மலேசிய அரசியலில் திடீர் பரபரப்பு - மன்னரின் முடிவுக்காக காத்திருக்கும் அன்வார் இப்ராகிம்

அன்வார்

பட மூலாதாரம், Getty Images

மலேசிய அரசியல் களத்தில் மீண்டும் பரபரப்பும் புதிய எதிர்பார்ப்புகளும் நிலவுகின்றன. ஆட்சி மாற்றம் நிகழ வாய்ப்புள்ளதாக கூறப்படும் நிலையில், மலேசிய எதிர்க்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் இன்று காலை மலேசிய மன்னரைச் சந்தித்துப் பேசினார்.

அப்போது நாட்டின் அடுத்த பிரதமராக பொறுப்பேற்க தமக்கு போதுமான நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். இதையடுத்து ஒட்டுமொத்த மலேசியாவும் மன்னரின் முடிவுக்காக காத்திருக்கிறது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு நடப்புப் பிரதமர் மொகிதீன் யாசினின் ஆட்சி முடிவுக்கு வந்துவிட்டது என்றும், தமக்கு நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்களின் ஆதரவு உள்ளது என்றும் பகிரங்கமாக அறிவித்திருந்தார் அன்வார் இப்ராகிம்.

இதையடுத்து ஆட்சியமைக்க மன்னரிடம் உரிமை கோரத் திட்டமிட்டிருந்தார். எனினும் அச்சமயம் உடல்நலம் குன்றியதால் மன்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதை அடுத்து அவருடனான அன்வாரின் சந்திப்பு ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில் பரபரப்பான அரசியல் சூழ்நிலைக்கு மத்தியில் இன்று காலை மலேசிய மன்னரைச் சந்தித்தார் அன்வார். அப்போது தமக்கு 120க்கும் மேற்பட்ட எம்பிக்களின் ஆதரவு இருப்பதாக அவர் தெரிவித்தார்.

எனினும் எண்ணிக்கை அடிப்படையில் அவர் தமது ஆதரவுக் கணக்கை காட்டினாலும், தனது அணியில் உள்ள எம்பிக்களின் பெயர்களை அவர் மன்னரிடம் தெரிவிக்கவில்லை.

இந்நிலையில் அன்வாருக்கு 120க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு இருப்பதாக வெளியான தகவல் அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தற்போது ஆளும் கூட்டணியில் உள்ள உறுப்பு கட்சிகள் அன்வாருக்கு ஆதரவு இல்லை எனத் தெளிவுபடுத்தி உள்ளன. ஆனால் அன்வார் தரப்போ ஆளும் கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த எம்பிக்கள் சிலரும் அன்வாரை ஆதரிப்பதாக கூறி வருகிறது.

மகாதீர் முகமது

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, முன்னாள் பிரதமர் மகாதீர் முகமது அன்வாருக்கு தமது ஆதரவு இல்லை என சூசகமாக கூறியுள்ளார்.

அன்வார் இப்ராகிமுடனான சந்திப்புக்குப் பின்னர், மன்னர் சார்பாக அரண்மனை வெளியிட்ட அறிக்கையில், அன்வார் இப்ராகிம் தம்மை ஆதரிக்கும் எம்பிக்களின் எண்ணிக்கையை மட்டுமே குறிப்பிட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

அன்வார்: எனது அரசு யாரையும் பழிவாங்காது

இந்நிலையில் இன்று மாலை செய்தியாளர்களைச் சந்தித்த அன்வார், தமது தரப்பு தகவல்களை மன்னரிடம் தெரிவித்துவிட்டதாகவும் இனி அவரது முடிவுக்காக காத்திருப்பதாகவும் குறிப்பிட்டார். முக்கிய அரசியல் தலைவர்களை அடுத்த இரு தினங்களுக்குள் மன்னர் அழைத்துப் பேசுவார் என தாம் எதிர்பார்ப்பதாகவும் அன்வார் தெரிவித்தார்.

"எனது தலைமையில் புதிய அரசு அமையும் பட்சத்தில் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கைகள் ஏதும் இருக்காது. மேலும் தற்போது நீதிமன்ற வழக்குகளை எதிர்கொண்டுள்ளவர்களுடன் எந்தவித சமரசமும் செய்து கொள்ளவில்லை.

YouTube பதிவை கடந்து செல்ல
Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

YouTube பதிவின் முடிவு

"நீதித்துறையின் சுதந்திரம் கட்டிக்காக்கப்படும். சட்டத்தின் ஆட்சிக்கு கட்டுப்படுவோம். வழக்கை எதிர்கொள்பவர்களுடன் சமரசம் என்று கூறப்படுவது பொறுப்பற்ற செயல்," என்றார் அன்வார்.

கடந்த தேர்தலில் மலாய்க்காரர்களை பிரதிநிதிக்கும் அம்னோ கட்சியை எதிர்த்து வெற்றி பெற்றது அன்வார் தலைமையிலான பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி. அந்த அம்னோ கட்சியின் ஆதரவுடனேயே நடப்புப் பிரதமர் மொகிதீன் யாசின் ஆட்சி நடத்தி வருகிறார்.

இந்நிலையில் திடீர் திருப்பமாக அதே அம்னோ கட்சியின் உறுப்பினர்கள் சிலர் அன்வாரை ஆதரிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அம்னோ கட்சியைச் சேர்ந்த முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக்கும், அக்கட்சியின் நடப்பு தேசியத் தலைவர் சாகிட் ஹமிடியும் ஊழல் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ளனர்.

இதையடுத்தே வழக்குகளில் சிக்கியுள்ளவர்களுடன் சமரசம் செய்து கொள்ளவில்லை என அன்வார் இன்று விளக்கம் அளித்துள்ளார்.

அரசியலை விட மக்களே முக்கியம் - மலேசிய பிரதமர்

நடப்புப் பிரதமர் மொகிதீன் யாசினையும் தம்முடன் இணைந்து செயல்பட அழைப்பு விடுத்துள்ளார் அன்வார். தமது அமைச்சரவையில் மொகிதீன் யாசினுக்கு உரிய பொறுப்பை வழங்கவும் தயாராக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

மொகிதின் யாசின்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, மொகிதீன் யாசின்

இந்நிலையில் பிரதமர் மொகிதீன் யாசினும் இன்று மாலை காணொளி வசதி மூலம் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது தமக்கு அரசியல் முக்கியமல்ல என்றும், மக்கள் நலனுக்கே முன்னுரிமை என்றும் குறிப்பிட்டார்.

ஆட்சி அமைக்க உரிமை கோரி அன்வார் இப்ராகிம் மன்னரைச் சந்தித்த வேளையில், தாம் தேசிய பாதுகாப்பு கவுன்சில் அதிகாரிகளுடன் கொரோனா விவகாரம் குறித்து ஆலோசனையில் ஈடுபட்டதாக அவர் தெரிவித்தார்.

இதற்கிடையே மூத்த தலைவர் முன்னாள் பிரதமரான மகாதீர் முகமது, இம்முறை அன்வாருக்கு தமது ஆதரவு இல்லை என சூசகமாக கூறியுள்ளார். எந்தவொரு தனி நபரும் பிரதமராகவோ, வேறு பதவிகளைப் பெறவோ தமது ஆதரவு இல்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.

இத்தகைய அடுத்தடுத்த திருப்பங்களுக்கு மத்தியில் ஆளும் தரப்பில் உள்ள கட்சிகள் மற்றும் எதிர்க்கட்சிகளின் தலைவர்களுக்கு மலேசிய மன்னரின் அரண்மனை அழைப்பு விடுத்துள்ளதாகவும், அத்தலைவர்கள் மன்னரை அடுத்தடுத்து சந்திக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

அச்சந்திப்புகளின் முடிவில் அன்வாரின் கூற்றுப்படி, அவருக்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவு உள்ளதா என்பது குறித்து மன்னர் இறுதி முடிவு எடுப்பார் என்றும், அதன் பிறகே அரசியல் களத்தில் தெளிவு உண்டாகும் என்றும் அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.

மலேசியாவில் மீண்டும் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. எனவே இத்தகைய சூழலில் பொதுத் தேர்தலை நடத்துவது சாத்தியமல்ல என்று அந்நாட்டின் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதுபோன்ற பல்வேறு அம்சங்களை கவனத்தில் கொண்டு முடிவெடுக்க வேண்டிய நிலையில் உள்ளார் மலேசிய மன்னர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: