"கொரோனா தடுப்பூசி இலவசம்" - தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் புதிய அறிவிப்பு

எடப்பாடி

பட மூலாதாரம், EDAPPADI PALANISAMY FB

படக்குறிப்பு, தமிழ்நாட்டின் புதுக்கோட்டையில் நடைபெறும் அரசு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள செல்லும் வழியில் இலுப்பூர் பகுதியில் பராமரிக்கப்பட்டு வரும் ஜல்லிக்கட்டு காளைகளை பார்வையிடும் முத்லவர் எடப்பாடி பழனிசாமி.

கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டதும் தமிழ்நாட்டில் அனைவருக்கும் அந்த மருந்து இலவசமாக வழங்கப்படும் என்று மாநில முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டையில் அரசு நலத்திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டிய அவர், பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது, அதிக விளைச்சல் காரணமாக இந்த ஆண்டு அனைத்து நெல் மூட்டைகளையும் அரசால் கொள்முதல் செய்ய முடியவில்லை என்று கூறினார்.

2019ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட உலக தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டில் 211 தொழில்களுக்கு ரூ. 303 கோடி மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டதாகவும் அவற்றில் ரூ. 184 கோடி மதிப்பிலான திட்டங்கள், ரூ. 197 கோடி முதலீட்டில் தொடங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து பேசிய முதல்வர், தமிழ்நாட்டில் அனைவருக்கும் கொரோனா வைரஸ் தடுப்பூசி, இலவசமாக போடப்படும் என்று தெரிவித்தார்.

முன்னதாக, பிஹார் மாநில சட்டமன்ற தேர்தலுக்கான தேர்தல் செயல்திட்டத்தை அங்கு ஆளும் ஐக்கிய ஜனதா தளம் கட்சியுடன் கூட்டணி வைத்துள்ள பாரதிய ஜனதா கட்சி அறிவித்தது. இது தொடர்பாக பாட்னாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாரமன், பிஹார் மாநிலத்தில் பாரதிய ஜனதா கட்சி கூட்டணி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அனைவருக்கும் கொரோனா வைரஸ் தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் என்று தெரிவித்தார்.

மத்திய அமைச்சரின் இந்த கருத்தை சமூக ஊடகங்களில் பலரும் விமர்சித்து கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

கொரோனா வைரஸ் தடுப்பூசி தயாரிப்பு இறுதி வடிவம் பெறவில்லை என்றும் அது பரிசோதனை நிலையிலேயே இருப்பதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் பல முறை கூறி விட்டது. இந்த நிலையில், இந்திய அமைச்சர் கொரோனா வைரஸ் தடுப்பூசியை இலவசமாக தருவதாக கூறியிருப்பது, அந்த மருந்தை விற்பனைக்கு செய்யும் அரசின் நிலையை காட்டுவதாக சமூக ஊடகங்களில் பலரும் விமர்சித்தனர்.

இந்த நிலையில், பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்கள் மீண்டும் தலையிட்டு, பிஹார் மட்டுமல்ல, நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தடுப்பூசி மருந்தை இலவசமாக தருவோம். இது தொடர்பாக மாநிலங்களுடன் பேசி மானிய விலையில் அவற்றை மாநிலங்களுக்கு வழங்க மத்திய அரசு ஆலோசனை நடத்தும் என்று கூறினார். ஆனாலும், அமைச்சரின் அறிவிப்பு, தொடர்ந்து சமூக ஊடகங்களில் விமர்சிக்கப்பட்டு வருகிறது.

இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் அறிவிப்பு வெளிவந்த சில நிமிடங்களில் புதுக்கோட்டையில் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், கொரோனா வைரஸுக்கு இலவச தடுப்பூசி வழங்கப்படுவதாக அறிவித்துள்ளார். இந்த விவகாரத்தில் தேர்தல் ஆதாயத்துக்காக தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் என்ற முழக்கத்தை அரசியல் கட்சிகள் எழுப்புவதாக பலரும் சமூக ஊடகங்களில் விமர்சித்து வருகின்றனர்.

இந்த நிலையில், தமிழக செய்தித்துறை மாலையில் வெளியிட்ட செய்திக்குறிப்பில், வைரஸ் தடுப்பூசி "கண்டுபிடிக்கப்பட்டதும்" அது இலவசமாக வழங்கப்படும் என்று முதல்வர் கூறியுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தடுப்பூசி திட்டங்கள்:தமிழ்நாட்டில் தடுப்பூசிகள் மூலம் தடுக்கக்கூடிய ஆறு நோய்களுக்கு எதிராக தடுப்பூசி திட்டம் 1978ல் துவங்கப்பட்டது. 1985ல் எல்லோருக்குமான தடுப்பூசி திட்டமாக இது மாற்றப்பட்டது. வருடம் தோறும் 12 லட்சம் குழந்தைகளும் 11 லட்சம் கர்ப்பிணித் தாயார்களும் இந்தத் திட்டத்தின் மூலம் பாதுகாக்கப்படுகிறார்கள்.

காசநோய், டிப்தீரியா, பெர்ட்டூசிஸ், ஹெப்படிடிஸ் பி, இன்ஃப்ளூயன்ஸா பி, டெட்டனஸ், போலியோ, அம்மை, ரூபெல்லா ஆகிய நோய்களுக்கு எதிராக இந்தத் தடுப்பூசிகள் தற்போது வழங்கப்பட்டு வருகின்றன.

ஓசிஐ கார்டு இருந்தால் இந்தியா வரலாம் - விதிகளை தளர்த்திய இந்திய அரசு

மனோஜ்

பட மூலாதாரம், MANOJ MUNDACKAL

கொரோனா வைரஸ் பெருந்தொற்றை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக கடந்த 8 மாதங்களாக அமலில் இருந்த வெளிநாடு வாழ் இந்தியர்கள் உள்ளிட்டோரின் விசா கட்டுப்பாடுகளை இந்திய அரசு தளர்த்தியிருக்கிறது.

இது தொடர்பாக இந்திய விமான போக்குவரத்துத்துறை அமைச்சகம் இன்று வெளியி்ட்டுள்ள செய்திக்குறிப்பில், இந்திய குடிமக்கள் மற்றும் வெளிநாட்டினர் இந்தியா வருவதற்கும் இந்தியாவில் இருந்து வெளிநாடு செல்வதற்கும் கடைப்பிடிக்கப்பட்டு வந்த கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவதாக கூறப்பட்டுள்ளது.

அதன்படி, சுற்றுலா விசா, மின்னணு விசா, மருத்துவ விசா நீங்கலாக, வெளிநாடுவாழ் இந்தியர் அடையாள அட்டை வைத்திருக்கும் இந்திய வம்சாவளியினர் வைத்திருக்கும் அனைத்து வகை விசாக்களும் செல்லுபடியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் வந்தே பாரத் திட்டம் அல்லது வர்த்தக பயன்பாடு அல்லாத பயணிகள் ஒப்பந்த விமான சேவைகளில் தாயகம் வரவோ தாயக்தில் இருந்து வெளிநாடு செல்லவோ தடை இருக்காது என்று இந்திய விமான போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது.

இந்த பயணிகள் அனைவரும் இந்திய சுகாதார அமைச்சகத்தின் கொரோனா தடுப்பு வழிகாட்டுதல்களை கட்டாயம் பின்பற்றியிருக்க வேண்டும் என்று அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் கடைகளைத் திறக்கும் நேரம் அதிகரிப்பு

முதல்வர்

பட மூலாதாரம், Edappadi Palanisamy

தமிழ்நாட்டில் வணிக நிறுவனங்கள், கடைகள் ஆகியவற்றை இரவு பத்து மணி திறந்திருக்க அனுமதித்து தமிழக அரசு புதன்கிழமை உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக கடைகள், வணிக நிறுவனங்கள் ஆகியவை இரவு எட்டு மணிவரையே திறந்திருக்க அனுமதிக்கப்பட்டுள்ளன. ஆனால், தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகள் நெருங்குவதால், கடைகள் வர்த்தக நிறுவனங்களைத் திறந்திருக்கும் நேரத்தை தமிழ்நாடு அரசு அதிகரித்துள்ளது.

