாலு பிரசாத் யாதவ் ' வாக்கு எங்களுடையது ஆட்சி உங்களுடையது, இது நடக்காது , இது நடக்காது' என்ற முழக்கத்துடன் பிகார் முதல்வராக ஆட்சியில் அமர்ந்தார்.
பிகாரில், ஜனதா தளம் என்பதன் பொருளே லாலு பிரசாத் யாதவ் என்று ஆனது. உண்மையில், அவர் ஜனதா தளத்தை விட உயர்ந்துவிட்டார். 1990 ஆகஸ்ட் 7 அன்று, பிரதமர் வி.பி.சிங் , மண்டல் ஆணையத்தின் பரிந்துரைகளை அமல்படுத்துவதாக அறிவித்தார். மண்டல் ஆணையத்தின் பரிந்துரைகளின்படி, மத்திய அரசு வேலைகளில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 சதவிகித இடஒதுக்கீட்டிற்கு வழி செய்யப்பட்டிருந்தது.
சி.எஸ்.டி.எஸ் இயக்குநர் பேராசிரியர் சஞ்சய் குமார் தனது 'பிகாரில் மண்டலுக்குப் பிந்தைய அரசியல்' என்ற புத்தகத்தில், மண்டல் ஆணையத்தின் பரிந்துரைகளை செயல்படுத்தும் முயற்சி லாலு பிரசாத்துக்கு ஒரு வரப்பிரசாதமாக இருந்தது என்று எழுதியுள்ளார்.
" இடஒதுக்கீட்டில் பொருளாதார ரீதியாக பின்தங்கியவர்கள் என்ற அடிப்படை இருக்கவேண்டும் என்று பாஜக மற்றும் இடது சாரி கட்சிகள் , வி.பி.சிங் அரசை கேட்டுக்கொண்டன. ஆனால், லாலு யாதவ் இதை ஒப்புக்கொள்ளவில்லை. இதன் காரணமாக பிகாரில் , உயர்சாதியினர் மற்றும் பின்தங்கிய சாதியினரிடையே மோதல் ஆரம்பித்தது," என்று சஞ்சய் குமார் குறிப்பிட்டுள்ளார்.
சஞ்சய் குமாரின் கருத்தில், "மண்டல் அரசியலின் தாக்கத்தின் மத்தியில், பாஜக ராமர் கோவில் இயக்கத்தை முன்னோக்கி கொண்டுசென்றது. இந்த இரு பிரச்சினைகளும் நாட்டின் அரசியல் மேடையில் பற்றி எரிய ஆரம்பித்தன.பாஜக, மண்டல் ஆணையத்தின் பரிந்துரைகள் பற்றி தெளிவான கருத்தை கொண்டிருக்கவில்லை. அதை வெளிப்படையாக எதிர்க்கவும் இல்லை, ஆதரிக்கவும் இல்லை. கோவில் மற்றும் மசூதி பிரச்சினையை எழுப்புவதன் மூலம் மண்டல் இயக்கத்தை திசைதிருப்ப பாஜக விரும்புவதாக, லாலுவும் நிதீஷ்குமாரும் சேர்ந்து அக்கட்சியை தாக்கினர்.
அந்த நாட்களில் பாட்னாவின் காந்தி மைதானத்தில் நிதீஷ் குமார் இடஒதுக்கீட்டை ஆதரித்து பேரணி நடத்தி, அத்வானி மீது கடும் தாக்குதல் தொடுத்ததாக சஞ்சய் சிங் எழுதியுள்ளார்.
"அத்வானியின் ரத யாத்திரை என்பது மண்டல் ஆணையத்திற்கு எதிரான தடையைத் தவிர வேறில்லை. அது ஒரு இடையூறு மட்டுமே. மண்டல் ஆணையத்தை அதன் இறுதி மூச்சு வரை எதிர்த்தவர்களை பாஜக ஆதரிக்கிறது," என்று இந்த பேரணியில் நிதீஷ் குமார் கூறினார்.
இப்போது அதே நிதீஷ் குமார் பாஜகவுடன் இருக்கிறார். "உத்தர பிரதேசத்தின் யோகி போன்ற ஒருவர், பிகாரில் பாஜகவுக்கு தேவையாக இருக்கவில்லை. நிதீஷ் குமார் மூலமாவே தனது உகந்த தன்மையை அக்கட்சியால் உருவாக்க முடிந்தது. இப்போது, நிதீஷ்குமாரின் தோள்களில் சவாரி செய்தபடி, அவரையே பின்னுக்குத் தள்ளுவதில் வெற்றி பெற்று வருவது போலவும் தென்படுகிறது," என்று டி.எம். திவாகர் கூறுகிறார்.
அத்வானி கைது
1990, மார்ச் 10 ஆம் தேதி லாலு யாதவ் முதல்வரானார். ஆகஸ்ட் 7 ஆம் தேதி, வி.பி.சிங், மண்டல் ஆணையத்தின் பரிந்துரைகளை செயல்படுத்துவதாக அறிவித்தார். செப்டம்பர் 25 ஆம் தேதி, அத்வானி, குஜராத்தில் உள்ள சோம்நாத்தில் இருந்து அயோத்தி வரை ஒரு ரத யாத்திரை புறப்பட்டார்.
மண்டல் ஆணையத்தின் பரிந்துரைகளை அமல்படுத்திய பின்னர், பிகாரில் உயர்சாதி மற்றும் பின்தங்கிய சாதிகளுக்கு இடையிலான இடைவெளி ஆழமடைந்தது. ஆனால் அத்வானியின் ரத யாத்திரை மூலம் பிகாரில் வகுப்புவாத அரசியல் பரவுவதற்கான வாய்ப்பை லாலு முதலில் நிறுத்தினார்.
தனது ஆட்சியில் முஸ்லிம்கள் பாதுகாப்பாக இருப்பதாக லாலு மீண்டும் ஒரு செய்தியைக் கொடுத்தார்.
அத்வானியின் ரத யாத்திரை உருவாக்கிய பதற்றம் காரணமாக பல மாநிலங்களில் கலவரங்களும் நடந்தன. குஜராத், உத்தரபிரதேசம், ஆந்திரா மற்றும் கர்நாடகா குறிப்பாக பாதிக்கப்பட்டன. ரத யாத்திரையை உடனடியாக நிறுத்துமாறு பிகார் அரசுக்கு பிரதமர் வி.பி.சிங் உத்தரவிட்டார்.

பட மூலாதாரம், Getty Images
1990 அக்டோபர் 23 ஆம் தேதி, எல்.கே. அத்வானியை பிகாரின் சமஸ்திபூர் மாவட்டத்தில் கைது செய்ய, லாலு பிரசாத் யாதவ் அரசு உத்தரவிட்டது.
"லாலு பிரசாத் யாதவ், அப்போதைய அரசியல் சூழ்நிலையில், இந்துத்துவ கொள்கையின் வடிவமான அத்வானி கைது செய்யப்பட்டது மூலமான வாக்கு வங்கி அரசியலின் அனைத்து நன்மைகளையும் எடுத்துக் கொண்டார். அது தனது தனிப்பட்ட சாதனை என்றும் அவர் கூறிக்கொண்டார்," என்று சஞ்சய் குமார் தனது புத்தகத்தில் எழுதியுள்ளார். இந்த சம்பவம் அவரை முஸ்லிம்களிடையே பிரபலமாக்கியது. முஸ்லிம்களின் நலன்கள் மற்றும் லட்சியங்கள் பற்றி குரல் கொடுத்த இது போன்ற தலைவர் பிகார் அரசியலில் யாரும் இல்லை.
அத்வானி கைது செய்யப்பட்ட பின்னர், பாஜக மத்தியில் வி.பி. சிங்கிற்கு அளித்துவந்த இருந்த ஆதரவையும், பிகாரில் லாலு பிரசாத் யாதவ் தலைமையிலான அரசுக்கு அளித்துவந்த ஆதரவையும் திரும்ப பெற்றது.
பிகாரில் 39 பாஜக எம்எல்ஏக்களின் ஆதரவு பறிபோனதை அடுத்து, லாலு பிரசாத் யாதவின் அரசு, சிறுபான்மை அரசானது. இருப்பினும், சிபிஐ கட்சியின் 19 இடங்கள், சிபிஐஎம் கட்சியின் ஆறு இடங்கள், எம்எம்சிசி (ஏ.கே.ராய் தலைமை) பிரிவின் இரண்டு இடங்கள் மற்றும் ஐ.பி.எஃப் (இந்திய மக்கள் முன்னணி)ன் 7 இடங்களுடன், லாலு தொடர்ந்து ஆட்சியில் இருந்தார்.
இது தவிர, ஜே.எம்.எம்( ஜார்ஜண்ட் முக்தி மோர்ச்சா)வின் 19 உறுப்பினர்கள் மற்றும் சுயேச்சை எம்.எல்.ஏக்களின் ஆதரவும் லாலுவுக்கு இருந்தது. மண்டல் மற்றும் கமண்டல அரசியல் காரணமாக காங்கிரஸ் மற்றும் இடது சாரி கட்சிகள் மிகப்பெரிய இழப்பை சந்தித்தன.
லாலுவின் சமூக நீதிக்கான மாதிரி பின்தங்கிய சாதியை வலுப்படுத்துவதாக இருந்ததாகவும், இடதுசாரி கட்சிகள் அதையே ஏற்றுக்கொண்டு தங்களது சொந்தக் கொள்கைகளை சமரசம் செய்ததாகவும், பிகாரில் சிபிஐ (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி) நிறுவக உறுப்பினர்களில் ஒருவரான ஜகந்நாத் சர்க்கார் எழுதினார்.
சாதி அடையாள அரசியலுக்கும் இந்துத்துவ அரசியலுக்கும் உள்ள வேறுபாடு இப்போது மறைந்துவிட்டது என்று பிகாரில் சோஷியலிச இயக்கத்தில் குரல் கொடுத்த ஆர்ஜேடி தலைவர் சிவானந்த திவாரி கூறுகிறார்.
"சாதி ஒடுக்குமுறை தொடர்பாக நேற்று வரை சாதி அடையாள அரசியலைச் செய்தவர்கள், இன்று இந்துத்துவ அரசியலை செய்பவர்களுடன் இருக்கிறார்கள். அரசியலமைப்பும் ஜனநாயகமும் ஆபத்தில் உள்ளன என்று நேற்று வரை சொல்லியவர்கள், இன்று அவர்களுடன் இருக்கிறார்கள். இந்துத்துவ அரசியலும் சாதி அடையாளமும் வேறு வேறானவை என்றால், ராம் விலாஸ் பாஸ்வான் மோதியுடன் ஏன் இருந்தார், நிதீஷ் குமார் ஏன் இருக்கிறார் என்று நான் கேட்கிறேன், ''என்று அவர் கேள்வி எழுப்பினார்.
இன அடையாளத்தின் அரசியல் மற்றும் இந்துத்துவ அரசியல் ஆகிய இரண்டுமே உண்மையில் வாக்கு வங்கி அரசியல் தான் என்று சிவானந்த் திவாரி கூறுகிறார்.
"சாதி காரணமாகவே, தலைவர்கள் இருக்கிறார்கள். அவர்களின் சாதி இல்லை என்றால், அந்த தலைவர்கள் பொருத்தமற்றவர்களாகி விடுவார்கள். தேர்தல் அரசியலில், அனைத்து கட்சிகளும் சாதிகளின் விளையாட்டை பராமரிக்க வேண்டும் என்று நினைக்கின்றன. எந்த சாதி-நடுநிலை வகிக்கவில்லையோ, அந்த மதமும் நடுநிலையுடன் இருக்காது என்று நான் நம்புகிறேன். அரசியலமைப்பில் ஆபத்து இருப்பதாகவும், இடஒதுக்கீட்டில் அச்சுறுத்தல் இருப்பதாகவும் நாங்கள் கூறுகிறோம், ஆனால் அரசியலமைப்பையும் இடஒதுக்கீட்டையும் சாதகமாகப் பயன்படுத்துபவர்கள், ஆபத்தானவர்கள் என்று கூறப்படும் அந்த மக்களுடன் சேர்ந்துள்ளனர். சாதி அரசியலுக்கும் இந்துத்துவ அரசியலுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை என்பதில் இப்போது எந்த சந்தேகமும் இல்லை, ஏனெனில் இரண்டுமே சந்தர்ப்ப அரசியல் தான், "என்று அவர் தெரிவிக்கிறார்.
பாஜகவின் உத்தியும் சாதியும்
இந்துத்துவ அரசியலில் பாஜக இப்போது தங்கள் பகுதியில் ஒருபோதும் ஆதிக்கம் செலுத்தாத, அவர்களுடைய சொந்தத் தலைவர்கள் இல்லாத அந்த சாதிகளை ஒன்றிணைக்கிறது என்று பலர் நம்புகிறார்கள்.
2015இல் லாலுவும் நிதீஷும் ஒன்றாக காந்தி மைதானத்தில் நடந்த பேரணியில் உரையாற்றியபோது லாலு யாதவ், இது மண்டல் 2.0 என்று கூறினார். லாலு யாதவ் தேர்தலை, உயர் சாதிக்கு எதிராக பின்தங்கிய சாதி என்ற முறையில் நடத்த விரும்பினார். பிகாரில், இந்துக்கள் மற்றும் பின்தங்கிய சாதியினரிடையே, யாதவர்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளனர். பிகாரின் மக்கள் தொகையில் யாதவர்களின் எண்ணிக்கை சுமார் 14% ஆகும்.
இன அடையாளத்தின் அரசியல் இன்னும் முடிவடையவில்லை. அது இந்துத்துவ அரசியலுக்கு ஒரு தடையாகும். இந்து ஒற்றுமை என்ற முழக்கத்தை பாஜக தலைவர்கள் தொடர்ந்து எழுப்ப இதுவே காரணம்.
பாஜகவின் இந்துக்களை அணிதிரட்டும் உத்திக்கு எதிராக இன அடையாளத்தின் அடிப்படையில் மக்களை ஒன்றிணைக்கும் லாலு, நிதீஷ், முலாயம் சிங் யாதவ் மற்றும் மாயாவதியின் உத்தியை, வட இந்தியாவில் நேருக்கு நேர் காணமுடிகிறது. மக்கள் தொகை கணக்கெடுப்பில் மதத்தின் அடிப்படையில் மக்கள் தொகை தரவை வெளியிடுவதற்கு பாஜக தயங்கவில்லை. ஆனால் சாதி தரவை வெளியிடுவதைத் தவிர்க்கிறது.
இந்துக்களின் மக்கள் தொகை முஸ்லிம்களைக் காட்டிலும் குறைவாக இருக்கும் ஒரு காலம் வரும் என்று மக்களிடையே அச்சத்தை பரப்ப மக்கள் தொகை கணக்கெடுப்பின் மத தகவல்கள் பயன்படுத்தப்படுகின்றன.
குஜராத்தில் மோதியின் எழுச்சி அங்குள்ள படேல்களின் கைகளில் இருந்து அதிகாரத்தை பிடுங்கியது. பாஜகவின் மூத்த படேல் தலைவர் கேசுபாய் படேல் , தனிமைப்படுத்தப்பட்டார். ஹார்திக் படேலின் இடஒதுக்கீடு இயக்கத்தின்போது , ஏராளமான படேல்களை மாநில பாஜக அரசு சிறையில் அடைத்தது.
உத்தியின் ஒரு பகுதியாக பல மாநிலங்களில் ஆதிக்கம் செலுத்திய சாதிகளை பாஜக புறக்கணித்ததாக பலர் நம்புகிறார்கள். குஜராத்தில் படேல், பிகாரில் யாதவ், ஹரியாணாவில் ஜாட், மகாராஷ்டிராவில் மராத்தா, ஜார்க்கண்டில் ஆதிவாசிகள் இதில் அடங்குவார்கள்.
இந்துத்துவ கொள்கை மற்றும் சாதிவாதத்தை ஒன்றாக கடைபிடிக்கும் பாஜக
பிகாரில் யாதவர்கள் மற்றும் குஜராத்தில் படேல்கள், 90களில் இருந்து ஆதிக்கம் செலுத்தினர் .ஆனால் அவர்கள் 2000 வது ஆண்டுகளில் இருந்து ஆட்சியில் இல்லை. பிகாரில் யாதவர்களை நிதீஷ்குமாரும், குஜராத்தில் படேல்களை மோதியும், உயர்மட்ட அரசியலில் இருந்து பிரித்தனர். அதே நேரத்தில் பிகார் மற்றும் குஜராத்தில் நிதீஷ் மற்றும் மோதியின் சொந்த சாதி மக்கள் தொகை மிகவும் குறைவாகவே உள்ளது.
பாஜகவின் இந்த உத்தி இந்துத்துவ அரசியலை பலப்படுத்தியுள்ளது என்று பல அரசியல் ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.
ஜார்க்கண்ட் உருவான பிறகு, பழங்குடியினர் மட்டுமே அங்கு முதல்வராக இருந்து வந்தார்கள். ஆனால் முதல் முறையாக பாஜக ஒரு பழங்குடியினர் அல்லாத ரகுபர் தாஸை முதல்வராக ஆக்கியது. இதேபோல், ஹரியாணாவிலும், மனோகர் லால் கட்டரை முதல்வராக்கி ஜாட் பிரிவினரை ஒதுக்கி வைத்தது. மகாராஷ்டிராவிலும், பிராமணரான தேவேந்திர ஃபட்னாவிஸ் முதல்வராக நியமிக்கப்பட்டு, செல்வாக்கு மிக்க மராட்டா சாதி விளிம்பில் வைக்கப்பட்டது.
காங்கிரஸ் ஆட்சியில் இருந்த வரை, பிகாரில் உயர் சாதியினர் ஆதிக்கம் செலுத்தினர். காங்கிரஸ் அரசுகளில் பிராமணர்கள், பூமிஹார்கள், ராஜபுத்திரர்கள் மற்றும் கயஸ்தாக்கள் கைகளில் அதிகாரம் இருந்தது. அதே நேரத்தில் பிகாரில் இந்த சாதிகளின் மக்கள் தொகை மிகக் குறைவு. பின்தங்கிய வகுப்பினர் பிகாரின் மொத்த வாக்காளர்களில் 60 சதவீதத்திற்கும் அதிகமானவர்கள். ஆனால் இந்த சாதிகள் நீண்ட காலமாக அரசியல் ரீதியாக ஓரங்கட்டப்பட்டிருந்தன.
1977 ஆம் ஆண்டில், முதலமைச்சர் கர்பூரி தாக்கூர் மாநில வேலைகளில் பின்தங்கிய சாதியினருக்கு இடஒதுக்கீடு வழங்கினார். அதன் பின்னர் பிகார் அரசியலில் ஒரு புரட்சிகரமான மாற்றம் ஏற்பட்டது. கர்பூரி தாக்கூரின் முடிவு, உயர் சாதியினரிடமிருந்து வலுவான கருத்துக்களை சந்தித்தது.
இதன் பின்னர், பிகார் அரசியலில் உயர்சாதி மற்றும் பின்தங்கியவர்களுக்கிடையிலான இடைவெளி ஆழமடைந்து, மண்டல் ஆணையம் வந்தவுடன் மேலும் விரிவடைந்தது. இந்த பிகார் தேர்தலிலும் சாதி முக்கிய பங்கு வகிக்கும். ஆனால் பாஜக ஒரே நேரத்தில் இந்துத்துவ அரசியல் மற்றும் சாதி அரசியல் ஆகிய இரண்டிலும் சாதிக்க முயற்சி செய்து வருகிறது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












