தமிழ்நாடு இ பாஸ் நடைமுறை முடிவுக்கு வருமா? ஆட்சியர்கள், மருத்துவர்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை

பட மூலாதாரம், Facebook
தமிழ்நாட்டில் கடந்த மார்ச் மாதம் முதல் அமலில் உள்ள கொரோனா ஊரடங்கு செப்டம்பர் மாதம் நீட்டிக்கப்படுமா? இல்லையா? என்பது குறித்த ஆலோசனை தமிழ்நாடு அரசு தலைமை செயலகத்தில் இன்று நடைபெறுகிறது.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி இது குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மருத்துவ குழுவினருடன் ஆலோசனை நடத்துவார் என்று கூறப்பட்டுள்ளது. கூட்டத்தின் முடிவில் ஊரடங்கு குறித்தும், இ-பாஸ் நடைமுறை குறித்தும் முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மார்ச் மாதம் தொடங்கிய ஊரடங்கு ஆகஸ்ட் 31ஆம் தேதியுடன் முடியவுள்ள சூழலில், இந்த ஆலோசனை கூட்டம் பெரும் எதிர்பார்ப்பை மக்களிடம் ஏற்படுத்தியுள்ளது. போக்குவரத்து கட்டுப்பாடுகளை மத்திய அரசு தளர்த்திவிட்ட நிலையில், தமிழகத்தில் இ பாஸ் நடைமுறை செயல்பாட்டில் இருப்பது குறித்த விமர்சனங்கள் உள்ளன. இந்நிலையில், இந்த கூட்டத்தின் முடிவில் தனிநபர் மற்றும் பொது போக்குவரத்தில் தளர்வுகள் இருக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
அதே போல, மத வழிபாட்டுத் தலங்களுக்கு மக்கள் செல்வதற்கான கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுமா என்ற கேள்வியும் இருக்கிறது. வேளாங்கண்ணி பேராலய ஆண்டு பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கவுள்ள நிலையில் கொரோனா சூழல் காரணமாக பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. அதேபோல இந்து மதக் கோயில் தேரோட்டங்கள், இஸ்லாமியர் திருவிழாக்கள் என பல விழாக்களும் கட்டுப்பாடுகள் இதுநாள்வரை நீடித்தன. இந்த கட்டுப்பாடுகளில் தளர்வுகள் கொண்டுவரப்படலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

- கொரோனா சந்தேகங்கள்: முக்கிய கேள்விகளும் அதற்கான பதில்களும்
- கொரோனா வைரஸ்: உங்களை தற்காத்துக் கொள்வது எப்படி?
- கொரோனா வைரஸ் சிகிச்சைக்கு மருந்து எப்போது கிடைக்கும்?
- கொரோனா வைரஸ்: எந்தெந்த பரப்புகளில் எவ்வளவு நேரம் உயிர் வாழும்?
- கொரோனா வைரஸ் : இதுவே கடைசி கொள்ளை நோய் அல்ல
- கொரோனா வைரஸ்: கோவிட் - 19 பற்றி நமக்கு தெரியாத விஷயங்கள் என்ன?

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நான்கு லட்சத்தை கடந்துள்ள நிலையில், இறப்பு விகிதம் குறைந்துவருவதாக சுகாதாரதத் துறை தெரிவித்துள்ளதால், தளர்வுகள் அளிப்பதில் அரசு முனைப்பாக இருக்கும் என்று கருதப்படுகிறது.
ஊடகத்தினரிடம் பேசிய சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், சமீபத்தில் அளிக்கப்பட்ட இ பாஸ் தளர்வுக்கு பின்னர், சுமார் 3.25லட்சம் பேர் சென்னைக்கு திரும்பியுள்ளதாக தெரிவித்திருந்தார். அதேநேரம், தனிநபர் இடைவெளியை பின்பற்றுவதில் பொது மக்கள் கவனத்துடன் இருக்கவேண்டும் என்றும் வேண்டுகோள் வைத்துள்ளார்.
இந்தியா முழுவதும் ஜேஇஇ மற்றும் நீட் தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் பலரும்,தேர்வுகளை ரத்து செய்யக்கோரி சமூக வலைத்தளங்களில் பதிவிட்ட கருத்துகள் தேசிய அளவில் கவனத்தை ஈர்த்துள்ளன. தமிழகத்தைச் சேர்ந்த நீட் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு இது தொடர்பாக மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளதாக முதல்வர் பழனிசாமி தெரிவித்தார். மாணவர்கள் பலரும் பொது போக்குவரத்து இன்றி தேர்வுக்கு பயணிப்பது சிரமம் என்று தெரிவித்திருந்தனர்.


பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












