கொரோனா வைரஸ்: பிரான்சில் புதிய உச்சத்தை நோக்கி செல்லும் நோய்த்தொற்று - மீண்டும் பொது முடக்கமா? மற்றும் பிற செய்திகள்

பட மூலாதாரம், Reuters
பிரான்சில் கடந்த மார்ச் மாதம் முதல் இதுவரை இல்லாத அளவுக்கு தினசரி கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், அங்கு மீண்டும் பொது முடக்கம் அமல்படுத்தப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதற்கு முன்புவரை, கடந்த மார்ச் 31ஆம் தேதி 7,578 பேருக்கு நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டதே அதிகபட்ச தினசரி பாதிப்பாக இருந்து வந்த நிலையில், நேற்று ஒரே நாளில் 7,379 பேருக்கு நோய்த்தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், பிரான்சில் இதுவரை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,67,077 பேராக அதிகரித்துள்ளது.
பிரான்சில் கொரோனா வைரஸ் பரவல் "அதிவேகமாக" அதிகரித்து வருவதாக அந்த நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கடந்த புதன்கிழமை 5,429 பேருக்கும், வியாழக்கிழமை 6,111 பேருக்கும் நோய்த்தொற்று உறுதியான நிலையில் அவற்றை விட அதிகமான எண்ணிக்கை நேற்று பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நோய்த்தொற்று மீண்டும் அதிவேகமாக அதிகரித்தாலும், பாதிக்கப்படுபவர்களில் பெரும்பாலானோர் இளைஞர்கள் என்பதால் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவர்களின் எண்ணிக்கையும், இறப்பவர்களின் எண்ணிக்கையும் கட்டுக்குள்ளேயே இருப்பதாக அந்த நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சகம் மேலும் தெரிவித்துள்ளது.
பிரான்சில் கோவிட்-19 நோய்த்தொற்று பாதிப்பின் காரணமாக நேற்று உயிரிழந்த 20 பேரையும் சேர்த்து இதுவரை இறந்தவர்களின் எண்ணிக்கை 30,596 என்ற புதிய உச்சத்தை அடைந்துள்ளது.

- கொரோனா சந்தேகங்கள்: முக்கிய கேள்விகளும் அதற்கான பதில்களும்
- கொரோனா வைரஸ்: உங்களை தற்காத்துக் கொள்வது எப்படி?
- கொரோனா வைரஸ் சிகிச்சைக்கு மருந்து எப்போது கிடைக்கும்?
- கொரோனா வைரஸ்: எந்தெந்த பரப்புகளில் எவ்வளவு நேரம் உயிர் வாழும்?
- கொரோனா வைரஸ் : இதுவே கடைசி கொள்ளை நோய் அல்ல
- கொரோனா வைரஸ்: கோவிட் - 19 பற்றி நமக்கு தெரியாத விஷயங்கள் என்ன?

வெள்ளிக்கிழமையன்று நோய்த்தொற்று பாதிப்பு குறித்த விவரங்கள் வெளியிடுவதற்கு சற்று முன்னதாக பேசிய அந்த நாட்டின் அதிபர் இம்மானுவேல் மக்ரோங், நோய்த்தொற்று பரவல் கட்டுப்பாட்டை மீறிவிட்டால் இரண்டாவது முறையாக நாடு தழுவிய பொது முடக்கத்தை அமல்படுத்துவதை தவிர்க்க முடியாது என்று கூறினார்.
ஏற்கனவே மோசமான நிலையிலுள்ள நாட்டின் பொருளாதாரம் மீண்டு வந்துகொண்டிருக்கும் நிலையில், அதற்கு தடையாக கட்டுப்பாடுகளை மீண்டும் அமல்படுவதை தவிர்க்க தனது அரசு முயற்சித்து வருவதாக அவர் மேலும் கூறினார்.
"பரவலை கட்டுப்படுத்துவதே கொரோனா வைரஸுக்கு எதிரான நடவடிக்கைகளில் மிகவும் முக்கியமானது. இதில் மக்களின் பங்களிப்பு மிகவும் அவசியம்" என்று மக்ரோங் தெரிவித்துள்ளார்.

வசந்தகுமார் காலமானார் - கொரோனா பாதிப்புக்கு பலியான முதல் எம்.பி

பட மூலாதாரம், VASANTHAKUMAR / FB
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த காங்கிரஸ் எம்.பியும் வசந்த் அன்ட் கோ உரிமையாளருமான வசந்தகுமார் வெள்ளிக்கிழமை மாலை காலமானார்.
இந்தியாவில் கொரோனா தொற்றால் உயிரிழந்த முதலாவது நாடாளுமன்ற உறுப்பினராகியிருக்கிறார் வசந்தகுமார். இதற்கு முன்பு இந்தியாவிலேயே கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்த முதலாவது சட்டமன்ற உறுப்பினராக திமுகவைச் சேர்ந்த ஜே. அன்பழகன் இருந்தார்.
விரிவாகப் படிக்க: வசந்தகுமார் காலமானார் - கொரோனா பாதிப்புக்கு பலியான முதல் எம்.பி

சிஎஸ்கே அணி வீரர், ஊழியர்கள் பலருக்கு கொரோனா

பட மூலாதாரம், Getty Images
இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2020 போட்டிகள் தொடங்க இன்னும் நான்கு வாரங்களே எஞ்சியுள்ள நிலையில், சென்னை சிஎஸ்கே அணியைச் சேர்ந்த ஒரு வீரர் மற்றும் ஊழியர்கள் பலருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
விரிவாகப் படிக்க: ஐபிஎல் 2020: சிஎஸ்கே அணி வீரர், ஊழியர்கள் பலருக்கு கொரோனா

மலேசியாவில் புதிய வைரஸ் திரள்

பட மூலாதாரம், Getty Images
'சிவகங்கா வைரஸ் திரள்' (Cluster) போலவே மற்றொரு வைரஸ் திரள் கண்டறியப்பட்டது மலேசியாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இவ்விரு வைரஸ் திரள்களின் மூலப்பிறப்பிடம் ஒன்றாக இருக்கலாம் என மலேசிய சுகாதார அமைச்சு கருதுகிறது.

ஐடி நிறுவனங்களில் தொடரும் பணி நீக்கம், என்ன காரணம்?

பட மூலாதாரம், Getty Images
40 வயதாகும் சந்துரு, கொரோனா ஊரடங்கு காலத்தில் சென்னையில் உள்ள ஒரு பிரபலமான ஐடி நிறுவனத்தில் இருந்து பணிநீக்கம் செய்யப்பட்டார். கடந்த 18 ஆண்டுகளாக ஐடி ஊழியராக பணியாற்றிய சந்துரு, பணி நீக்கத்தை எதிர்த்து தற்போது தொழிலாளர் நீதிமன்றத்தை நாடியுள்ளார்.
விரிவாக படிக்க: கொரோனா: ஐடி நிறுவனங்களில் தொடரும் பணி நீக்கம் என்ன காரணம்?


பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












