கொரோனா வைரஸை எதிர்கொள்ள புதுவித பரிசோதனைகளை மேற்கொள்ளும் இந்தியா

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், ஸ்ருதி மேனன்
- பதவி, பிபிசி ரியாலிட்டி செக்
இந்தியாவில் நாள்தோறும் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் மரபணு திருத்த தொழில்நுட்பத்தை அடிப்படையாக கொண்ட புதிய நோய்த்தொற்று பரிசோதனை முறைக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.
அமெரிக்காவுக்கு அடுத்து உலகிலேயே கொரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக விளங்கும் இந்தியா நாள்தோறும் தனது நோய்த்தொற்று பரிசோதனைகளை அதிகரிக்கும் முயற்சியில் உள்ளது. எனினும், தற்போது நடைமுறையிலுள்ள சில வகை பரிசோதனைகளில் நம்பகத்தன்மை சார்ந்த சிக்கல்கள் உள்ளன.
இந்தியாவில் செய்யப்படும் நோய்த்தொற்று பரிசோதனைகள் என்னென்ன?
சமீபத்தில் நடைமுறைக்கு வந்த கொரோனா பரிசோதனைக்கு ஃபெலுடா என்று பெயர். இந்தியாவின் பிரபல துப்பறியும் கதாபாத்திரத்தை முதலாக கொண்டு இந்த பெயர் சூட்டப்பட்டுள்ளது. கர்ப்பகால பரிசோதனைகளை போன்று இந்த சோதனை முறையின் மூலம் முடிவுகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள முடியும்.
இது க்ரிஸ்ப்ர் (Crispr - Clustered Regularly Interspaced Short Palindromic Repeats) எனப்படும் ஒருவித மரபணு திருத்த தொழில்நுட்பத்தை கொண்டு செய்யப்படுகிறது.
மரபணு திருத்த செயல்பாடானது அந்த சொல்லுக்கு ஏற்றவாறே அமைந்துள்ளது. இதன்படி, மரபணு குறியீட்டில் நுண்ணிய மாற்றங்களைச் செய்ய மரபணு ஸ்கேன் செய்யப்படுகிறது.

பட மூலாதாரம், Getty Images
அரிவாள்செல் சோகை உள்ளிட்ட உடல்நலப் பிரச்சனைகளுக்கு மருத்துவம் அளிக்க இந்த முறை ஏற்கனவே பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த புதிய நோய்த்தொற்று பரிசோதனை முறை இன்னும் சில வாரங்களில் நாடுமுழுவதும் அமலுக்கு வருமென்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படுபவர்களிடம் இருந்து பெறப்படும் மாதிரியில் உள்ள மரபியல் பொருட்களை பிரித்தெடுக்கும் பி.சி.ஆர் எனும் பரிசோதனையே உலகம் முழுவதும் கொரோனாவை கண்டறியும் பிரதான சோதனை முறையாக இருக்கிறது.

- கொரோனா சந்தேகங்கள்: முக்கிய கேள்விகளும் அதற்கான பதில்களும்
- கொரோனா வைரஸ்: உங்களை தற்காத்துக் கொள்வது எப்படி?
- கொரோனா வைரஸ் சிகிச்சைக்கு மருந்து எப்போது கிடைக்கும்?
- கொரோனா வைரஸ்: எந்தெந்த பரப்புகளில் எவ்வளவு நேரம் உயிர் வாழும்?
- கொரோனா வைரஸ் : இதுவே கடைசி கொள்ளை நோய் அல்ல
- கொரோனா வைரஸ்: கோவிட் - 19 பற்றி நமக்கு தெரியாத விஷயங்கள் என்ன?

மரபணு பொருட்களிலிருந்து புரதங்கள் மற்றும் கொழுப்புகளை அகற்ற இரசாயனங்கள் பயன்படுத்தப்பட்டு, இயந்திர பகுப்பாய்வு மூலம் மாதிரி சோதிக்கப்படுகிறது.
ஆனால், அவை மிகவும் விலை உயர்ந்தவையாக மட்டுமின்றி சோதனை முடிவுகளை பெறுவதற்கு எட்டு மணிநேரம் வரை எடுக்கும் வழிமுறையாகவும் உள்ளது. நோய்த்தொற்று பரிசோதனை மாதிரிகளை ஆய்வகங்களுக்கு எடுத்துச் செல்லும் போக்குவரத்து நேரத்தை பொறுத்து இது சில நாட்களாகவும் அதிகரிக்கலாம்.
துல்லியத்தன்மை சார்ந்த பிரச்சனை உள்ளதா?
நோய்த்தொற்றை கண்டறியும் பரிசோதனைகளை அதிகரிக்கும் பொருட்டு இந்திய அரசு மலிவான மற்றும் விரைவான பரிசோதனை முறையான ரேபிட் ஆன்டிஜென் பரிசோதனைக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறது.
இந்த முறையில், கொரோனா வைரஸ்களில் காணப்படும் ஆன்டிஜென்கள் எனப்படும் புரதங்கள் தனிமைப்படுத்துகின்றன. இதன் விளைவாக 15 முதல் 20 நிமிடங்களில் பரிசோதனை முடிவுகளை பெற முடியும்.

பட மூலாதாரம், Reuters
ஆனால், விலை மற்றும் நேரத்திற்கு ஏற்றவாறு இந்த பரிசோதனை முறையின் நம்பகத்தன்மையும் மிகவும் குறைவாகவே உள்ளது. சில நேரங்களில் 50 சதவீதத்துக்கும் குறைவான அளவே சரியான முடிவுகளை இந்த வகை பரிசோதனைகள் அளிக்கின்றன.
இந்தியாவின் உயர்மட்ட மருத்துவ ஆராய்ச்சி அமைப்பான இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் (ஐ.சி.எம்.ஆர்) தென் கொரியா, இந்தியா மற்றும் பெல்ஜியத்தில் உருவாக்கப்பட்ட மூன்று ஆன்டிஜென் சோதனைகளைப் பயன்படுத்த ஒப்புதல் அளித்துள்ளது.
இவற்றில் ஒன்றை ஐ.சி.எம்.ஆர் மற்றும் அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகம் (எய்ம்ஸ்) மதிப்பீடு செய்ததில், இவற்றின் துல்லியத்தன்மை 50% முதல் 84% வரை இருப்பதாக கண்டறியப்பட்டது.
ஐ.சி.எம்.ஆர் வெளியிட்டுள்ள இதுதொடர்பான வழிகாட்டுதலில், ஆன்டிஜென் பரிசோதனையில் நோய்த்தொற்று பாதிப்பு இல்லை என்று முடிவு வந்தாலும் கொரோனாவுக்கான அறிகுறிகளை கொண்டவர்கள் கண்டிப்பாக பி.சி.ஆர் பரிசோதனையையும் செய்துகொள்ள வேண்டுமென்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரேபிட் பரிசோதனைகள் உலகம் முழுவதும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்றா?
பிரிட்டனில் பிரதானமாக பயன்படுத்தப்படும் ’ரேபிட்’ பரிசோதனையில் சராசரியாக 20 சதவீதம் தவறான முடிவுகள் காட்டப்படுவதாக கணக்கிடப்பட்டுள்ளது.
ஆனால், ஆக்ஸ்போர்டு நானோபூர் உருவாக்கிய ரேபிட் சோதனை கருவிகள் 98% சரியான முடிவுகளை வழங்கும் என்று கூறப்படுகிறது. இருப்பினும் இதுதொடர்பாக ஆராய்ச்சியாளர்கள் மற்றும் சுகாதார வல்லுநர்களின் தனிப்பட்ட ஆய்வு முடிவுகள் தேவைப்படுகின்றன.
ஆன்டிஜென்கள் அன்றி மரபணு பொருட்களை முதலாக கொண்டே இந்த பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
ரேபிட் ஆன்டிஜென் பரிசோதனையில் நோய்த்தொற்று இல்லையென்று முடிவு வந்தாலும், அவர்கள் கண்டிப்பாக பி.சி.ஆர் பரிசோதனையை செய்துகொள்ள வேண்டுமென்று உலக சுகாதார நிறுவனமும் அமெரிக்க உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு அமைப்பும் கூறுகின்றன.
இந்தியாவில் கொரோனா பாதிப்புகளை கணக்கிடுவதில் அலட்சியம் காட்டப்படுகிறதா?

இந்தியாவில் முதல்முறையாக கடந்த ஜூன் மாதம் டெல்லியில் ஆன்டிஜென் அடிப்படையிலான பரிசோதனைகள் தொடங்கப்பட்டு பிறகு அது மற்ற மாநிலங்களிலும் நடைமுறைக்கு வந்தன. டெல்லியில் ஜூன் 18ஆம் தேதி ஆன்டிஜென் பரிசோதனைகள் தொடங்கப்பட்டாலும் அதுகுறித்த தரவுகள் ஜூன் 29ஆம் தேதி வரை பொதுத்தளத்தில் பதிவேற்றப்படவில்லை.
டெல்லியில் ஜூன் 29 முதல் ஜூலை 28ஆம் தேதி மேற்கொள்ளப்பட்ட அனைத்து வகையான கொரோனா வைரஸ் பரிசோதனைகளில் 63 சதவீதம் ஆன்டிஜென்களை அடிப்படையாக கொண்டவை.
ஆனால், செப்டம்பர் 8 முதல் 15 வரையிலான காலக்கட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் வெறும் கால்வாசிக்கும் குறைவான பரிசோதனைகளே ஆன்டிஜென்களை அடிப்படையாக கொண்டவை என்று தெரிகிறது.
இந்த நிலையில், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பெறப்பட்ட பதிலின் மூலம், ஜூன் 18 முதல் ஆகஸ்டு 27 வரையிலான காலக்கட்டத்தில் ஆன்டிஜென் பரிசோதனை செய்துகொண்ட ஏழு லட்சம் பேரில் வெறும் ஒரு சதவீதத்துக்கும் குறைவானவர்களுக்கே மீண்டும் நம்பகத்தன்மை வாய்ந்த பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
மறுபரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டவர்களில் 11 சதவீதத்தினருக்கு கொரோனா வைரஸ் நோய்த்தொற்று பாதிப்பு உறுதிசெய்யப்பட்டது.

டெல்லியில் அக்டோபர் மாதத்தின் தொடக்கத்தில் பி.சி.ஆர் பரிசோதனைகளின் அளவு அதிகரிக்கப்பட்டவுடனேயே நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் 6.2 சதவீதமாக அதிகரித்தன.
ஒரு நாளைக்கு மாநிலம் முழுவதும் முப்பதாயிரம் பரிசோதனைகளை செய்யும் நோக்கத்துடன் கர்நாடகாவில் ஜூலை மாதம் முதல் ஆன்டிஜென் பரிசோதனைகள் அறிமுகம் செய்யப்பட்டன.
ஆகஸ்டு மாதத்தின் தொடக்கத்தில் ஆன்டிஜென் பரிசோதனைகளை அதிகரித்த கர்நாடக அரசு பி.சி.ஆர் பரிசோதனைகளை பெருமளவு குறைத்துவிட்டதால் நம்பகத்தன்மை சார்ந்த கவலைகள் பல்வேறு தரப்பினரால் முன்வைக்கப்பட்டன.
இதைத்தொடர்ந்து மீண்டும் பி.சி.ஆர் பரிசோதனைகள் அதிகரிக்கப்பட்டதையடுத்து, முன்பு ஆன்டிஜென் பரிசோதனையில் நோய்த்தொற்று இல்லையென முடிவு வந்தவர்களுக்கு மீண்டும் சோதனை செய்யப்பட்டதில் அவர்களில் 17 சதவீதத்தினருக்கு கோவிட்-19 பாதிப்பு இருப்பது உறுதிசெய்யப்பட்டது.
இதுபோன்று, இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களிலும் ரேபிட் பரிசோதனைக்கும் பி.சி.ஆர் பரிசோதனை முறைக்கும் இடையே மிகப் பெரிய அளவில் துல்லியத்தன்மை மாறுபடுவது தெரியவந்துள்ளது.
இருப்பினும், ரேபிட் பரிசோதனைகளால் சில பயன்களும் உள்ளதாக கூறுகிறார் பொது சுகாதார வல்லுநரான அனுபம் சிங், "கொரோனா வைரஸால் தீவிரமாக பாதிக்கப்பட்டவர்களை விரைவில் கண்டறிவதற்கு இது பயன்படுகிறது. இதன் மூலம், நோய்த்தொற்று ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு பரவுவதையும் விரைந்து கட்டுப்படுத்த முடியும்" என்று அவர் கூறுகிறார்.
எனினும், ரேபிட் பரிசோதனைகளை மட்டுமே பிரதான தெரிவாக கொண்டிருப்பது எண்ணற்ற நோய்த்தொற்று பாதிப்புகள் அடையாளம் காணப்படாமல் போவதற்கு வாய்ப்புள்ளதாகவும் அவர் கவலை கொள்கிறார்.
பிற செய்திகள்:
- ஐரோப்பிய அணு ஆராய்ச்சி மையத்தில் நடராஜர் சிலை உள்ளது ஏன்?
- ஷிகர் தவானும், சிஎஸ்கே வழங்கிய வாய்ப்புகளும் - பிளே ஆஃப் கனவு சாத்தியமா?
- சர்வதேச பட்டினிப் பட்டியல்: 94ஆவது இடத்தில் இந்தியா - பாகிஸ்தான், வங்கதேசத்தைவிட பின்தங்கல்
- முகமது நபியின் கேலிச்சித்திரம்: கொல்லப்பட்ட பிரான்ஸ் ஆசிரியர் சந்தித்த மிரட்டல்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