இது தொடர்பாக தமிழக முதலமைச்சர் பழனிச்சாமி விடுத்துள்ள அறிக்கையில், "எதிர்வரும் பண்டிகை காலத்தினைக் கருத்தில் கொண்டும், பொருளாதாரத்தை மேலும் மீட்டெடுக்க வேண்டிய அவசியத்தை கருத்தில் கொண்டும், நோய்த் தொற்றின் தன்மையைக் கருத்தில் கொண்டும், தமிழ்நாடு முழுவதும் முழுக் கட்டுப்பாட்டு பகுதி தவிர மற்ற பகுதிகளில் காய்கறிக் கடைகள், மளிகைக் கடைகள், உணவகங்கள், தேநீர்க் கடைகள் உள்ளிட்ட அனைத்துக் கடைகள் மற்றும் வணிக வளாகங்களும் அக்டோபர் 22ஆம் தேதி முதல் இரவு 10 மணி வரை இயங்க அனுமதிக்கப்படுகின்றன" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருந்தபோதும் பொது இடங்களில் அதிகம் கூடாமலும் குறைந்தது ஆறு அடி இடைவெளியைக் கடைப்பிடித்தும் முகக் கவசம் அணிந்தும் நோய்த் தொற்றைத் தவிர்க்கும்படி முதலமைச்சர் கேட்டுக்கொண்டிருக்கிறார்.

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது. இன்று தமிழ்நாட்டில் 3,086 பேருக்கு புதிதாக நோய்த் தொற்று ஏற்பட்டுள்ளது. 39 பேர் உயிரிழந்துள்ளனர். 4,301 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

ட்ரான்ஸ் கிச்சன்' நிறுவனர் சங்கீதா மர்ம சாவு

திருநங்கை

கோவையில் திருநங்கைகளுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் உணவகத்தை ஆரம்பித்து பிரபலமடைந்த திருநங்கை சங்கீதா அடையாளம் தெரியாத நபர்களால் கொலை செய்யப்படுள்ளார்.

சாய்பாபா காலனி பகுதியில் வசித்து வரும் சங்கீதாவின் இல்லம் கடந்த இரண்டு நாட்களாக திறக்கப்படாத நிலையில் இருந்துள்ளது. இந்த நிலையில் புதன்கிழமை காலையில் அவரது வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியுள்ளது. இதையடுத்து அப்பகுதி மக்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் வீட்டிற்குள் சென்று பார்க்கையில் தண்ணீர் பிடித்துவைக்கும் ட்ரம் ஒன்றில் திருநங்கை சங்கீதாவின் உடல் அழுகிய நிலையில் இருந்துள்ளது.

இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தியதில், இரண்டு நாட்களுக்கு முன்பாகவே சங்கீதா உயிரிழந்திருப்பது தெரியவந்துள்ளது. அவரது செல்பேசியும் ஞாயிற்றுக்கிழமை முதல் செயலிழக்கப்பட்டுள்ளது. திருநங்கை சங்கீதா உயிரிழந்ததற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. ஆனால், அவரது உணவகத்தில் புதிதாக பணியமர்த்தப்பட்ட இரு இளைஞர்கள் தலைமறைவாகியுள்ளனர். அவர்களை தேடும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

திருநங்கைகளின் நலனுக்காக உணவகம் தொடங்கி மக்களின் வரவேற்ப்பை பெற்ற திருநங்கை சங்கீதாவின் மரணம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள சமூகசெயற்பாட்டாளர் கிரேஸ்பானு, 'திருநங்கை சங்கீதா படுகொலை செய்யப்பட்டிருப்பது வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. கொலைக்கான காரணம் இன்னும் தெரியவில்லை. இந்த கொலையை அலட்சியமாக எடுத்துக்கொள்ளாமல் மாவட்ட ஆட்சியரும், காவல் கண்காணிப்பாளரும் விசாரணை செய்து கொலையாளிகளை கைது செய்ய வேண்டும்' என கேட்டுக்கொண்டுள்ளார்.

கராச்சி வெடிச்சம்பவம்: குறைந்தபட்சம் 5 பேர் பலி - என்ன நடந்தது?

நீட்

பட மூலாதாரம், Getty Images

பாகிஸ்தானின் மிகப்பெரிய நகரான கராச்சியில் உள்ள மஸ்கான் செளராங்கி பகுதியின் அடுக்குமாடு குடியிருப்பில் ஏற்பட்ட வெடிச்சம்பவத்தில் குறைந்தபட்சம் 5 பேர் உயிரிழந்தனர். கராச்சி பல்கலைக்கழகம் முன்புள்ள அந்தப் பகுதியில் வெடிச்சம்பவம் நடந்ததாக பிபிசி செய்தியாளர் ரியாஸ் சோஹைல் தெரிவித்தார்.

அந்த கட்டடத்தின் கீழ்தளத்தில் வங்கி, பல்பொருள் அங்காடி, குடியிருப்புகளுக்குச் செல்வதற்கான படிக்கட்டுகள் இருந்தன.

இந்த சம்பவம் குறித்து தகவல் கிடைத்தவுடன் அங்கு விரைந்து சென்ற காவல்துறையினர், ஐந்து பேர் இறந்திருப்பதாக கண்டறிந்தனர். அதில் மூன்று பேரின் சடலங்கள் அருகே உள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. நடந்த சம்பவத்தில் ஒரு பெண், ஒரு குழந்தை, ஒரு பாதுகாவலர் உட்பட 25க்கும் அதிகமானோர் காயம் அடைந்தனர்.

வெடிச்சம்பவம் நடந்த பகுதியில், கராச்சி பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவர்களின் நடமாட்டம், பெருமளவில் இருக்கும்.

மேலும், அந்த கட்டடத்தின் கீழ் தளத்தில் இரண்டு வங்கிகள் இயங்கி வருகின்றன. அவற்றின் அலுவல் நேரம், காலை 9 மணிக்கே தொடங்கும். சம்பவம் நடந்தபோது வங்கிக்குள் இருந்த ஊழியர் ஷாபெஸ், நெரிசல் நேரத்தில் மும்முரமாக பணியில் ஈடுபட்டிருந்த வேளையில், திடீரென மேல்புற கூரை தரையில் விழுந்ததாக தெரிவித்தார். உடனடியாக வெளியே வந்தாலும், பலர் உள்ளே இடிபாடுகளில் சிக்கி விட்டதாக ஷாபெஸ் கூறினார்.

விபத்து நடந்த பகுதியில் வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர பரிசோதனை செய்தனர். ஆரம்பகால விசாரணையில் கட்டடத்தில் இருந்த தனியார் வங்கியொன்றில் ஏற்பட்ட எரிவாயு கசிவு காரணமாக வெடிச்சம்பவம் நடந்ததாக கண்டறியப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அங்கு வெடிப்பொருட்கள் ஏதும் கண்டறியப்படவில்லை எனறும் அவர்கள் கூறினர்.

முன்னதாக, கராச்சியின் ஜின்னா காலனியில் செவ்வாய்க்கிழமை மற்றொரு வெடிச்சம்பவம் நடந்தது. அந்த சம்பவம் தொடர்பாக மாகாண முதல்வர், அவரது வீட்டில் ஆலோசனையில் ஈடுபட்டிருந்த நிலையில், சரக காவல்துறை துணைத் தலைவர், முதுநிலை கண்காணிப்பாளர் உள்ளிட்டோர் விடுப்பில் செல்ல கேட்டுக்கொள்ளப்பட்டிருந்தனர். இந்த நிலையில் மற்றொரு வெடிச்சம்பவம் கராச்சியில் புதன்கிழமை ஏற்பட்டிருக்கிறது.

நீட் தேர்வு முடிவுகளில் குளறுபடியா? மோசடி நபர்களுக்கு என்டிஏ எச்சரிக்கை

நீட்

பட மூலாதாரம், Getty Images

மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான கட்டாய நுழைவுத்தேர்வான நீட் முடிவுகளில், சில மாணவர்களின் விடைத்தாள் மதிப்பெண் கணக்கீட்டில் மோசடி நடந்ததாக கூறப்படுவதை தேசிய தேர்வு முகமை (என்டிஏ) மறுத்துள்ளது.

இது தொடர்பாக அந்த முகமையின் தலைமை இயக்குநர் டாக்டர் வினீத் ஜோஷி செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், விரிவான பரிசோதனை, சரிபார்ப்புக்குப் பிறகே நீட் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டதாகவும் அந்த முடிவு சரியே என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், சில தளங்களிலும் சமூக ஊடகங்களிலும் அதிர்ச்சி தரும் வகையில் சில நேர்மையற்ற நபர்கள், என்டிஏ வெளியிட்ட நீட் தேர்வு முடிவு சரியல்ல என்று கோரி வருகின்றனர்.

உதாரணமாக, 650 மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும் என கோரும் மாஸ்டர் எக்ஸ்ஒய்இசட் என்ற ஒரு மாணவர், வெறும் 329 மதிப்பெண்கள் மட்டுமே எடுத்திருப்பதாக கூறியுள்ளதாக சில நகரங்களில் உள்ளூர் தொலைக்காட்சி சேனல்களில் செய்திகள் ஒளிபரப்பாகி வருகின்றன. அந்த செய்தி முற்றிலும் போலியானது, ஜோடிக்கப்பட்டது, ஒருதலைபட்சமானது. அத்தகைய போலி செய்தியை வெளியிடும் முன்பு என்டிஏ அலுவலகத்தை ஊடகங்கள் தொடர்பு கொண்டு உண்மையை கேட்டிருக்க வேண்டும்.

இந்த விவகாரத்தில் போலி செய்தி வெளியிட்டது தொடர்பாக உத்தர பிரதேசத்தின் நொய்டாவில் உள்ள சைபர் பாதுகாப்பு பிரிவில் தகவல் தொழில்நுட்ப சட்டப்படி என்டிஏ புகார் பதிவு செய்துள்ளது.

என்டிஏ நடத்தும் தேர்வை எழுதும் மாணவர்களின் உண்மையான குறைகள் வரவேற்கப்படும். எனினும், ஜோடிக்கப்பட்ட மற்றும் போலியான விவரங்கள் அடிப்படையில் முன்வைக்கப்படும் கோரிக்கைகள் மற்றும் தகவல்கள் மிகவும் கடுமையானதாக கருதப்பட்டு, சட்டப்படி சம்பந்தப்பட்ட மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். அத்தகைய மாணவர்களின் விண்ணப்பம் ரத்து செய்யப்படுவதுடன், அவர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் நபர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துக் கொள்கிறோம்.

இந்த விவகாரத்தில் அங்கீகாரம் இல்லாத நபர்கள், ஏஜெண்டுகளின் வலையில் மாணவர்கள் வீழந்து விட வேண்டாம் என்றும் அவர்களுக்கு சாதகமாக ஓஏம்ஆர் முடிவுகளை பெற்றுத்தருவதாகக் கூறும் நபர்களின் பேச்சை நம்ப வேண்டாம் என்றும் கேட்டுக் கொள்கிறோம். இதை மீறுவோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலி செய்திகள் மூலம் என்டிஏ அமைப்பின் நன்மதிப்புக்கும் புகழுக்கும் களங்கம் கற்பிக்க முற்படுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அந்த செய்திக்குறிப்பில் எச்சரிக்கப்பட்டுள்ளது

7.5 சதவீத இட ஒதுக்கீடு மசோதா: ஒப்புதல் அளிப்பாரா தமிழக ஆளுநர்?

ஆளுநர்

பட மூலாதாரம், O. PANEERSELVAM twitter

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்க வேண்டுமென தமிழக அமைச்சர்கள் ஆளுநரைச் சந்தித்து வலியுறுத்தியுள்ளனர். இந்த மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டமும் நடைபெற்றுள்ளது.

சென்னையில் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், கே.பி. அன்பழகன், செங்கோட்டையன், ஜெயகுமார், சி.வி.சண்முகம் ஆகியோர் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை செவ்வாய்க்கிழமை சந்தித்து இந்த மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும் என கோரினர். இதற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ஜெயகுமார், "இந்த மசோதாவை நிறைவேற்ற வேண்டிய சூழலை ஆளுநரிடம் விளக்கினோம். அவர் விரைவாக ஒப்புதல் அளிப்பதாக தெரிவித்திருக்கிறார். ஆளுநரைக் கட்டாயப்படுத்த முடியாது. நல்ல முடிவு எடுப்பார் என நம்புகிறோம்" என்று தெரிவித்தார்.

ஆளுநர் ஒப்புதல் அளித்தால்தான் மருத்துவப் படிப்பிற்கான கலந்தாய்வை நடத்த முடியும் என்பதை ஆளுநரிடம் தெரிவித்துவிட்டதாகவும் ஜெயகுமார் கூறினார்.

இதற்கிடையில் இந்த மசோதாவுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உடனடியாக ஒப்புதல் அளிக்கவேண்டும் என்றுகோரி தமிழ்நாடு முழுவதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டம் நடத்தினர்.

இந்தியா முழுவதும் மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கு தேசிய தகுதித் தேர்வு - நீட் - கட்டாயமாக்கப்பட்டுவிட்ட நிலையில், தமிழக அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் சமூக - பொருளாதார நிலையில் மிகவும் பின்தங்கியவர்கள் என்பதால், அவர்களை பிற மாணவர்களுடன் ஒரே நிலையில் வைத்து வகைப்படுத்த முடியாது என்பதால், அவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க தமிழக அரசு முடிவு செய்தது.

ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி பி.கலையரசன் அவர்கள் தலைமையில் இது குறித்துப் பரிசீலிக்க கடந்த மார்ச் மாதம் ஒரு ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த ஆணையம் கடந்த ஜூன் 8ஆம் தேதியன்று தனது பரிந்துரையை தமிழ்நாடு அரசுக்கு அளித்தது. அதன்படி தமிழக அரசுப் பள்ளிக்கூடங்களில் படிக்கும் மாணவர்களுக்கு நடப்பு ஆண்டு முதல் மருத்துவப் படிப்பில் உள் ஒதுக்கீடாக 7.5 சதவீத ஒதுக்கீடு அளிக்க மாநில அரசு முடிவுசெய்தது. அதற்கான சட்டம் செப்டம்பர் 15ஆம் தேதி சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது.

ஆனால், அந்தச் சட்டத்திற்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இதுவரை தனது ஒப்புதலைத் தரவில்லை. இது தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் விசாரணைக்கு வந்தபோது, இந்தச் சட்டத்திற்கு ஆளுநரின் ஒப்புதலைப் பெறாமல் மருத்துவக் கலந்தாய்வு நடக்காது என அரசு வழக்கறிஞர் தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள மருத்துவ இடங்களில், மாநில அரசின் ஒதுக்கீடாக 4,043 இடங்கள் உள்ளன. 7.5 சதவீதம் ஒதுக்கீட்டு வழங்கப்பட்டால் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு சுமார் 300 இடங்கள் கிடைக்கக்கூடும்.

கொலை வழக்கில் கைதான பெண் காவல் நிலையத்தில் பாலியல் வல்லுறவு

பாலியல் வல்லுறவு

பட மூலாதாரம், MANOJ MUNKDACKAL

இந்தியாவின் சில முக்கிய நாளிதழ்கள் மற்றும் அவற்றின் இணையப் பக்கங்களில் வெளியான சில முக்கியச் செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.

காவல் நிலையத்தில் பெண் கைதி பாலியல் வல்லுறவு

காவல்துறை விசாரணையின்போது பெண் விசாரணைக் கைதி ஒருவர் பாலியல் வல்லுறவு செய்யப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து மத்தியப் பிரதேச அரசு மற்றும் காவல் துறை விளக்கம் அளிக்க வேண்டும் என்று தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது என்கிறது தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி.

மே மாதம் நடந்ததாக கூறப்படும் இந்த சம்பவம் ஐந்து மாதங்களுக்கு பின்னரே மாவட்ட நீதிபதிக்கு தெரிய வந்துள்ளது.

கொலை வழக்கு ஒன்று தொடர்பாக கைது செய்யப்பட்ட அந்த பெண், காவல் துறையினர் ஐந்து பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாகவும், அதை சிறை வார்டன் உயதிகாரிகளுக்குத் தெரியப்படுத்தவில்லை என்றும் மனித உரிமைகள் ஆணையம் தெரிவித்துள்ளது.

இந்த 20 வயது பெண்ணை ஆண் காவலர்கள் பாலியல் வல்லுறவு செய்வதை ஒரு பெண் காவலர் எதிர்த்துள்ளார். ஆனால், அதை அவர்கள் பொருட்படுத்தவில்லை என்று மனித உரிமைகள் ஆணையம் தனது நோட்டீஸில் குறிப்பிட்டுள்ளது.

ரேவா மாவட்டத்தின் மங்காவா காவல் நிலையத்தில் பணியாற்றும் ஐந்து பேர் மீது அப்பெண் பாலியல் வல்லுறவு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

தற்போது நீதிமன்றத் காவலில் இருக்கும் அப்பெண், அவர் கைது செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

சசிகலா விடுதலை எப்போது?

சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா, தன்னுடைய வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியனுக்கு கைப்பட கடிதம் ஒன்று எழுதியுள்ளார் என்கிறது தினத்தந்தி செய்தி.

சசிகலா விடுதலை எப்போது?

பட மூலாதாரம், Getty Images

"சிறைத்துறையினர், எனது நன்னடத்தை தண்டனை குறைப்பு சலுகை விஷயத்தில் விரைவில் சட்டப்படியாக முடிவு எடுப்பார்கள் என நான் நம்புகிறேன்.

உத்தரவு எனக்கு கிடைத்தவுடன் உங்களுக்கு தெரிவிக்கிறேன். அதன்படி, அபராத தொகையை முறைப்படி நீதிமன்றத்தில் செலுத்த ஏற்பாடு செய்யவும். கர்நாடக சிறப்பு நீதிமன்றத்தில் அபராதம் கட்டிய பிறகும், உச்ச நீதிமன்றத்தில் சட்டப்படியாக 'கியூரேட்டிவ்' மனுவை தாக்கல் செய்ய இயலுமா என்பதனை மீண்டும் டெல்லி மூத்தவழக்கறிஞர்களிடம் உறுதி செய்யவும், அதுபற்றி டி.டி.வி.தினகரனிடம் ஆலோசித்து செயல்படவும்.

தங்களின் கடித இணைப்பில் அனுப்பிய இணையதள செய்தியை படித்து பார்த்தேன். எனக்கு சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக ஓர் இணையதள ஊடகம் வெளியிட்டுள்ள செய்தி முற்றிலும் தவறானது. உள்நோக்கம் கொண்ட நபர்கள் பரப்பிய விஷம பொய் செய்தியை, உண்மை என நம்பி அந்த இணையதளத்தில் வெளியிட்டுள்ளனர்.

நான் வணங்கும் இறைவனின் ஆசியோடும், என் உடன்பிறவா அக்காவின் ஆசியோடும், அவரது கோடிக்கணக்கான தொண்டர்களின் வாழ்த்துகளாலும் நான் நல்ல உடல் நலத்துடன் உள்ளேன்.

அந்த இணையதள செய்தி ஊடகம் வெளியிட்டுள்ள, சமீபத்தில் ஜெய் ஆனந்த் என்னை வந்து சிறையில் சந்தித்ததாகவும், பேசியதாகவும் என் நிலையை பார்த்து அதிர்ந்து போனதாகவும், "அத்தை நீங்கள் பத்திரமாக வெளியே வந்தாலே போதும். தஞ்சாவூரில் இயற்கை சூழ்ந்த பண்ணை வீட்டில், நீங்கள் இனி நன்றாக ஓய்வு எடுக்க வேண்டும். உங்களை எல்லோரும் ரொம்ப புண்படுத்திவிட்டார்கள். இனிமேல் வருகின்ற காலமாவது நீங்கள் நிம்மதியா இருக்க வேண்டும்" என என்னிடம் சொன்னதாக வெளியிட்டுள்ள செய்தியில் ஒரு சதவீதம்கூட உண்மையில்லை. ஜெய் ஆனந்த் என்னை சந்திக்கவே இல்லை என்றும் சசிகலா அக்கடிதத்தில் கூறியுள்ளார் என்கிறது அந்த செய்தி.

ஹஜ் புனிதப் பயணம் எப்போது?

ஹஜ் புனிதப் பயணம்

பட மூலாதாரம், Getty Images

மத்திய அமைச்சா் முக்தாா் அப்பாஸ் நக்வி தலைமையில் ஹஜ் புனிதப் பயண ஆய்வுக் கூட்டம் தில்லியில் திங்கள்கிழமை நடைபெற்றது என்று தினமணி செய்தி வெளியிட்டுள்ளது,

2021-ஆம் ஆண்டுக்கான ஹஜ் புனிதப் பயணம் ஜூன் - ஜூலை மாதங்களில் அனுமதிக்கப்பட உள்ளது. சௌதி அரேபிய அரசு இதுதொடா்பான அறிவிப்பை வெளியிட்ட பின்னா், இதற்கான விண்ணப்பத்தைச் சமா்பிப்பதற்கான அறிவிப்பை இந்திய ஹஜ் கமிட்டி உள்பட பிற புனிதப் பயண ஏற்பாட்டாளா்கள் வெளியிடுவா்.

சௌதி அரேபிய அரசு மற்றும் இந்தியா சாா்பில் தேவையான கொரோனா வழிகாட்டி நெறிமுறைகள் வெளியிடப்பட்ட பின்னரே, இந்தப் புனிதப் பயணம் குறித்த இறுதி முடிவு எடுக்கப்படும். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தங்கும் வசதி, போக்குவரத்து, சுகாதாரம் உள்ளிட்ட அனைத்து ஹஜ் நடைமுறைகளிலும் இம்முறை குறிப்பிடத்தக்க மாற்றம் இருக்கும்.

புனித யாத்ரீகா்களின் உடல் நலனுக்குத்தான் மத்திய அரசு முன்னுரிமை அளிக்கும். எனவே, தேவையான முன்னேற்பாடுகளை இந்திய ஹஜ் கமிட்டு உள்ளிட்ட பிற புனிதப் பயண ஏற்பாட்டாளா்களும் மேற்கொள்ள வேண்டும் என்று அவா் கூறினாா்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: