பிகாரில் இலவச கொரோனா தடுப்பூசி வாக்குறுதி: தேர்தல் கவர்ச்சியா, சுகாதார அக்கறையா?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், அ.தா. பாலசுப்ரமணியன்
- பதவி, பிபிசி தமிழ்
சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள பிகாரில் தாங்கள் வெற்றி பெற்றால் மாநிலத்தில அனைவருக்கும் இலவச கொரோனா தடுப்பூசி போடப்படும் என்று இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்ட அறிவிப்பு கடும் விமர்சனத்துக்கு இலக்காகி வருகிறது.
ஒரு பெருந்தொற்று காலத்தில் நாடு முழுவதும் உள்ள மக்களுக்கு அரசியல் வேறுபாடுகளைக் கடந்து, இலவசமாக அளிக்கப்படவேண்டிய கொரோனா தடுப்பூசியை ஒரு மாநிலத்துக்கு மட்டும் இலவசமாக வழங்கப்போவதாக மத்திய அமைச்சர் ஒருவர் தேர்தல் வாக்குறுதியாக அளிப்பது மலிவானது என்பதுதான் பரவலான விமர்சகர்களின் கருத்தாக உள்ளது.
உண்மையில் நிர்மலா சீதாராமன் பாஜகவின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டு அதில் உள்ள வாக்குறுதியை விளக்கித்தான் பேசினார். ஆனால், பாஜக தலைவர் ஒருவர் தங்கள் கட்சியின் மாநிலத் தேர்தல் அறிக்கையை விளக்கும் அளவுக்கு மட்டுமே இது பார்க்கப்படவில்லை.
பிரதமர் மோதியின் அமைச்சரவையில் மூத்த அமைச்சர் ஒருவர் அதுவும் நிதித்துறைக்குப் பொறுப்பு வகிப்பவர், இத்தகைய அறிவிப்பின் முகமாகப் பயன்படுத்தப்பட்டிருப்பது, அனைவருக்கும் இலவசமாக கிடைக்கவேண்டிய ஒரு தடுப்பூசியை தேர்தல் நடக்கவுள்ள ஒரு மாநிலத்தில் அரசியல் ஆயுதமாக மத்திய அரசு பயன்படுத்துவதாகவே விமர்சகர்களால் பார்க்கப்படுகிறது.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு
"கோவிட் 19 தடுப்பூசி அணுகல் உத்தியை இந்திய அரசு வெளியிட்டுள்ளது. உங்களுக்கு எப்போது தடுப்பூசி கிடைக்கும் என்று தெரிந்துகொள்ள மாநில வாரியான தேர்தல் கால அட்டவணையைப் பாருங்கள்" என்று கூறி ட்விட்டரில் இதனை விமர்சித்திருந்தார் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி.
சமூக ஊடகங்களிலும் அரசியல் வட்டாரத்திலும் எழுந்த கடும் விமர்சனங்களுக்குப் பிறகு, பாஜக மூத்த தலைவர் பூபேந்திர யாதவ் ட்விட்டரில் ஒரு விளக்கம் அளித்தார். அதில், எல்லா கட்சிகளும் தேர்தல் அறிக்கை வெளியிடுகின்றன.
அனைத்து இந்தியர்களுக்கும் நியாயமான விலையில் கொரோனா தடுப்பூசி கிடைக்கும். அந்தந்த மாநில அரசுகள் அதனை இலவசமாக வழங்கலாம். பிகாரில் நாங்கள் அதனை இலவசமாக வழங்குவோம் என்று கூறினார்.
பாஜக தகவல் தொழில்நுட்ப பிரிவின் தலைவர் அமித் மால்வியாவும் கிட்டத்தட்ட இதே கருத்தை வெளியிட்டார். மத்திய அரசு மாநிலங்களுக்கு குறைந்த விலையில் கொரோனா தடுப்பூசியை வழங்கும்.
அதை இலவசமாக விநியோகிப்பது மாநில அரசுகளின் முடிவு. பிகாரில் அதனை இலவசமாக வழங்கவேண்டும் என்பது பிகார் பாஜகவின் வாக்குறுதி என்பது அவரது வாதம்.
பொது சுகாதாரக் கொள்கை நிலையில் இருந்து இதை எப்படிப் பார்ப்பது என்று கேட்பதற்காக சமூக சமத்துவத்துக்கான டாக்டர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் ஜி.ஆர். ரவீந்திரநாத்திடம் பிபிசி தமிழ் பேசியது.

பட மூலாதாரம், Getty Images
"இது போன்ற உலகப் பெருந்தொற்று நேரத்தில் நாட்டில் உள்ள அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி தருவது அரசின் கடமை. இது போன்ற ஒரு தொற்று காலத்தில் ஒருவருக்குத் தடுப்பூசி போடுவது என்பது அவரைக் காப்பாற்ற மட்டுமல்ல. ஒட்டுமொத்த சமூகத்தையும் தொற்று அபாயத்தில் இருந்து காப்பாற்ற. ஒருவர் தடுப்பூசி போட்டுக்கொள்ளாமல் விடுவது அவரை மட்டுமல்ல. பக்கத்து வீட்டில் உள்ளவரையும் பாதிக்கும். எனவே இதனை தேர்தல் பிரச்சனையாக ஆக்குவது தவறு" என்று அவர் குறிப்பிட்டார்.
பிகாரில் பாஜக வென்றால் அந்த மாநிலத்தில் இலவசமாக தடுப்பூசி வழங்கப்படும் என்று பாஜக அறிவித்துள்ளது. எனவே, நாடு முழுவதும் இந்த தடுப்பூசியை இலவசமாக வழங்கும் திட்டம் இல்லை என்று தெரிகிறது. இது கொள்ளை நோய்களுக்கு தடுப்பூசி வழங்குவது தொடர்பான இந்திய அரசின் கொள்கை எதிலும் இருந்து விலகிச் செல்கிறதா என்று டாக்டர் ரவீந்திரநாத்திடம் கேட்டோம்.
கொள்ளை நோய்ச் சட்டத்தின்படி அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி போடவேண்டும் என்று கூறிய அவர், தமிழ்நாட்டில் முக்கியத் தடுப்பூசிகள் எப்போதும் இலவசமாக வழங்கப்படுகிறது. எல்லா மாநிலங்களிலும் அப்படி இல்லை என்றும் குறிப்பிட்டார்.
ஏற்கெனவே பொது சுகாதாரக் கொள்கையே தனியார் மயத்தை நோக்கி விலகித்தான் செல்கிறது என்று கூறிய அவர், ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின்கீழ் அறிமுகம் செய்யப்படும் பிரதமரின் சுகாதாரக் காப்பீடு பெற்றிருப்பவர்களுக்கு மட்டுமே அரசு மருத்துவமனைகளில் இலவச சிகிச்சை அளிக்கப்படும் என்ற திட்டம் வருகிறது. மற்றவர்கள் பணம் செலுத்தவேண்டும். ஆனால், ஒரு இரு சக்கர வாகனமோ, தரைவழி தொலைபேசி இணைப்போ, காங்கிரீட் கூரை உள்ள வீடோ இருப்பவர்களுக்கு இந்த காப்பீடு கிடைக்காது என்று குறிப்பிட்டார் அவர்.

- கொரோனா வைரஸ் அறிகுறிகள் என்ன? பாதுகாத்து கொள்வது எப்படி?
- கொரோனா காலத்தில் பாதுகாப்பாக உடலுறவு வைத்துக்கொள்வது எப்படி?
- கொரோனா வைரஸ்: உங்களை தற்காத்துக் கொள்வது எப்படி?
- கொரோனா வைரஸ் சிகிச்சைக்கு மருந்து எப்போது கிடைக்கும்?
- கொரோனா வைரஸ் தடுப்பூசி எப்போது கிடைக்கும்?
- கொரோனா சானிடைசர் தரமானதா என்பதை எப்படி கண்டுபிடிப்பது?
- கொரோனா வைரஸ்: குணமடைய சிலருக்கு தாமதம் ஆவது ஏன்?

இதன் பின்னணியில் உள்ள அரசியல் கணக்கீடுகள் பற்றி மூத்த பத்திரிகையாளர் இளங்கோவன் ராஜசேகரனிடம் கேட்டோம்.
"தடுப்பூசி வணிகம், அரசியல் கணக்கீடுகள் ஆகியவைகள் இங்கே இணைந்து செயல்படுகின்றன. பிகாரில் பாஜக இலவசமாக தடுப்பூசி தருவதாக வாக்குறுதி தருகிறது. இங்கே தமிழகத்தில்கூட அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி வழங்கப்படும் என்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. தேர்தல் நேரத்தில் தடுப்பூசியை அரசியல் ஆயுதமாக பயன்படுத்துவதா என்று கேட்டால், அற மதிப்பீடுகளின்படி அது தவறுதான். ஆனால், இங்கே பல அற மதிப்பீடுகள் காற்றில் பறக்கின்றன. எனவே இதனை அத்தனை இறுக்கமாகப் பார்க்கவேண்டியதில்லை. இந்தியா அடிப்படையில் ஒரு நல அரசு. அந்த கோட்பாட்டை நோக்கி பாஜகவும் திரும்பி வருகிறது. பிற நலத்திட்ட வாக்குறுதிகளைப் போலவே இந்த வாக்குறுதியையும் பார்க்கலாம். எதிரணியும் பிகாரில் இதைப் போலவே வாக்குறுதி அளிக்கட்டும். எப்படியோ இலவசமாக அனைவருக்கும் தடுப்பூசி வந்தால் சரிதான்" என்கிறார் இளங்கோவன்.
பிற செய்திகள்:
- ராணுவ பயிற்சிக்காக கைகோர்த்த 4 நாடுகள்: சீனாவுக்கு கவலை ஏன்?
- "எல்டிடிஈ வெளிநாட்டு செல்வாக்கை நிரூபிக்க ஆதாரம் உள்ளது" - உறுதிகாட்டும் இலங்கை அரசு
- "கொரோனா தடுப்பூசி இலவசம்" - தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் புதிய அறிவிப்பு
- இந்திய ஸ்டேட் வங்கி கிளார்க் பணியிட ஒதுக்கீடு: அரசுக்கு மதுரை எம்.பி எழுப்பும் சந்தேகங்கள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












