கொரோனா வைரஸ்: இந்தியாவில் உண்மையிலேயே உச்சம் தொட்டதா பாதிப்பு?

பட மூலாதாரம், Reuters
- எழுதியவர், செளதிக் பிஸ்வாஸ்
- பதவி, பிபிசி
இந்தியாவில் கொரோனா வைரஸ் பெருந்தொற்று உண்மையிலேயே உச்சத்தை அடைந்து விட்டதா? அடுத்த ஆண்டு தொடக்கத்தில் உண்மையிலேயே வைரஸ் கட்டுப்படுத்தப்படுமா?
இவை இரண்டுமே நடக்கும் என இந்தியாவின் தலைசிறந்த மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் குழு நம்புகிறது. இதுவரை பதிவான தொற்றை வைத்து, கணக்கீட்டு அடிப்படையிலான சமீபத்திய தரவுகளைக் கொண்டு, வைரஸ் பெருந்தொற்று கடந்த செப்டம்பர் மாதமே உச்சத்தை கடந்து விட்டதாகவும், 2021ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் அது கட்டுப்படுத்தப்படலாம் என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.
இவர்களின் மதிப்பீடுகள் அனைத்தும், பொதுமக்கள் முக கவசம் அணிவது கட்டாயம், பெருங்கூட்டம் கூடாமல் தவிர்ப்பது, சமூக இடைவெளியைப் பின்பற்றுவது, கைகளை அவ்வப்போது கழுவுவது, சுத்திகரிப்பான்களை பயன்படுத்துவது ஆகிய அடிப்படை பழக்கத்தை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும் என வலியுறுத்துகின்றன.
இந்தியாவில் சுமார் 7.5 மில்லியன் கொரோனா பாதிப்புகளும், 1.14 லட்சத்தைக் கடந்த கொரோனா உயிரிழப்புகளும் பதிவாகியுள்ளன. உலக அளவில் பதிவான கொரோனா வைரஸ் உயிரிழப்புகளில் இந்தியாவில் 10 சதவீதம் பதிவாகியுள்ளது. அதே சமயம், கோவிட்-19 நோயாளிகளின் உயிரிழப்பை கணக்கிடும்போது இந்தியாவில் கொரோனா நோயாளிகள் மடிவது 2 சதவீதத்துக்கும் குறைவானது. இது உலகிலேயே மிகவும் குறைவான மதிப்பீடாக பார்க்கப்படுகிறது.

- கொரோனா சந்தேகங்கள்: முக்கிய கேள்விகளும் அதற்கான பதில்களும்
- கொரோனா வைரஸ்: உங்களை தற்காத்துக் கொள்வது எப்படி?
- கொரோனா வைரஸ் சிகிச்சைக்கு மருந்து எப்போது கிடைக்கும்?
- கொரோனா வைரஸ்: எந்தெந்த பரப்புகளில் எவ்வளவு நேரம் உயிர் வாழும்?
- கொரோனா வைரஸ் : இதுவே கடைசி கொள்ளை நோய் அல்ல
- கொரோனா வைரஸ்: கோவிட் - 19 பற்றி நமக்கு தெரியாத விஷயங்கள் என்ன?

இந்தியாவில் கடந்த மார்ச் மாதத்துக்குப் பிறகு தீவிரமான கொரோனா வைரஸ் பரவல், கடந்த செப்டம்பர் மாத மத்தியில்தான் கடுமையாக இருந்தது. அப்போது நாட்டில் பத்து லட்சத்துக்கும் அதிகமான வைரஸ் பாதிப்புகள் இருந்தன. ஆனாலும், இந்த தொற்றாளர்களின் எண்ணிக்கை சரிந்து வந்தது.
கடந்த வாரம், சராசரியாக 62 ஆயிரம் பாதிப்புகளும் 784 பாதிப்புகளும் ஏற்பட்டன. பல மாநிலங்களில் அன்றாட கொரோனா உயிரிழப்பு விகிதமும் குறைந்தது. இதேசமயம், நாடு தழுவிய அளவில் வைரஸ் பரிசோதனைகள் சராசரியாக பத்து லட்சத்துக்கும் மேலாக கடந்த வாரம் இருந்தது.

இந்த நிலையில், வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை தொடர்பாக மதிப்பீடு செய்ய இந்திய அரசு நியமித்த ககன்தீப் கங் என்ற நுண்ணுயிரி ஆராய்ச்சியாளர் இடம்பெற்ற ஏழு பேர் கொண்ட குழு, மக்கள் எவ்வாறு தொற்றுக்கு ஆளாகிறார்கள், அவர்களின் குணமடையும் வாய்ப்பு, உயிரிழப்பு விகிதம், ஒரே அறிகுறியுடன் எத்தனை பேருக்கு தொற்று ஏற்படுகிறது போன்ற தரவுகளை ஆராய்ந்தார்கள். இந்த ககன்தீப் கங், லண்டன் ராயல் சொசைட்டி மருத்துவ ஆராய்ச்சி அமைப்பின் ஆராய்ச்சியாளர். அந்த அமைப்பின் ஒரே இந்திய பெண் ஆராய்ச்சியாளரும் இவர்தான். வைரஸ் அறிகுறி ஏதுமில்லாமல் கொரோனா தொற்று ஏற்பட்டது தொடர்பான வரைபடத்தையும் இந்த குழுவினர் தயாரித்திருக்கிறார்கள்.
கடந்த மார்ச் மாதம் இந்தியா முழுவதும் பொது முடக்கம் அமல்படுத்தப்படாமல் இருந்திருந்தால் இந்நேரம் ஒரு கோடியே நாற்பது லட்சத்துக்கும் மேலான பாதிப்புகளை இந்தியா கண்டிருக்கும் என்று இந்த ஆராய்ச்சிக்குழு மதிப்பிட்டுள்ளது. மேலும், கொரோனா வைரஸால் 20 லட்சத்து 60 ஆயிரம் பேர் உயிரிழந்திருப்பார்கள் என்றும் இது தற்போதைய உயிரிழப்பு அளவை விட 23 மடங்கு அதிகம் என்றும் மருத்துவ ஆராய்ச்சிக்குழு கூறியுள்ளது.
ஆச்சரியம் தரும் வகையில், உத்தர பிரதேசம், பிஹார் ஆகிய மாநிலங்களில் நடத்திய ஆய்வு அடிப்படையில் வெளி மாநிலங்களில் இருந்து சொந்த கிராமங்களுக்கு திரும்பிய குடியேறி தொழிலாளர்களின் வருகை, பொது முடக்கத்துக்கு பிந்தைய காலத்தில் மிகவும் குறைவான வைரஸ் பரவல் தாக்கத்தையே ஏற்படுத்தியதாக இந்த ஆய்வுக்குழு கூறுகிறது.
"வைரஸ் உச்சநிலை கடந்த ஜூன் மாதமே வந்திருக்கும். அது மருத்துவமனைகள் முழுவதும் நோயாளிகள் நிரம்பி வழியும் சூழலை உருவாக்கி தேசிய அளவில் ஒருவித பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கும். அந்த நிலை வராமல் இருக்க பொது முடக்கம் உதவியிருக்கிறது," என்று ஹைதராபாத் ஐஐடி பேராசிரியர் மற்றும் லண்டன் ராயல் சொசைட்டி ஆராய்ச்சியாளரான மதுகுமலி வித்யாசாகர் என்னிடம் தெரிவித்தார்.
ஆனால், இந்தியாவில் இது திருவிழா காலம். நவராத்திரி, தீபாவளி போன்ற பண்டிகை காலங்களில் மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதும், குடும்பங்கள் ஒன்றாக சேருவதும் பாரம்பரியமாக நடக்கிறது. இந்த காலகட்டத்தில் முன்பை விட அதிகவேகமாக வைரஸ் பரவுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. உதாரணமாக, கேரளாவில் கடந்த மாதம் ஓணம் திருவிழாவையொட்டி மக்கள் ஒன்று கூடிய பிறகே அங்கு கொரோனா வைரஸின் தீவிரம் மிகக் கடுமையாக பதிவானது.

இத்தனை மாதங்களாக தற்காத்து வந்த சுய பாதுகாப்பு நடவடிக்கையை கைவிட்டால், மீண்டும் வைரஸ் மிகப்பெரிய அளவில் பரவலாம் என ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கிறார்கள். அப்படி நடந்தால், அக்டோபர் மாத இறுதியில் 20 லட்சத்து 60 ஆயிரம் ஆக்டிவ் நோயாளிகளாக இந்தியாவில் வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை பதிவாக வாய்ப்புள்ளது. இந்த எண்ணிக்கை, தற்போதைய 8 லட்சம் ஆக்டிவ் நோயாளிகளை விட இரண்டரை மடங்கு அதிகம்.
"மக்கள் தங்களுடைய நிலையை உணர்ந்து பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றினால் மட்டுமே தங்களுடைய கணிப்புகள் உண்மையாகாது. அந்த வகையில், இந்தியா கடந்த செப்டம்பர் மாதமே அதன் உச்சத்தை எட்டியிருப்பதாக நாங்கள் நம்புகிறோம்," என்கிறார் பேராசிரியர் வித்யாசாகர்.
ஆனால், தொற்று நோய் சிகிச்சை நிபுணர்கள், இனிதான் மற்றொரு உச்சம் வரப்போகிறது என்றும் அது தவிர்க்க முடியாதது என்றும் நம்புகிறார்கள். அதிலும், வட மாநிலங்களில் குளிர்காலம் அக்டோபர் மாத இறுதிக்கு பிறகு நெருங்கும்போது, பனிப்புகை, மாசு கலந்த புகை மூட்டம் ஆகியவை அடர்த்தியாக இருக்கும் என்றும் அப்போது வைரஸ் பரவல் மேலும் கடுமையாகலாம் என்றும் அவர்கள் கருதுகிறார்கள்.

தற்போதைய நிலையில், வைரஸ் பாதிப்பும் உயிரிழப்பு அளவு சரிவடைந்து வருவது நல்ல அறிகுறிதான் என்றாலும், அதை வைத்து மட்டும் பெருந்தொற்று சரிந்து விட்டதாக முன்கூட்டியே ஒரு முடிவுக்கு நாம் வந்து விடக்கூடாது என்றும் அவர்கள் எச்சரிக்கிறார்கள்.
மிஷிகன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த தொற்று நோய்ப்பரவல் ஆராய்ச்சியாளரும் பேராசிரியருமான டாக்டர் பிரம்மர் முகர்ஜி, இந்தியாவில் பதிவாகும் கொரோனா பெருந்தொற்றை உன்னிப்பாக கவனித்து வருகிறார். தற்போதைய சூழலைப் பார்க்கும்போது இந்தியா இன்னும் அதன் முதலாவது அலையை கடந்து விட்டது என்றே தோன்றுகிறது என தெரிவித்தார்.
ஆனாலும், எதிர்வரும் குளிர்காலம், மாசுபாடு ஆகியவை சுவாச நோய் பாதிப்புகளின் தாக்கத்தை மேலும் அதிகமாக்கும் என்றும் அப்போது வைரஸ் உயிரிழப்புகளும் அதிகமாக வாய்ப்புள்ளதாக டாக்டர் பிரம்மர் முகர்ஜி நம்புகிறார்.
நோய் எதிர்ப்பாற்றல் ஆராய்ச்சிகளை முன்னெடுத்து வரும் அதே சமயம், நகரங்கள், கிராமங்களில் குறைந்த அளவில் வைரஸ் பாதிப்பு ஏற்பட்டாலும் கூட, இன்னும் அங்கெல்லாம் வைரஸ் பரவுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன என்பதை மறந்து விடக்கூடாது என்றும் அவர் தெரிவித்தார்.
உலக அளவில் நடக்கும் ஆராய்ச்சிகள் அனைத்தும், மேலும் ஒரு உச்சத்தை உலக நாடுகள் எதிர்கொள்ள வேண்டும் பரிசோதனைகள் மூலமாக அறியும் அதே வேளை, பொது சுகாதார வழிமுறைகளை பின்பற்றி மருத்துவமனைகளில் சேரும் நோயாளிகளை குறைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டாக்டர் பிரம்மர் முகர்ஜி வலியுறுத்துகிறார்.
இந்த விவகாரத்தில், வழிமுறைகளை பின்பற்றினால் மட்டுமே நாம் வைரஸ் பரவாமல் தவிர்க்கலாம் என்பதே தற்போதிருக்கும் ஒரே நம்பிக்கை. அந்த நம்பிக்கையுடன் முக கவசம் அணிவோம், அதிக மக்கள் கூடும் இடங்களை தவிர்ப்போம். இப்போதைக்கு இதை மட்டுமே நம்மால் செய்ய முடியும்.
பிற செய்திகள்:
- இந்தியாவில் 100 ஆண்டுகளை கடந்த கம்யூனிஸ்ட் கட்சி பற்றி அறிந்து கொள்ள வேண்டிய ஐந்து விஷயங்கள்
- பெருந்தொற்றிலிருந்து மீண்டு சீனாவின் பொருளாதாரம் தொடர்ந்து வளர்ச்சியடைவதன் காரணம் என்ன?
- நீட் தேர்வில் தனியார் பயிற்சி இன்றி வெற்றி: கோவை அரசுப் பள்ளி மாணவிகள் சாதித்தது எப்படி?
- இலங்கையில் தலைமறைவாக இருந்த நாடாளுமன்ற உறுப்பினர் 6 நாட்களுக்கு பிறகு கைது மற்றும் பிற செய்திகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












