சுக்ரா ஹுமாயூன் மிர்சா: பலதார மணத்தை எதிர்த்த முஸ்லிம் பெண்

பட மூலாதாரம், BBC / கோபால் ஷூன்ய
- எழுதியவர், நஸ்ருதீன்
- பதவி, பிபிசிக்காக
இந்தியாவின் வரலாற்று பக்கங்களில் இடம்பெறாவிட்டாலும், நவீன கால இந்திய பெண்களின் வாழ்க்கைமுறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களுக்கு வித்திட்ட பத்து இந்திய பெண்களின் பிரமிக்கத்தக்க கதைகளை பிபிசி உங்களிடம் கொண்டு வருகிறது. அதில் ஆறாவது கதைதான் சுக்ரா ஹுமாயூன் மிர்சாவுடையது.
பெண்கள் குறிப்பாக முஸ்லிம் பெண்களின் வாழ்க்கையை மேம்படுத்த குரல் எழுப்பிய எழுத்தாளர், பத்திரிகை ஆசிரியர், அமைப்பாளர், சமூக சீர்திருத்தவாதி, கல்வியாளர் என இவரை நாம் அடையாளம் காணலாம். முகத்திரைக்கு பின்னால் கைதி போல இருந்த வாழ்க்கையிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டார் அவர்.
முகத்திரை இல்லாமல் வீட்டை விட்டு வெளியே சென்ற ஹைதராபாத் தக்காணப் பகுதியைச் சேர்ந்த முதல் பெண்மணி என்று இவர் கருதப்படுகிறார். அந்த நேரத்தில் இப்படிச் செய்வது அவருக்கு எளிதாக இருந்திருக்காது. நிறைய சிரமங்களை அவர் சந்தித்திருப்பார்.
சுக்ரா ஹுமாயுன் மிர்சாவின் போராட்டம் , வரவிருக்கும் தலைமுறைப் பெண்களுக்கு வலுவான அடித்தளத்தை அமைத்தது. அவரது எழுத்துகள், சமூகப் பணிகள் மற்றும் நிர்வாகத்திறன், குறிப்பாக தக்காணப் பகுதியில் உள்ள சிறுமிகளின் வாழ்க்கையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அவர்களது கல்விக்கு ஊக்கம் கிடைத்தது. பல பெண்கள் பேசுவதற்கு பேனாவின் பாதையைத் தேர்ந்தெடுத்தனர். நிறைய பெண்கள் சமூகப் பணிகளில் சேர்ந்தனர். அவர்கள் இன்றும் ஊக்கத்தின் ஆணிவேராக உள்ளனர்.
சுக்ரா 1884 ஆம்ஆண்டு, ஹைதராபாதில் பிறந்தார். அவர் மரியம் பேகம் மற்றும் டாக்டர் சஃப்தர் அலி ஆகியோரின் மகள். அவரது மூதாதையர்கள், இரான் மற்றும் துருக்கியிலிருந்து வந்தவர்கள். ஆனால் அவர் தனது தாயகமாக, தக்காணத்தை ஏற்றுக்கொண்டார். அதன் மேம்பாட்டிற்காக தன்னையே அர்பணித்துக்கொண்டார். அவரது தாயார் பெண்கள் கல்விக்கு மிகவும் உறுதுணையாக இருந்தார். சுக்ரா வீட்டிலேயே, உருது மற்றும் பாரசீக மொழிகளை கற்றார்.
பட்னாவைச் சேர்ந்த சையத் ஹுமாயூன் மிர்ஸா என்பவருடன் 1901ஆம் ஆண்டு அவருக்கு திருமணம் நடந்தது. ஹுமாயூன் மிர்ஸா ஒரு வழக்குரைஞர். லண்டனில் சட்டப் படிப்பை முடித்த அவர், ஹைதராபாதில் வழக்குரைஞர் தொழிலை நடத்தத் தொடங்கினார். அங்கு அவர் சில வழக்குரைஞர்கள் உதவியுடன், பெண்கள் தற்சார்புக்காக, அஞ்சுமான்-இ-தரக்கி-இ-நிஸ்வானுக்கு அடித்தளம் அமைத்தார்.
'வரலாற்றில் பெண்கள்' தொடரின் பிற கட்டுரைகள்:
- ரக்மாபாய் ரெளட்: கட்டாயத் திருமணத்துக்கு பதில் சிறை செல்லத் தயாரான பெண்
- சந்திர பிரபா சைக்கியானி: அஸ்ஸாமில் திரையிடும் வழக்கத்தை நீக்கிய போரா
- தேவதாசி முறையை ஒழிக்கப் போராடிய முத்துலட்சுமி ரெட்டி குறித்து தெரியுமா
- இந்திய பெண்ணியத்தின் வலுவான தூண் "ருகியா"
- இந்தர்ஜித் கௌர்: மத்திய பணியாளர் தேர்வாணையத்தின் முதல் பெண் தலைவர்
- அண்ணா சாண்டி: கேரளாவில் பெண்ணுரிமைக்காக நூற்றாண்டுக்கு முன்பு எழுந்த குரல்
அங்கு அவருக்கு சுக்ரா பற்றித்தெரிய வந்தது. அவருக்கு சுக்ரா மீது ஈர்ப்பு ஏற்பட்டது. திருமணத்திற்குப் பிறகு, அவர் சுக்ரா ஹுமாயூன் மிர்சா என்று அறியப்பட்டார். ஹுமாயூன் மிர்ஸா, பெண்கள் கல்வி மற்றும் சமூகப் பணிகளில் சுக்ரா பங்கேற்பதை ஆதரித்தார். இதன் காரணமாக, சுக்ரா எழுதுவதற்கும் படிப்பதற்கும் எந்த இடையூறும் ஏற்படவில்லை. அவர் சமூகப் பணிகளில் முழுமூச்சாக பங்கேற்கத் தொடங்கினார். ஹுமாயூன் மிர்சாவின் மரணத்திற்குப்பிறகு சுக்ரா எழுதிய கவிதை வரிகளிலிருந்து, அவர் தமது கணவர்மீது வைத்திருந்த அன்பு புலப்படுகிறது. "ஒரு மரணம் என்னை அழித்துவிட்டது... ஓ... மக்களே..." என்கிறார் அவர்.
ஹைதராபாத் தக்காணத்தின் முதல் பெண் பத்திரிகை ஆசிரியராக அவர் கருதப்படுகிறார். அன்-நிசா (பெண்) மற்றும் ஜெப்-உன்-நிசா ஆகிய இதழ்களின் ஆசிரியராக அவர் இருந்திருக்கிறார். இந்த இதழ்கள் ஹைதராபாத் மற்றும் லாகூரிலிருந்து வெளியிடப்பட்டன. இவை பெண்களின் வாழ்க்கையுடன் தொடர்பு கொண்டிருந்தன. இவற்றில் பெண்களின் சமூக நிலையை மேம்படுத்துவது குறித்து முக்கியமாக எழுதப்பட்டது. பெரும்பாலான கட்டுரைகள், பெண்களால் எழுதப்பட்டன. சுக்ராவின் பயண அனுபவங்களும், அவற்றில் இடம்பெற்றன. அன் - நிசாவின் முழுப்பொறுப்பும் அவரிடம் இருந்தது.

பட மூலாதாரம், BBC / கோபால் ஷூன்ய
அவர் 1919ஆம் ஆண்டில் தய்பா பேகத்துடன் இணைந்து, அஞ்சுமன்-இ-குவாதின்-இ-டெக்கனை உருவாக்கினார். இந்த அமைப்பு, பெண்கள் கல்விக்காக பணியாற்றியது. இது தவிர, அஞ்சுமன்-இ-குவாதின்-இ-இஸ்லாம், அகில இந்திய மகளிர் காங்கிரஸ் போன்றவற்றின் மூலம், பெண்களை ஒருங்கிணைக்கவும் அவர் பணியாற்றினார். சுதந்திர போராட்டத்தின் பல தலைவர்களுடன், குறிப்பாக சரோஜினி நாயுடுவுடன் அவருக்கு ஆழமான தொடர்பு இருந்தது.
1931இல் லாகூரில் நடைபெற்ற அகில இந்திய மகளிர் காங்கிரஸ் மாநாட்டில் அவர் கலந்துகொண்டார். அங்கு அவர் பெண் கல்வி, ஆண் கல்விக்கு சமமாக இருக்க வேண்டும் என்று வாதிட்டார். ஆண்கள், மனைவி இருக்கும்போது வேறொருவரை திருமணம் செய்யக்கூடாது என்று கோரினார். இது மட்டுமல்லாமல், பெற்றோர் தனது மகளை , முதல் மனைவி இருக்கும் ஓர் ஆணுக்குத் திருமணம் செய்து கொடுக்கக்கூடாது என்றும் அவர் வலியுறுத்திக்கேட்டுக்கொண்டார்.
சுக்ரா, தனியாகவும், ஹுமாயூன் மிர்ஸாவுடனும், உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும், விரிவாக பயணம் செய்தார். ஒரு பெண்ணின் கண்களால் உலகைப் பார்த்தார். ஐரோப்பா, இராக், டெல்லி, போபால் ஆகிய இடங்கள் குறித்து பயணக்கட்டுரைகளையும், பல புதினங்களையும் எழுதினார். கவிதைகளைப்படைத்தார்.
அவர் 1934ஆம் ஆண்டு, ஹைதராபாதில், முஸ்லிம் சிறுமிகளுக்காக, 'மதரஸா சஃப்தரியா' வை தொடங்கினார். இந்தப் பள்ளி இன்றும் 'சஃப்தரியா பெண்கள் உயர்நிலைப்பள்ளி' என்ற பெயரில் இயங்கி வருகிறது. பெண்களின் வாழ்க்கையை மேம்படுத்தவேண்டும் என்ற ஹுமாயுன் மிர்சாவின் கனவை நனவாக்கும் பணியில் முனைப்புடன் ஈடுபட்டுள்ளது.
அவரது முக்கிய படைப்புகளில், முஷிரேனிஸ்வான், மோகினி, சர்குஜஷ்தே, ஹாஜ்ரா, சஃப்ர்னாமா ஐரோப்பா, ரோஸ்னாமா டெல்லி மற்றும் போபால், சஃப்ரானாமா வால்டர், சேரே பீகார் வங்காளம், சஃப்ரானாமா இராக் , அரேபியா, மகாலாத்- இ- சுக்ரா ஆகியன அடங்கும்.
அவர் 1958இல் காலமானார். சுக்ரா ஹுமாயூன் மிர்ஸா தனது வாழ்க்கையில் இவற்றையெல்லாம் சாதிக்க, நிறைய தடைகளையும் கஷ்டங்களையும் சந்திக்க நேர்ந்தது. ஆயினும், அவரைப்போன்ற ஒரு சாதனையாளருக்கு வரலாற்றில் கிடைத்திருக்கவேண்டிய இடம், இன்று வரை கிடைக்கவில்லை.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:













