பட்டினிப் பட்டியலில் இந்தியாவின் நிலைக்கு என்ன காரணம்?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன்
- பதவி, பிபிசி தமிழ்
107 நாடுகள் இடம்பெற்றிருக்கும் சர்வதேச பட்டினிப் பட்டியலில் இந்தியா 94ஆவது இடத்தையே பிடித்துள்ளது. கடந்த ஆண்டை விட நிலைமை மேம்பட்டிருந்தாலும்,இந்தியா இவ்வளவு பின்தங்கிய இடத்தில் இருப்பதற்கு என்ன காரணம்?
இந்த ஆண்டிற்கான Global Hunger Index எனப்படும் சர்வதேச பட்டினிப் பட்டியல் சமீபத்தில் வெளியிடப்பட்டது. 107 நாடுகள் இடம்பெற்றிருக்கும் இந்தப் பட்டியலில் இந்தியா 94வது இடத்தைப் பிடித்துள்ளது. இது பட்டினிப் பட்டியலில் 'தீவிர' (Serious) நிலையைக் குறிக்கிறது. கடந்த ஆண்டில் இந்தியா 117 நாடுகளைக் கொண்ட பட்டியலில் 102வது இடத்தைப் பிடித்திருந்தது.
இந்தியாவின் அண்டை நாடுகளான வங்கதேசம், மியான்மர், பாகிஸ்தான் ஆகியவையும் தீவிர நிலை கொண்ட நாடுகளாகப் பட்டியலிடப்பட்டிருந்தாலும், தரவரிசையைப் பொறுத்தவரை இந்தியாவைவிட மேம்பட்ட இடத்திலேயே அவை இருக்கின்றன. வங்கதேசம் 75வது இடத்திலும் மியான்மர் 78வது இடத்திலும் பாகிஸ்தான் 88வது இடத்திலும் இருக்கின்றன. நேபாளம் 73வது இடத்திலும் இலங்கை 64வது இடத்திலும் இடம்பிடித்துள்ளன. BRIC நாடுகளை எடுத்துக்கொண்டால்கூட, அதிலும் இந்தியாதான் கடைசி இடத்தைப் பிடித்துள்ளது.
பெலாரூஸ், போஸ்னியா, பிரேஸில், சிலி, சீனா, கோஸ்டாரிகா, குரேஷியா, க்யூபா, எஸ்டோனியா, குவைத், லாத்வியா, லிதுவேனியா, மான்டெனெக்ரோ, ரூமேனியா, துருக்கி, உக்ரைன், உருகுவே ஆகிய 17 நாடுகள் ஐந்துக்கும் குறைவான மதிப்பெண்களைப் பெற்று, முதலிடத்தில் இருக்கின்றன.
சர்வதேச பட்டினிப் பட்டியலைப் பொறுத்தவரை, போதுமான உணவு கிடைக்காதவர்கள், ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளில் தங்கள் உயரத்திற்கு ஏற்ற எடை இல்லாதவர்கள், தங்கள் வயதுக்கேற்ற உயரம் இல்லாதவர்கள், ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளின் இறப்பு விகிதம் ஆகியவற்றை வைத்து ஒவ்வொரு நாட்டிற்கும் மதிப்பெண்கள் வழங்கப்படுகின்றன.
இதில் 10க்கும் குறைவான மதிப்பெண்களைப் பெற்றவை 'Low' என்ற பிரிவில் பட்டியலிடப்படுகின்றன. 10 முதல் 20 வரையிலான மதிப்பெண்களைப் பெற்றவை 'Moderate' என்ற பிரிவில் வைக்கப்படுகின்றன. 20 முதல் 35 வரையிலான மதிப்பெண்களைப் பெற்றவை 'Serious' என்ற பிரிவிலும் 35 முதல் 50 வரையிலான மதிப்பெண்களைப் பெற்றவை 'Alarming' என்ற பிரிவிலும் 50க்கு மேற்பட்ட மதிப்பெண்களைப் பெற்றவை 'Extremly Alarming' என்ற பிரிவிலும் வைக்கப்படுகின்றன.

தற்போது வெளிவந்திருக்கும் பட்டியலின்படி, இந்தியாவின் 14 சதவீத மக்கள் தேவையான உணவைப் பெற முடியாத நிலையில் இருக்கின்றனர். இந்தியாவில் உள்ள 37.4 சதவீத குழந்தைகள் போதுமான உயரமின்றியும் 17.3 குழந்தைகள் போதுமான எடையும் இன்றி உள்ளனர். ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளின் இறப்பு விகிதம் 3.7 சதவீதமாக இருக்கிறது.
2000-2019க்கும் இடைப்பட்ட காலத்தில் இந்தியாவில் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளின் இறப்பு விகிதம் வெகுவாகக் குறைந்திருக்கிறது. பிறப்பின்போதே ஏற்படும் மரணங்கள், பிறந்த பிறகு ஏற்படும் தொற்று, நிமோனியா, வயிற்றுப்போக்கு ஆகியவற்றால் ஏற்படும் மரணங்கள் குறைந்திருப்பதுதான் இதற்கு முக்கியமான காரணம். ஆனால், பின்தங்கிய மாநிலங்களில் குறைப் பிரசவம், குழந்தைகளின் குறைந்த எடை ஆகியவற்றால் நடக்கும் மரணங்கள் தொடர்ந்தவண்ணமே உள்ளன என்கிறது இந்த அறிக்கை.
"விவசாயம் தொடர்பான சட்டம் கொண்டுவரும்போது நிறைய விளைகிறது. அதனால் விவசாயிகளுக்கு கூடுதல் விலை கிடைப்பதற்காக இந்தச் சட்டத்தைக் கொண்டுவருகிறோம் என்றார்கள். ஆனால், நாம் எந்த இடத்தில் இருக்கிறோம் என்பதை இந்த அறிக்கை காட்டியிருக்கிறது. உணவு உற்பத்தியில் பிரச்சனை இல்லை. விநியோகத்தில் பிரச்சனை இருக்கிறது. அதனால்தான் பட்டினிப் பட்டியலில் நாம் மிகக் கீழே இருக்கிறோம்" என்கிறார் உணவுப் பாதுகாப்பு நிபுணரான டாக்டர் ஜெ. ஜெயரஞ்சன்.
கிராமப்புற மக்களைப் பொறுத்தவரை, அவர்கள் வருமானம் முழுவதையும் உணவுக்கே செலவழித்தால்கூட பெருமளவிலானவர்கள், சத்து மிகுந்த உணவைப் பெற முடியாத நிலையில்தான் இருக்கிறார்கள் என்பதை அவர் சுட்டிக்காட்டுகிறார்.
"இந்தியாவைப் பொறுத்தவரை, நாம் எப்போதும் உணவுதானிய உற்பத்தி எந்த அளவில் இருக்கிறது என்றுதான் பார்க்கிறோம். ஆனால், உற்பத்தியை வைத்து, எல்லோருக்கும் உணவு கிடைக்கிறதா என்பதை முடிவுசெய்ய முடியாது. "

பட மூலாதாரம், Getty Images
கடந்த தசாப்தத்தோடு ஒப்பிட்டால், சத்துக் குறைபாடு, குறைந்த எடை ஆகியவற்றில் 10 சதவீதம் அளவுக்கு மேம்பட்டிருக்கிறோம் என்றாலும்கூட, நம் பொருளாதார வளர்ச்சியை ஒப்பிட்டால், அந்த அளவு மிகவும் குறைவுதான்.
உணவு விலைகளைப் பொறுத்தவரை, புரதம், கொழுப்பு ஆகியவற்றின் விலை அதிகமாக இருக்கும். கார்போ ஹைட்ரேட் அடங்கிய பொருட்களின் விலை குறைவாக இருக்கும். விலைவாசி அதிகரிக்க அதிகரிக்க பொருளாதார ரீதியாக பின்தங்கியவர்களின் உணவிலிருக்கும் புரதத்தின் அளவு குறைய ஆரம்பிக்கும் என்கிறார் ஜெயரஞ்சன். இது ஊட்டச்சத்தின்மைக்கு வழிவகுக்கும்.
"இந்தியாவைப் பொறுத்தவரை, பருப்பு, எண்ணைய் போன்வற்றின் உற்பத்தியிலேயே பற்றாக்குறை இருக்கிறது. அதைத் தாண்டி எல்லோருக்கும் எப்படி உணவைப் பகிர்ந்து தருகிறோம் என்பதில்தான் இந்தப் பிரச்சனைக்குத் தீர்வு இருக்கிறது. தவிர, பொருளாதார ஏற்றத்தாழ்வு அதிகரிக்க, அதிகரிக்க இந்த பிரச்சனையும் அதிகரிக்கும்" என்கிறார் ஜெயரஞ்சன்.
இந்தியாவின் பல வளர்ந்த மாநிலங்களில் பொது விநியோகத் திட்டம், இந்தப் பிரச்சனையை எதிர்கொள்வதில் ஒரு சிறிய அளவிலான தீர்வுகளையாவது தருகிறது. ஆனால், பொதுவிநியோகத் திட்டத்தில் ஓட்டைகளை அடைப்பதற்காக அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுக்க ஆரம்பித்தால், மாற்றுத்திறனாளிகள், வயதானவர்கள் உள்ளிட்டோர் அதனால் கடுமையாக பாதிக்கப்படுவார்கள்.
பட்டினிப் பட்டியல் தரவரிசையைப் பொறுத்தவரை, ஒரு ஆண்டின் தரவரிசைகளோடும் மதிப்பெண்களோடும் மற்றொரு ஆண்டின் தரவரிசையை ஒப்பிடுவதில்லை.
பிற செய்திகள்:
- கொரோனா வைரஸ்: இந்தியாவில் உண்மையிலேயே உச்சம் தொட்டதா பாதிப்பு?
- முத்தையா முரளிதரனுக்கு விஜய் சேதுபதி பதில் - "800" பட சர்ச்சை முடிவுக்கு வந்ததா?
- இந்தியாவில் 100 ஆண்டுகளை கடந்த கம்யூனிஸ்ட் கட்சி பற்றி அறிந்து கொள்ள வேண்டிய ஐந்து விஷயங்கள்
- பெருந்தொற்றிலிருந்து மீண்டு சீனாவின் பொருளாதாரம் தொடர்ந்து வளர்ச்சியடைவதன் காரணம் என்ன?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












