"கொரோனா மருந்து தொடர்பாக சித்த மருத்துவர்களை சந்தேகத்துடன் பார்ப்பது ஏன்?" - உயர்நீதிமன்றம் கேள்வி
முக்கிய இந்திய நாளிதழ்களில் இன்று வெளியான பிரதான செய்திகள், தலையங்க கட்டுரை ஆகியவற்றில் சிலவற்றை இங்கு தொகுத்து வழங்கியுள்ளோம்.

பட மூலாதாரம், Getty Images
தினத்தந்தி - கொரோனா மருந்து தொடர்பாக சித்த மருத்துவர்களை சந்தேகத்துடன் பார்ப்பது ஏன்?
கொரோனா வைரஸ் தொற்றுக்கு மருந்து கண்டுபிடித்து விட்டதாக கூறும் சித்த மருத்துவர்களை சந்தேக கண்ணுடன் பார்ப்பது ஏன் என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் வேதனை தெரிவித்து உள்ளதாக தினத்தந்தி நாளிதழ் வெளியிட்ட செய்தி தெரிவிக்கிறது.
அந்த செய்தி இது குறித்து மேலும் விவரித்துள்ளது. சென்னை கோயம்பேட்டை சேர்ந்த தணிகாசலம், கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்து விட்டதாக சமூக வலைதளங்களில் பதிவு வெளியிட்டு, மருந்துகளை விற்பனை செய்தார். இதுகுறித்து வந்த புகாரின் அடிப்படையில் தணிகாசலத்தை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தணிகாசலத்தின் தந்தை கலியபெருமாள் ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்தார். இந்த மனுவை ஏற்கனவே விசாரித்த நீதிபதிகள், மனுவுக்கு பதிலளிக்க போலீசுக்கு உத்தரவிட்டனர்.
இந்தநிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் என்.கிருபாகரன், வி.எம்.வேலுமணி முன்பு நேற்று (ஜூலை 9) விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான குற்றவியல் வழக்கறிஞரிடம் நீதிபதிகள் கேள்விகள் எழுப்பினர். 'தணிகாசலத்தை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்ததற்கு காரணம் என்ன? அவர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு மருந்து உள்ளது என்று கூறும்போது, அதை அரசு பரிசோதனை செய்வதை விட்டு அவரை கைது செய்து சிறையில் அடைத்தது ஏன்?' என்று நீதிபதிகள் கேட்டனர்.
பின்னர் நீதிபதிகள் கூறும்போது, 'எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு' என்று திருவள்ளுவரின் திருக்குறள் கூறுகிறது. அதை அரசு செய்யவில்லை. சித்த மருத்துவர்கள் கொரோனா வைரஸ் தொற்றுக்கு மருந்து கண்டுபிடித்து விட்டதாக கூறினால், அவர்களது மருந்தை பரிசோதனைக்கு உட்படுத்தாமல் அவர்களை சந்தேகக் கண்ணுடன் பார்க்கும் சூழல் நம் நாட்டில் நிலவுகிறது.
மேலும், 'சித்த மருத்துவத்தில் மத்திய, மாநில அரசு பாகுபாடு காட்டுகிறது. அந்த மருத்துவத்தை புறக்கணிக்கின்றன. தற்போது ஆங்கில மருந்துவம் செய்யும் பல மருத்துவமனைகளில், அலோபதி சிகிச்சை என்ற பெயரில் கபசுர குடிநீர் நோயாளிகளுக்கு கொடுக்கப்படுகின்றன. சித்த மருத்துவ சிகிச்சை தான் பல மருத்துவமனைகளில் வழங்கப்படுகிறது.

கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளான சிறை கைதிகள் உள்பட 400 பேர் சித்த மருத்துவத்தினால் குணமடைந்துள்ளனர். ஒரு உயிர் பலி கூட ஏற்படவில்லை. சித்த மருத்துவம் குறித்து அரசிடம் இதுபோன்ற மனப்போக்கு இருந்தால், இந்த மருத்துவம் யாருக்கும் பயனின்றி போய் விடும். யாராவது கொரோனா வைரஸ் தொற்றுக்கு மருந்து உள்ளது என்று கூறினால், அதை அரசு கவனத்துடன் எடுத்து பரிசீலிக்க வேண்டும்' என்றும் நீதிபதி கூறினர்.
பின்னர் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-
இந்த வழக்கில் மத்திய ஆயுஷ் அமைச்சகத்தையும், மத்திய, மாநில அரசுகளையும் இந்த வழக்கில் எதிர்மனுதாரர்களாக சேர்க்கின்றோம்.
கொரோனா வைரஸ் தொற்றுக்கு மருந்து கண்டறிந்துள்ளதாக இதுவரை எத்தனை சித்த மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்?. அவர்களது மருந்து பரிசோதனை செய்யப்பட்டதா? அதில் எத்தனை மருந்துகளில் நோய் எதிர்ப்பு சக்தி உள்ளதாக தெரியவந்துள்ளது? அவற்றில் எத்தனை மருந்து மத்திய ஆயுஷ் அமைச்சகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது?
தமிழகத்தில் சித்த மருத்துவ ஆராய்ச்சிக்காக இதுவரை எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது? தமிழகத்தில் எத்தனை சித்த மருத்துவ ஆராய்ச்சி ஆய்வகங்கள் உள்ளன? அவற்றில் போதுமான மருத்துவ நிபுணர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனரா? மத்திய ஆயுஷ் அமைச்சகம் ஆயுர்வேதம், யுனானி, ஓமியோபதி, சித்தா துறை வளர்ச்சிக்காக கடந்த 5 ஆண்டுகளில் எவ்வளவு செலவிட்டுள்ளது? இந்த கேள்விகளுக்கு எல்லாம் மத்திய, மாநில அரசுகள் விரிவான பதில் அளிக்க வேண்டும். இந்த வழக்கை வருகிற 23-ஆம் தேதிக்கு தள்ளி வைக்கிறோம் என்று கூறியதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்து தமிழ் திசை: நமது கனவு இந்தியா இதுதானா?- ராகுல்காந்தி

பட மூலாதாரம், Getty Images
உத்தரபிரதேச மாநிலத்தில் சுரங்கங்களில் பணியாற்றும் பழங்குடியினரின் நிலையை குறிப்பிட்டு நமது கனவு இந்தியா இதுதானா? என காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளதாக இந்து தமிழ் திசை வெளியிட்ட செய்தி தெரிவிக்கிறது.
இந்நிலையில், இந்த சுரங்கங்களில் பணிபுரியும் 15 வயதுக்கும் குறைவான சிறுமிகள், பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக ஊடகங்களில் நேற்று முன்தினம் செய்திகள் வெளியாகின. சுரங்கங்களின் உரிமையாளர்கள் மற்றும் அவர்களுக்கு நெருக்கமான பலர், இந்த செயலில் ஈடுபட்டு வருவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தியை சுட்டிக்காட்டி காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் நேற்று ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், "சித்ரகூட் பகுதியில் பழங்குடியின சிறுமிகள் அனுபவித்து வரும் வேதனை மிகக் கொடுமையானது. திட்டமிடல் ஏதுமின்றி அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கால் வாழ்வாதாரத்தை இழந்துள்ள அந்த சிறுமிகள், தங்கள் குடும்பத்தை காப்பாற்றுவதற்காக இத்தகைய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். நாம் கனவு கண்ட இந்தியா இதுதானா?" என கேள்வி எழுப்பி உள்ளதாக அந்த செய்தி தெரிவித்துள்ளது.

டைம்ஸ் ஆஃப் இந்தியா: "இந்தியாவில் முதலீடு செய்ய வாருங்கள்" - மோதி அழைப்பு

பட மூலாதாரம், Twitter
வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்ய வருமாறு அவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோதி அழைப்பு விடுத்து உள்ளதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது.
'இந்தியா குளோபல் வீக் - 2020' என்ற பெயரில் 3 நாள் சர்வதேச மாநாடு நடைபெறுகிறது. இதில் உலகம் முழுவதிலும் இருந்து 30 நாடுகளைச் சேர்ந்த 5 ஆயிரம் பேர் பங்கேற்கிறார்கள். இந்த மாநாட்டை பிரதமர் மோதி ஜுலை 9-ஆம் தேதியன்று தொடங்கி வைத்து காணொலி காட்சி மூலம் பேசினார்.
இந்த மாநாட்டில் பேசிய பிரதமர் மோதி, ''கொரோனாவுக்கு எதிராக இந்தியா தீவிரமாக போராடிக் கொண்டு இருக்கிறது. மக்களின் சுகாதாரத்தில் கவனம் செலுத்தும் அளவுக்கு பொருளாதார வளர்ச்சியிலும் நாங்கள் கவனம் செலுத்துகிறோம். இந்தியா தனக்கு ஏற்படும் சவால்களை, அது சமூக ரீதியிலான சவால்களாக இருந்தாலும் அல்லது பொருளாதார சவால்களாக இருந்தாலும் அவற்றை வென்று சாதனை படைத்து இருப்பதை வரலாறு காட்டுகிறது.
இந்தியா எப்போதும் தன்னை புதுப்பித்துக் கொண்டு வளர்கிறது; முடியாது என்று சொல்லப்படுவதை சாதித்து காட்டும் உத்வேகம் இந்தியர்களிடம் உள்ளது. கொரோனாவுக்கான தடுப்பு மருந்து கண்டுபிடிப்பதில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கும்.
இந்தியாவில் தொழில் தொடங்க வருமாறு வெளிநாட்டு நிறுவனங்களை நாங்கள் சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்கிறோம். இன்றைய காலகட்டத்தில் ஒரு சில நாடுகள்தான் இதுபோன்ற வரவேற்பை அளிக்கும். இந்தியாவில் தொழில் தொடங்க ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. எனவே எங்கள் அழைப்பை ஏற்று வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் தொழில் தொடங்க முன்வர வேண்டும். வெளிநாட்டு முதலீட்டை ஈர்க்கும் வகையில் தொழில் துறையில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன.
வெளிநாட்டு முதலீடு தொடர்பாக கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு இருப்பதால் வெளிநாட்டு நிறுவனங்கள் பாதுகாப்பு துறையில் முதலீடு செய்ய அதிக வாய்ப்பு ஏற்பட்டு இருக்கிறது. இதேபோல் வேளாண்மை உள்ளிட்ட துறைகளிலும் முதலீட்டுக்கான வாய்ப்புகள் அதிகரித்து உள்ளன'' என மோதி கூறியதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிற செய்திகள்:
- விகாஸ் துபே என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டதாக காவல்துறை அறிவிப்பு
- கொரோனா வைரஸ்: ‘விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்கு பரவும் நோய்கள் அதிகரிக்கலாம்’
- வீகர் முஸ்லிம்களுக்கு எதிரான துன்புறுத்தல்: சீன அதிகாரிகளுக்கு எதிராக அமெரிக்கா தடையுத்தரவு
- லடாக் எல்லையில் இந்திய, சீனப் படைகள் விலகியதற்கு காரணம் என்ன?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :












