"சசிகலா இல்லாமல் கட்சியையும் ஆட்சியையும் நடத்துவோம்": ஜெயக்குமார்

பட மூலாதாரம், Getty Images
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழி வி.என். சசிகலா, சிறையிலிருந்து திரும்பிவந்தாலும் அவர் இல்லாமல்தான் கட்சியையும் ஆட்சியையும் நடத்துவோம் என மீன்வளத் துறை அமைச்சர் டி. ஜெயக்குமார் தெரிவித்திருக்கிறார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார், சசிகலா திரும்பிவரும் பட்சத்தில் கட்சியின் நிலைப்பாடு என்ன என்று கேட்கப்பட்டது. இதற்குப் பதிலளித்த ஜெயக்குமார், "கட்சியின் கருத்து என்பது நேற்று எடுத்த முடிவுதான். நேற்று, இன்று, நாளை எல்லாம் ஒரே முடிவுதான். சசிகலா, அவரது குடும்பம் இல்லாமல் கட்சியையும் ஆட்சியையும் நடத்துவதுதான் அந்த முடிவு" என்று பதிலளித்தார்.
முன்னதாக, இன்று காலையில் கைத்தறித் துறை அமைச்சர் ஓ.எஸ். மணியன் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, "சசிகலா விரைவில் விடுதலையாகப் போகிறார். அவர் வந்தால் கட்சியையும் ஆட்சியையும் வழிநடத்தும் பொறுப்பை அவரிடம் கொடுப்பீர்களா?" என்று கேட்கப்பட்டது.
இதற்குப் பதிலளித்த ஓ.எஸ். மணியன், "நான் ஒரு சாதாரண மாவட்டச் செயலாளர். முடிவெடுப்பது தலைமை. தலைமையைத்தான் நீங்கள் கேள்வி கேட்க வேண்டும். அதுதான் சரியாக இருக்கும்" என்று கூறினார்.
இது குறித்தும் ஜெயக்குமாரிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, அது அவருடைய சொந்தக் கருத்து எனத் தெரிவித்தார்.
முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா மறைந்த பிறகு, உடனடியாக ஓ. பன்னீர்செல்வம் முதல்வராகப் பதவியேற்றாலும், சில நாட்களில் கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்றார் சசிகலா. அதற்குப் பிறகு முதல்வர் பதவியிலிருந்து ஓ. பன்னீர்செல்வம் ராஜினாமா செய்யவைக்கப்பட்டார். வி.என். சசிகலாவுக்கே அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு இருப்பதாக ஆளுநரிடம் கடிதம் அளிக்கப்பட்டது.


ஆனால், அடுத்த சில நாட்களிலேயே சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலாவுக்கான தண்டனை உறுதிசெய்யப்பட்டது. இதையடுத்து, எடப்பாடி கே. பழனிசாமி முதலமைச்சராக்கப்பட்டார். இருந்தபோதும் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் என்ற வகையில் டிடிவி தினகரன் கட்சிப் பொறுப்புகளைக் கவனித்துவந்தார்.
ஆனால், ஒரு கட்டத்தில் சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோரை ஒதுக்கிவைத்துவிட்டு செயல்படப்போவதாக முதல்வர் தரப்பு அறிவித்தது. இதையடுத்து, கட்சியிலிருந்து பிரிந்திருந்த ஓ. பன்னீர்செல்வம் அணியினர் மீண்டும் கட்சியில் இணைந்தனர். டிடிவி தினகரன் தனியாக செயல்பட ஆரம்பித்தார். பிறகு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற பெயரில் கட்சி ஒன்றையும் துவங்கினார்.
இந்த நிலையில், சசிகலாவுக்கு விதிக்கப்பட்டிருந்த நான்காண்டு காலச் சிறை தண்டனை 2021ல் முடிவுக்கு வருகிறது. நன்நடத்தை காரணமாக அவர் முன்கூட்டியே விடுவிக்கப்படலாம் என்றும் சில யூகங்கள் வலம்வருகின்றன. இந்த நிலையில்தான் சசிகலாவின் அரசியல் எதிர்காலம் குறித்தும் அ.தி.மு.கவில் அவருக்கான இடம் குறித்தும் பேசப்பட்டு வருகிறது.
பிற செய்திகள்:
- தமிழ்நாட்டில் மின் கட்டண கணக்கீடு சலசலப்பை ஏற்படுத்தியிருப்பது ஏன்?
- யார் இந்த விகாஸ் துபே? இவர் சுட்டுக்கொல்லப்பட்டது ஏன்? இதுகுறித்து தலைவர்களின் கருத்து என்ன?
- வீட்டிலிருந்து பணி செய்வதால் ஏற்படும் உடல் வலிகளுக்கு என்ன தீர்வு?
- "கொரோனா மருந்து தொடர்பாக சித்த மருத்துவர்களை சந்தேகத்துடன் பார்ப்பது ஏன்?" - உயர்நீதிமன்றம் கேள்வி
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :












