விகாஸ் துபே: யார் இவர்? இவர் சுட்டுக்கொல்லப்பட்டது ஏன்? இதுகுறித்து தலைவர்களின் கருத்து என்ன?

விகாஸ் துபே

பட மூலாதாரம், SAMIRATMAJ MISHRA / BBC

கான்பூரில் எட்டு காவல்துறையினர் என்கவுண்டர் ஒன்றின்போது சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரத்தில் நேற்று (ஜூலை 9) மத்தியப்பிரதேசத்தில் கைது செய்யப்பட்ட முக்கிய குற்றவாளியாக கருதப்படும் விகாஸ் துபே இன்று (வெள்ளிக்கிழமை) காவல்துறையினர் நடத்திய என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார்.

இந்தியா முழுவதும் விவாதப்பொருளாகியுள்ள இந்த என்கவுண்டர் குறித்தும், விகாஸ் துபேயின் பின்னணி குறித்தும் பார்க்கலாம்.

யார் இந்த விகாஸ் துபே?

விகாஸ் துபே என்கவுண்டர் செய்யப்பட்டது குறித்து சமூகவலைத்தளங்கள் மற்றும் செய்திகளில் பரபரப்பாக விவாதிக்கப்படும் நிலையில், விகாஸ் துபேயின் பின்னணி குறித்து பிபிசி இந்தி சேவையின் சமீர் ஆத்மராஜ் எழுதிய கட்டுரை விவரிக்கிறது.

கான்பூரில் உள்ள சவுபிபூர் காவல் நிலையத்தில் விகாஸ் துபே மீது கிட்டத்தட்ட 60 வழக்குகள் உள்ளன. கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட மிகவும் முக்கிய வழக்குகளும் இதில் அடக்கம்.

சவுபிபூர் காவல் நிலையத்தில் பதிவான வழக்குகளின் அடிப்படையில் பார்த்தால், குற்றச்செயல்கள் தொடர்பாக கிட்டத்தட்ட மூன்று தசாப்தங்களாக விகாஸ் துபேயின் பெயர் அடிபடுவதாக கூறப்படுகிறது.

அவர் பல முறைகள் கைது செய்யப்பட்ட போதிலும், இதுவரை அவர் எந்த வழக்கிலும் தண்டிக்கப்படவில்லை.

விகாஸ் துபேவின் வீடு

பட மூலாதாரம், SAMIRATMAJ MISHRA

படக்குறிப்பு, விகாஸ் துபேவின் வீடு

கான்பூரை சேர்ந்த பத்திரிகையாளர் பிரவீன் மோத்தா கூறுகையில், ''2001-ஆம் ஆண்டில் ஒருமுறை காவல் நிலையத்தில் விகாஸ் துபே அத்துமீறி நுழைந்ததாகவும், பாஜகவை சேர்ந்த சந்தோஷ் சுக்லா என்ற தலைவரை கொலை செய்ததாகவும் அவர் மீது குற்றம்சாட்டப்பட்டது. சந்தோஷ் சுக்லா செல்வாக்கு மிக்க அரசியல்வாதியாக இருந்த போதிலும் விகாஸ் துபேக்கு எதிராக எந்த போலீசாரும் சாட்சியம் அளிக்கவில்லை. நீதிமன்றத்தில் யாரும் சாட்சியம் அளிக்காததால் விகாஸ் துபே விடுதலையானார்'' என்று அவர் நினைவுகூர்ந்தார்.

இதனை தவிர 2000, 2004 மற்றும் 2013ஆம் ஆண்டுகளில் நடந்த கொலைகளிலும் இவர் மீது குற்றம்சாட்டப்பட்டது.

''அனைத்து அரசியல் கட்சிகளிலும் விகாஸ் துபேக்கு செல்வாக்கு உண்டு. அதனால் அவர் எந்த வழக்கில் கைது செய்யப்பட்டாலும், விரைவில் அவர் வெளியே வந்துவிடுவார்'' என்று பிரவீன் மேலும் கூறினார்.

கான்பூர் மாவட்டத்தில் உள்ள ஷிவ்லி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பிகாரு கிராமத்தை சேர்ந்தவர் விகாஸ் துபே.

அந்த கிராமத்தில் உள்ள விகாஸ் துபேயின் வீட்டுக்கு யாரும், அந்த வீட்டாரின் ஒப்புதலின்றி உள்ளே செல்ல முடியாது என்றும், அவரின் வீடு ஒரு கோட்டை போல பராமரிக்கப்படுவதாகவும் உள்ளூர்வாசிகள் தெரிவித்தனர்.

விகாஸின் தந்தை ஒரு விவசாயி என்றும், அவரின் மூன்று மகன்களில் விகாஸ் துபே மூத்தவர் என்றும் கூறிய கிராமவாசிகள், விகாஸ் துபேயின் மனைவி ரிச்சா துபே தற்போது மாவட்ட பஞ்சாயத்து அமைப்பின் உறுப்பினராக இருப்பதாக தெரிவித்தனர்.

விகாஸ் துபேயின் இரண்டு மகன்களில், ஒருவர் வெளிநாட்டில் மருத்துவ கல்வி பயில்வதாகவும், மற்றவர் கான்பூரில் படிப்பதாகவும் கிராமவாசிகள் மேலும் தெரிவித்தனர் என்று அந்த கட்டுரையில் விவரிக்கப்பட்டுள்ளது.

கான்பூரில் நடந்தது என்ன?

கான்பூரில் நடந்தது என்ன?

பட மூலாதாரம், SAMIRATMAJ MISHRA

60 குற்ற வழக்குகளில் தேடப்பட்டு வரும் குற்றப்பின்னணி உடைய விகாஸ் துபேயை கைது செய்ய கடந்த 3ஆம் தேதி உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூர் அருகே நடந்த முயற்சியின்போது குற்றவாளி தரப்பினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஒருவர் உள்பட எட்டு காவல்துறையினர் உயிரிழந்தனர்.

பல காவல் துறையினரும் இந்த சம்பவத்தில் காயமடைந்தனர்.

இதையடுத்து, தாக்குதல் நடந்த அந்த கிராமத்தையே சுற்றி வளைத்த காவல்துறையினர் குற்றவாளிகளைத் தேடி வந்தனர். மேலும், விகாஸ் துபே உடன் தொடர்பில் இருந்த நூற்றுக்கும் மேற்பட்டோரின் செல்பேசி அழைப்புகள் கண்காணிக்கப்பட்டு வருவதாக காவல்துறையினர் தெரிவித்திருந்தனர்.

இதுதொடர்பாக கருத்துத் தெரிவித்திருந்த உத்தரப்பிரதேச மாநில காவல் துறை இயக்குநர் ஹிதேஷ் சந்திர அவஸ்தி, "சாபேபூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட திக்ரு எனும் கிராமத்தில் பல வழக்குகளில் தொடர்புடைய மோசமான குற்றவாளி ஒருவரை கைது செய்வதற்காக காவல்துறையினர் சென்றார்கள். ஜேசிபி எந்திரத்தை நிறுத்தி அவர்கள் தடுக்கப்பட்டனர். கட்டடங்களின் கூரை மீது இருந்த குற்றவாளிகள் காவல்துறையினரை நோக்கி துப்பாக்கியால் சுட ஆரம்பித்தார்கள்," என்று கூறியிருந்தார்.

இந்த விவகாரம் உத்தரப்பிரதேசம் மட்டுமின்றி நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியதை அடுத்து அந்த மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் சம்பவம் தொடர்பாக அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டதுடன் குற்றவாளியை விரைந்து பிடிக்க வேண்டுமென்று வலியுறுத்தினார்.

விகாஸ் கைதுசெய்யப்பட்டது எப்படி?

விகாஸ் துபே

பட மூலாதாரம், MP POLICE HANDOUT

உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் எட்டு காவல்துறையினர் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் அந்த மாநில காவல்துறையினரால் தீவிரமாக தேடப்பட்டு வந்த விகாஸ் துபே நேற்று (ஜூலை 9) மத்திய பிரதேச மாநிலத்தில் கைது செய்யப்பட்டார்.

விகாஸ் துபே கைது செய்யப்பட்ட தகவலை நேற்று உறுதிப்படுத்திய மத்தியப் பிரதேச மாநில உள்துறை அமைச்சர் நரோத்தம் மிஸ்ரா, விகாஸ் துபேவைக் கைது செய்தது மத்தியப் பிரதேச மாநில காவல்துறைக்கும் மிகப்பெரிய வெற்றி என்றுதெரிவித்திருந்தார்.

மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜயினியில் உள்ள மகாகாள் கோயிலின் பாதுகாவலர்களால் விகாஸ் துபே நேற்று காலை பிடித்து வைக்கப்பட்டதாகவும் பின்பு அவர் காவல்துறையினர் வசம் ஒப்படைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இன்று என்னநடந்தது?

நேற்று (ஜூலை 9) மத்தியப்பிரதேசத்தில் பிடிபட்ட விகாஸ் துபேயை உத்தரப்பிரதேசத்தின் சிறப்பு காவல் படையினர் கான்பூருக்கு சாலை மார்க்கமாக அழைத்துச்சென்று கொண்டிருந்தபோது வாகனம் தலைக்குப்புற கவிழ்ந்ததாகவும் அப்போது அங்கிருந்து தப்பிடயோட முயற்சித்த விகாஸ் துபே மீது காவல்துறை நடத்திய துப்பாக்கிச்சூட்டில் அவர் பலியானதாகவும் காவல்துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக விளக்கம் அளித்துள்ள மேற்கு கான்பூர் காவல்துறை கண்காணிப்பாளர், "கார் கவிழ்ந்ததும் விகாஸ் துபே அங்கிருந்து தப்பித்தோட முயன்றார். அவரை பிடிப்பதற்கு காவல்துறையினர் மேற்கொண்ட முயற்சியின்போது அதிகாரி ஒருவரிடமிருந்து துப்பாக்கியை பறித்த விகாஸ் அவர்களை நோக்கி சுடத் தொடங்கினார். இதைத்தொடர்ந்து அங்கிருந்த மற்ற காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த விகாஸ் துபே மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்" என்று அவர் கூறியதாக ஏ.என்.ஐ முகமை செய்தி வெளியிட்டுள்ளது.

யார் இந்த விகாஸ் துபே?

பட மூலாதாரம், ANI

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விகாஸ் துபே உயிரிழந்துவிட்டதை உறுதிசெய்துள்ள உத்தரப்பிரதேச மாநில காவல்துறையின் ஏ.டி.ஜி.பி. பிரசாந்த் குமார் இதுதொடர்பாக விரிவான அறிக்கை விரைவில் வெளியிடப்படும் என்று தெரிவித்துள்ளதாக ஏ.என்.ஐ. செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த நிலையில், தப்பியோட முயற்சித்த விகாஸ் துபேயை பிடிக்க முயற்சித்ததில் நான்கு காவல்துறையினர் காயமடைந்ததாக கூறும் கான்பூர் காவல்துறையினரின் ஐஜி மொகித் அகர்வால், இறுதியில் விகாஸ் துபே காவல்துறையினரால் கொல்லப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

யார் இந்த விகாஸ் துபே

பட மூலாதாரம், ANI

அரசியல் தலைவர்கள் கூறுவது என்ன?

இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வெளியிட்ட ட்விட்டர் பதிவில், ''குற்றவாளி இறந்துவிட்டார். அவர் செய்த குற்றங்கள் மற்றும் அவரை பாதுகாத்தவர்கள் குறித்து என்ன செய்வது?'' என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

X பதிவை கடந்து செல்ல, 1
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு, 1

உத்தரபிரதேச மாநில முன்னாள் முதல்வர் அகிலேஷ் சிங் யாதவ் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், ''வாகனம் தலைகுப்புற விழவில்லை, அரசு தலைகுப்புற விழாமல் ரகசியங்கள் காப்பாற்றப்பட்டுள்ளன'' என்று குறிப்பிட்டுள்ளார்.

X பதிவை கடந்து செல்ல, 2
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு, 2

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :