சர்வதேச பட்டினிப் பட்டியல்: 94ஆவது இடத்தில் இந்தியா - பாகிஸ்தான், வங்கதேசத்தைவிட பின்தங்கல்

உணவு வாங்க நிற்கும் மக்கள்

பட மூலாதாரம், Getty Images

முக்கிய இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் வெளியான கட்டுரைகள் மற்றும் செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.

தினமணி - சர்வதேச பட்டினிப் பட்டியலில் இந்தியாவுக்கு 94ஆவது இடம்

107 நாடுகள் இடம்பெற்றிருக்கும் சர்வதேச பட்டினிப் பட்டியலில் இந்தியா 94ஆவது இடத்தை பிடித்துள்ளது என்கிறது தினமணியின் செய்தி.

கடந்த ஆண்டு 102 இடத்திலிருந்து இந்தியா தற்போது 94ஆவது இடத்தில் இருந்தாலும், வங்கதேசம், நேபாளம், பாகிஸ்தான் போன்ற நாடுகளைவிடவும் பட்டினிப் பட்டியலில் இந்தியா பின் தங்கியுள்ளது.

உலகளவில் ஊட்டச்சத்து குறைப்பாடு உள்ள மக்கள் மற்றும் பட்டினியால் வாடும் மக்களின் எண்ணிக்கையை அடிப்படையாக வைத்து இந்த பட்டியல் தயாரிக்கப்படுகிறது.

வெத்தங்கர்ஹில்ஃப் மற்றும் சன்சர்ன் வேல்ர்ட்வைட் ஆகிய அமைப்புகள் இணைந்து வெளியிட்டுள்ள இந்த அறிக்கையில் இந்தியாவில் பட்டினியால் வாடுவோரின் எண்ணிக்கை விகிதம் 27.2ஆக உள்ளது.

132 நாடுகளில் பட்டினியால் வாடுவோரின் எண்ணிக்கையை கணக்கெடுத்த இந்த ஆய்வில் வெறும் 107 நாடுகளின் விவரங்கள் மட்டுமே வெளியிடப்பட்டுள்ளன என விவரிக்கிறது அச்செய்தி.

தினத்தந்தி - 7 மாதங்களுக்கு பிறகு சபரிமலையில் பக்தர்கள்

ஏழு மாதங்களுக்கு பிறகு கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டுள்ளதாக தினத்தந்தியின் செய்தி குறிப்பிடுகிறது.

சபரிமலையில் பக்தர்களை தரிசனம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்ததை தொடர்ந்து திருவிதாங்கூர் தேவசம் போர்டும், கேரள அரசும் இதற்கான ஆலோசனையில் ஈடுபட்டு முக்கிய முடிவை எடுத்தது. அதாவது, ஐப்பசி மாத பூஜையின் போது சபரிமலைக்கு பக்தர்கள் செல்லலாம், அதே சமயத்தில் தினமும் 250 பக்தர்களுக்கு மட்டும் அனுமதி என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும், சபரிமலைக்கு வரும் பக்தர்கள் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்வதோடு, 24 மணி நேரத்துக்கு முன்பு எடுக்கப்பட்ட கொரோனா நெகட்டிவ் சான்றிதழை கண்டிப்பாக கொண்டு வர வேண்டும் என சில கட்டுப்பாடுகளும் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் நேற்றுமுன்தினம் ஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலை கோவில் நடை திறக்கப்பட்டது. அன்றைய தினம் பூஜை மற்றும் தீபாராதனைக்கு பிறகு மீண்டும் நடை அடைக்கப்பட்டது. 17-ந் தேதி முதல் (அதாவது நேற்று) 21-ந் தேதி வரை கோவிலில் 5 நாட்கள் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்க முடிவு செய்யப்பட்டது என விவரிக்கிறது அச்செய்தி.

இந்து தமிழ் திசை - பள்ளிகள் திறப்பது எப்போது?

தமிழகத்தில் எப்போது பள்ளிகள் திறக்கப்படும் என்பது குறித்துப் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், அதிகாரிகளுடன் வரும் 19-ம் தேதி அன்று ஆலோசனை நடத்த உள்ளார் என்கிறது இந்து தமிழ் திசையின் செய்தி.

தமிழகத்தில் இந்த ஆண்டு இறுதிக்குள் பள்ளிகள் திறக்க வாய்ப்புள்ளதா என நவ.11-ம் தேதிக்குள் அரசிடம் விளக்கம் பெற்றுத் தெரிவிக்குமாறு பள்ளிக் கல்வித்துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் எப்போது பள்ளிகள் திறக்கப்படும் என்பது குறித்துப் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.

இந்தக் கூட்டத்தில் பள்ளிக் கல்வித்துறைச் செயலர், இயக்குநர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்துகொள்ள உள்ளனர். இதைத் தொடர்ந்து அடுத்த வாரத்தில் பள்ளிகள் திறப்பு குறித்து இறுதி முடிவு அறிவிக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது என விவரிக்கிறது அச்செய்தி.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: