தமிழ்நாட்டில் பழங்குடி இருளர் ஊராட்சித் தலைவர்களுக்கு மரியாதை இல்லை, உரிமையும் இல்லை - முள் மகுடமான பதவி

பட மூலாதாரம், R.Murugappan
- எழுதியவர், அ.தா.பாலசுப்ரமணியன்
- பதவி, பிபிசி தமிழ்
2011 உள்ளாட்சித் தேர்தலுக்குப் பிறகு நடந்த வன்முறையில் இருளர்களின் 11 குடிசைகள் கொளுத்தப்பட்டு, இடித்துத் தரைமட்டமாக்கப்படுகிறது. அதற்கடுத்து நடந்த சமீபத்திய உள்ளாட்சித் தேர்தலில் அந்த ஊராட்சி பழங்குடியினருக்கு ஒதுக்கப்படுகிறது. முருகேசன் என்ற பழங்குடி இருளர் வெற்றி பெறுகிறார்.
நடந்த இடம், திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே உள்ள அரியாக்குஞ்சூர்.
2011ல் நடந்த வன்முறையில் குற்றம்சாட்டப்பட்டவர் ஒரு தலித். ஊராட்சித் தலைவர் பதவி அங்கு பொதுப் போட்டிக்குரியது என்றபோதும், ஊரில் தலித்துகள் பெரும்பான்மை என்பதால் தொடர்ந்து தலித்துகளே ஊராட்சித் தலைவர்களாக வெற்றி பெறுவது வழக்கம். அதற்கு முந்திய தேர்தலில் வெற்றி பெற்ற தலித் சமூகத்தைச் சேர்ந்த தலைவர், ஒதுக்குப் புறமாக இருக்கும் இருளர் பகுதிக்கு வேண்டிய குடிநீர் இணைப்பு, தெருவிளக்கு போன்ற வசதிகளை செய்து தந்துள்ளார்.
2011 தேர்தலில் அவர் மீண்டும் ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றியை இன்னொரு தலித் வேட்பாளர், இந்த இருளர்களின் குடிசைகளைக் கொளுத்தி, பிறகு தரைமட்டமாக்கியதாக குற்றம்சாட்டப்பட்டது.
இந்நிலையில், அந்த வன்முறைக்குப் பிறகு தற்போது நடந்துள்ள உள்ளாட்சித் தேர்தலில் இருளர் ஒருவரே ஊராட்சித் தலைவராகி இருப்பது நீதியை நிலை நிறுத்திய செயலாகத்தானே தோன்றுகிறது?
பெயரளவில் அது உண்மைதான். ஆனால், சுமார் ஒரு மாதம் முன்பு தேர்ந்தெடுக்கப்பட்ட அந்த ஊராட்சித் தலைவர் முருகேசன், தாம் ஒரு சாவுக்கு குழி நோண்டும்படி பணிக்கப்பட்டதாக புகார் கூறினார். ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. அவர் காவல் நிலையத்திலும் புகார் செய்தார். ஆனால், பிறகு அந்தப் புகாரைத் திரும்ப பெற்றுக்கொண்டார்.
இப்போது தாம் ஊரோடு இணக்கமாகவே இருப்பதாக கூறுகிறார். இருளர்கள் உள்ளாட்சிப் பதவிகளுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட பல இடங்களிலும் இப்படிப்பட்ட 'இணக்கங்கள்' நிலவவே செய்கின்றன.
திருவண்ணாமலைக்கு அருகில் உள்ள ஒரு பெரிய ஊராட்சியின் தலைவராகவும் இருளர் ஒருவரே உள்ளார். இட ஒதுக்கீட்டின் மூலம் கிடைத்த பதவி. ஊராட்சி செயலாளரும் (முன்பு பகுதி நேர எழுத்தர் என்று அழைக்கப்பட்ட பதவி), ஊரக வளர்ச்சி முகமை அதிகாரியும் ஊராட்சி அலுவலகத்துக்குள் பேசிக்கொண்டிருந்தால் தலைவர் உள்ளேகூட வரமாட்டார் என்கிறார் தன் பெயரையும், ஊர்ப் பெயரையும் வெளியிட விரும்பாத அந்த ஊர் உள்ளாட்சிப் பிரதிநிதி ஒருவர். "அவருக்கு ஆளுமை இல்லை. வசதியும் இல்லை. தன் இருக்கையில் அமர்வதற்குக் கூட தைரியம் வராத அவரால் அதிகாரிகளிடம் பேசி பணிகளை எடுக்கவும், அதற்கான நடைமுறைகளைப் பின்பற்றவும் முடியாது. அவர் சார்பாக வேறு யாரோதான் செயல்படுவார்கள்" என்று கூறினார்.
அமைப்பு வலு
எந்த ஊரிலும் இருளர்கள் பெரிய எண்ணிக்கையில் இல்லை. அதிகார வலுவோ, எண்ணிக்கை வலுவோ இல்லாத அவர்கள் இட ஒதுக்கீட்டின் காரணமாக உள்ளாட்சிப் பதவிகளில் வெற்றி பெற்ற இடங்களிலும் வெறும் பொம்மைகளாகவே நடத்தப்படுகிறார்கள் என்பதை பழங்குடி இருளர் பாதுகாப்பு சங்கம் என்ற அமைப்பை நிறுவியவரும், கல்வி, மனித உரிமை செயற்பாட்டாளருமான பேராசிரியர் பா.கல்விமணி (கல்யாணி) ஒப்புக்கொள்கிறார்.

இந்த பலவீனத்தை அமைப்பு வலுவைக் கொண்டு மட்டுமே ஓரளவு சமன் செய்ய முடியும் என்கிறார் அவர். தங்கள் அமைப்பின் பொதுச் செயலாளராக இருக்கிற ஆறுமுகம், துணைத் தலைவராக இருக்கிற ஆதிமூலம் இருவரும் கடலூர் மாவட்டத்தில் தத்தமது ஊர்களின் ஊராட்சி வார்டு உறுப்பினர்களாக அப்படி வலுவாக செயல்பட்டதாக கூறுகிறார் கல்விமணி. மற்ற இடங்களில் இருப்பதைப் போல அவர்களை உதாசீனம் செய்ய முடியவில்லை என்கிறார் அவர்.
ஆனால், தமிழ்நாட்டில் இருக்கிற மிகப்பெரிய பழங்குடிகள் அமைப்பான தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளரான சரவணன் இதில் மாறுபடுகிறார். அமைப்பு வலுவும்கூட ஓரளவுக்குதான் இருளர்களுக்கு உதவுகிறது என்கிறார் அவர். தமிழ்நாடு முழுவதும் ஒரு லட்சம் உறுப்பினர்களுக்கு மேல் கொண்டுள்ள தங்கள் சங்கத்தை சேர்ந்த இருளர்கள், திருவண்ணாமலை மாவட்டத்தில் மட்டும் 10 ஊராட்சிகளில் தலைவர்களாக வெற்றி பெற்றுள்ளார்கள். ஆனாலும் அவர்களுக்கு, ஊரிலோ, அலுவலகத்திலோ உரிய மரியாதை இல்லை.
"தன் ஊருக்கு வேண்டியதை வாங்க வட்டார வளர்ச்சி அலுவலகத்துக்கு இருளர் சமூகத்தை சேர்ந்த தலைவர் ஒருவர் சென்றால் அவரோடு அந்த ஊரில் செல்வாக்கோடு உள்ள ஜாதியை சேர்ந்த ஒருவர் உடன் சென்று அவர்தான் பட்டியலைச் சொல்லுவார். இந்தப் போக்கை அதிகாரிகளும் ஏற்றுக்கொண்டே செயல்படுகிறார்கள்" என்கிறார் சரவணன்.
காரணம் கேட்டபோது, "எல்லா ஊரிலும் விரல் விட்டு எண்ணக்கூடிய இருளர் குடும்பங்கள்தான் உள்ளன. தலைவர்களாக வெற்றி பெற்ற பலருக்கு படிப்பறிவு இல்லை. துணிச்சல் இல்லை. சமூக அதிகாரம் இல்லை. இருளர் பெண்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் வெற்றி பெற்ற இருளர் பெண்கள் சார்பில் மற்ற சமூகங்களைப் போல அவர்களது கணவர்கள்தான் செயல்பட முயல்கிறார்கள். ஏனெனில், இருளர் பெண்கள் மிகவும் கூச்ச சுபாவம் உடையவர்கள். ஆனால், இவர்களது கணவர்கள்கூட செயல்பட முடியாதபடி ஆதிக்க சாதியை சேர்ந்த எவரோ ஒருவர்தான் செயல்படுகிறார்".
10 ஊராட்சிகளில் தங்கள் சங்கங்களை சேர்ந்தவர்கள் வெற்றி பெற்ற நிலையில், நிலைமையை மாற்ற ஓரளவு தலையிட முடியும் என்ற நம்பிக்கையில் இருந்ததாகவும், ஆனால், கொரோனா காரணமாக எல்லா உள்ளாட்சி செயல்பாடுகளும் முடங்கிக் கிடப்பதால் இப்போது தலையிட முடியவில்லை என்றும் கூறுகிறார்.

பழங்குடி இருளர் சமூகத்தை சேர்ந்த தலைவர்களை பொம்மைகளாக வைத்துவிட்டு பெரும்பாலும் ஆதிக்க சாதிகளைச் சேர்ந்த துணைத் தலைவர்களே அதிகாரம் செலுத்துவதாகவும், அதைக் கேட்கும் நிலையில்கூட இருளர் தலைவர்கள் இல்லை என்றும் கூறும் சரவணன், ஊராட்சி விவகாரங்களில் சங்கம் தலையிடுவதில் நிறைய நடைமுறை சிக்கல்கள் ஏற்படும் என்றும் கூறுகிறார். ஊராட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்படும் இருளர்கள் எதிர்கொள்ளும் உதாசீனத்தை விளக்க ஒரு சம்பவத்தைக் குறிப்பிடுகிறார் சரவணன்.
"திருவண்ணாமலை மாவட்டம் புலிவாய் ஊராட்சியில் இருளர் சமூகத்தை சேர்ந்த கருப்பாயி ராஜேந்திரன் என்பவர் ஊராட்சித் தலைவராக வெற்றி பெற்றுள்ளார். கடந்த ஜனவரி 26 அன்று நடந்த கிராமசபைக் கூட்டத்தில் கருப்பாயி தலைமையில்தான் கூட்டம் நடக்கிறது என்பதைக்கூட ஊராட்சி செயலாளர் அறிவிக்கவில்லை" என்கிறார் சரவணன்.
இது தவிர, ஊராட்சித் தலைவர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் இருளர்கள் தினக்கூலியை நம்பி வாழ்கிற உடமையில்லாத ஏழைகள். எனவே அந்த ஊரின் நிலவுடைமை, அதிகார அமைப்பை சார்ந்து வாழும் நிலையில் இருப்பவர்கள் என்பதையும் சரவணன் சுட்டிக்காட்டுகிறார். அரசாங்கம், பழங்குடி மற்றும் பட்டியலின ஊராட்சித் தலைவர்களுக்கு மட்டும் தனியாகப் பயிற்சி அளித்து, ஊராட்சி செயல்பாடு பற்றிய அறிவையும், அதிகாரிகளை அணுகுவதற்கான தன்னம்பிக்கையும் அளித்தால் மட்டுமே இந்த நிலைமைமை மாறும். பழங்குடிகளுக்கு இட ஒதுக்கீடு அளித்த நோக்கமும் நிறைவேறும் என்கிறார் சரவணன்.
எண்ணிக்கை வலு
கடலூர் மாவட்டம் அணுக்கம்பட்டி ஊராட்சி வார்டு உறுப்பினராக பதவி வகித்தபோது மரியாதையாகவே நடத்தப்பட்டதாக கூறுகிறார் பழங்குடி இருளர் பாதுகாப்பு சங்க பொதுச் செயலாளர் ஆறுமுகம்.
ஆனால், கல்விமணி கூறியதைப் போல இவரது அமைப்பு வலு மட்டுமல்ல இவர் வசிக்கும் கிராமத்தில் உள்ள இருளர்களின் எண்ணிக்கையும் இதற்கு உதவி இருக்ககூடும். வழக்கமாக பிற கிராமத்தில் விரல் விட்டு எண்ணக்கூடிய இருளர் குடும்பங்கள் இருக்கும் நிலைக்கு மாறாக இந்த ஊரில் 157 இருளர் வாக்குகள் இருப்பதாக இவர் கூறுகிறார். இந்த சங்கத்தின் துணைத் தலைவராக உள்ள ஆதிமூலம் பல்வராயநத்தம் ஊராட்சி வார்டு உறுப்பினர். தாமும் மதிப்போடு நடத்தப்படுவதாகவே இவர் கூறுகிறார். அணுக்கம்பட்டியைப் போலவே இவருக்கும் அமைப்பு வலுவைப் போலவே எண்ணிக்கை வலுவும் உதவுகிறது. இந்த ஊரில் 300 இருளர் வாக்குகள் இருப்பதாக இவர் கூறுகிறார். எண்ணிக்கை வலு இல்லாத இடத்தில் என்ன செய்வது?
ஊதியக் கோரிக்கை

மலைவாழ் மக்கள் சங்கத்தின் முன்னாள் பொதுச் செயலாளரும் மார்க்சிஸ்ட் கட்சி தலைவர்களில் ஒருவருமான பி.சண்முகம், இதற்கொரு தீர்வு சொல்கிறார்.
அன்றாட வாழ்க்கையே போராட்டமாக இருக்கும்போது அவர்கள் சமூக மரியாதையைப் பெற முடியாது. அவர்களுக்கு முறையாக அரசு பயிற்சி வழங்கவேண்டும். அத்துடன் பழங்குடி மற்றும் பட்டியலினத்தைச் சேர்ந்த ஊராட்சித் தலைவர்களுக்கு மாதம் ரூ.10 ஆயிரம் ஊதியம் வழங்கவேண்டும். அப்போதுதான் அவர்களால் தங்கள் வாழ்வாதாரப் பிரச்சனைகளைப் பற்றி கவலைப்படாமல் ஊராட்சிப் பணிகளில் ஈடுபட முடியும் என்பதோடு, அது தரும் தன்னம்பிக்கையில் அவர்களால் ஒரளவு ஆளுமையோடு செயல்பட முயற்சி செய்ய முடியும். நாங்களும் ஒரு பயிற்சி முகாம் ஏற்பாடு செய்தோம். ஆனால், இதனை ஒரு நாள் பயிற்சி மூலம் செய்துவிட முடியாது என்கிறார் சண்முகம்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












