அமித் ஷா: எய்ம்ஸில் என்ன சிகிச்சை அளிக்கப்பட்டது? பிரணாப் முகர்ஜி உடல்நிலை என்ன?

பட மூலாதாரம், Getty Images
இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, கொரோனா பாதிப்புக்கு பிந்தைய சிகிச்சை முடிவடைந்து குணம் அடைந்துள்ளதாக அவருக்கு சிகிச்சை அளித்து வரும் எய்ம்ஸ் மருத்துவமனை தெரிவித்துள்ளது.
விரைவில் அவர் வீடு திரும்புவார் என்றும் எய்ம்ஸ் மருத்துவமனையின் ஊடகப்பிரிவு தலைவர் டாக்டர் ஆர்த்தி விஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், அமித் ஷாவுக்கு கொரோனா தொற்றுக்குப் பிந்தைய சிகிச்சை நடைமுறைகள் முடிவடைந்து விட்டதாகக் கூறிய எம்ய்ஸ் நிர்வாகம், அவருக்கு எத்தகைய சிகிச்சை அளிக்கப்பட்டது என்பதை தெளிவுபடுத்தவில்லை.

பட மூலாதாரம், AIIMS
முன்னதாக, கொரோனா பாதிப்புக்கு டெல்லியை அடுத்த குருகிராம் மருத்துவமனையில் சில வாரங்கள் சிகிச்சை பெற்று வந்த அமித் ஷா, பிறகு வீடு திரும்பி தனிமைப்படுத்திக் கொண்டிருந்த நிலையில், கடந்த ஆகஸ்ட் 18ஆம் தேதி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் திடீரென்று சேர்க்கப்பட்டார்.
அவர், உடல் சோர்வு, மற்றும் உடல் வலி இருப்பதாக கூறியதை அடுத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்ததாக கூறப்பட்டது. இந்த நிலையில், அமித் ஷாவுக்கான கொரனாவுக்கு பிந்தைய சிகிச்சை நிறைவடைந்து அவர் குணமடைந்து விட்டதாக எய்மஸ் மருத்துவமனை தெரிவித்துள்ளது.
தனியார் மருத்துவனையில் கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்ற வந்த அமித் ஷா, அதன் பிறகு டெல்லியில் உள்ள தமது இல்லத்துக்கு திரும்பினார். அங்கிருந்தபடி அவர் அமைச்சர் பொறுப்புகளை கவனித்து வந்ததாகக் கூறப்பட்டது. சமீபத்தில் நடந்து முடிந்த சுதந்திர தின நிகழ்விலும் அவர் பங்கேற்வில்லை.
இந்த நிலையில், கடந்த 18ஆம் தேதி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவரது உடல்நிலை தொடர்பான தகவல்கள் அவ்வப்போது சமூக ஊடகங்களில் நிலவி வந்தன. அவரது உடல்நிலை குறித்த தகவல்களை எய்ம்ஸ் நிர்வாகமும் தொடர்ச்சியாக வெளியிடாமல் தவிர்த்து வந்தது. இந்த நிலையில், அமித் ஷா குணம் அடைந்து விட்ட தகவலை எய்ம்ஸ் நிர்வாகம் உறுதிப்படுத்தியுள்ளது.
பிரணாப் முகர்ஜி நிலை என்ன?டெல்லி ராணுவ மருத்துவமனையில் இம்மாதம் 10ஆம் தேதி, சேர்க்கப்பட்ட குடியரசு முன்னாள் தலைவர் பிரணாப் முகர்ஜி, மூளை அறுவை சிகிச்சை மற்றும் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வவந்தார். அவரது உடல்நிலை திடீரென கவலைக்கிடமானதாக அறிவிக்கப்பட்டது. பிறகு கோமா நிலையில் இருப்பதாக கூறப்பட்டது.
இந்த நிலையில், அவரது சிறுநீரக செயல்பாட்டில் லேசான முன்னேற்றம் ஏற்பட்டு இருப்பதாக ராணுவ மருத்துவமனை இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது. மேலும், ஆழ்ந்த கோமா நிலையில் இருக்கும் அவருக்கு தொடர்ந்து வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.


பிற செய்திகள்:
- ஆட்சியர்கள், மருத்துவர்களுடன் முதல்வர் ஆலோசனை: இ பாஸ் நடைமுறை முடிவுக்கு வருமா?
- அதிமுக Vs பாஜக: யார் தலைமையில் கூட்டணி? தொடரும் சர்ச்சை
- பிரான்சில் இதுவரை இல்லாத அளவு தீவிரமடையும் கொரோனா பரவல்: மீண்டும் பொது முடக்கமா?
- இந்தர்ஜித் கௌர்: மத்திய பணியாளர் தேர்வாணையத்தின் முதல் பெண் தலைவர்
- ஐபிஎல் 2020: சிஎஸ்கே அணி வீரர், ஊழியர்கள் பலருக்கு கொரோனா
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












