கேரளாவில் பெண்ணுரிமைக்காக நூற்றாண்டுக்கு முன்பே குரல் கொடுத்த அண்ணா சாண்டி

- எழுதியவர், ஹரிதா கந்த்பால்
- பதவி, பிபிசி
(இந்தியாவின் வரலாற்று பக்கங்களில் இடம்பெறாவிட்டாலும், நவீன கால இந்திய பெண்களின் வாழ்க்கைமுறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களுக்கு வித்திட்ட பத்து இந்திய பெண்களின் பிரமிக்கத்தக்க கதைகளை பிபிசி உங்களிடம் கொண்டு வருகிறது. அதன் ஏழாவதுஅத்தியாயம் இது.)
1928 ஆம் ஆண்டு. திருவிதாங்கூர் சமஸ்தானத்தில், அரசாங்க வேலைகளில் பெண்களுக்கு இடஒதுக்கீடு கிடைக்க வேண்டுமா வேண்டாமா என்ற கடுமையான விவாதம் நடைபெற்றது. இந்த பிரச்னையில் ஒவ்வொருவருக்கும் அவரவர் வாதங்கள் இருந்தன.
இந்த விவகாரம் குறித்து திருவனந்தபுரத்தில் ஒரு பொதுக்கூட்ட மாநாட்டில் விவாதிக்கப்பட்டது. அந்த கூட்டத்தில், புகழ்பெற்ற அறிஞர் டி.கே.வேலு பிள்ளை, திருமணமான பெண்களுக்கு அரசு வேலைகள் தரப்படுவதை எதிர்த்து உரை நிகழ்த்தினார்.
அப்போது, 24 வயதான அண்ணா சாண்டி மேடையில் ஏறி, அரசு வேலைகளில் பெண்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவதற்கு ஆதரவாக உறுதிபடப்பேசினார். இந்த விவாதம் ஒரு மாநாட்டில் நடப்பது போல இல்லாமல், நீதிமன்றத்தில் நடப்பது போல இருந்தது.
இந்த வேலைகள் திருமணமாகாத பெண்களுக்கு கிடைக்க வேண்டுமா அல்லது திருமணமான பெண்களுக்கா என்பதிலும், மக்களுக்கு இடையே கருத்து வேறுபாடு இருந்தது.

"அரசாங்க வேலைகள் பெண்களின் திருமண வாழ்க்கை பொறுப்புகளுக்கு இடையூறாக இருக்கும். சில குடும்பங்களில் செல்வம் சுருங்கி, ஆண்களின் சுயமரியாதையை இது பாதிக்கும்" என்று டி.கே. வேலு பிள்ளை வாதிட்டார்.
" பெண்களை ஆண்களின் இல்ல மகிழ்ச்சிக்கான பொருளாகவே இவர்கள் கருதுகிறார்கள் என்பது இந்த வாதங்களின் மூலம் தெளிவாகிறது. இந்த அடிப்படையில் அவர்கள் பெண்களின் வேலை தேடுவதற்கான முயற்சிகளை தடை செய்ய விரும்புகிறார்கள். ஏனென்றால் அவர்களைப் பொறுத்தவரை, அவள் சமையலறையிலிருந்து வெளியே சென்றால், அது குடும்ப மகிழ்ச்சியைக் குறைக்கும். "என்று வழக்கறிஞர் படிப்பை முடித்த அண்ணா சாண்டி, தனது வாதங்களில் தெரிவித்தார்.

பெண்களின் சம்பாத்தியம் நெருக்கடி காலங்களில் குடும்பத்திற்கு உதவும் என்றும், திருமணமாகாத பெண்களுக்கு மட்டுமே வேலை கிடைத்தால், பல பெண்கள் திருமணம் செய்யதுகொள்ள விரும்ப மாட்டார்கள் என்றும் அவர் உறுதிபடக் கூறினார்.
இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக அண்ணா சாண்டி , கோட்டயத்திலிருந்து திருவனந்தபுரம் சென்றார். மேலும் அவரது பேச்சு , மகளிர் இடஒதுக்கீட்டு கோரிக்கைக்கு வலுசேர்த்தது . இதன் பின்னர் இந்த விவாதம் செய்தித்தாள் மூலம் தொடர்ந்தது என்று கேரளாவைச்சேர்ந்த வரலாற்றாசிரியரும் எழுத்தாளருமான ஜே.தேவிகா கூறுகிறார்.
பெண்கள் இடஒதுக்கீட்டு கோரிக்கையை முன்வைத்த மலையாளப் பெண்கள் மத்தியில் அண்ணா சாண்டி ஒரு முன்னோடியாக கருதப்படுகிறார்.
சட்டத்தில் பட்டம் பெற்ற முதல் பெண்
அண்ணா சாண்டி , 1905 மே மாதம் திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் பிறந்தார்.
1926 இல் கேரளாவில் சட்டம் படித்த முதல் பெண் பட்டதாரி அண்ணா சாண்டி.
'வரலாற்றில் பெண்கள்' தொடரின் பிற கட்டுரைகள்:
- கட்டாயத் திருமண உறவுக்குப் பதில் சிறை செல்லத் தயாரான ரக்மாபாய் ரெளட்
- சந்திர பிரபா சைக்கியானி: அஸ்ஸாமில் திரையிடும் வழக்கத்தை நீக்கிய போராளி
- இந்திய பெண்ணியத்தின் வலுவான தூண் "ருகியா"
- தேவதாசி முறையை ஒழிக்கப் போராடிய முத்துலட்சுமி ரெட்டி குறித்து தெரியுமா?
- சுக்ரா ஹுமாயூன் மிர்சா: பலதார மணத்தை எதிர்த்த முஸ்லிம் பெண்
- இந்தர்ஜித் கௌர்: மத்திய பணியாளர் தேர்வாணையத்தின் முதல் பெண் தலைவர்
"ஒரு சிரியன் கிறிஸ்தவ குடும்பத்தில் வளர்ந்த அண்ணா சாண்டி, கேரள மாநிலத்தில் சட்டப் பட்டம் பெற்ற முதல் பெண்மணி ஆவார். அவர் சட்டக் கல்லூரியில் சேர்க்கை பெற்றபோது, அது அவருக்கு எளிதாக இருக்கவில்லை. அவர் கல்லூரியில் கேலிக்கு உள்ளானார். ஆனால் அவர் ஒரு ஆளுமை நிரம்பிய பெண்," என்று ஜே. தேவிகா கூறுகிறார்,
அண்ணா சாண்டி குற்றவியல் விஷயங்களில் கூர்மையான சட்ட அறிவுத்திறனுக்கு பெயர்பெற்றவர்.
அரசியலில் காலடி
பெண்கள் இடஒதுக்கீட்டிற்காக குரல் எழுப்பிய அண்ணா சாண்டி, சமூக மட்டத்திலும், அரசியலில் பெண்களின் இடம் தொடர்பாகவும் குரல் கொடுத்தார்.

அவர் 1931 இல் திருவிதாங்கூரில் நடைபெற்ற ஸ்ரீமூலம் பாப்புலர் அசம்பிளி ( ஸ்ரீமூலம் மக்கள் சபை ) தேர்தலில் போட்டியிட்டார்.
"அந்த நாட்களில் அரசியலில் பெண்களுக்கான பாதை எளிதானது அல்ல. அண்ணா சாண்டி தேர்தல் களத்தில் நுழைந்தபோது , அவருக்கு எதிராக அவமானகரமான பிரச்சாரம் செய்யப்பட்டது. அவரை அவமானப்படுத்தும்விதமான சுவரொட்டிகள் அச்சிடப்பட்டன. அவர் தேர்தலில் தோல்வி அடைந்தார். ஆனால் அவர் அமைதியாக இருக்கவில்லை . தனது 'ஸ்ரீமதி' பத்திரிகையில், அதைப் பற்றி ஒரு தலையங்கம் எழுதி எதிர்ப்பு தெரிவித்தார்," என்று ஜே.தேவிகா கூறுகிறார்.

அவர் மீண்டும் 1932 இல் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
"சமஸ்தான மக்கள் சபை உறுப்பினராக, பெண்கள் பிரச்சினைகள் மட்டுமல்லாமல், பட்ஜெட் போன்ற பிற விஷயங்கள் தொடர்பான விவாதங்களிலும் அவர் பங்கேற்றார், "என்று தேவிகா தெரிவிக்கிறார்.
பெண்களுக்கு தங்கள் உடல்கள் மீதான உரிமைகளை ஆதரிப்பவர்
"மலையாள பெண்களுக்கு சொத்துரிமை, வாக்குரிமை , வேலைகள், மரியாதை மற்றும் பொருளாதார சுதந்திரம் கிடைத்துள்ளது. ஆனால் எத்தனை பெண்களுக்கு தங்கள் உடல்கள் மீது உரிமை இருக்கிறது? ஒரு பெண்ணின் உடல் ஆணிற்கு இன்பம் தருவதற்கு மட்டுமே என்ற முட்டாள்தனமான சிந்தனையால், எத்தனை பெண்கள் தாழ்வு மனப்பான்மையில் விழுந்திருக்கிறார்கள்? "என்று அண்ணா சாண்டி 1935 ல் எழுதினார்.

கேரளா முன்பிலிருந்தே ஒரு முற்போக்கான பிராந்தியமாக கருதப்பட்டது. திருவிதாங்கூர் மன்னராட்சியின்போது, கேரளாவில் பெரிய அளவில், தாய்வழி சமுதாய அமைப்பு நடைமுறையில் இருந்தது.
திருவிதாங்கூர் மகளிர் ஆட்சியாளரின் கீழ், பெண்களுக்கு கல்வி, சமூக மற்றும் பொருளாதார வலிமையை வழங்குவதில் அரசு முனைப்புடன் ஈடுபட்டிருந்தது. ஆனாலும் பெண்கள் , பாகுபாட்டை சந்திக்கவேண்டியிருந்தது.
" அண்ணா சாண்டி குரல் எழுப்பிய, தன் உடல் மீதான பெண்ணின் உரிமைகள், திருமணத்தில் ஆண் பெண் உரிமைகளில் நிலவும் சமத்துவமின்மை போன்ற விஷயங்கள், அந்தக்காலகட்டத்தைக்காட்டிலும் முன்னோக்கியதாக இருந்தது என்று,"தேவிகா தெரிவிக்கிறார்.
சட்டத்தின் பார்வையில் கூட பெண்கள் சமமாக பார்க்கப்பட வேண்டும் என்று அண்ணா சாண்டி விரும்பினார்.

"1935 ஆம் ஆண்டில், திருவிதாங்கூர் சமஸ்தான சட்டத்தின் கீழ், பெண்கள் தூக்கிலிடப்படுவதற்கு அளிக்கப்பட்ட விலக்கையும் அவர் எதிர்த்தார். அதே நேரம், திருமணத்தில் கணவன்-மனைவிக்கு வழங்கப்பட்ட சமமற்ற சட்ட உரிமைகளுக்கு எதிராகவும் அவர் குரல் எழுப்பினார். இவற்றின் காரணமாக அவருக்கு பல எதிரிகளும் இருந்தனர்," என்று தேவிகா கூறுகிறார்.
திருவிதாங்கூர் சமஸ்தான திவான் , அண்ணா சாண்டியை , மாவட்ட அளவிலான சட்ட அதிகாரியாக (முன்சிஃப்) நியமித்தார். மேலும் இந்த நிலையை அடைந்த முதல் மலையாள பெண் இவர் என்று கருதப்படுகிறது.
அவர் 1948 இல் மாவட்ட நீதிபதியாகவும், பின்னர் 1959 இல் முதல் பெண் உயர் நீதிமன்ற நீதிபதியாகவும் ஆனார்.

பெண்களுக்கு தங்கள் உடல்கள் மீது உரிமை வேண்டும் என்று அவர் வலியுறுத்தி கூறிவந்தார். மேலும் பல மன்றங்களில் இந்த விஷயத்தை எழுப்ப முயன்றார். அத்துடன் அகில இந்திய மகளிர் மாநாட்டில் , இந்தியா முழுவதும் உள்ள பெண்களுக்கு கருத்தடை மற்றும் தாய்-சேய் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை வழங்க கிளினிக்குகள் அமைக்கப்படவேண்டும் என்றும் யோசனை தெரிவித்தார்.
ஆனால் இந்த யோசனை தொடர்பாக பல கிறிஸ்தவ பெண் உறுப்பினர்களின் எதிர்ப்பை அவர் எதிர்கொண்டார்.
உயர்நீதிமன்ற நீதிபதியாக ஓய்வு பெற்ற பிறகு, அவர் தேசிய சட்ட ஆணையத்தில் இடம் பெற்றார்.
அண்ணா சாண்டியின் கணவர் பி.சி.சாண்டி ,ஒரு போலீஸ் அதிகாரி என்றும் அவர்களுக்கு ஒரு மகன் பிறந்ததாகவும் தூர்தர்ஷன் தெரிவிக்கிறது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:













