கொரோனா தடுப்பு நடவடிக்கையில் ஐ.நா விருதை பெறுகிறது கேரளா

கேரளா

பட மூலாதாரம், Getty Images

முக்கிய இந்திய நாளிதழ்களில், இன்று வெளியான பிரதான செய்திகள், தலையங்க கட்டுரைகள் ஆகியவற்றில் சிலவற்றைத் தொகுத்து வழங்கியுள்ளோம்.

தினத்தந்தி - கொரோனா தடுப்பு நடவடிக்கையில் ஐ.நா விருதை பெறுகிறது கேரளம்

தொற்றில்லா நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு பணிகளில் சிறப்புடன் பங்காற்றியதற்காக கேரளாவுக்கு இந்த ஆண்டுக்கான ஐ.நா. விருது வழங்கப்படுகிறது என உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானம் அறிவித்துள்ளார் என்கிறது தினத்தந்தியின் செய்தி.

உலகம் முழுவதுமுள்ள 7 சுகாதார அமைச்சகங்களில் கேரளாவும் தேர்வு பெற்றுள்ளது. நோய் கட்டுப்பாடு, சிகிச்சை மற்றும் இலவச சேவை ஆகிய பணிகளில் சிறப்புடன் பங்காற்றியதற்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில், கேரளா இந்த ஆண்டுக்கான விருதுக்கு தேர்வு செய்யப்பட்டு உள்ளது.

உலக சுகாதார அமைப்பு ஆண்டு தோறும் இதற்காக சில நாடுகளை தேர்வு செய்து விருது வழங்கி வருகிறது. இந்த ஆண்டு விருதுக்கு ரஷ்யா, பிரிட்டன், மெக்சிகோ, நைஜீரியா, அர்மேனியா போன்ற நாடுகளுடன் கேரள சுகாதார அமைச்சகமும் தேர்வு பெற்றுள்ளது என விவரிக்கிறது அச்செய்தி.

தினமணி - தேர்தல் அறிவிப்பு

பிகார் சட்டப்பேரவைத் தோ்தல் அக்டோபா் 28-ஆம் தேதி, நவம்பா் 3 மற்றும் 7-ஆம் தேதிகளில் மூன்று கட்டங்களாக நடைபெறவுள்ளதாகத் தோ்தல் ஆணையம் அறிவித்துள்ளது. நவம்பா் 10-ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என்கிறது தினமணியின் செய்தி.

நாட்டில் கரோனா நோய்த்தொற்று பரவி வரும் சூழலில், பிகாரில் பாதுகாப்பான முறையில் தோ்தலை நடத்துவதற்குத் தோ்தல் ஆணையம் திட்டமிட்டது. இந்நிலையில், பேரவைத் தோ்தல் குறித்த விவரங்களை தலைமை தோ்தல் ஆணையா் சுனில் அரோரா வெள்ளிக்கிழமை வெளியிட்டார்.

தோ்தல் பிரசாரக் கூட்டங்களில் தனிமனித இடைவெளி முறையாகப் பின்பற்றப்பட வேண்டும். தோ்தல் சமயத்தில் சமூக வலைதளங்கள், ஊடகங்கள் உள்ளிட்டவற்றின் வாயிலாக வதந்திகளைப் பரப்புவது, மதம் சார்ந்து வன்முறைகளைத் தூண்டுவது ஆகியவற்றில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தேர்தல் ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது என்கிறது அச்செய்தி.

இந்து தமிழ் திசை - பள்ளிகள் திறக்கப்படுவது ஏன்?

பாடம் தொடர்பான சந்தேகங்களை போக்கிக் கொள்ளவே அக்டோபர் 1-ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படுகின்றன. அனைத்து மாணவர்களுக்குமான பள்ளிகள் திறப்பு குறித்து முதல்வர் முடிவுசெய்து அறிவிப்பார் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்துள்ளார் என்கிறது இந்து தமிழ் திசை செய்தி.

ஈரோட்டில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கரோனா ஊரடங்கு காரணமாக பள்ளிகள் இயங்காத நிலையில், பாடத்திட்டத்தை குறைப்பது குறித்த அறிக்கை முதல்வரிடம் வழங்கப்பட்டுள்ளது. அதில், மேலும் பாடங்களைக் குறைக்கலாமா என்பது குறித்து முதல்வர் ஆய்வு செய்வார். பள்ளிகளில் மாணவர் சேர்க்கை இந்த மாதம் இறுதி வரை நடைபெறும். தேவைப்பட்டால் மாணவர் சேர்க்கை நீட்டிக்கப்படும் என தெரிவித்தார் என்கிறது அச்செய்தி.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :