செவ்வாயை பெரிதாக, பிரகாசமாக இன்று விண்ணில் காணலாம் - எப்போது, எப்படி?

பட மூலாதாரம், damianpeach.com
- எழுதியவர், ஜோனதன் ஆமோஸ்
- பதவி, பிபிசி
வீட்டிலிருந்து வெளியே சென்று வானத்தில் தெரியும் வியப்பளிக்கும் நிகழ்வை பாருங்கள்.
ஆம், கிரீன்விச் நேரப்படி, இன்றிரவு 23:20 (செவ்வாய்க்கிழமை) செவ்வாய் கிரகத்தை மிகப் பெரிய அளவிலும், பிரகாசமாகவும் உற்றுநோக்க முடியுமென்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இது இந்திய / இலங்கை நேரப்படி, புதன்கிழமை அதிகாலை 4:50 மணியளவில் நிகழுமென்று அறியப்படுகிறது. இதற்கு பூமிக்கு மிகவும் நெருக்கமாக செவ்வாய் கிரகம் வருவதே காரணமாகும்.
அதாவது, 26 மாதங்களுக்கு ஒருமுறை பூமியும் செவ்வாய் கிரகமும் அருகருகே வந்து குறிப்பிட்ட காலத்திற்கு ஒன்றாக பயணிக்கும். பிறகு மீண்டும் செவ்வாய் கிரகம் தனது சுற்றுப்பாதைக்கு திரும்பி தொடர்ந்து சூரியனை சுற்றிவரும்.
பூமி - செவ்வாய் - சூரியன் ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டுப் பாதையில் வருவதே இன்று நிகழ உள்ள வானியல் நிகழ்வில் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
"நீங்கள் நள்ளிரவு நேரம் வரை காத்திருக்க வேண்டிய அவசியமில்லை. இரவு ஒன்பது அல்லது 10 மணியளவிலேயே தென்கிழக்கு திசையில் இதை காண முடியும். மிகவும் பிரகாசமான நட்சத்திரம் போன்று செவ்வாய் கிரகம் காட்சியளிக்கும் இந்த நிகழ்வை நீங்கள் தவறவிடக் கூடாது," என்று வானியல் நிகழ்வுகள் குறித்த புகைப்படக் கலைஞரான டாமியன் பீச் கூறுகிறார்.
இரு கோள்களும் தங்களது 26 மாத சுழற்சியில் மிக நெருங்கிய சந்திப்பை கடந்த செவ்வாய்க்கிழமை மேற்கொண்ட நிலையில், இன்று நடைபெற உள்ள நிகழ்வு அதற்கு நேரெதிரானதாக பார்க்கப்படுகிறது.
பூமிக்கும் செவ்வாய்க்கும் இடையிலான தற்போதைய இடைவெளியான 62,069,570 கிலோ மீட்டரே வரும் 2035ஆம் ஆண்டு வரை மிகவும் குறுகிய இடைவெளியாக இருக்கும்.
கடந்த 2018ஆம் ஆண்டு நடந்த இதேபோன்ற நிகழ்வில், பூமிக்கும் செவ்வாய்க்கும் இடையிலான இடைவெளி வெறும் 58 மில்லியன் கிலோ மீட்டர்களாக இருந்தன.
இருப்பினும், புகைப்படக் கலைஞர்களை பொறுத்தவரை, இன்றைய நிகழ்வு மென்மேலும் சிறப்பு வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
வடக்கு அரைக்கோளத்தின் உயர்ந்த பகுதியில் செவ்வாய் கிரகம் தென்படுவதால், பூமியின் மற்ற பகுதிகளின் இடையூறுகள் இன்றி தொலைநோக்கி மூலம் ஒப்பீட்டளவில் இந்த முறை எளிமையாக புகைப்படங்களை எடுக்க முடியுமென்று கலைஞர்கள் தெரிவிக்கின்றனர்.

மற்ற சமயங்களில், டாமியன் போன்ற அனுபவமிக்க புகைப்படக் கலைஞர்கள் சரியான காட்சியைப் பெற "லக்கி இமேஜிங்" என்ற நுட்பத்தைப் பயன்படுத்துகின்றனர். இந்த முறையில், பல புகைப்படங்களை எடுத்து பின்னர் நேர்த்தியான காட்சியை ஒன்றிணைக்க மென்பொருளைப் பயன்படுத்துகின்றனர்.
இந்த கட்டுரையில் முதலிலுள்ள புகைப்படமானது டாமியனால் 14 இன்ச் செலஸ்ட்ரான் தொலைநோக்கியை கொண்டு எடுக்கப்பட்டது.
"இது வானியல் ஆராய்ச்சிகளுக்கு பயன்படும் தொழில்முறை கருவி. ஆனால், இதில் பாதி அளவுள்ள தொலைநோக்கியை கொண்டு கூட தற்போது செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பை பார்த்துவிட முடியும். ஒருவேளை உங்களிடம் நல்ல பைனாக்குலர்கள் இருந்தாலும், தூரத்தில் இருந்து பார்க்கும்போது இது நட்சத்திர அல்ல என்றும் ஒரு மிகப் பெரிய கோள் என்பதையும் கண்டறிந்துவிட முடியும்" என்று அவர் கூறுகிறார்.

பட மூலாதாரம், MBRSC
இவ்விரு கோள்களும் வெகு அருகே வரும் காலத்திற்காக காத்திருக்கும் விண்வெளி ஆராய்ச்சிகள் அமைப்புகள் தக்க நேரத்தில் செவ்வாய் கிரகத்திற்கு விண்கலத்தை அனுப்புகின்றன. இதன் மூலம், குறைந்த தூரம் பயணித்து இலக்கை அடைய முடிவதால், நேரம், எரிபொருள் உள்ளிட்டவற்றின் அளவை பன்மடங்கு குறைக்க முடியும்.
அந்த வகையில், இந்த நிகழ்வை முதலாக கொண்டு அமெரிக்கா, ஐக்கிய அரபு அமீரகம், சீனா உள்ளிட்ட நாடுகள் செவ்வாய் கிரகத்துக்கு விண்கலன்களை சமீபத்தில் அனுப்பியுள்ளன.
இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள தவறியதால் ஐரோப்பா மற்றும் ரஷ்யாவின் கூட்டுத் திட்டம் 2022ஆம் ஆண்டுக்கு ஒத்திவைக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
பிற செய்திகள்:
- இந்தியாவை விட்டு விலகி சீனாவிடம் நெருங்குகிறதா இலங்கை? யாருக்கு பாதிப்பு?
- ஆடு மேய்த்த தலித் தொழிலாளியை காலில் விழ வைத்து சாதிக் கொடுமை
- ஜான்சன் அண்ட் ஜான்சன்: கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து பரிசோதனை நிறுத்தம்
- கொரோனா: 99 ஆண்டுக்கு முந்தைய தடுப்பு மருந்து உங்களை காப்பாற்றுமா?
- ஐபிஎல் 2020: ஏ பி டி வில்லியர்ஸ் "கிரிக்கெட் உலகின் சூப்பர் நாயகன்"
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












