சாதிச்சான்றிதழ் இல்லாததால் உயர்கல்வி வாய்ப்பை இழந்த பழங்குடி மாணவிக்கு புதிய நம்பிக்கை

சங்கவி
படக்குறிப்பு, சங்கவி
    • எழுதியவர், மு.ஹரிஹரன்
    • பதவி, பிபிசி தமிழுக்காக

"எனது கிராமத்தின் முதல் பட்டதாரி நானாக இருப்பேன் என்ற கனவு நிறைவேறுமா எனத் தெரியவில்லை" என்கிறார் சாதிச் சான்றிதழ் இல்லாததால் உயர்கல்வி வாய்ப்பை இழந்த இந்தப் பழங்குடி மாணவி.

கோவை மாவட்டத்தில் சாதிச்சான்றிதழ் இல்லாததால் மலசர் பழங்குடி இனத்தைச் சேர்ந்த மாணவி ஒருவருக்கு உயர் கல்வி வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. அடிப்படை வசதிகள் இல்லாத தன் ஊரின் நிலையையும், தனது உயர்கல்வி கனவு பற்றியும் பிபிசி தமிழிடம் அவர் பகிர்ந்துகொண்டார்.

மாவட்ட நிர்வாகத்தின் கருத்தை அறிவதற்காக சங்கவி குறித்த தகவல் மாவட்ட நிர்வாகத்தின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. இதையடுத்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு சங்கவிக்கு சாதிச்சான்றிதழ் தரப்பட்டுள்ளது.

ஆனால் சாதிச்சான்றிதழ் மறுக்கப்பட்டது எப்படி தமது கல்வி வாய்ப்பைப் பறித்துக்கொண்டது என்பது பற்றியும், தமது ஊரின் பின்தங்கிய நிலை பற்றியும், எத்தகைய நிலையில் அவர் பள்ளிப் படிப்பை முடித்தார் என்பது பற்றியும் அவர் பிபிசி தமிழிடம் முன்னதாக கூறியிருந்த கருத்துக்கள் முக்கியமானவை என்பதால் அவற்றை இங்கே பகிர்ந்துகொள்கிறோம்.

"கோவையிலிருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ள திருமலையம்பாளையம் பேரூராட்சியில், ரொட்டிக்கவுண்டன்புதூர் என்ற பகுதியில் வசித்து வருகிறேன். எனது அம்மா உடல்நிலை சரியில்லாதவர். அப்பா, கூலி வேலைக்கு செல்பவர். 'தனது மகள் எப்படியாவது மருத்துவர் ஆக வேண்டும்' என்று அவர் ஆசைப்பட்டார்.

அரசுப்பள்ளியில் படித்து, பத்தாம் வகுப்பில் 500க்கு 447 மதிப்பெண் வாங்கினேன். சமூக அறிவியலில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்றேன். அப்பாவின் ஆசை தான் எனது கனவும். மருத்துவர் ஆக வேண்டும் என்பதற்காகவே அறிவியல் பாடப்பிரிவு தேர்வு செய்தேன். +2 தேர்வில் 1200க்கு 874 மதிப்பெண்கள் எடுத்தேன்" என்கிறார் சங்கவி.

"அரசு பயிற்சி வகுப்பில் சேர்ந்து நீட் நுழைவுத் தேர்வுக்கு தயாரானேன். வெறும் 6 மதிப்பெண்கள் வித்தியாசத்தில் நீட் தேர்வில் தோல்வியடைந்ததால் மருத்துவ கல்விக்கான வாய்ப்பு தவறியது. பின்னர், மருத்துவர் கனவை மறந்து பாலிடெக்னிக் கல்லூரியில் சேர்ந்தேன். மருத்துவர் ஆக முடியாவிட்டாலும், எனது கிராமத்தின் முதல் பட்டதாரியாக உருவாகி கிராம மக்களுக்கு என்னால் முடிந்த உதவிகளை செய்ய வேண்டும் என நினைத்தேன்" என்கிறார் சங்கவி.

"கல்லூரியில் சேரும்போது பழங்குடியினர் பிரிவில் தான் இடம் கிடைத்தது. ஆனால், சாதிச்சான்றிதழ் என்னிடம் இல்லை. எனக்கு மட்டுமல்ல எனது கிராமத்தில் வசிக்கும் யாருக்கும் சாதிச்சான்றிதழ் இல்லை. அரசு அதிகாரிகளிடம் சென்றால், முந்தைய தலைமுறையின் ஆவணங்களை கொண்டுவரச் சொல்கின்றனர். இந்த தலைமுறையினருக்கே கல்வி சவாலாக இருக்கும்போது, முந்தைய தலைமுறையினருக்கு சாதிச்சான்றிதழ் பற்றி தெரிந்திருக்க கூட வாய்ப்பில்லை" என்கிறார் சங்கவி.

சங்கவி
படக்குறிப்பு, சங்கவி

இதனால், எனக்கு சாதிச்சான்றிதழ் கிடைக்கவில்லை, கல்லூரியில் ஒதுக்கப்பட்ட இடமும் கைவிட்டுப்போனது. பணம் கட்டி படிக்கும் அளவிற்கு வீட்டில் வருமானமும் இல்லை. கடந்த இரண்டு ஆண்டுகளாக வீட்டில் தான் இருக்கிறேன். எனது கிராமத்தில் பள்ளிப்படிப்பை முடிக்கவிருக்கும் மற்ற மாணவர்களுக்கும் இதே நிலைதான் வரப்போகிறது என நினைத்தால் வேதனையாக இருக்கிறது" என்கிறார் ரொட்டிக்கவுண்டன்புதூர் கிராமத்தைச் சேர்ந்த பழங்குடியின மாணவி சங்கவி.

தொழிற்கூடங்கள் மற்றும் கல்விநிலையங்களின் மையமாக வளர்ச்சி அடைந்து வரும் கோவை மாவட்டத்தில் இவர் வசிக்கும் கிராமம் மிகவும் பின்தங்கிய நிலையில் காட்சியளிக்கிறது. கூரை வேயப்பட்டு, மண்சுவர்களால் கட்டப்பட்ட சுமார் 25 குடிசை வீடுகளும், மின் இணைப்பில்லாத சில தெருவிளக்கு கம்பங்கள் மட்டுமே இந்த பகுதியில் இருக்கின்றன.

Banner image reading 'more about coronavirus'

"எங்கள் கிராமத்திற்காக கட்டப்பட்ட பொதுகழிப்பறை பல வருடங்களாக பூட்டி வைக்கப்பட்டுள்ளது. இதனால், இங்கு வசிக்கும் பெண்கள் பல பிரச்சனைகளை சந்தித்து வருகிறோம். மழை நாட்களில், கூரை வீடுகளுக்குள் நாங்கள் படும் அவஸ்தைகளை என்னால் விவரிக்க முடியவில்லை. வீடு முழுவதும் மழைநீர் வழிந்தோடும். அதிவேகத்தில் காற்று வீசினால் கூரைகளும் பறந்துவிடும். அரசு சார்பில் வீடுகள் கட்டிக்கொடுக்க முயற்சிகள்நடந்தன. சில கட்டுமானங்களை செய்துவிட்டு அதையும் நிறுத்திவிட்டனர். மேலும், எனது கிராமத்தில் இன்றுவரை மின்சார வசதி கிடையாது. மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் தான் நான் படித்தேன். இப்போதும், இங்குள்ள பள்ளி மாணவர்கள் விளக்கு ஒளியில் தான் படித்து வருகின்றனர்" என்கிறார் சங்கவி.

சங்கவியின் வீடு
படக்குறிப்பு, சங்கவியின் வீடு

சங்கவியின் தந்தை சமீபத்தில் உயிரிழந்துவிட்டார். தற்போது, இவர் தனது தாயோடு குடிசையில் வசித்துவருகிறார். ஆதார் மற்றும் ரேசன் அட்டைகள் கூட இல்லாததால் தனது குடும்பம் மட்டுமின்றி கிராமத்தின் எதிர்காலமே கேள்விக்குறியாக உள்ளதாக கூறுகிறார் இவர்.

"இங்கு வசிக்கும் ஆண்கள், பெண்கள் என அனைவரும் கூலி வேலைக்கு செல்பவர்கள். கல்வி அறிவில்லாததால் அரசின் திட்டங்கள் குறித்தும், அதனால் கிடைக்கும் பயன்கள் குறித்தும் தெரியாதவர்கள்.

இந்த கிராமத்தில் இருக்கும் யாருக்குமே ரேசன் மற்றும் ஆதார் அட்டைகள் கிடையாது. ரேசன் அட்டைக்கு பலமுறை விண்ணப்பித்தும் நிராகரிக்கப்படுகிறது.

உடல் உழைப்பில் கிடைக்கும் சொற்ப வருமானமும் அரிசி மற்றும் உணவுப் பொருட்களை வாங்க செலவிடப்படுகிறது. ரேசன் அட்டையில் கிடைக்கும் இலவச உணவுப்பொருட்களுக்காக பல ஆண்டுகளாக நாங்கள் காத்திருக்கிறோம்.

இவ்வாறு, அடிப்படை வசதிகளும், ஆவணங்களும் இல்லாததால் பல தலைமுறைகளாக கஷ்டப்பட்டுவருகிறோம். என்னைப் போன்றே உயர்கல்வி கனவில் பல மாணவர்கள் இங்கு உள்ளனர்" என தெரிவிக்கிறார் சங்கவி.

பாதுகாப்பான குடியிருப்பு, மின்சாரம், குடிநீர், கழிப்பறை, ஆதார் அடையாள அட்டை, ரேசன் அட்டை, சாதிச்சான்றிதழ் இவை எதுவும் இல்லாமல் கடந்த 50 வருடங்களுக்கும் மேலாக இந்த கிராமத்தில் வசித்து வரும் தங்களின் அடுத்த தலைமுறையினரை காப்பாற்ற அனைத்து அடிப்படை வசதிகளையும் உடனடியாக செய்துகொடுக்க அரசு முன்வர வேண்டும் என கோரிக்கை வைக்கின்றனர் ரொட்டிக்கவுண்டனூர் கிராம மக்கள்.

ரொட்டி கவுண்டன் புதூர் கிராமத்தில் உள்ள அனைவருக்கும் ஆதார் மற்றும் ரேசன் அட்டைகள் வழங்குவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. அவர்களுக்கான பசுமை வீடுகள் கட்டும் பணிகள் விரைவில் துவங்கும்' என மாவட்ட நிர்வாகம் சார்பில் பிபிசி தமிழிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: