தமிழ்நாட்டில் மின் கட்டண கணக்கீடு சலசலப்பை ஏற்படுத்தியிருப்பது ஏன்?

மின் கட்டண கணக்கீடு

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்
    • பதவி, பிபிசி தமிழ்

தமிழ்நாட்டில் ஊரடங்கிற்குப் பிந்தைய மின் கட்டணம் பெருமளவு அதிகரித்திருப்பதாக புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக வழக்கு ஒன்றும் தொடரப்பட்டுள்ளது. உண்மையில் மின் கட்டண கணக்கீட்டில் நடந்தது என்ன?

மார்ச் - ஏப்ரல் மாதத்தில் ஊரடங்கின் காரணமாக, ஒவ்வொரு இல்லமாகச் சென்று மின்சாரப் பயன்பாடு குறித்த கணக்கெடுப்பை தமிழ்நாடு மின் வாரியம் மேற்கொள்ளவில்லை. அதனால், மார்ச் - ஏப்ரல் மாதங்களுக்கு முந்தைய மாதக் கட்டணத்தையே செலுத்தலாம் என தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் அறிவித்திருந்தது.

இதற்கு அடுத்த முறை மின்சாரப் பயன்பாடு கணெக்கெடுக்கப்படும்போது இரு சுற்றுகளுக்கும், அதாவது நான்கு மாதங்களுக்கு சேர்த்து எடுக்கப்படும் என்றும் நான்கு மாதங்களுக்கான கட்டணத்தில், முன்பு செலுத்திய தொகை கழித்துக்கொள்ளப்பட்டு, மீதத் தொகை வசூலிக்கப்படும் எனவும் மின் வாரியம் தெரிவித்திருந்தது.

ஆனால், இந்த முறையில் கட்டணம் கணக்கிடப்பட்டபோது, பலருக்கும் பெரும் தொகை மின் கட்டணமாகக் கணக்கிடப்பட்டிருப்பதாக நுகர்வோர் அதிருப்தி அடைந்துள்ளனர். இது தொடர்பாக தேசிய மக்கள் கட்சியைச் சேர்ந்த எம்.எல். ரவி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு ஒன்றையும் தொடர்ந்திருக்கிறார்.

எவ்வாறு கட்டணம் கணக்கிடப்படுகிறது?

தமிழ்நாட்டில் வீடுகளில் மின்சாரம் பயன்படுத்துவோருக்கு முதல் 100 யூனிட்கள் விலையில்லாமல் வழங்கப்படுகிறது. இதற்குப் பிறகு பயன்படுத்தப்படும் மின்சாரம் 'டெலஸ்கோபிக் டாரிஃப்' என்ற வகையில் கணக்கிடப்படுகிறது. அதாவது, மிகக் குறைவாகப் பயன்படுத்துபவர்களுக்கு குறைவான கட்டணமும் மிக அதிகமாகப் பயன்படுத்துபவர்களுக்கு மிக அதிகமான கட்டணமும் வசூலிக்கப்படுகிறது.

மின் கட்டண கணக்கீடு

பட மூலாதாரம், Getty Images

உதாரணமாக, ஒருவர் இரண்டு மாதங்களுக்கு இரு நூறு யூனிட் மின்சாரத்தைப் பயன்படுத்தினால், பின்வருமாறு அவருக்கான கட்டணம் கணக்கிடப்படும்.

முதல் 100 யூனிட்கள்: விலை இல்லை

101வது யூனிட்டிலிருந்து 200 யூனிட்கள்

(ஒரு யூனிட்டின் விலை ரூ. 1.5): 100X 1.5 = ரூ. 150

நிலையான கட்டணம்: ரூ. 20

ஆகவே மொத்தக் கட்டணம்: 170 ரூபாய்

ஆனால், அதே நபர் இரு மாதங்களுக்கு 380 யூனிட் பயன்படுத்தினால் கட்டணம் வெகுவாக அதிகரிக்கும்.

முதல் 100 யூனிட்கள்: விலை இல்லை

101வது யூனிட்டிலிருந்து 200 யூனிட்கள்

(ஒரு யூனிட்டின் விலை 1.50க்குப் பதிலாக ரூ. 2ஆக அதிகரிக்கும்): 100X 2= ரூ. 200

201வது யூனிட்டிலிருந்து 380 யூனிட்கள்

(ஒரு யூனிட்டின் விலை 3 ரூபாய்) : 180 X 3= ரூ. 540

நிலையான கட்டணம்: ரூ. 20

ஆகவே மொத்தக் கட்டணம் 740 ரூபாயாக உயரும். முந்தைய மாதத்தைவிட அதிகமாக 180 யூனிட்களே பயன்படுத்தியிருந்தாலும் கட்டணம் 570 ரூபாய் அதிகரிக்கும்.

மின் கட்டண கணக்கீடு

பட மூலாதாரம், Getty Images

அதே நபர் 510 யூனிட்களைப் பயன்படுத்தினால், கட்டணம் இன்னும் வெகுவாக அதிகரிக்கும். 101 - 200, 201-500, 501 யூனிட்களுக்கு மேல் என எல்லாப் பிரிவிலுமே கட்டண அதிகரிப்பு இருக்கும்.

முதல் 100 யூனிட்கள்: விலை இல்லை

101வது யூனிட்டிலிருந்து 200 யூனிட்கள்

(ஒரு யூனிட்டின் விலை 3.50ஆக அதிகரிக்கும்): 100X 3.50 = ரூ. 350

201வது யூனிட்டிலிருந்து 500 யூனிட்கள்

(ஒரு யூனிட்டின் விலை 4.60 ரூபாய்) : 300 X 4.6 = ரூ. 1380

501வது யூனிட்டிலிருந்து 510வது யூனிட்வரை

(ஒரு யூனிட்டின் விலை ரூ. 6.60) : 10 X 6.6 = ரூ. 66

நிலையான கட்டணம்: ரூ. 20

ஆகவே மொத்தக் கட்டணம் 1,846 ரூபாயாக உயரும். முதல் மாதத்தைவிட அதிகமாக 310 யூனிட்களே பயன்படுத்தியிருந்தாலும் கட்டணம் 1,676 ரூபாய் அதிகரிக்கும்.

தமிழ்நாட்டில், பெரும்பாலான மத்தியதர வர்க்கத்தினர் இரு மாதங்களுக்கு 500 யூனிட்டிற்குள் பயன்படுத்துபவர்களாக இருந்தனர். இதனால், 500 யூனிட்டிற்கு மேல் பயன்படுத்துவோர் செலுத்தக்கூடிய உச்சபட்ச மின்கட்டணம் செலுத்தும் பிரிவின் கட்டணம் அவர்களுக்கு வருவதில்லை. கோடைக் காலங்களில் மட்டும் மின் பயன்பாடு அதிகரித்து, கூடுதல் கட்டணம் செலுத்தி வந்தனர். சமீப காலம்வரை இந்தக் கட்டண முறை பிரச்சனையில்லாமல் நடைமுறைப்படுத்தப்பட்டது.

ஆனால், ஊரடங்கு காலத்தில் கணக்கீடு எடுக்கப்படாததால் புதிய பிரச்சனை உருவானது. இதனால் நான்கு மாதங்களுக்கான கணக்கீடு எடுக்கப்பட்டு, அவை இரண்டால் வகுக்கப்பட்டு 'டெலஸ்கோபிக் டாரிஃப்' முறையில் கட்டணம் வசூலிக்கப்பட்டது.

உதாரணமாக ஒருவர் இந்த நான்கு மாத காலகட்டத்தில் 1,050 யூனிட் மின்சாரத்தைப் பயன்படுத்தியிருந்தால், பிப்ரவரி - மார்ச் மாதங்களுக்கு 525 யூனிட்டும் ஏப்ரல் - மே மாதங்களுக்கு 525 யூனிட்டும் பிரிக்கப்பட்டு கணக்கிடப்பட்டது. இதனால், பெரும்பாலான பயன்பாட்டாளர்கள் 500 யூனிட்டிற்கு மேல் பயன்படுத்தியதாகக் கருதப்பட்டு, உரிய கட்டணம் விதிக்கப்பட்டது.

மின் கட்டண கணக்கீடு

பட மூலாதாரம், Getty Images

ஆனால், சில பயனாளர்கள் தாங்கள் மார்ச் - ஏப்ரல் மாதங்களில் 450 யூனிட் அளவுக்குத்தான் பயன்படுத்தியிருப்போம். மீதமுள்ள 575 யூனிட் அளவு என்பது கோடை காலமான ஏப்ரல் - மே மாதங்களில் பயன்படுத்தியிருப்போம். ஆகவே மார்ச் - ஏப்ரலில் எங்களுக்கு 500 யூனிட்டிற்கு குறைவாக பயன்படுத்தியோருக்கான கட்டணத்தைத்தான் விதிக்க வேண்டும்; ஏப்ரல் - மே மாதங்களுக்கு மட்டுமே 500க்கு மேற்பட்ட யூனிட்டுகளுக்கான கட்டணத்தை விதிக்க வேண்டும் என்று கருதினர்.

எம்.எல். ரவி என்பவர் தொடர்ந்திருக்கும் வழக்கு இம்மாதிரியான ஒரு வழக்கில். ஊரடங்கிற்கு முன்பாக தான் 480 யூனிட் மின்சாரம் பயன்படுத்திய நிலையில், அதற்குக் கட்டணமாக 1,070 கட்டியதாகவும் அதன் பின்னர் ஊரடங்கு காலத்தில் மின்சார கணக்கெடுப்பு செய்யப்படாததால், முந்தைய கட்டணமான 1,070 ரூபாயை மீண்டும் கட்டியதாகவும் அவர் கூறியிருக்கிறார்.

ஊரடங்கு காலத்திற்குப் பிறகு மீண்டும் மின்சாரக் கணக்கெடுப்பு எடுக்கப்பட்டபோது நான்கு மாதங்களுக்கு (அதாவது இரண்டு கணக்கீட்டு காலம்) 1,240 யூனிட் மின்சாரம் பயன்படுத்தியதாக பதிவுசெய்யப்பட்டது.

இதனால், இந்த 1240 யூனிட், தலா 620 யூனிட்டுகளாக இரண்டாகப் பிரிக்கப்பட்டு அதற்குரிய தொகை கணக்கிடப்பட்டது. இந்தக் கணக்கீட்டு முறையால், இந்த இரண்டு கணக்கீட்டு காலத்திலும் தான் 500 யூனிட்டுக்கும் அதிகமாக பயன்படுத்தியதாகக் கணக்கிடப்பட்டு 2,572 ரூபாய் மின்கட்டணம் நிர்ணயிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதாவது, முதல் 100 யூனிட்டுகள் இலவசம், 101 முதல் 200 யூனிட்டுகள் வரை யூனிட்டிற்கு ரூ. 3.5, 201 முதல் 500 யூனிட் வரை யூனிட்டிற்கு ரூ. 4.60, 501 முதல் 620 யூனிட்டுகள் வரை யூனிட்டுக்கு ரூ. 6.60 என்ற அடிப்படையில் மின்வாரியம் கணக்கீடு செய்தது. ஆகவே ஒரு கணக்கீட்டு காலத்திற்கு 2,572 ரூபாய் என்ற வீதத்தில் இரண்டு கணக்கீட்டு காலத்திற்கு 5,144 ரூபாய் மின்கட்டணமாக செலுத்த வேண்டும் என மின்சார வாரியம் கூறியது. முந்தைய மின்கட்டணமாக அவர் செலுத்திய 1,070ஐக் கழித்துக் கொண்டு மீதத் தொகையைச் செலுத்தும்படி மின்வாரியம் கூறியது.

ஆனால், மின் பயன்பாடு கணக்கிடப்படாத முதல் கணக்கீட்டுக் காலத்துக்கு மின்வாரியம் 480 யூனிட்டுக்கான கட்டணத்தையே மின்வாரியம் தன்னிடம் வசூலிக்க வேண்டும். அடுத்த இரண்டு மாத காலத்துக்கு 760 யூனிட்டிற்கான கட்டணத்தை கணக்கிட்டிருக்க வேண்டும். அப்படி செய்திருந்தால் முதல் கணக்கீட்டுக் காலத்துக்காவது மின்சாரப் பயன்பாடு 500 யூனிட்டுக்கு கீழ் இருந்தது என்ற வகையில் கட்டணம் குறைவாக வந்திருக்கும்.

ஆனால், மின்சார வாரியம் மொத்த யூனிட்களை இரண்டாக சரி சமமாகப் பிரித்துக் கணக்கிட்டதால் தான் கூடுதலாக 578 ரூபாய் மின்கட்டணம் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டிருப்பதாகவும் அவர் கூறியிருந்தார். இதுபோலவே, வழக்கமாக 500 யூனிட்டிற்கு குறைவாக மின்சாரத்தைப் பயன்படுத்திவந்தவர்கள் பாதிக்கப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்திருந்தார்.

எம்.எல். ரவியின் வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, தமிழ்நாடு மின்வாரியத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்ட பதிலில், கணக்கீடு எடுக்கப்படாததால் ஒருவர் முதல் கணக்கீட்டுக் காலத்தில் எவ்வளவு மின்சாரம் பயன்படுத்தியிருப்பார் என்பதைக் கணக்கிட வாய்ப்பில்லை. ஆகவே, இந்த முறையிலேயே மின் கட்டணம் வசூலிக்கப்படும் எனத் தெரிவித்திருக்கிறது.

இந்த வழக்கு விசாரணை முடிந்து தற்போது தீர்ப்பிற்காக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மு.க. ஸ்டாலின்

பட மூலாதாரம், Facebook

ஆனால், இந்த முறையில் கணக்கிடும்போது வெகு சிலருக்கு கணக்கீடு சாதமாக வருவதற்கும் வாய்ப்பு இருப்பதும் சுட்டிக்காட்டப்படுகிறது. உதாரணமாக ஒருவர் மார்ச் - ஏப்ரல் மாதத்தில் 300 யூனிட்கள் மின்சாரத்தை பயன்படுத்திவிட்டு, ஏப்ரல் - மே மாதத்தில் 510 யூனிட் மின்சாரத்தைப் பயன்டுத்துகிறார் என்றால், அவருக்கு மார்ச் - ஏப்ரல் மாதத்திற்கு குறைவான கட்டணமும் ஏப்ரல் - மே மாதத்திற்கு மிக அதிகமான கட்டணமும் வர வேண்டும். ஆனால், இப்போது இவை இரண்டும் ஒன்றாக இணைக்கப்பட்டு, இரு கணக்கீட்டு காலத்திற்கும் தலா 405 யூனிட் எனக் கணக்கிடப்பட்டு, மின் கட்டணம் வசூலிக்கப்படும். ஆகவே, இந்த நபர் 500 யூனிட்டிற்கு மேல் மின்சாரத்தை பயன்படுத்தியிருந்தால், அந்த கட்டணத்தை அவர் செலுத்தியிருக்க மாட்டார்.

இந்த விவகாரம் தொடர்பாக அறிக்கை வெளியிட்டிருக்கும் எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின், புதிய யோசனை ஒன்றை முன்வைத்திருக்கிறார். அதாவது, இப்போதைய முறையில் மின் நுகர்வோர் மார்ச் - ஏப்ரல் மாதக் கட்டணம் கழித்துக்கொள்ளப்பட்டு, மீதிக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அதற்குப் பதிலாக அந்தக் கட்டண அளவிற்கான யூனிட்களைக் கழித்துக்கொண்டு மின்சாரத்தைக் கணக்கிட வேண்டுமென அவர் கோரியிருக்கிறார்.

வரைபடம்

உலகம் முழுவதும் உறுதி செய்யப்பட்ட தொற்றுகள்

Group 4

முழுமையாக பார்க்க பிரௌசரை அப்டேட் செய்யுங்கள்

ஆதாரம்: ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம், தேசிய பொது சுகாதார முகமைகள்

கடைசியாக பதிவு செய்யப்பட்டது 5 ஜூலை, 2022, பிற்பகல் 1:29 IST

ஆனால், "கட்டணத்திற்குப் பதிலாக, யூனிட்களைக் கழித்தாலும் வேறொரு பிரிவினர் பாதிக்கப்படுவர். தற்போது மின்வாரியம் செய்திருப்பது சரியான முறையே. ஆனால், நாம் கவலைப்பட வேண்டியது மின்துறையில் வரவிருக்கும் சீர்திருத்தங்கள் குறித்துத்தான். இதன் மூலம் கட்டணங்கள் பெருமளவில் உயரவிருக்கிறது" என்கிறார் தமிழ்நாடு மின் துறைப் பொறியாளர்கள் சங்கத்தின் தலைவர் எஸ். காந்தி.

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தில் இந்த விவகாரம் தொடர்பாகக் கேட்டபோது, நீதிமன்றத்தில் வழக்கு நடந்துவருவதால் தாங்கள் இதுகுறித்து கருத்து எதையும் தெரிவிக்க முடியாது எனத் தெரிவித்தனர்.

தமிழ்நாட்டில் தற்போது 2,12,00,000 வீட்டு மின் இணைப்புகள் உள்ளன. இதில் மூன்றில் ஒரு பங்குபயன்பாட்டாளர்கள் அதாவது 68 லட்சம் இணைப்புகள் 200-500 யூனிட்களுக்குள் மின்சாரத்தைப் பயன்படுத்துவோராக உள்ளனர். மொத்த மின் பயன்பாட்டில் 50 சதவீதம் இந்தப் பிரிவினரால்தான் நுகரப்படுகிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: