தமிழகத்தில் கொரோனா வைரஸ்: புதிதாக 2,396 பேருக்கு கோவிட்-19 தொற்று; மேலும் 38 பேர் பலி

பட மூலாதாரம், Getty Images
தமிழகத்தில் புதிதாக 2,396 நபர்களுக்கு கொரோனா தொற்று இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளதால், மாநிலத்தில் கொரோனவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 56,845ஆக உயர்ந்துள்ளது.
கோவிட்-19 தொற்றால் மேலும் 38 நபர்கள் இறந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 704ஆக உயர்ந்துள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இன்று இறந்த 38 நபர்களில், 24 நபர்கள் அரசு மருத்துவமனைகளிலும், 14 நபர்கள் தனியார் மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்று வந்தவர்கள் ஆவர்.
இறந்தவர்கள் 40 வயதிற்கு மேற்பட்டவர்கள். பெரும்பாலானவர்களுக்கு நாள்பட்ட வியாதிகளான உயர் ரத்த அழுத்தம், சிறுநீரக கோளாறு, பல உறுப்புகள் செயலற்ற நிலை, மூச்சுத் திணறல் மற்றும் நீரிழிவு நோய் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று பாதிப்புக்கு உள்ளான 2,396 நபர்களில் 64 நபர்கள் வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து திரும்பியவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்கள் டெல்லி, மஹாராஷ்டிரா, கர்நாடகம், கேரளம், கோவா, ஆந்திரப் பிரதேசம், அசாம், சிங்கப்பூர் மற்றும் ஓமன் ஆகிய இடங்களிலிருந்து தமிழகம் வந்தவர்கள் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
அதிக பாதிப்புகளை கொண்டுள்ள சென்னை நகரத்தில், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 39,641ஆக உயர்ந்துள்ளது .
இன்று ஒரே நாளில் 1,254 நபர்களுக்கு பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது. சென்னை மாவட்டத்தை அடுத்து, செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களிலும் கொரோனா எண்ணிக்கை அதிகரித்துள்ளது.


தமிழகத்தில் செயல்படும் 85 கொரோனா சோதனை மையங்களில், இதுவரை 8,61,211 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளன என்றும் இன்று ஒரே நாளில் 33,231 மாதிரிகள் சோதனைகள் செய்யப்பட்டன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று ஒரே நாளில் தமிழகம் முழுவதும் 1,045 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியதால், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 31,316 ஆக உயர்ந்துள்ளது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












