டாவோஸ் மாநாட்டில் டிரம்ப் தெரிவித்த கருத்துக்கள் உண்மையா?

- எழுதியவர், பிபிசி வெரிஃபை
சுவிட்சர்லாந்தின் டாவோஸில் நடைபெற்ற உலகப் பொருளாதார மன்றத்தில் , உலகத் தலைவர்கள் மத்தியில் ஆற்றிய தன்னிச்சையான உரையில், அதிபர் டிரம்ப் பல்வேறு சர்ச்சைக்குரிய கருத்துகளை முன்வைத்தார்.
டென்மார்க்கிடமிருந்து கிரீன்லாந்தைப் பெறுவதற்கான தனது விருப்பத்தை, அவர் ஒரு "சிறிய கோரிக்கை" என்று குறிப்பிட்டார் மற்றும் நேட்டோ அமைப்பில் அமெரிக்காவின் பங்களிப்பு, சீனாவில் காற்றாலை ஆற்றல் ஆகியவை குறித்தும் டிரம்ப் பேசினார்.
ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த அவரது உரையில், பல தவறான கூற்றுகள் இடம் பெற்றிருந்தன. அவற்றை பிபிசி வெரிஃபை ஆய்வு செய்துள்ளது.
இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு அமெரிக்கா 'கிரீன்லாந்தைத் திருப்பிக் கொடுத்ததா'?
கிரீன்லாந்தை அமெரிக்காவுடன் இணைத்துக்கொள்ளும் தனது விருப்பத்தைப் பற்றி அதிபர் டிரம்ப் பல வாரங்களாகப் பேசி வருகிறார்.
டென்மார்க்கின் தன்னாட்சி அதிகாரம் கொண்ட ஒரு பகுதியான கிரீன்லாந்து, அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பிற்கு மிகவும் முக்கியமானது என்று அவர் கூறியுள்ளார்.
டாவோஸ் மாநாட்டில் அவர் பேசுகையில், இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு "நாங்கள் கிரீன்லாந்தை மீண்டும் டென்மார்க்கிற்கே கொடுத்துவிட்டோம்" என்று குறிப்பிட்டதோடு, "நாங்கள் அதைச் செய்தது எவ்வளவு பெரிய முட்டாள்தனம்?" என்றும் கூறினார்.
ஆனால், அதை திருப்பிக் கொடுக்க அது அமெரிக்காவுக்கு சொந்தமானது அல்ல.
1933-ல், தற்போதைய சர்வதேச நீதிமன்றத்தின் முன்னோடியாக இருந்த ஒரு சர்வதேச நீதிமன்றம், கிரீன்லாந்து டென்மார்க்கிற்குச் சொந்தமானது என்று தீர்ப்பளித்தது.
1941-ல் அதற்கு முந்தைய ஆண்டு டென்மார்க் ஜெர்மனியிடம் சரணடைந்ததைத் தொடர்ந்து நாஜிக்கள் கிரீன்லாந்தைக் கைப்பற்றுவதைத் தடுப்பதற்காக, அதைப் பாதுகாக்கும் உரிமையை அமெரிக்காவிற்கு வழங்கும் ஒப்பந்தத்தில் அமெரிக்க மற்றும் டென்மார்க் பிரதிநிதிகள் கையெழுத்திட்டனர்.
இது அந்தத் தீவில் அமெரிக்க ராணுவத் தளங்கள் அமைக்கப்படுவதற்கும், அமெரிக்கப் படைகள் அங்கு நிலைநிறுத்தப்படுவதற்கும் வழிவகுத்தது.
இருப்பினும், இந்த ஒப்பந்தத்தில் இறையாண்மை மாற்றம் எதுவும் இடம்பெறவில்லை. அதாவது, கிரீன்லாந்து ஒருபோதும் அமெரிக்காவின் எல்லைக்குட்பட்ட பகுதியாக மாறவில்லை.
நேட்டோவின் பாதுகாப்பில் 'கிட்டத்தட்ட 100%' செலவை அமெரிக்கா ஏற்கிறதா?
நேட்டோ அமைப்பை விமர்சித்த அமெரிக்க அதிபர், "நேட்டோவின் செலவில் கிட்டத்தட்ட 100 சதவீதத்தை அமெரிக்காவே செலுத்துகிறது" என்று கூறினார்.
அந்த ராணுவக் கூட்டணியில் உள்ள நாடுகளின் பங்களிப்பு குறித்து அவர் கூறுகையில், "அவர்கள் இதற்கு முன் 2 சதவீதத்தைச் செலுத்தவில்லை, ஆனால் இப்போது 5 சதவீதத்தைச் செலுத்துகிறார்கள்" என்றார்.
இந்த இரண்டு கூற்றுகளுமே சரியானவை அல்ல.
சமீபத்திய ஆண்டுகளில், நேட்டோ நாடுகளின் மொத்த பாதுகாப்புச் செலவில் அமெரிக்காவின் பங்களிப்பு சுமார் 70 சதவீதமாக இருந்தது.
2024-ல் இது 65 சதவீதமாகக் குறைந்தது.
மேலும், 2025-ஆம் ஆண்டில் இது 62 சதவீதமாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. ஏனெனில், முதல் முறையாக அனைத்து நேட்டோ உறுப்பு நாடுகளும் தங்கள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் குறைந்தது 2 சதவீதத்தைப் பாதுகாப்புக்காகச் செலவிடத் தொடங்கியுள்ளன.
பாதுகாப்புக்காக உறுப்பு நாடுகள் அதிக நிதியை ஒதுக்க வேண்டும் என்று அமெரிக்க அதிபர் ஒப்புக்கொள்ள வைத்துள்ளார் என்பது உண்மைதான். ஆனால், டிரம்ப் குறிப்பிடும் அந்த 5 சதவீத இலக்கு என்பது 2035-ஆம் ஆண்டிற்குள் அடையப்பட வேண்டிய நீண்டகால இலக்காகும்.
தற்போது, எந்தவொரு நேட்டோ உறுப்பு நாடும் அந்த அளவுக்குச் செலவிடவில்லை. பாதுகாப்புக்காகத் தனது ஜிடிபியில் அதிகபட்சமாகச் செலவிடும் நாடான போலந்து கூட, 2025-ல் 4.5 சதவீதத்திற்கும் சற்றுக் குறைவாகவே செலவிட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
நேட்டோவிடமிருந்து அமெரிக்கா எதையும் பெறவில்லையா?
நேட்டோவிடமிருந்து அமெரிக்கா "எதையும் பெறவில்லை" என்றும் "நாங்கள் எதையும் கேட்கவில்லை" என்றும் டிரம்ப் கூறினார்.
நேட்டோ இணையதளத்தின்படி, "கூட்டுப் பாதுகாப்பு என்பது நேட்டோவின் மிக அடிப்படையான கொள்கை" ஆகும். அதன் நிறுவன ஒப்பந்தத்தின் 5-வது பிரிவு , "நேட்டோ உறுப்பு நாடொன்றின் மீது நடத்தப்படும் ஆயுதமேந்திய தாக்குதல், அனைத்து உறுப்பு நாடுகளின் மீதும் நடத்தப்பட்ட தாக்குதலாகக் கருதப்படும்" என்று கூறுகிறது.
வரலாற்றில் நேட்டோ கூட்டணியின் 5-வது பிரிவை பயன்படுத்திய நாடு அமெரிக்கா மட்டுமே. செப்டம்பர் 11 (9/11) தாக்குதலுக்குப் பிறகு அமெரிக்கா இதனைச் செய்தது.
அதனைத் தொடர்ந்து ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா தலைமையிலான போருக்கு நேட்டோ நாடுகள் தங்கள் படைகளையும் ராணுவத் தளவாடங்களையும் வழங்கின.
அவ்வாறு பங்களித்த நாடுகளில் டென்மார்க்கும் ஒன்று.
இந்தப் போரில் அமெரிக்காவின் நட்பு நாடுகளில், மக்கள் தொகை விகிதாசாரப்படி அதிக உயிரிழப்புகளைச் சந்தித்த நாடுகளில் டென்மார்க்கும் அடங்கும்.
ஹெல்மண்ட் மாகாணத்தில் பிரிட்டிஷ் படைகளுடன் இணைந்து, கடுமையான போர் நடந்த பகுதிகளில் டென்மார்க் படைகள் பெருமளவில் நிலைநிறுத்தப்பட்டன.

பட மூலாதாரம், Getty Images
சீனாவில் காற்றாலைகள் இல்லையா?
டிரம்ப் காற்றாலை ஆற்றலையும் விமர்சித்தார்.
இது அவருக்குப் பழகிப்போன ஒரு இலக்கு, இதை அவர் "புதிய பசுமை மோசடி" என்று குறிப்பிட்டார்.
சீனா அதிக காற்றாலைகளைத் தயாரித்தாலும், தன்னால் "சீனாவில் எந்தவொரு காற்றாலைப் பண்ணையையும் கண்டுபிடிக்க முடியவில்லை" என்று சீனாவைக் குறிப்பிட்டு அவர் கூறினார்.
உண்மையில், உலகின் மிகப்பெரிய காற்றாலைப் பண்ணைகளில் ஒன்றான கான்சு சீனாவில் தான் உள்ளது.
இதனை விண்வெளியிலிருந்தே காண முடியும்.
'அவர் வேர்ல்ட் இன் டேட்டா' அமைப்பின் தரவுகளின்படி, உலகில் மற்ற நாடுகளை விட சீனா அதிக காற்றாலை ஆற்றலை உற்பத்தி செய்கிறது. 2024-ஆம் ஆண்டில் சீனா காற்றாலை மூலம் 997 டெராவாட் மணிநேரம் மின்சாரத்தை உற்பத்தி செய்ததாக அதன் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
இது அமெரிக்காவின் உற்பத்தியை விட இரண்டு மடங்கு அதிகம் . அமெரிக்கா இந்தப் பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ளது.

வட கடல் எண்ணெய் வருவாயில் 92% பிரிட்டன் எடுத்துக்கொள்கிறதா?
பிரிட்டனின் எரிசக்தி கொள்கைகளை விமர்சித்த அதிபர் டிரம்ப், அந்த நாட்டையும் குறிப்பிட்டுப் பேசினார்.
வடகடல் எண்ணெய் வளம் குறித்துப் பேசிய டிரம்ப் , "அவர்கள் [பிரிட்டன்] எண்ணெய் நிறுவனங்கள் செயல்படுவதைச் சாத்தியமற்றதாக்குகிறார்கள், வருவாயில் 92 சதவீதத்தை அவர்கள் எடுத்துக் கொள்கிறார்கள்," என்று தவறாகக் குறிப்பிட்டார்.
உண்மையில், வடகடலில் இயங்கும் எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனங்கள் அவற்றின் லாபத்தில் 30% கார்ப்பரேட் வரியையும், கூடுதலாக 10% கூடுதல் வரியையும் செலுத்துகின்றன.
இது மற்ற பெரிய நிறுவனங்கள் செலுத்தும் 25% கார்ப்பரேட் வரியை விட அதிகமாகும்.
நவம்பர் 2024-ல், எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனங்கள் மீதான 'விண்ட்ஃபால் வரியை ' அரசாங்கம் 35 சதவீதத்திலிருந்து 38 சதவீதமாக உயர்த்தியது.
இதன் மூலம் வடகடல் எண்ணெய் மீதான மொத்த வரி 78 சதவீதமாக உயர்ந்துள்ளது. முக்கியமாக, இந்த வரி லாபத்தின் மீதே விதிக்கப்படுகிறது, வருவாயின் மீது அல்ல.
எரிசக்தி கட்டண உயர்விற்குப் பதிலடியாக 2022-ல் கன்சர்வேடிவ் கட்சியினரால் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த 'விண்ட்ஃபால் வரி', 2030-ஆம் ஆண்டில் முடிவுக்கு வர உள்ளது.
அமெரிக்காவிற்கு 18 டிரில்லியன் டாலர் மதிப்புள்ள முதலீடுகளை டிரம்ப் பெற்றுத் தந்தாரா?
அமெரிக்காவிற்காகத் தனது நிர்வாகம் பெற்றுள்ள முதலீடுகளைப் பற்றியும் அதிபர் டிரம்ப் பேசினார்.
அவர் கூறுகையில், "சாதனை அளவாக 18 டிரில்லியன் டாலர் முதலீட்டிற்கான உறுதிமொழிகளை நாங்கள் பெற்றுள்ளோம்," என்றும், பின்னர் மீண்டும், "18 டிரில்லியன் டாலர் முதலீடு செய்யப்பட்டுள்ளது," என்றும் கூறினார்.
டிரம்ப் இதற்கு முன்பும் இதே போன்ற கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
கடந்த அக்டோபர் மாதம் அமெரிக்கா 17 டிரில்லியன் டாலர் (12.7 டிரில்லியன் யூரோ) மதிப்பிலான முதலீடுகளை ஈர்த்துள்ளதாக அவர் கூறினார்.
ஆனால் இவ்வளவு பெரிய தொகையை உறுதிப்படுத்தும் பொதுப்படையான சான்றுகள் எதுவும் இல்லை.
கடந்த நவம்பரில் கடைசியாகப் புதுப்பிக்கப்பட்ட வெள்ளை மாளிகை இணையதளம், "அமெரிக்க உற்பத்தி, தொழில்நுட்பம் மற்றும் உள்கட்டமைப்பில் புதிய முதலீடுகளை" கண்காணிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
அந்த இணையதளத்தின்படி, டிரம்ப் நிர்வாகத்தின் கீழ் செய்யப்பட்ட மொத்த முதலீடுகள் 9.6 டிரில்லியன் டாலர் (7.1 டிரில்லியன் யூரோ) மட்டுமே ஆகும்.
இந்தப் பட்டியலில் உள்ள மிகப்பெரிய தொகை, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உற்பத்தி மற்றும் தொழில்துறையில் மேற்கொண்டுள்ள 1.4 டிரில்லியன் டாலர் (1 டிரில்லியன் யூரோ) முதலீடாகும்.
வாஷிங்டன் டி.சியில் உள்ள ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தூதரகத்தின் இணையதளம், "அடுத்த பத்தாண்டுகளில் அமெரிக்காவில் 1.4 டிரில்லியன் டாலர் மதிப்பிலான வரலாற்றுச் சிறப்புமிக்க முதலீட்டைச் செய்ய டிரம்ப் நிர்வாகத்துடன் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இணைந்து செயல்பட்டு வருகிறது" என்று குறிப்பிடுகிறது.

பீட்டர்சன் சர்வதேச பொருளாதார நிறுவனத்தைச் சேர்ந்த புள்ளிவிவர நிபுணர் கிரெக் ஆக்லேர் பிபிசி வெரிஃபையிடம் கூறுகையில், வெள்ளை மாளிகையின் இந்தத் தரவுகள் "உண்மையில் நடைமுறைக்கு வராத வாக்குறுதிகளையும் உள்ளடக்கியிருக்கலாம்.
உதாரணமாக, கிரீன்லாந்து விவகாரத்தால் ஏற்பட்டுள்ள பதற்றங்கள் காரணமாக ஐரோப்பிய ஒன்றியத்துடனான வர்த்தக ஒப்பந்தம் தற்போது முடங்கியுள்ளது" என்று தெரிவித்தார்.
புதன்கிழமையன்று, ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் சர்வதேச வர்த்தகக் குழு, "அமெரிக்கா மோதலுக்குப் பதிலாக ஒத்துழைப்புப் பாதையைத் தேர்ந்தெடுக்கும் வரை" அந்த ஒப்பந்தத்தை உறுதிப்படுத்துவதை நிறுத்தி வைப்பதாக அறிவித்தது.
கடந்த ஆண்டில் அமெரிக்காவில் வெளிநாட்டு முதலீடுகள் அதிகரித்திருந்தாலும், "டிரம்ப் நிர்வாகத்தின் இந்த முதலீட்டு முயற்சிகளின் முடிவுகள் தெளிவாகத் தெரிய இன்னும் சில ஆண்டுகள் ஆகும்" என்று ஆக்லேர் தெரிவித்தார்.
செய்தி வழங்கியவர்கள்: டாம் எட்ஜிங்டன், லூசி கில்டர், மேட் மர்பி, நிக்கோலஸ் பாரெட் மற்றும் அந்தோணி ரூபன்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு












