நரேந்திர மோதி: இந்தியப் பிரதமர் இந்தி பேசும் மக்களுக்கு மட்டும் பிரதமரா?

இந்தியப் பிரதமர் இந்தி பேசும் மக்களுக்கு மட்டும் பிரதமரா?

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன்
    • பதவி, பிபிசி தமிழ்

இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி நாட்டு மக்களுக்கு உரை நிகழ்த்தும்போது இந்தியிலேயே நிகழ்த்துகிறார். இந்தியா முழுவதும் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்த செய்தியாளர்கள் சந்திப்பு என்பது இந்தியிலேயே நடக்கிறது.

முக்கியமான இந்த காலகட்டத்தில் இந்தி தெரியாத மாநில மக்களுக்கு இந்தத் தகவல்கள் தேவையில்லையா?

கொரோனா நோய்த் தொற்று தொடர்பாக முதன்முதலாக மார்ச் 19ஆம் தேதி தொலைக்காட்சி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோதி, தனது பேச்சை இந்தியிலேயே பேசினார். ஆனால், அவர் பேசும்போது கீழே அந்தந்த மாநில மொழிகளில் சப் - டைட்டில் வெளியிடப்பட்டது.

இதற்குப் பிறகு, மார்ச் 24ஆம் தேதியன்று இரவு 8 மணியளவில் மீண்டும் உரையாற்றிய பிரதமர் அன்று நள்ளிரவு 12 மணி முதல் ஊரடங்கு அமலுக்கு வருவதாக அறிவித்தார். ஆனால், இதைப் புரிந்துகொள்ள இந்தி பேசாத மாநிலங்களில் இருப்பவர்கள் சில நிமிடங்கள் காத்திருக்க வேண்டியிருந்தது. அவரது உரை இந்தியில் இருந்ததோடு, சப் - டைட்டிலும் தரப்படவில்லை. செய்தி முகமைகள் இதனை மொழிபெயர்த்து, ஊடகங்களுக்கு அனுப்பும்வரை, பிரதமர் உரையின் முழுமையான அம்சங்கள் யாருக்கும் தெரியவில்லை.

மே 12ஆம் தேதி பிரதமர் மோதி பேசும்போதும் இதே நிலைதான். அவர் பேசி முடித்து, பத்து பதினைந்து நிமிடங்களுக்குப் பிறகுதான் அவர் பேசியதன் முழுவிவரம் இந்தி பேசாத மக்களுக்குத் தெரியவந்தது.

இது மட்டுமல்ல. இந்தியாவில் கொரோனா தொற்று எந்த அளவுக்கு ஏற்பட்டிருக்கிறது என்பது குறித்து தினசரி செய்தியாளர் சந்திப்புகளை ஐசிஎம்ஆர் அதிகாரிகளும் மத்திய சுகாதாரத் துறை அமைச்சகமும் நடத்துகின்றன. இதில் பெரும்பாலும் மத்திய சுகாதாரத் துறையின் இணைச் செயலாளர்தான் தகவல்களை ஊடகங்களுக்கு அளிக்கிறார். 30 நிமிடங்களுக்கு நீடிக்கும் இந்த செய்தியாளர் சந்திப்பு முழுக்கவும் இந்தியில்தான் நடக்கிறது. இந்தத் தகவல்களும் ஆங்கிலத் தொலைக்காட்சிகள் அளிக்கும் சின்னச் சின்ன துணுக்குகளாகவே மக்களை சென்றடையும். முழுமையான தகவல்கள் இந்தி தெரியாதவர்களுக்குக் கிடைக்காது.

கொரோனா வைரஸ்

இந்திய அரசியல் சாசனத்தின் எட்டாவது பட்டியல், 22 மொழிகளை இந்தியக் குடியரசின் அதிகாரப்பூர்வ மொழிகளாகப் பட்டியலிடுகிறது. 2011ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இந்தியே பெரும் எண்ணிக்கையிலான மக்களால், அதாவது 43.63 சதவீதம் மக்களால் பேசப்படுகின்றன. தமிழ், தெலுங்கு, வங்கம், மராத்தி ஆகியவை தலா ஐந்து சதவீத மக்களுக்கு மேல் பேசப்படுகின்றன.

Banner image reading 'more about coronavirus'
Banner image reading 'more about coronavirus'

பிரதமர் மோதி தமிழ்நாட்டிற்கு தேர்தல் பிரசாரத்திற்கு வரும்போது சில சமயங்களில் ஆங்கிலத்திலும் சில சமயங்களில் இந்தியிலும் பேசியிருக்கிறார்.

"சமீப காலத்தில் எந்த இந்தியப் பிரதமரும் இப்படி இந்தியில் மட்டுமே முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டதில்லை. இதற்கு முன்பாக கடந்த ஆட்சிக் காலத்தில் பல முறை நாட்டு மக்களுக்கு அவர் உரையாற்றியிருக்கிறார். அப்போது சில சமயங்களில் ஆங்கிலத்திலும் பேசியிருக்கிறார். இந்தியாவின் அதிகாரப்பூர்வ மொழியாக இந்தியும் ஆங்கிலமும் இருக்கின்றன. அதில் ஒரு மொழியை மட்டுமே தொடர்ந்து தேர்வுசெய்வது, அரசியல் சாசனத்திற்கு எதிரானது. இந்தி பேசாத மக்களுக்காகவே கூடுதலாக ஒரு மொழி அலுவல் மொழியாக வைக்கப்பட்டிருக்கிறது. அதைப் பேசவே மறுப்பதென்பது இந்தித் திணிப்புதான்," என்கிறார் தன்னாட்சித் தமிழகத்தின் ஒருங்கிணைப்பாளரான ஆழி செந்தில்நாதன்.

நாராயணன் திருப்பதி

பட மூலாதாரம், NARAYANAN TIRUPPATHI facebook

படக்குறிப்பு, நாராயணன் திருப்பதி

ஆனால், தமிழக பா.ஜ.கவின் செய்தித் தொடர்பாளரான நாராயணன் திருப்பதி இதனை மறுக்கிறார். "அவர் ஆங்கிலத்தில் பேச வேண்டுமென்பதை நான் ஏற்கவில்லை. எல்லா மொழிகளிலும் மொழிபெயர்ப்பு வேண்டுமென்பதை ஏற்கிறேன். பிரதமர் கால அவகாசம் கொடுத்துப்பேசியிருந்தால், மொழிபெயர்ப்பு சாத்தியமாகியிருக்கும். அவர் சற்று நேரத்திற்கு முன்புகூட பேசியிருக்கலாம். அதனால், சப் - டைட்டில் சாத்தியமில்லாமல் போயிருக்கலாம்," என்கிறார் அவர்.

இன்றைக்கு இருக்கும் தொழில்நுட்பத்தில் ஒருவர் பேசப் பேச உடனடியாக 'சப் - டைட்டில்' கொடுக்க முடியும். நாடாளுமன்றத்தில் பேசும்போது உடனடியாக மொழிமாற்றம் செய்கிறார்கள். எல்லா மொழிகளிலும் உடனடியாக மொழிமாற்றம் செய்து நேரலையே தர முடியும். தொழில்நுட்பம் அதற்கு உதவும் எனச் சுட்டிக்காட்டுகிறார் செந்தில்நாதன்.

AAZHI SENTHIL NATHAN

பட மூலாதாரம், Facebook/ Aazhi Senthil Nathan

படக்குறிப்பு, ஆழி செந்தில்நாதன்

"கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை மகாராஷ்டிராவிலும் தமிழ்நாட்டிலும், குஜராத்திலும்தான் அதிகமாக இருக்கிறது. இந்த மூன்று மாநிலங்களிலும் பேசப்படாத ஒரு மொழியில் பிரதமர் பேசுவது, அவருக்கு ஆங்கிலத்தில் பேச விருப்பமில்லை என்பதையே காட்டுகிறது" என்கிறார் செந்தில்நாதன்.

"இந்தியாவில் எல்லா மொழி பேசுபவர்களும் சமமான அந்தஸ்துடையவர்கள். கொரோனா பரவிவரும் இந்த காலகட்டத்தில் தகவல்களும் வெளிப்படைத் தன்மையும்தான் மிக முக்கியம். ஜனநாயகத்திற்கும் சர்வாதிகாரத்திற்கும் இடையிலான வித்தியாசமே அதுதான். இந்தியாவில் உள்ள பெரும்பாலானவர்களுக்கு இந்தி தெரியாது. இருந்தபோதும் தொலைபேசியில் வரும் கொரோனா தொடர்பான அறிவுறுத்தல்கள், ரயில்வே அறிவிப்புகள் எல்லாமே இந்தியில்தான் உள்ளன. கொரோனா தொடர்பான தினசரி தகவல்களும் தில்லியில் இருந்தபடி இந்தியிலேயே தரப்படுகின்றன" எனச் சுட்டிக்காட்டுகிறார் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த மொழியுரிமைப் போராட்டக்காரரான கார்கா சாட்டர்ஜி.

கார்கா சாட்டர்ஜி garga chatterjee

பட மூலாதாரம், garga chatterjee facebook

படக்குறிப்பு, கார்கா சாட்டர்ஜி

"பிரதமரின் நோக்கம் என்னவாக இருந்தாலும், அவர் பேசுவது எதுவுமே நமக்கு புரியவில்லை. அவரது உரை இந்தி பேசும் மக்களுக்காக மட்டும்தானா? இந்தி பேசுபவர்கள் இந்தியாவைவிட்டு தனியாக பிரிந்துசென்றுவிட்டார்களா? இந்தி பேசும் பகுதியைச் சேர்ந்தவர்கள், இந்தி பேசாத மக்களை இரண்டாம்தர குடிமக்களாக நடத்துகிறார்கள். அந்த இரண்டாம் தர குடிமக்களின் வாழ்க்கையோ உயிரோ யாருக்கும் முக்கியமில்லை. இந்தி பேசுபவர்களுக்கு எல்லாமே அவர்களது மொழியில் கிடைக்கிறது. இது சரியானதுதானா?" எனக் கேள்வியெழுப்புகிறார் கார்கா.

"இந்த விவகாரத்தை அரசிடமும் சொல்வோம். தவிர, இனி பிரதமர் பேசினால், உடனடியாக அதன் மொழிபெயர்ப்பு ஊடகங்களைச் சென்றடையச் செய்வோம்" என்கிறார் நாராயணன்.

மத்திய அரசின் ஒரே மொழியாக இந்தி உருவெடுத்துவருவதோடு, எந்த ஒரு திட்டத்திற்கோ, நிகழ்வுக்கோ பெயர்சூட்டும்போதும் 'ஜனதா கர்ஃப்யூ', "ஆத்மநிர்பார் பாரத் அபியான்", 'ஸ்ரமிக்' ரயில்கள், 'வந்தே பாரத்' என இந்தி அல்லது வடமொழிப் பெயர்களே சூட்டப்படுகின்றன.

ஆனால், புதன்கிழமையன்று மாலையில் பொருளாதார சலுகைகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பை நடத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஆத்மநிர்பார் பாரத் அபியான் என்பதை தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் விளக்கிச் சொன்னார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: