கொரோனா தொற்று: ஒரே நபருக்கு இரண்டாவது முறையாக ஏற்பட்ட வைரஸ் பாதிப்பு தீவிரம்

இரண்டாவது முறையாக கொரோனா தொற்று

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், ஜேம்ஸ் கல்லாகர்
    • பதவி, பிபிசி

அமெரிக்காவில் இளைஞர் ஒருவருக்கு இரண்டாவது முறையாக கொரோனா வைரஸ் நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இரண்டாவது முறையாக ஏற்பட்டுள்ள நோய்த்தொற்று முதல் முறையை விட தீவிர பாதிப்புகளை கொண்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

நுரையீரலால் உடலுக்கு போதுமான ஆக்ஸிஜனை அளிக்க முடியாததால் 25 வயதான நபருக்கு மருத்துவமனையில் சிகிச்சை தேவைப்பட்டது.

ஒருமுறை கோவிட்-19 நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு மீண்டும் நோய்த்தொற்று ஏற்படுவது என்பது இன்னும் அரிதான ஒன்றாகவே இருந்து வருகிறது. எனினும், இந்த இளைஞர் இரண்டாவது முறையும் கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டு விட்டார்.

இந்த நிலையில், லான்செட் சஞ்சிகையில் வெளியிடப்பட்டுள்ள ஆய்வுக் கட்டுரையில், கொரோனா வைரஸால் ஒருமுறை பாதிக்கப்பட்டவருக்கு எந்தளவுக்கு நோயெதிர்ப்பு ஆற்றல் உருவாகலாம் என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.

இதில் முக்கியமான விடயம் என்னவென்றால், அமெரிக்காவின் நெவாடா மாகாணத்தை சேர்ந்த அந்த இளைஞருக்கு கொரோனாவால் எளிதில் பாதிக்கப்படக் கூடிய வகையிலான எவ்வித உடல்நலப் பிரச்சனைகளோ அல்லது நோய் எதிர்ப்பாற்றல் குறைபாடோ இல்லை என்பதுதான்.

Banner image reading 'more about coronavirus'
Banner

எப்போது என்ன நடந்தது?

  • மார்ச் 25 - வறண்ட தொண்டை, இருமல், தலைவலி, குமட்டல் மற்றும் வயிற்றுப்போக்கு உள்ளிட்ட அறிகுறிகள் தென்பட்டன.
  • ஏப்ரல் 18 - முதல் முறையாக கோவிட்-19 நோய்த்தொற்று பாதிப்பு உறுதி
  • ஏப்ரல் 27 - ஆரம்பத்தில் இருந்த அறிகுறிகளிலிருந்து பூரண நலம்
  • மே 9 மற்றும் 26 - இருமுறை மேற்கொள்ளப்பட்ட நோய்த்தொற்று பரிசோதனையிலும் பாதிப்பில்லை என்று முடிவு வந்தது.
  • மே 28 - காய்ச்சல், தலைவலி, தலைச்சுற்றல், இருமல், குமட்டல் மற்றும் வயிற்றுப்போக்கு உள்ளிட்ட அறிகுறிகள் மீண்டும் வெளிப்பட்டன.
  • ஜூன் 5 - இரண்டாவது முறையாக நோய்த்தொற்று உறுதி. ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு குறைந்ததால் மூச்சுவிடுவதில் பிரச்னை ஏற்பட்டது.
இரண்டாவது முறையாக கொரோனா தொற்று

பட மூலாதாரம், Getty Images

அந்த இளைஞருக்கு இரண்டாவது முறையாக புதிதாக நோய்த்தொற்று பாதிப்பு ஏற்பட்டதே தவிர, ஏற்கனவே ஏற்பட்ட பாதிப்பு ஒருசில மாதங்கள் வெளிப்படாமல் இருந்து மீண்டும் வெளிப்படவில்லை என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். இருமுறை நோய்த்தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டபோதும் சேகரிக்கப்பட்ட மரபணு குறியீடுகளை ஒப்பிட்டபோது அவை மிகவும் வேறுபட்டவை என்று தெரியவந்துள்ளது.

"ஒருமுறை ஏற்பட்ட நோய்த்தொற்று பாதிப்பு எதிர்காலத்தில் மறுமுறை ஏற்படும் நோய்த்தொற்று பாதிப்பிலிருந்து கண்டிப்பாக பாதுகாக்கும் என்று கூற முடியாது என்பதை எங்களது ஆய்வு முடிவுகள் காட்டுகின்றன" என்று இது தொடர்பான ஆய்வை மேற்கொண்ட நெவாடா பல்கலைக்கழகத்தை சேர்ந்த மார்க் பண்டோரி கூறுகிறார்.

"கோவிட்-19 நோய்த்தொற்று பாதிப்பின் மூலம் ஒருவருக்கு உருவாகும் நோய் எதிர்ப்பாற்றல் குறித்த புரிதல்களில் இதுபோன்று ஒருவருக்கே மறுமுறை நோய்த்தொற்று பாதிப்பு ஏற்படுவது கடும் தாக்கத்தை செலுத்தக் கூடும்."

எனவே, நோய்த்தொற்று பாதிப்பிலிருந்து குணமடைந்தவர்கள் தொடர்ந்து சமூக இடைவெளியை கடைபிடித்தல், முக கவசத்தை அணிதல், கைகளை கழுவுதல் உள்ளிட்ட வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று அவர் மேலும் கூறினார்.

கொரோனா வைரஸால் ஒருமுறை பாதிக்கப்பட்ட அனைவரும் அந்த வைரஸுக்கு எதிரான நோய் எதிர்ப்பாற்றலை பெறுகிறார்களா? இதில் குறைந்த அளவு நோய்த்தொற்று அறிகுறிகள் கொண்டிருந்தவர்களும் அடக்கமா? ஒருவேளை இதன் மூலம் நோய் எதிர்ப்பாற்றல் கிடைக்கிறது என்றால் அது எவ்வளவு காலம் நிலைத்திருக்கும்? உள்ளிட்ட எண்ணற்ற சிக்கலான கேள்விகளுக்கான பதில்களை அறியும் பணியில் விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்கள்.

இரண்டாவது முறையாக கொரோனா தொற்று

பட மூலாதாரம், Getty Images

கொரோனா வைரஸ் பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீண்டகால அடிப்படையில் ஏற்படும் தாக்கங்கள் குறித்து அறிந்துகொள்ள உதவும் மேற்கண்ட கேள்விகளுக்கான பதில்களை கண்டறிவது தடுப்பு மருந்து, மந்தை நோய் எதிர்ப்பாற்றல் குறித்த பார்வையில் தாக்கத்தை செலுத்தக்கூடியது.

உலகம் முழுவதும் இதுவரை 3.7 கோடிக்கும் மேற்பட்டோர் இதுவரை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களில் மீண்டும் நோய்த்தொற்று ஏற்படுவது என்பது அரிதான ஒன்றாகவே இருந்து வருகிறது.

ஹாங்காங், பெல்ஜியம், நெதர்லாந்து உள்ளிட்ட நாடுகளில் இரண்டாவது முறையாக நோய்த்தொற்று பாதிப்பு உறுதிசெய்யப்பட்டவர்களுக்கு முதல் முறையை விட நோயின் தீவிரத்தன்மை குறைவாகவே உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்காவில் இரண்டாவது முறையாக கோவிட்-19 பாதிப்பு ஏற்பட்ட இளைஞரை போன்று ஈக்குவேடாரிலும் ஒருவருக்கு முந்தைய தொற்றைவிட பாதிப்பு அதிகமாக இருந்தாலும், அவருக்கு மருத்துவமனை சிகிச்சை தேவைப்படவில்லை.

சில நாடுகள் கொரோனா வைரஸ் பரவலின் இரண்டாவது அலையை எதிர்கொண்டு வருவதால், இந்த விவகாரத்தில் விரைவில் தெளிவு கிடைக்கும் என்று நம்பப்படுகிறது.

கொரோனா வைரஸ் முதல் அலையின்போது மனிதர்களின் உடல் வைரஸை எதிர்த்து போராடுவதற்கு கற்றுக்கொண்டதால், இரண்டாவது அலையின்போது கோவிட்-19 பாதிப்பு குறைந்த வீரியம் கொண்டதாகவே இருக்குமென்று கருதப்படுகிறது.

இரண்டாவது முறையாக நோய்த்தொற்று ஏற்பட்டபோது அமெரிக்காவின் நெவாடாவை சேர்ந்த இளைஞருக்கு ஏன் கடுமையான உடல்நலப் பாதிப்பு ஏற்பட்டது என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.

இரண்டாவது முறையாக கொரோனா தொற்று

பட மூலாதாரம், Getty Images

எனினும், இவருக்கு இரண்டாவது முறையின் தொடக்கத்திலேயே நோய்த்தொற்று தீவிரமாக பரவியிருக்கலாம் என்றும் அல்லது முதல்முறை ஏற்பட்ட பாதிப்பின் மூலம் கிடைத்த நோய் எதிர்ப்பாற்றல் அதிகளவில் இந்த முறை வெளிப்பட்டதால் எதிர்மறையான விளைவுகளை உடலில் ஏற்படுத்தியிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

அதாவது, டெங்கு உள்ளிட்ட நோய்ப்பாதிப்புகளை உதாரணமாக கொண்டு பார்க்கும்போது, ஒருமுறை டெங்கு பாதிப்பின் மூலம் உருவாகும் நோய் எதிர்ப்பாற்றல் மறுமுறை அதே நபருக்கு வேறொரு வகை நோய்க்கிருமியால் டெங்கு பாதிப்பு ஏற்பட்டால் உடலில் விரும்பத்தகாத விளைவுகளை ஏற்படுத்துகிறது.

இந்த நிலையில், கொரோனா வைரஸ் பெருந்தொற்று பரவலை மந்தை நோய் எதிர்ப்பாற்றல் மூலம் வெல்ல முடியும் என்ற கருத்தாக்கத்தை உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானம் கெப்ரியேசூஸ் நிராகரித்துள்ளார்.

ஒரு சமூகத்தின் பெரும்பகுதி தடுப்பு மருந்துகள் மூலமாகவோ அல்லது ஒரு நோயின் பரவல் மூலமாகவோ அந்த நோய்க்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தியை உடலில் பெறும்போது ஹெர்ட் இம்யூனிட்டி எனப்படும் மந்தை நோய் எதிர்ப்பாற்றல் ஏற்படுகிறது.

முன்னதாக, ஒருவேளை தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படாமல் போனால், கொரோனா வைரஸை அதன் போக்கில் பரவுவதை அனுமதிக்க வேண்டுமென்று சிலர் கருத்துத் தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில், இது தொடர்பாக கருத்துத் தெரிவித்துள்ள உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ் கெப்ரியேசூஸ், அத்தகைய அணுகுமுறை "அறிவியல் மற்றும் நெறிமுறை அடிப்படையில் சிக்கலானது" என்று தெரிவித்துள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: