கேரளாவில் கொரோனா பரவலுக்கு பக்கத்து மாநிலத்தவர்கள் காரணமா? மாநில அமைச்சர் சிறப்புப் பேட்டி

ஷைலஜா டீச்சர்
படக்குறிப்பு, கேரள அமைச்சர் ஷைலஜா டீச்சர்
    • எழுதியவர், பிரமிளா கிருஷ்ணன்
    • பதவி, பிபிசி தமிழ்

ஊரடங்கு முடிந்து இயல்பு வாழ்க்கைக்கு மக்கள் திரும்பும் நேரத்தில், கேரளாவில் கொரோனா வைரஸின் கிளஸ்டர் பரவல் தீவிரமாக அதிகரித்துள்ளது என கேரளா சுகாதாரத் துறை அமைச்சர் ஷைலஜா டீச்சர் தெரிவித்துள்ளார்.

திருமண வீடுகள், இறப்பு வீடுகள், தொழிற்சாலைகள், கோயில்கள் மற்றும் பொது இடங்களில் மக்கள் கூடுவதற்கு அனுமதிக்கப்பட்ட நேரத்தில், சமூக இடைவெளி பின்பற்றப்படாததால், கேரளாவில் பெருமளவு கிளஸ்ட்டர் பரவல் தீவரமாகியுள்ளது என்று அவர் கூறியுள்ளார்.

இதனால் பாதிக்கப்பட்டவர்களை கண்டறிந்து பரவலை கட்டுப்படுத்தும் வேலையில் ஈடுபட்டுள்ளதாகவும் கேரள அமைச்சர் ஷைலஜா தெரிவித்துள்ளார்.

ஜனவரி மாதத்தில் கேரளாவில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை வெறும் மூன்றாக இருந்தது. தற்போது அக்டோபர் மாதத்தில் அந்த எண்ணிக்கை மூன்று லட்சத்தை நெருங்கியுள்ளது. குறிப்பாக ஊரடங்கு தளர்வுக்கு பின்னர்தான் தொற்று தீவிரமடைந்துள்ளது. இந்தியாவில் பாதிப்பு வேகமாக அதிகரித்துவரும் மாநிலமாக கேரளா மாறியுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்துள்ள மாநில தலைநகரமான திருவனந்தபுரத்தில், பிபிசி தமிழுக்கு அளித்த பிரத்யேக பேட்டியின்போது, கிளஸ்டர் பரவல் எவ்வாறு பாதிப்பை கூட்டியுள்ளது என சுகாதாரத்துறை அமைச்சர் ஷைலஜா டீச்சர் விளக்கினார்.

Banner image reading 'more about coronavirus'
Banner

கேள்வி: அக்டோபர் 8ம்தேதி அதிகபட்சமாக ஒரே நாளில் 10,000 நபர்களுக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டதுஎன உங்கள் அறிக்கை கூறுகிறது. இந்தியாவில் வேகமாக தொற்று பரவும் மாநிலமாக கேரளா மாறியுள்ளது என மத்திய அரசின் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.இதுபோன்ற தொற்றுகள் அதிகரிப்பது எப்படி? தொற்றுகளை குறைக்க நீங்கள் எடுத்த முயற்சியில் தோல்வியா அல்லது வேறு என்ன காரணம்?

அமைச்சர் ஷைலஜா: ஊரடங்கு விலக்கப்பட்டுள்ளதால், தொற்று அதிகரித்துள்ளது என்பது முதல் காரணம். இதற்கு மேலும் ஊரடங்கை நீடிக்கமுடியாது. உயிர்களை காப்பது எவ்வளவு முக்கியமோ அதேபோல ஒவ்வொரு நபரின் வாழ்வாதாரத்தை காப்பதும் முக்கியம் என்பதால் கடைகளை திறக்க வேண்டும், இயல்பு வாழ்க்கைக்கு செல்ல வேண்டும். ஆனால் அதேநேரம் கொரோனா தொற்று குறித்த வழிமுறைகளை மக்கள் பின்பற்ற வேண்டும்.

கேரளாவை பொறுத்தவரை, கொரோனாவால் பாதிக்கப்படுபவர்கள் பெரும்பாலும் இளம் வயதினர்தான். அதாவது 40 வயதிற்கும் கீழ் உள்ளவர்கள். ஆனால் இறப்புவிகிதப்படி, நீரழிவு உள்ளிட்ட இணை நோய் உள்ள முதியவர்கள்தான் இறந்துபோகிறார்கள். இளம் பருவத்தில் சிலர், கொரோனா தொற்று இன்ஃபுளூயென்சா காய்ச்சல் போன்றதுதான் என எண்ணுகிறார்கள்.இந்த காய்ச்சல் வரும், சிறிது நாட்களில் போய்விடும் என நம்புகிறார்கள். ஆனால், முதியவர்கள் அச்சத்தில் இருக்கிறார்கள்.

இளைஞர்கள் சிலரிடம் காணும் அலட்சியப்போக்கு ஆபத்தானது என்பதை உணர்த்த இளைஞர்களை கொண்ட குழுக்களை உருவாக்கி விழிப்புணர்வு வழங்குகிறோம். மேலும் தற்போது, இதுநாள் வரை இல்லாத அளவில் ஒரே நாளில் 70,000 சோதனைகளை நடத்துகிறோம். அது தொற்று எண்ணிக்கை அதிகரிப்பது போன்ற தோற்றத்தை தருகிறது.

கொரோனா தொற்றை கையாள நாங்கள் தயாரிப்பு பணிகளை முழு வேகத்தில் செய்து முடித்ததால் சுமார் 50 சதவீத படுக்கைகள் காலியாக உள்ளன. கிராமங்கள்தோறும், தொற்றுஏற்பட்டுள்ள நபரை தனிமைப்படுத்தி அவருக்கு உதவ சுகாதார அலுவலர்கள் உள்ளனர். இந்தத் தொற்று எண்ணிக்கையை போலவே இறப்பு எண்ணிக்கையை பற்றி நாங்கள் அதிக கவனத்தோடு இருக்கிறோம். நாங்கள் தோல்வி அடைந்தோம் என சொல்லமுடியாது.

கொரோனா தொற்று பற்றி உலகளவில் ஆராய்ச்சிகள் நடந்து வருகிறது. ஒவ்வொரு நாளும் நாம் எல்லோரும் கொரோனா பற்றி புதிய பாடத்தை படிக்கிறோம். அதனால், இதுநாள்வரை எங்களுக்கு கிடைத்த அனைத்து படங்களையும் அனுபவமாக கொண்டு எதிர்காலத்தை நம்பிக்கையுடன் எதிர்கொள்ள தயாராகவே இருக்கிறோம்.

கேள்வி: கடந்த செப்டம்பர் மாதம் ஐ.நா அமைப்பு உங்களுக்கு விருது கொடுத்தது. தொற்று பரவாத நோய்களை கட்டுப்படுத்தியது மற்றும் கொரோனா தொற்றை கட்டுக்குள் வைத்திருப்பது குறித்துஉலகளவிலான கவனத்தை உங்கள் மாநிலம் ஈர்த்தது. ஆனால் அக்டோபர் மாதத்தில் பல கிளஸ்ட்டர் பரவல் ஏற்பட்டது எப்படி?

அமைச்சர் ஷைலஜா: அக்டோபர் மாதம் கொரோனா தொற்று அதிகரிக்கும் என்பது நாங்கள் எதிர்பார்த்த ஒன்று. தற்போது ஊரடங்கு முடிந்து விட்டது. மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்புகிறார்கள். மக்கள் நடமாட்டம் அதிகரிக்க தொடங்கிவிட்டது. பல நாடுகளில் இருந்தும், பல்வேறு மாநிலங்களில் இருந்தும் கேரளாவிற்கு மக்கள் வருகிறார்கள். அதேபோல, ஊரடங்கு காலத்தில் பூட்டியிருந்த ஆலைகள் இயங்குகின்றன. அதனால் பணியாளர்கள் மத்தியில் தொற்று ஏற்படுவதால், தொழிற்சாலைகளில் கொரோனா கிளஸ்ட்டர் உருவாகிறது. அதோடு காய்கறி மண்டிகளில் கிளஸ்ட்டர், திருமணம் மற்றும் இறப்பு வீடுகளில் அதிக எண்ணிக்கையில் மக்கள் ஒன்று கூடுவதால் கொரோனா தொற்று அதிகரிக்கிறது.

ஓணம் பண்டிகையின்போது ஒரு சில மக்கள் குடும்பத்துடன் ஷாப்பிங் சென்றார்கள். பொது இடங்களில் கூடினார்கள்.வழிகாட்டுதலுடன் பலர் ஓணம் திருவிழாவை பாதுகாப்பாக கொண்டாடினார்கள். ஒரு சிலர்வழிமுறைகளை பின்பற்றவில்லை என்பதால் தொற்று அதிகரித்தது. திருமணங்களுக்கு 50 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்றபோது, ஒரு சிலர் 500 பேர் வரை கூடினார்கள். விதிகளை மீறிய குடும்பங்கள் மீது வழக்கு பதிவு செய்தோம். ஆனால் இந்த நேரத்தில் ஆயிரக்கணக்கான மக்களை சிறையில் வைத்திருக்க முடியாது என்பதால் விழிப்புணர்வு ஊட்டுவதில் அதிக கவனம் கொடுகிறோம்.

எதிர்கட்சியினர் அவ்வப்போது கூட்டம் கூடி போராட்டங்கள் நடத்துவது, திருமணம் மற்றும் இறப்பு வீடுகள், தொழிற்சாலை பணியிடங்கள் ஆகிய இடங்களில் தொற்று ஏற்படுகிறது, வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளிலிருந்து மக்கள் திரும்புவது உள்ளிட்ட காரணங்களால் சமூக பரவல் ஏற்பட்டுள்ளது. மக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல், கூட்டம் கூடுவதை தவிக்கிறவரை இந்தத் தொற்றை கட்டுப்படுத்துவது சிரமம்தான். அக்டோபர் மாதத்தில் ஒரே நாளில் அதிகபட்சமாக அக்டோபர் 10ம் தேதி, 11,000 நபர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது.

கொரோனா வைரஸ் கேரளா

கேள்வி: கொரோனா பரவலைகட்டுப்படுத்துவதில் ஆர்வம் காட்டும் நேரம், இறப்பு எண்ணிக்கையை குறைத்து வெளியிடுவதாக கேரளஊடங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. இறப்பு எண்ணிக்கையை குறைத்து காட்ட முயற்சிஎடுத்தீர்களா?

அமைச்சர் ஷைலஜா: இறப்புஎண்ணிக்கையை நாங்கள் குறைத்து காட்டமுயற்சிக்கிறோம் என்பது தவறான கருத்து.எங்கள் மாநிலத்தில் இறப்பை பதிவு செய்வதில் தாமதம் இருக்காது. இங்குள்ள மக்கள் படிப்பறிவுள்ளவர்கள் என்பதால், இறப்பை பதிவுசெய்வது அவசியம் என்ற விழிப்புணர்வுடன் மக்கள் இருக்கிறார்கள் என்பதால், கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் இறப்பை நாங்கள் மறைக்க முடியாது.

எங்கள் மாநிலத்தில் ஊடகத்தினர் செய்திகளை வெளியிட எந்த பிரச்னையும் இல்லை. ஒரு சிலர் கொரோனா இறப்புபற்றி தவறான தகவலை வெளியிட்டுள்ளார்கள். அவர்கள் இதுவரை இரண்டு முறை தவறானபுள்ளிவிவரங்களை கொடுத்தார்கள். அவர்கள் தெரிவித்த நபர்களின் இறப்பு கொரோனா இறப்பு என கணக்கிடப்பட்டுள்ளது என்பதை அரசாங்கம் உடனே தெளிவுபடுத்தி விட்டது.

மேலும், இந்திய அளவில் கொரோனா தொற்று முதலில் கேரளாவில் பதிவானது என்பதால், மத்திய சுகாதாரஅமைச்சகம் தொற்றை சமாளிப்பது பற்றி எங்களிடம் விவரங்கள் கேட்டார்கள். எங்களதுவழிமுறைகளை நாங்கள் வெளிப்படையாக தெரிவித்தோம். கேரளாவில் கொரோனா தொற்று எண்ணக்கை ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருகிறது.

கேள்வி: உலகளவில் மிக குறைந்த இறப்பு விகிதத்தை நீங்கள்கொண்டிருக்கிறீர்கள். தேசிய அளவில் ஒப்பிட்டு பார்க்கும்போது,இறப்பு எண்ணிக்கை கேரளாவில் மிகவும் குறைவாகஉள்ளது. இதை எப்படி சாத்தியப்படுத்தினீர்கள்?

அமைச்சர் ஷைலஜா சர்வதேச அளவில்கொரோனா தொற்று இறப்பு மூன்று சதவீதமாக உள்ளது. இந்தியாவில் கொரோனா இறப்பு என்பது 1.36 சதவீதமாக உள்ளது. கேரளாவில்தான் இந்தியாவின்முதல் கொரோனா தொற்று பதிவானது. ஆனால் எங்கள் மாநிலத்தில் இறப்பு எண்ணிக்கை 0.36% மட்டுமே. எங்கள் மாநிலத்தில் அரசு மிக கவனமாகஇந்த நோய் தொற்றை கையாண்டதற்கு இதுவே சாட்சி.

சுகாதார துறையின் கட்டமைப்பை வலுப்படுத்தும் வேலையை எப்போதும் மேற்கொண்டு வந்தால்தான் கொரோனா காலத்தை சரியாக எதிர்கொண்டோம். கிராம அளவில் ஆரம்ப சுகாதார நிலையங்களாக செயல்பட்ட சாதாரண மருத்துவமனைகளை தரம் உயர்த்தும் வேலையை செய்தோம். எங்கள் மாநிலத்தில் உள்ள 971 ஆரம்ப சுகாதார நிலையங்களில் 240 நிலையங்களை குடும்ப சுகாதார நிலையங்களாக மாற்றியுள்ளோம். அவற்றில் பத்துக்கும் மேற்பட்ட நிலையங்கள் தேசிய அளவில் அங்கீகாரம் பெற்ற மையங்களாக உள்ளன.

கொரோனா வைரஸ்

இந்த மையங்களில் கிராம அளவில் மக்களுக்கு தேவையான அடிப்படையான மருத்துவ வசதிமற்றும் 64 வகையான சோதனைகளை மேற்கொள்ளும் வசதிகளை ஏற்படுத்தியுள்ளோம். கொரோனா இறப்புகளில் இணை நோய்கள்உள்ளவர்கள்தான் அதிகமாக இறக்கிறார்கள். இதய நோய், சர்க்கரை நோய், சுவாச கோளாறு உள்ளவர்கள்தான் அதிகம் இறக்கிறார்கள். கடந்த காலங்களில் இணை நோய்களுக்கு தொடர்ந்து கவனம் கொடுத்து வந்ததால், கொரோனா தொற்றுகாலத்தில் சமாளிக்க முடிந்தது.

கிராம அளவில் மருத்துவ வசதி மற்றும் திறமையான மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் சுகாதார பணியாளர்கள்இருப்பதால், இந்த கட்டமைப்பை கொண்டே கொரோனா காலத்திலும் விழிப்புணர்வு ஊட்டுவது, தொற்று இருப்பவர்களை உடனடியாக அடையாளம் காண்பது, தொற்று ஏற்பட்டவர்களிடம் தொடர்பில் இருப்பவர்களை விரைவாக அடையாளம் கண்டு தனிமைப்படுத்துவது போன்றவற்றால் தொற்று அதிகரிப்பதை தவிர்த்தோம்.

தற்போது ஊரடங்கு முடிந்து இயல்பு வாழ்க்கைக்குமக்கள் திரும்புகிறார்கள் என்பதால் தொற்று அதிகரிக்கும். ஆனால் இறப்பு எண்ணிக்கையைத் தொடர்ந்து தற்போது உள்ள அளவில் நீடிக்க தொடர்ந்து பணியாற்றுகிறோம். ஒருசிலர் விதிகளை பின்பற்றுவதில்லை. ஆனால் கேரளாவில் பெரும்பாலான மக்கள் பொறுப்புள்ளவர்களாக இருப்பதால்தான் இறப்புகளை குறைக்க முடிகிறது.

வரைபடம்

உலகம் முழுவதும் உறுதி செய்யப்பட்ட தொற்றுகள்

Group 4

முழுமையாக பார்க்க பிரௌசரை அப்டேட் செய்யுங்கள்

ஆதாரம்: ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம், தேசிய பொது சுகாதார முகமைகள்

கடைசியாக பதிவு செய்யப்பட்டது 5 ஜூலை, 2022, பிற்பகல் 1:29 IST

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: