டெக்ஸாமெத்தாசோன்: கொரோனா மருந்துக்கும் இந்தியாவுக்கும் என்ன தொடர்பு?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், நிதின் ஸ்ரீவத்சவா
- பதவி, பிபிசி இந்தி
``டெக்ஸாமெத்தாசோன் மாத்திரை கேட்டு என் கடையில் ஒரு போதும் இவ்வளவு பேர் காத்திருந்தது கிடையாது. அது பிரபலமான மருந்தாக உள்ளது. ஆனால் டாக்டரின் பரிந்துரை சீட்டு வைத்திருப்பவர்கள் அதை மொத்தமாக வாங்கிக் கொள்ள விரும்புகிறார்கள்'' என்று லக்னோவில் மருந்து கடை வைத்திருக்கும் ரோஹன் கபூர் கூறுகிறார்
``டெக்ஸாமெத்தாசோன் 0.5 மி.கி. மாத்திரைகள் ஏழு ரூபாய்க்கு கிடைக்கின்றன. தொலைதூரங்களில் உள்ள மருந்து கடைகளிலும் இது விற்கப்படுகிறது'' என்றார் அவர்.
``டாக்டரின் பரிந்துரையின் பேரில் அது வழங்கப்பட வேண்டும். எனவே செவ்வாய்க்கிழமை மாலையில் இருந்து குறைந்தபட்சம் 100 வாடிக்கையாளர்களுக்கு டெக்ஸாமெத்தாசோன் தர மறுத்து அனுப்பிவிட்டேன்'' என்று டெல்லியின் புறநகரில் நொய்டாவில் உள்ள மருந்துகள் மொத்த விற்பனையாளர் ஒருவர் தெரிவித்தார்.
டெக்ஸாமெத்தாசோன் மருந்து ஸ்டீராய்ட் வகையைச் சேர்ந்தது - உடலில் சுரக்க வேண்டிய அழற்சியைத் தடுக்கும் ஹார்மோன்களை அளிப்பதன் மூலம் அழற்சியைக் குறைப்பதற்கான மருந்து இது.
அழற்சியைப் போக்கக் கூடிய இந்த மருந்து, கோவிட்-19 நோய்த் தாக்குதலில் தீவிர பாதிப்பு நிலையில் மருத்துவமனையில் இருக்கும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் நல்ல பலன் தருவதாகக் கண்டறியப் பட்டுள்ளது.

பட மூலாதாரம், Getty Images
இந்த மருந்து உயிர்களைக் காப்பாற்றும் என்று பிரிட்டனில் நடந்த பரிசோதனையில் தெரிய வந்துள்ளது. சர்வதேச அளவில் முதன்முறையாக இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. பிரிட்டனின் தேசிய சுகாதார துறையில் உடனடியாக இதைப் பயன்படுத்தலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தின் செயல்பாட்டைக் குறைத்து, இந்த மருந்து பணியாற்றுகிறது.
வைரஸ் தாக்குதல் ஏற்பட்டதும், அதை எதிர்த்து உடல் போரிடும் போது உடலில் வீக்கம், அழற்சி ஏற்படும்.
சில நேரங்களில் நோய் எதிர்ப்பு மண்டலம் தன் ஆற்றலுக்கு மிகுந்து செயல்படும் போது, மரணத்தில் போய் முடிந்துவிடக் கூடும். நோய்த் தொற்றுக்கு எதிரான தாக்குதலுக்கு பணியாற்றும் போது உடலின் செல்கள் மீதும் அதன் தாக்கம் ஏற்பட்டுவிடுகிறது.
டெக்ஸாமெத்தாசோன் அந்தத் தாக்கத்தைக் குறைக்கிறது.

ஏற்கெனவே மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, ஆக்சிஜன் உதவியுடன் அல்லது வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வரும், தீவிர நிலையில் இருப்பவர்களுக்கு மட்டுமே இது பொருத்தமானதாக இருக்கும்.
லேசான அறிகுறி இருப்பவர்களுக்கு இந்த மருந்து வேலை செய்யாது. அந்த நிலையில் நோய் எதிர்ப்பு மண்டலத்தின் செயல்பாட்டைக் குறைப்பது உதவிகரமாக இருக்காது.
அழற்சி அல்லது உடலில் வீக்கம் அல்லது தன் ஆற்றலை மீறி நோய் எதிர்ப்பு மண்டலம் செயல்படக் கூடிய சூழ்நிலைகளைக் கொண்ட பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை அளிக்க டெக்ஸாமெத்தாசோன் உதவுகிறது. உதாரணமாக தீவிர ஆஸ்துமா காரணமாக சுவாசப் பாதைகளில், நுரையீரல்களில் அழற்சி ஏற்படுதல், தீவிர அலர்ஜி நிலைகள் அல்லது வலி அதிகரித்தல், மூட்டுகளில் வீக்கம் போன்ற சூழ்நிலைகளுக்கு இது உதவும்.

பட மூலாதாரம், Getty Images
டெக்ஸாமெத்தாசோன் - இந்தியா தொடர்பு
இந்தியாவில் 1960களில் இருந்து டெக்ஸாமெத்தாசோன் மருந்து பிரபலமாக உள்ளது. மக்கள் தொகை அதிகரிப்புக்கு ஏற்ப இதன் பயன்பாட்டு அளவும் அதிகரித்து வருகிறது.
இதன் விலை மலிவாக, எல்லோரும் வாங்கக் கூடிய நிலையில் இருப்பதால் ஆண்டுக்கு ரூ.150 கோடி அளவுக்கும் அதிகமாக இந்த மருந்து விற்கப்படுகிறது.
பயன்பாடு அதிகரிப்பைக் கருத்தில் கொண்டு இதன் விலையை நீண்ட காலமாக இந்திய அரசு கட்டுப்படுத்தி வைத்துள்ளது. 20 ரூபாய் விலையில் மாத்திரையாக அல்லது மருந்தாக இந்த மருந்தை விற்க முடியும்.
``டெக்ஸாமெத்தாசோன் சோடியம் பாஸ்பேட் மருந்து இந்தியாவில் ஓரளவுக்கு சாதாரணமான ஸ்டீராய்ட் வகையைச் சேர்ந்ததாக உள்ளது. மத்தியப் பிரதேசம், குஜராத் போன்ற மாநிலங்களில் தான் இது அதிக அளவில் உற்பத்தி செய்யப்படுகிறது'' என்று மருந்து ஆராய்ச்சி மற்றும் உற்பத்தி நிபுணர் டாக்டர் அனுராக் ஹிட்கரி தெரிவித்தார்.
``இந்தியாவில் 20க்கும் மேற்பட்ட மருந்து தயாரிப்பு நிறுவனங்கள், பெருமளவில் இவற்றைத் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளன.'' என்று அவர் கூறினார்.

பட மூலாதாரம், Getty Images
ரத்தத்தில் நச்சு சேர்தல் அல்லது புற்றுநோய் போன்ற உயிருக்கு ஆபத்தான சூழ்நிலைகளில் சிரமப்படும் நோயாளிகளுக்கு உலகெங்கும் டாக்டர்கள் ஸ்டீராய்ட் மருந்துகளைப் பரிந்துரைக்கிறார்கள்.
``டெக்ஸாமெத்தாசோன் போன்ற ஸ்டீராய்ட்கள் வலி நிவாரணத்துக்கு சாதாரணமாக இந்தியாவில் பயன்படுத்தப் படுகின்றன. புற்றுநோயாளிகள் சிகிச்சை பெறும் போது வலி நிவாரணம் அளிப்பதில் இதன் பயன்பாடு முக்கிய பங்கு வகிக்கிறது'' என்று புற்றுநோய் சிகிச்சைக்கான அமெரிக்க சொசைட்டியுடன் தொடர்புடைய மூத்த புற்றுநோய் சிகிச்சை நிபுணர் ஆர்.கே. சோப்ரா கூறுகிறார்.
பலத்த காயமுற்ற நிலையில், சிறிய அறுவை சிகிச்சைகளில் இருந்து விரைவாக குணம் பெறும் நிலையில் உள்ள இந்திய விளையாட்டு வீரர்கள் பல ஆண்டுகளாக, விலை குறைந்த இந்த ஸ்டீராய்ட் மருந்தை பயன்படுத்தி வருகிறார்கள்.
ஆனால் விளையாட்டுப் போட்டிகளின் போது இதைப் பயன்படுத்த உலக போதை மருந்து தடுப்பு ஏஜென்சி (WADA) தடை விதித்துள்ளது. தங்களது திறமையை அதிகரிப்பதற்கு இந்த ஸ்டீராய்டு மருந்தை பயன்படுத்தியதாக கடந்த காலத்தில் முன்னணி விளையாட்டு வீரர்கள் குற்றச்சாட்டுக்கு ஆளாகி இருக்கிறார்கள்.
இந்தியாவில் கோவிட்-19 பாதிப்பும் டெக்ஸாமெத்தாசோன்மருந்தும்
கோவிட்-19 பாதிப்பில் உலகில் நான்காவது இடத்தில் இப்போது இந்தியா உள்ளது. 365,000க்கும் மேற்பட்டவர்களுக்கு இந்த நோய்த் தாக்குதல் ஏற்பட்டுள்ளது.
நோய் பரவுதல் குறித்த தினசரி எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. மகாராஷ்டிரா, தமிழ்நாடு, டெல்லி, குஜராத் மாநிலங்களில் நிலைமை மோசமாக உள்ளது.

பட மூலாதாரம், Getty Images
இந்த மாதத்தின் தொடக்கத்தில், நோய்த் தாக்குதல் அதிகரித்து வந்த நிலையிலும், உலகில் கடினமான முடக்கநிலைகளில் இருந்து கட்டுப்பாடுகளை தளர்த்தும் பணிகளை இந்த நாடு தொடங்கியது.
கோவிட்-19 பாதிப்பால் ஏற்பட்ட உயிரிழப்புகளின் எண்ணிக்கை 12 ஆயிரத்தைத் தொடும் நிலையில், பல்வேறு மருந்து பரிசோதனைகள் மற்றும் தடுப்பு மருந்துக்கான ஆராய்ச்சித் திட்டங்களை இந்திய அரசு கூர்ந்து கவனித்து வருகிறது.
இதற்கிடையில், இந்தூரில் உள்ள ஸ்ரீஅரவிந்தர் மருத்துவ அறிவியல் நிலையத்தின் தலைவரும், மருத்துவருமான வினோத் பண்டாரி போன்றவர்கள், தங்களிடம் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு சமீபத்தில் டெக்சாமெத்தனாசோன் மருந்தைப் பயன்படுத்தியுள்ளனர்.
மத்தியப் பிரதேசத்தில் இந்த நோய் மிக அதிகமாகப் பாதித்த நகரங்களில் ஒன்றாக இந்தூர் உள்ளது. அங்கு 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு கோவிட் 19 நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
``மிதமான ARDS பாதிப்புகள் உள்ளவர்களுக்கு டெக்ஸாமெத்தாசோன் மருந்தை பயன்படுத்துவது ஆக்சிஜன் கிடைக்கும் நிலையை மேம்படுத்துகிறது, நோயாளிகளுக்கு நல்ல பலன்களைத் தருவதை நாங்கள் கண்டிருக்கிறோம்'' என்று பண்டாரி கூறியுள்ளார்.
``கோவிட்-19 நோய் பாதித்த நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் புதிய மாற்றத்தை ஏற்படுத்துவதாக இது இருக்கலாம். ஏனெனில் இது ஹைட்ரோகார்ட்டிசோனே மற்றும் மெதில்பிரட்னிசலோன் ஆகியவற்றை விட விலை குறைவானது. மெதில்பிரட்னிசலோன் மருந்து கோவிட் 19 நோயாளியின் சிறுநீரகங்கள் மற்றும் மூளையில் பாதிப்பை ஏற்படுத்தலாம்'' என்று அவர் தெரிவித்தார்.
கோவிட் 19 பாதித்த நோயாளிகளுக்கு இந்த மருந்தைக் கொடுத்து வெற்றிகரமாக சிகிச்சை அளித்துள்ள நிலையில், ``இதைத் தவறாகப் பயன்படுத்துவதற்கான ஆபத்தும் அதிகமாக உள்ளது'' என்று திரு. பண்டாரி ஒப்புக்கொள்கிறார்.
இந்தியாவில் `தவறான வகையில் பயன்பாடு'
டெக்ஸாமெத்தாசோன் மருந்தின் விலை குறைவாக இருப்பதும், நாட்டில் எளிதாகக் கிடைக்கும் நிலை இருப்பதும், அதிக அளவில் தவறான வழிகளில் பயன்படுத்துவதற்கான முதன்மைக் காரணங்களாக இருப்பதாக நம்பப்படுகிறது.
``சிறிய மற்றும் தீவிர பாதிப்பு உள்ளவர்களுக்கு உடனடி நிவாரணத்தை இந்த மருந்து அளிப்பதால், இந்தியாவில் சிறிய நகரங்கள் மற்றும் கிராமங்களில் உள்ள போலி மருத்துவர்கள் விரைவாக பணம் சம்பாதிக்க இந்த மருந்தைப் பயன்படுத்துகிறார்கள்'' என்று அலிகாரில் ஏ.எம்.யூ. மருத்துவக் கல்லூரியில் தீவிர சிகிச்சைப் பிரிவின் தலைவராக உள்ள ஆசாத் மெஹமூத் கூறியுள்ளார்.

பட மூலாதாரம், Getty Images
``மூளையில் கட்டியாக இருந்தாலும், முன்கூட்டியே வந்த பிரசவ வலியால் ஏற்பட்ட பிரச்சினையாக இருந்தாலும், இந்த மருந்து தற்காலிக நிவாரணத்தை அளிக்கும், நோயாளிகள் தவறான வகையில் இதைப் பயன்படுத்த விரும்பும் நேர்வுகள் அதிகரிக்கும்'' என்கிறார் அவர்.
தொடர்ச்சியாக இந்த ஸ்டீராய்டு மருந்தைப் பயன்படுத்துவதால் ஏற்படக் கூடிய பல எதிர்வினைகள் பற்றியும் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
``லேசானதாக இருந்தாலும் அல்லது தீவிரமானதாக இருந்தாலும், எந்த நோய்க்கும் தீர்வாக இந்த மருந்து இருக்காது. ஆனால் துன்புறுவதைக் குறைப்பதற்கான வழிமுறையாக மட்டுமே இருக்கும். ஆனால், தொடர்ச்சியாக இதைப் பயன்படுத்தினால், உடலின் நோய் எதிர்ப்பு சக்தி குறையும். நோயாளிகளுக்கு தூக்கமின்மை, திடீரென எடை அதிகரிப்பு, பார்வைத் திறன் கோளாறு உள்ளிட்ட பிரச்சினைகள் ஏற்படும்'' என்று டெல்லியில் மேக்ஸ் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் பணியாற்றும் மனோஜ் சின்ஹா கூறுகிறார்.
கோவிட்-19 சிகிச்சை திட்டங்களை கண்காணித்து வரும் இந்திய அரசின், மருத்துவ ஆராய்ச்சிக்கான இந்தியக் கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்.), இந்த மருந்தின் பயன்பாட்டில் எச்சரிக்கையான அணுகுமுறையைப் பின்பற்றுவதாகத் தெரிகிறது.
``இது ஆரம்ப கட்டத்தில் இருப்பதால் கருத்து கூற முடியாது'' என்று ஐ.சி.எம்.ஆர். மூத்த ஆலோசகர் ஒருவர் கூறினார்.
கோவிட்-19 நோய்க்கான மருந்து பரிசோதனைகளை அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சிக் கவுன்சில் (சி.எஸ்.ஐ.ஆர்.) மேற்பார்வை செய்து வருகிறது.
``இந்தியாவில் டெக்ஸாமெத்தாசோன் நிறைய கிடைக்கும் நிலையில், கோவிட்-19 நோயாளிகளுக்கு அது உதவிகரமாக இருக்கிறதா என்பது பற்றி அறிய, பிரிட்டனில் நடந்த ஆய்வின் முடிவுகளை வெளியிடும் வரை நாங்கள் காத்திருப்போம்'' என்று அதன் டைரக்டர் ஜெனரல் சேகர் மாண்டே கூறியுள்ளார்.
``மருத்துவ மேற்பார்வையில் தான் டெக்ஸாமெத்தாசோன் மருந்தை எடுத்துக் கொள்ள வேண்டும். தீவிர பாதிப்புக்கு ஆளான நோயாளிகளுக்கு மட்டுமே இதைப் பயன்படுத்த வேண்டும். தாங்களாக இந்த மருந்தை கடைகளில் வாங்கி பயன்படுத்தக் கூடாது'' என்று மாண்டே எச்சரித்துள்ளார்.
``உதவிகரமாக இருக்கும் என அறியப்பட்ட, தீவிர பாதிப்பு உள்ளவர்களுக்கு மட்டுமே இந்த மருந்தைப் பயன்படுத்த வேண்டும்'' என்று உலக சுகாதார நிறுவனத்தின் அவசரகால செயல் திட்டங்களின் தலைவர் மைக் ரியான் ஒப்புக்கொள்கிறார்.
``தேவையான நிபுணர் குழுக்களை நாங்கள் ஒருங்கிணைத்து, இதை கோவிட் -19 நோயாளிகளுக்குப் பயன்படுத்துவதற்கு நாடுகளுக்கு ஆலோசனை வழங்குவது பற்றி முடிவு எடுப்போம்'' என்றும் அவர் தெரிவித்தார்.
``ஆக்சிஜன் அல்லது வென்டிலேட்டர் உடன் கூடிய சிகிச்சை தேவைப்படும் நிலையில் உள்ளவர்களுக்கு மட்டுமே டெக்ஸாமெத்தாசோன் பயன்தரும் என்பதால், ஆய்வுகள் சரியானதாக இருந்தாலும், எச்சரிக்கையுடன் இருப்பது முக்கியமானது'' என்று ஆசாத் மெஹமூத் கூறுகிறார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












