தங்க நகைக்கு தனிஷ்க் விளம்பரம்: இந்து வலதுசாரிகள் 'லவ் ஜிகாத்' எதிர்ப்பால் நீக்கம்

பட மூலாதாரம், Tanishq
தீவிர வலதுசாரி ஆதரவாளர்களின் கடும் எதிர்ப்பால் இந்தியாவின் முன்னணி நகை விற்பனை நிறுவங்களில் ஒன்றான தனிஷ்க், சமீபத்தில் தாம் வெளியிட்ட விளம்பரம் ஒன்றை விலக்கிக்கொண்டுள்ளது.
தனது இஸ்லாமிய புகுந்த வீட்டினர், ஓர் இந்துப் பெண்ணுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி செய்வதைப் போல அந்த விளம்பரத்தில் சித்தரிக்கப்பட்டிருந்தது.
அந்த விளம்பரம் 'லவ் ஜிகாத்தை' தூண்டும் விதத்தில் இருப்பதாக தீவிர இந்து வலதுசாரிகள் குற்றம் சாட்டினர்.
தனிஷ்க் நிறுவனத்தில் நகை வாங்க வேண்டாம் என்று வலியுறுத்தி 'பாய்காட்தனிஷ்க்' எனும் ஹேஷ்டேக்கும் ட்ரெண்ட் செய்யப்பட்டது.
இந்த விளம்பரத்தை எதிர்த்து பதிவிடப்பட்ட பல பதிவுகள் மற்றும் பின்னூட்டங்களையும் இன்னொரு சாரார் சமூக ஊடகத்தில் கடுமையாக எதிர்த்து வந்தனர்.
இந்துப் பெண்களை இஸ்லாமிய ஆண்கள் ஏமாற்றி திருமணம் செய்து மதம் மாற்றுகிறார்கள் என்று தாங்கள் வைக்கும் குற்றச்சாட்டைக் குறிக்க 'லவ் ஜிகாத்' எனும் பதத்தை தீவிர இந்துதத்துவ வலதுசாரிகள் பயன்படுத்துகின்றனர்.
கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவில் மத சகிப்புத்தன்மை குறைந்து வருவதாக சிவில் உரிமை அமைப்புகள் மற்றும் செயல்பாட்டாளர்கள் தொடர்ந்து கூறிவருகின்றனர்.
'ஒற்றுமை'க்காக வெளியான தனிஷ்க் விளம்பரம்
'ஒற்றுமை' எனப்பொருள்படும் 'ஏகத்வம்' எனும் பெயரிடப்பட்ட நகைகளை பிரபலப்படுத்தும் நோக்கில் 43 நொடிகள் ஓடக்கூடிய அந்த விளம்பரத்தை தனிஷ்க் நிறுவனம் சமீபத்தில் வெளியிட்டது.

பட மூலாதாரம், Getty Images
தற்போது இந்த விளம்பரம் தனிஷ்க் நிறுவனத்தின் சமூக ஊடகப் பக்கங்கள் அனைத்திலும் இருந்து நீக்கப்பட்டுள்ளது.
சமூக ஊடக பக்கங்களிலிருந்து இந்த விளம்பரத்தை நீக்கும் முன்பு கமெண்ட் மற்றும் லைக் / டிஸ்லைக் பகுதியை இந்த நிறுவனம் முடக்கி வைத்திருந்தது.
இது குறித்து பிபிசி தனிஷ்க் நிறுவனத்துக்கு அனுப்பிய கேள்விகளுக்கு இதுவரை அந்த நிறுவனம் பதில் எதையும் அளிக்கவில்லை.
"இப்பெண்ணை தங்கள் மகள் போல் பாவிக்கும் ஒரு குடும்பத்தில் இவள் மணம் முடித்துள்ளாள். தாங்கள் வழக்கமாக கொண்டாத ஒரு நிகழ்வை இவளுக்காக இவர்கள் கொண்டாடுகிறார்கள். இரு வெவ்வேறு மதங்கள், வழக்கங்கள் மற்றும் கலாசாரங்களுக்கு இடையே ஓர் அழகான சங்கமம் இது," என்று இந்த விளம்பரம் குறித்து தனது யூடியூப் பக்கத்தில் தனிஷ்க் நிறுவனம் விவரித்திருந்தது.
பிற செய்திகள்:
- எல்லையில் இந்தியா கட்டிய 44 பாலங்கள்: கோபத்தில் சீனா
- செவ்வாயை பெரிதாக, பிரகாசமாக இன்று காணலாம் - எப்போது, எப்படி?
- ஆடு மேய்த்த தலித் தொழிலாளியை காலில் விழ வைத்து சாதிக் கொடுமை
- ஜான்சன் அண்ட் ஜான்சன்: கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து பரிசோதனை நிறுத்தம்
- ஐபிஎல் 2020: ஏ பி டி வில்லியர்ஸ் "கிரிக்கெட் உலகின் சூப்பர் நாயகன்"
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












