எஸ்.பி. பாலசுப்ரமணியம் உடல் இன்று அரசு மரியாதையுடன் அடக்கம் - கட்டுப்பாடுகளுடன் அஞ்சலி செலுத்த அனுமதி

எஸ்பிபி

பட மூலாதாரம், SPB/ FB

சென்னையில் உடல்நலக்குறைவால் வெள்ளிக்கிழமை பகல் 1 மணிக்கு காலமான எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல் சனிக்கிழமை (செப்டம்பர் 26) நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.

பொதுமக்கள் அஞ்சலி செலுத்த வர வேண்டாம் என கூறப்பட்டிருந்த நிலையில் தற்போது கட்டுப்பாடுகளுடன் அஞ்சலி செலுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமூக இடைவெளியை கடைபிடித்து, 100 பேருக்கு மிகாமல் அஞ்சலி செலுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பரவல் கட்டுப்பாடுகள் நாடு முழுவதும் அமலில் உள்ள நிலையில், இறுதி நிகழ்ச்சிகளில் அதிகபட்சமாக 100 பேர் மட்டுமே பங்கேற்க வேண்டும் என்று இந்திய அரசும், தமிழக அரசும் ஏற்கெனவே கட்டுப்பாடுகளை விதித்துள்ளன.

இந்த நிலையில், சென்னை நுங்கம்பாக்கம் இல்லத்தில் ஆயிரக்கணக்கில் எஸ்.பி.பியின் ரசிகர்கள், திரைத்துறையினர் அஞ்சலி செலுத்த வந்ததால் கூட்டத்தை காவல்துறையினரால் கட்டுப்படுத்த முடியவில்லை.

இதனால், அங்கு தொடர்ந்து எஸ்.பி.பியின் உடலை வைத்திருக்காமல் அவரது இறுதிநிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தாமரைப்பாக்கம் பண்ணை வீட்டுக்கு கொண்டு செல்லுமாறு எஸ்.பி.பி குடும்பத்துக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டது.

இதையடுத்து, அவரது உடல் வெள்ளிக்ககிழமை 7.45 மணிக்கு அவசரஊர்தி வாகனம் மூலம் தாமரைப்பாக்கத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. வழி நெடுகிலும் எஸ்.பி.பி ரசிகர்கள், அவரது உடலை சுமந்து சென்ற அவசர ஊர்தி வாகனத்தை செல்பேசிகளில் பதிவு செய்தபடி காணப்பட்டனர்.

திருவள்ளூர் காவல்துறை கட்டுப்பாடு

இந்த நிலையில், எஸ்.பி.பி உடல் அடக்கம் செய்யப்படும் நிகழ்ச்சிக்கு சனிக்கிழமை பொதுமக்கள் வர வேண்டாம் என்று திருவள்ளூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அரவிந்தன் அறிவுறுத்தியுள்ளார்.

கொரோனா பரவல் கட்டுப்பாடுகளை கவனத்தில் கொண்டும் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையிலும் எஸ்.பி.பியின் இறுதி நல்லடக்கம் அமைதியாக நடைபெற ஒத்துழைப்பு தருமாறும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

அரசு மரியாதையுடன் நல்லடக்கம்

இதற்கிடையே, எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் உடல், அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

இது தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு மட்டுமின்றி இந்திய மக்கள் அனைவரின் மனங்களிலும் நீங்கா இடம் பிடித்த எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் புகழுக்கு பெருமை சேர்க்கும் வகையில் அவருக்கு காவல்துறை மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார்.

இதன்படி தமிழக காவல்துறையின் ஆயுதப்படையினர் அணிவகுத்து துப்பாக்கி குண்டுகள் முழங்க மரியாதை செலுத்திய பிறகு, எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் உடல் அடக்கம் செய்யப்படவுள்ளது.

பொதுவாக மிகப்பெரிய தலைவர்கள், சமூகத்தில் அங்கீகரிக்கப்பட்ட மிகப்பெரிய பிரபலங்கள் ஆகியோருக்கு மட்டுமே முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்ய அரசு உத்தரவு பிறப்பிக்கும். திரைத்துறையில், எந்த அரசுப் பொறுப்பும் வகிக்காதபோதும், நடிகர் சிவாஜி கணேசன் இறந்தபோது அவருக்கு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்ய தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. அதன் பிறகு அந்த கெளரவம் எஸ்.பி. பாலசுப்ரமணியத்துக்கு வழங்கப்படுகிறது.

கர்நாடகா அரசு மரியாதை

எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் மறைவுக்கு மரியாதை தெரிவிக்கும் வகையில், கர்நாடகா அரசு ஒரு நாள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று தெரிவித்தது. இதையொட்டி அங்கு அரசு கட்டடங்களில் உள்ள தேசிய மூவர்ண கொடி அரை கம்பத்தில் வெள்ளிக்கிழமை பறக்க விடப்பட்டது.

கர்நாடகா

பட மூலாதாரம், KARNATAKA GOVT

படக்குறிப்பு, எஸ்.பி.பி மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் தேசியகொடியை வெள்ளிக்கிழமை அரை கம்பத்தில் பறக்க விடுமாறு கர்நாடகா அரசு பிறப்பித்த உத்தரவு

சிஎஸ்கே அணி கிரிக்கெட் வீரர்கள் மரியாதை

பாடகர் எஸ்பிபிக்கு மரியாதை செலுத்தும் வகையில் இன்று நடைபெற்று வரும் டெல்லி Vs சென்னை சிஎஸ்கே அணி இடையிலான போட்டியில், சிஎஸ்கே அணியினர், கறுப்பு நிற பட்டை அணிந்து விளையாடி வருகிறார்கள்.

ரசிகர்கள் கண்ணீர் அஞ்சலி

முன்னதாக, வெள்ளிக்கிழமை பிற்பகல் சென்னை நுங்கம்பாக்கத்தில் வைக்கப்பட்டிருந்த எஸ்.பி.பி உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினார்கள். அவரது ரசிகர்கள், திரையுலகினர், அரசியல் தலைவர்கள் மற்றும் முக்கிய பிரபலங்கள் அஞ்சலி செலுத்தினார்கள்.

கொரானா பரவல் கட்டுப்பாடுகள் காரணமாக பல பிரபலங்கள் நேரில் வருகை தராதபோதும், சமூக ஊடக பக்கங்கள் வழியாக தங்களின் இரங்கல் காணொளிகளை வெளியிட்டு வருகின்றனர்.

தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், திமுக இளைஞர் அணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட பிரபலங்கள் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

எஸ்.பி.பி மறைவை உறுதிப்படுத்திய எஸ்.பி. சரண்

முன்னதாக, எஸ்.பி.பி மறைவுத் தகவலை செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை பிற்பகல் உறுதிப்படுத்திய அவரது மகன் எஸ்.பி. சரண், "எஸ்.பி.பி எல்லோருடைய சொத்து. அவரது பாடல் இருக்கும்வரை அவர் இருப்பார். நீங்கள் எல்லோரும் இருக்கும்வரை எங்களுடைய அப்பா இருப்பார்" என்று தெரிவித்தார்.

இதற்கிடையே, வெள்ளிக்கிழமை பகல் 1 மணியை கடந்த நிலையில் அவரது உயிர் பிரிந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். தொடக்கத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர், பிறகு வைரஸ் தொற்று நீங்கிய பிறகு சிகிச்சை பெற்று வருவதாக கூறப்பட்டது. இதைத்தொடர்ந்து, நுரையீரல் உள்ளிட்ட பிற உறுப்புகளில் உள்ள தொற்று குணமடைவதற்காக சிகிச்சை பெற்று வந்தார்.

கொரோனா தொற்று இல்லை: பொதுமக்கள் அஞ்சலிக்கு அனுமதி

அவரது மறைவுச் செய்தி தொடர்பான தகவலை செய்தியாளர்களிடம் வெளியிட்ட எம்ஜிஎம் மருத்துவர், "சென்னையை அடுத்த தாமரைபாக்கத்தில் உள்ள அவரது சொந்த இடத்தில் இறுதிச்சடங்கு நடக்கிறது. எஸ்.பி.பிக்கு கொரோனா தொற்று இல்லை என்று மருத்துவமனை அறிக்கை வெளியிட்டிருக்கிறது. எனவே, பொதுமக்கள் அஞ்சலி செலுத்த தடை இல்லை" என்று தெரிவித்தார்.

மருத்துவமனை அறிக்கை என்ன கூறுகிறது?

கொரோனா பாதிப்பு அறிகுறியுடன் கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி எம்ஜிஎம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட எஸ்.பி.பி, தொடக்கத்தில் கவலைக்கிடமான நிலையில் இருந்து பிறகு வைரஸ் பாதிப்பில் இருந்து மீண்டு குணம் அடைந்து வந்ததாக கூறப்பட்டது.

இந்நிலையில் நேற்று அவரது உடல்நிலை மிகவும் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக மருத்துவமனை அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவரது உடல்நிலை கடந்த 24 மணி நேரத்தில் மிகவும் மோசமடைந்துள்ளதாகவும் உயிர்காக்கும் கருவிகளின் அதிகபட்ச உதவி அளிக்கப்பட்டு வருவதாகவும் அவர் சிகிச்சைபெற்றுவரும் எம்.ஜி.எம். மருத்துவமனை தெரிவித்தது.

எஸ்பிபி

கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி முதல் சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார் எஸ்.பி.பி. அப்போது வீடியோ ஒன்றை வெளியிட்ட எஸ்.பி. பாலசுப்ரமணியம், தான் நலமுடன் இருப்பதாகவும் யாரும் தொலைபேசியில் அழைத்து விசாரிக்க வேண்டாமென்றும் கூறியிருந்தார்.

அவருக்கு மிதமான அறிகுறிகளே இருந்த நிலையில், ஆகஸ்ட் 13ஆம் தேதியன்று இரவு அவரது உடல் நிலையில் பின்னடைவு ஏற்பட்டது.

மருத்துவமனை வளாகம்

இதையடுத்து அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டு, உயிர்காக்கும் கருவிகள் உதவியுடன் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதற்குப் பிறகு அவரது உடல்நிலை சிறிது சிறிதாக மேம்பட்டது. கொரோனா தொற்று பரிசோதனையில் நெகடிவ் என முடிவு வந்ததாக தெரிவிக்கப்பட்டது.

YouTube பதிவை கடந்து செல்ல
Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

YouTube பதிவின் முடிவு

இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை 1.04 மணிக்கு உயிரிழந்ததாக தனியார் மருத்துவமனை தெரிவித்துள்ளது.

ஆந்திர மாநிலம், நெல்லூரில் பிறந்த எஸ்.பி. பாலசுப்ரமணியம், 16 இந்திய மொழிகளில் 40,000க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியவர். அவருக்கு வயது 75.

தொடர்புடைய காணொளி

காணொளிக் குறிப்பு, எஸ்.பி.பி மரணம்: "போய் வாருங்கள் இசை சகாப்தமே"

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :