என்எல்சி நிர்வாகத்துக்கு ரூ.5 கோடி அபராதம் விதித்த தேசிய பசுமை தீர்ப்பாயம்

அண்மையில் ஏற்பட்ட அனல் மின் நிலைய தீ விபத்துக்காக, என்எல்சி நிர்வாகத்துக்கு 5 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது. தேசிய பசுமை தீர்ப்பாயம்.
நெய்வேலி என்எல்சி இரண்டாவது அனல்மின் நிலையத்தில் உள்ள 5ஆவது யூனிட்டில் உள்ள கொதிகலனில் ஏற்பட்ட தீ விபத்தினால் சம்பவ இடத்திலேயே 6 பேர் உயிரிழந்தனர். மேலும், 17 பேர் காயமடைந்தனர். இதில் பலத்த காயமடைந்த 16 பேர் சென்னை தனியார் மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். அவர்களுக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், 7 பேர் சிகிச்சை பலனின்றி அடுத்தடுத்து மருத்துவமனையில் உயிரிழந்தனர்.
இதனையடுத்து தற்போது 9 பேருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், நெய்வேலி அரசு மருத்துவமனையில் ஒருவர் சிகிச்சை பெற்று வருகின்றார்.
இதனிடையே இந்த பாதிப்பின் காரணமாகச் சம்பந்தப்பட்ட இரண்டாம் அனல்மின் நிலையத்தின் தலைமை அதிகாரி தீ விபத்து ஏற்பட்ட நாளன்று, பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
மேலும், இந்த தீ விபத்து குறித்து என்.டி.பி.சி.யின் ஓய்வு பெற்ற தொழில்நுட்ப இயக்குநர் மொகாபத்ரா தலைமையில் உயர் மட்ட விசாரணை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. மேலும், உள்கட்ட அமைப்புக்கள் குறித்து விசாரணை செய்ய என்.எல்.சி மின்சார இயக்குநர் தலைமையிலான மூத்த நிர்வாகிகள் குழு அமைக்கப்பட்டது.
ஆனால் உயர்மட்ட விசாரணை தொடங்குவதற்கு முன்பாக, மத்திய நிலக்கரி அமைச்சகம் என்எல்சி-யின் மின்சார இயக்குநரைக் கட்டாய விடுப்பில் செல்ல உத்தரவிட்டது.

இந்நிலையில், ஜூலை 1ம் தேதி நெய்வேலி என்எல்சி தீ விபத்தில் தொழிலாளர்கள் உயிரிழந்த விவகாரத்தில், என்எல்சி நிர்வாகத்திற்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் 5 கோடி ரூபாயை இடைக்கால அபராதமாக விதித்துள்ளது.
மேலும், இந்த அபராதத் தொகையை கடலூர் மாவட்ட மாஜிஸ்ட்ரேட்டிடம் இரண்டு வாரங்களுக்குள் செலுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது. என்எல்சி நிர்வாகத்திடமிருந்து பெறப்படும் இந்த இடைக்கால அபராத தொகை தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர், காயமடைந்த நபர்களின் வங்கிக் கணக்குகளில் பிரித்து செலுத்தப்படும்.
தீ விபத்து குறித்து விசாரணை நடத்தச் சிறப்பு உயர்மட்டக் குழு ஒன்றையும் அமைத்துள்ளது தேசிய பசுமை தீர்ப்பாயம். அதில் மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், சென்னை ஐஐடி மற்றும் தேசிய சுற்றுச்சூழல் பொறியாளர் ஆராய்ச்சி மையம் ஆகியவற்றின் பிரதிநிதிகள் இடம் பெற்றிருப்பார்கள். இந்தக் குழு மூன்று மாதங்களுக்குள் தீ விபத்து குறித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
பிற செய்திகள்:
- மரியாதை இல்லை, உரிமையும் இல்லை: முள் மகுடத்துடன் இருளர் ஊராட்சித் தலைவர்கள்
- "இந்தியாவில் ஒரு நாளைக்கு 2.87 லட்சம் பேருக்கு கொரோனா ஏற்படலாம்" - எச்சரிக்கும் ஆய்வு
- லடாக் எல்லையில் இந்திய, சீனப் படைகள் விலகியதற்கு காரணம் என்ன?
- கான்பூரில் எட்டு காவல்துறையினர் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரம்: முக்கிய குற்றவாளியான விகாஸ் துபே கைது
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












