தமிழ்நாடு மின் கட்டணம் ஏன் பலருக்கு அதிகமாக வந்துள்ளது? அரசு பதில்

பட மூலாதாரம், Getty Images
இன்றைய செய்தித் தாள்களில் வெளியான சில முக்கியச் செய்திகளை இங்கே காண்போம்.
தினத்தந்தி: ஏன் பலருக்கு அதிக மின் கட்டணம் வந்துள்ளது? - தமிழக அரசு பதில்
4 மாதங்களுக்கு மின் கட்டணம் நிர்ணயம் செய்ததில் விதிமீறல் இல்லை என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக்கழகம் பதில் மனு தாக்கல் செய்துள்ளது என்கிறது தினத்தந்தி நாளிதழ் செய்தி.
சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் எம்.எல்.ரவி என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், ‘கொரோனா வைரஸ் காரணமாக அறிவிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக மின் கட்டணம் செலுத்த கால அவகாசம் வழங்கப்பட்டது. இந்தநிலையில், பிப்ரவரி முதல் மே மாதம் வரையிலான மின் கட்டணத்தை மொத்தமாக மின்சார ஊழியர்கள் கணக்கிட்டுள்ளனர்.
இதனால், வழக்கமாக வரும் கட்டணத்தைவிட மிக அதிக தொகை செலுத்த வேண்டிய நிலையில் பொதுமக்கள் உள்ளனர். எனவே 2 மாதங்களாக பிரித்து மின்சார பயன்பாட்டை கணக்கிட உத்தரவிட வேண்டும்‘ என்று கூறியிருந்தார். இந்த வழக்கிற்கு பதில் அளிக்க மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது.
இதனடிப்படையில் மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக்கழகத்தில் நிதி கட்டுப்பாட்டாளர் சவீதா பதில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-
தமிழகத்தில் மொத்தம் 1.75 கோடி வீட்டு உபயோக மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த இணைப்புகளில் 2 மாதங்களில் 100 யூனிட்டுக்கும் குறைவாக மின்சாரத்தை பயன்படுத்தியிருந்தால் அதற்கு எந்த கட்டணமும் வசூலிப்பதில்லை. 100 யூனிட்டில் இருந்து 200 யூனிட்டுக்குள் பயன்படுத்தியிருந்தால் 101 முதல் 200 வரை ஒரு யூனிட்டுக்கு ரூ.1.50 கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
200 யூனிட்டில் இருந்து 500 யூனிட் வரை பயன்படுத்தியிருந்தால் 101 முதல் 200 யூனிட் வரை ஒரு யூனிட்டுக்கு ரூ.2-ம், 201 முதல் 300 யூனிட் வரை ஒரு யூனிட்டுக்கு ரூ.3-ம் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. அதுவே 500 யூனிட்டுக்கு மேல் பயன்படுத்தியிருந்தால் 101 முதல் 200 யூனிட் வரை ஒரு யூனிட்டுக்கு ரூ.3.50-ம், 201 முதல் 500 யூனிட் வரை ஒரு யூனிட்டுக்கு ரூ.4.60-ம், 500 யூனிட்டுக்கு மேல் ஒரு யூனிட்டுக்கு ரூ.6.60-ம் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
29-ந்தேதி விசாரணை
ஊரடங்கினால் மார்ச் மாதம் எடுக்க வேண்டிய மின்சார பயன்பாட்டு அளவை ஊழியர்கள் எடுக்கவில்லை. இப்படிப்பட்ட சூழ்நிலையில் முந்தைய மாதங்களில் அந்த நுகர்வோர் பயன்படுத்திய அளவை கணக்கிடுவது வழக்கும். இதற்கு உதாரணமாக, ஒரு நுகர்வோர் டிசம்பர், ஜனவரி மாதங்களில் 480 யூனிட் மின்சாரம் பயன்படுத்தியுள்ளார். எனவே, பிப்ரவரி, மார்ச் மாதங்களில் அவர் பயன்படுத்தியதாக 480 யூனிட் கணக்கிடப்பட்டுள்ளது. அதாவது, பிப்ரவரி முதல் மே மாதம் வரை 1,240 யூனிட் மின்சாரம் பயன்படுத்தியிருந்தால், அதில்
பிப்ரவரி, மார்ச் மாதங்களுக்கு 480 யூனிட் கழித்துவிட்டு, மீதமுள்ள 760 யூனிட் மின்சாரத்தை ஏப்ரல், மே மாதங்களில் பயன்படுத்தியதாக கணக்கிட்டு, அவர்களுக்கு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு மின் கட்டணம் நிர்ணயம் செய்ததில் விதிமீறல் இல்லை. மேலும் கட்டணம் செலுத்த கால அவகாசமும் நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த வழக்கை தள்ளுபடி செய்யவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஆர்.சுப்பையா, கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் விசாரணையை வருகிற 29-ந்தேதிக்கு தள்ளிவைத்துள்ளனர் என்கிறது அச்செய்தி.
இந்து தமிழ் திசை: கிரண்பேடி பொறுப்பேற்ற பின் கோடிகளில் உயர்ந்த புதுச்சேரி ஆளுநர் மாளிகை செலவு

பட மூலாதாரம், Getty Images
புதுவை ஆளுநராக கிரண்பேடி பொறுப்பேற்ற பிறகு ஆளுநர் மாளிகைக்கான செலவு இரு மடங்காக அதிகரித்துள்ளது என புதுச்சேரி அமைச்சர் குற்றஞ்சாட்டுவதாக செய்தி வெளியிட்டுள்ளது இந்து தமிழ் திசை நாளிதழ்.
புதுச்சேரி மாநிலத்தில் ஆந்திரத்துக்கு அருகேயுள்ள ஏனாம் பிராந்தியத்தில் பல்வேறு வளர்ச்சி திட்டங்களுக்கு துணை நிலை ஆளுநர் ஒப்புதல் கொடுக்க வில்லை என அத்தொகுதி எம்எல்ஏவும், அமைச்சருமான மல்லாடி கிருஷ்ணா ராவ் குற்றம் சாட்டியிருந்தார்.
இதைத்தொடர்ந்து ஆளுநருக்கும், அமைச்சருக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வந்தது.
இதற்கிடையே, “புதுச்சேரியில் நிதி நெருக்கடி ஏற்படாமல் இருக்க சிக்கன நடவடிக்கையை கடைப்பிடிக்க வேண்டும்” என ஆளுநர் கிரண்பேடி அறிவுறுத்தி இருந்தார். இந்நிலையில், அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ், புதுச்சேரி ஆளுநர் மாளிகைக்கென்று ஆண்டுதோறும் செலவிடப்படும் பட்ஜெட் தொகை விவரத்தை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கோரி பெற்றுள்ளார்.
அதன்படி, தகவல் அறியும் உரிமைச்சட்டத்தில் கிடைத்த தகவல் விவரம்: ஆளுநர் மாளிகைக்கென்று 2015- 16-ல் ரூ.3.27 கோடி செலவாகியுள்ளது. கிரண்பேடி, 2016 மே மாதம் 29-ம் தேதி துணைநிலை ஆளுநராக பொறுப்பேற்றார். அதன்பிறகு 2016- 17-ல் ரூ.4.07 கோடி, 2017- 18-ல் ரூ.4.87 கோடி, 2018- 19-ல் ரூ.6.04 கோடி, 2019- 20-ல் ரூ.6.19 கோடி செலவிடப்பட்டுள்ளது என்று தகவல் அறியும் உரிமைச் சட்ட விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக அமைச்சர் தரப்பினர் கூறியபோது, “கிரண்பேடி பொறுப்பேற்ற பிறகு இரு மடங்காக அதிகரித்துள்ளது” என்றனர்.
அமைச்சர் மல்லாடி கிருஷ்ணா ராவ் செய்தியாளர்களிடம் கூறியபோது, “கடந்த 70 நாட்களாக வெளியே வராமல் தூங்கிய ஆளுநர் கிரண்பேடி, கடந்த 15 நாட்களாக இரவு 7 மணிக்கு தன்னிச்சையாக அறிவிப்புகளை வெளியிட்டு அரசு நடவடிக்கைகளை தடுத்து இடைஞ்சல் செய்கிறார்” என்றார் என்கிறது அச்செய்தி.
தினமணி: கொரோனா - மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர் உத்தரவு

பட மூலாதாரம், Getty Images
சென்னையைத் தொடர்ந்து, பிற மாவட்டங்களில் கொரோனா நோய்த்தொற்று அதிகரிக்கும் நிலையில், அதனைத் தடுப்பதற்குரிய 10 அம்ச நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர் க.சண்முகம் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை மற்றும் பிற மாநிலங்களில் இருந்து மாவட்டங்களுக்கு வருவோரிடம் கண்டிப்பாக பரிசோதனை செய்ய வேண்டுமென அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
இதுதொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் அவர் திங்கள்கிழமை கடிதம் எழுதியுள்ளார். அதன் விவரம்:
அண்மைக் காலமாக சில மாவட்டங்களில் கொரோனா நோய்த் தொற்று அதிகரித்து வருகிறது. இதற்கு முக்கிய காரணம் சென்னை மற்றும் அண்டை மாவட்டங்களில் இருந்து அதிகளவில் பிற மாவட்டங்களுக்குச் சென்றதும், பிற மாநிலங்கள், நாடுகளில் இருந்து தமிழர்களும், தொழிலாளர்களும் தங்களது சொந்த ஊர்களுக்குத் திரும்பியதுமே ஆகும். இந்தச் சூழ்நிலையில், நோய் பரவலைக் கட்டுப்படுத்த அதிகபட்ச விழிப்புணர்வுடன் இருப்பதுடன், கடுமையான நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டுமென மாவட்ட ஆட்சியர்களைக் கேட்டுக் கொள்கிறேன்.
மேலும், 10 முக்கியமான அம்சங்களில் ஆட்சியர்கள் கவனம் செலுத்த வேண்டும். அதன் விவரம்:
1. மூச்சுத் திணறலோ அல்லது நோய்த்தொற்றுக்கான அறிகுறிகளோ தென்படும் பகுதிகளைத் தீவிரமாகக் கண்டறிந்து அந்தப் பகுதிகளில் மக்கள் நடமாட்டத்தைக் குறைத்திட வேண்டும். நோய்த்தொற்றினை முன்பே கண்டறியும் வகையில், காய்ச்சல் முகாம்களை நடத்த வேண்டும். நோய்த் தொற்றுக்கான காரணிகளை அலசி ஆராய வேண்டும். நோய்த் தொற்று பாதிப்புக்குள்ளான தெருக்கள் அல்லது உள்ளூர் குடியிருப்புகளில் 100 சதவீதம் பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும். நோய்த்தொற்று அறிகுறிகள் இருப்போர்களில் எந்தவித விடுதலும் இல்லாமலும் அனைவரையும் பரிசோதிக்க வேண்டும். காய்ச்சல், சளி, தொண்டை வலி, மூச்சு விடுவதில் சிரமம் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்று அல்லது இரண்டு அறிகுறிகள் இருந்தால் கூட பரிசோதனை செய்ய வேண்டும்.
2. குடிசைகள் போன்ற மக்கள் நெருக்கம் அதிகமுள்ள பகுதிகளில் நோய்த்தொற்று அதிகமானால் தெருவாரியாக அல்லது குடியிருப்புகள் வாரியாக குறு அளவிலான திட்டம் வகுத்து அதனைச் செயல்படுத்த வேண்டும். அதிகமான நபர்கள் வசிக்கக் கூடிய நோய்த்தொற்று ஏற்படும் சூழல் இருந்தால் அவர்களை தனிமைப்படுத்தும் மையங்களில் தங்க வைக்க வேண்டும். நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்த கட்டுப்படுத்தப்பட்ட பகுதி மற்றும் தனிமைப்படுத்துதல் மைய மேலாண்மை ஆகியவற்றில் மாவட்ட நிர்வாகங்கள் கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும். தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கபசுர குடி நீர் மற்றும் ஜிங்க் மாத்திரைகளை வழங்கலாம்.
3. மக்கள் அதிகம் கூடக் கூடிய சந்தைகள் ஆகியவற்றை உன்னிப்பாக கவனித்து அங்கு சமூக இடைவெளி பின்பற்றச் செய்வதை கண்காணிக்க வேண்டும். முகக் கவசங்கள் கட்டாயம் அணிந்திருக்க வேண்டும். அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கலாம். மருத்துவமனைகளில் அரசு வகுத்துள்ள விதிமுறைகள் பின்பற்றப்படுகிறதா என்பதை கண்டிப்பான முறையில் கண்காணிக்க வேண்டும்.
4. ஒரு குறிப்பிட்ட பகுதியில் மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட குடும்பங்கள் நோய்த்தொற்றால் தாக்கப்பட்டிருந்தால் அந்தப் பகுதியை கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்க வேண்டும். அவர்களுக்கு அத்தியாவசியப் பொருள்களை தன்னார்வலர்கள் மூலமாக அளிக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.


5. பிற மாநிலங்கள், நாடுகள் மற்றும் சென்னையில் இருந்து வருவோரை பரிசோதிக்க வேண்டும். இதன்மூலம், நோய்த்தொற்று பரவுவது தவிர்க்கப்படும். நோய்த்தொற்றுக்கான அறிகுறிகள் இல்லாவிட்டாலும் அவர்களை வீடுகளில் 14 நாள்களில் தனிமைப்படுத்த வேண்டும்.
6. கொரோனா நோய்த்தொற்றுக்காக தமிழகத்தில் மூன்று வகையான சுகாதார அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி, கடுமையான நோய்த்தொற்று உள்ளோருக்காக மருத்துவமனைகளும், ஓரளவு பாதிப்பு உள்ளோருக்கு சுகாதார மையங்களும், லேசான அல்லது நோய்த் தொற்று அறிகுறிகள் இல்லாதோருக்கு பாதுகாப்பு மையங்களும் ஏற்படுத்தப்பட வேண்டும். நோய்த் தொற்றுகளை முன்பே கண்டறிந்து உரிய சிகிச்சைகளை அளித்தால் மரண விகிதத்தை நிச்சயம் தடுக்க முடியும்.
7. வயது முதிர்ந்தவர்களுக்கு பரிசோதனைகள் செய்திட வேண்டும். இணை நோய் உள்ளோருக்கு உரிய முறையில் பரிசோதனை மேற்கொண்டால் இறப்பு விகிதத்தை தவிர்க்கலாம்.
8. செயற்கை சுவாசக் கருவிகளைக் கொண்ட படுக்கைகளை மருத்துவமனைகளில் ஏற்படுத்த வேண்டும். மூத்த மருத்துவர்கள் மற்றும் அவசர கால சிகிச்சைப் பிரிவு நிபுணர்கள் அடங்கிய குழுவை ஒவ்வொரு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும் ஏற்படுத்த வேண்டும்.
9. நோய்த்தொற்று அறிகுறிகள் இல்லாதவர்களை சுகாதார மையம் அல்லது பாதுகாப்பு மையங்களில் அனுமதிக்க வேண்டும். இதன்மூலம், மிகக் கடுமையாக பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு மருத்துவமனைகளில் வைத்து சிகிச்சை அளிக்க முடியும்.
10. முகக் கவசங்கள் அணிவது, சமூக இடைவெளியைப் பின்பற்றுவது போன்ற அம்சங்களை பொது மக்கள் பின்பற்ற வேண்டும். இதற்குரிய தகுந்த விழிப்புணர்வு பிரசாரங்களை ஏற்படுத்த வேண்டும். பொது மக்கள் அதிகம் கூடாமலும், கண்ட இடங்களில் எச்சல் துப்பாமல் இருக்கவும் உரிய விழிப்புணர்வு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று தனது கடிதத்தில் தலைமைச் செயலாளர் க.சண்முகம் கேட்டுக் கொண்டுள்ளார் என்கிறது அந்த செய்தி.
பிற செய்திகள்:
- அமெரிக்கா நடவடிக்கை: கிரீன் கார்ட், H1B விசா தடை நீட்டிப்பு - விரிவான தகவல்கள்
- சீனாவுடன் பேரம் நடந்ததால் முஸ்லிம்களை முகாமில் அடைத்ததற்கு தடைவிதிக்கவில்லை - டிரம்ப்
- இந்தியா - சீனா எல்லை சிக்கல்: லே, லடாக் பகுதியில் தற்போது என்ன நிலவரம்?
- தமிழகத்தில் மேலும் 2,532 பேருக்கு கொரோனா; ஒரே நாளில் 53 பேர் பலி
- டெக்ஸாமெத்தாசோன்: கொரோனா மருந்துக்கும் இந்தியாவுக்கும் என்ன தொடர்பு?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












