நீட் தேர்வில் தனியார் பயிற்சி இன்றி வெற்றி: கோவை அரசுப் பள்ளி மாணவிகள் சாதித்தது எப்படி?

ரம்யா
    • எழுதியவர், பிரமிளா கிருஷ்ணன்
    • பதவி, பிபிசி தமிழ்

கோவையைச் சேர்ந்த இரண்டு அரசுப் பள்ளி மாணவிகள் எந்தவித தனியார் பயிற்சியும் இன்றி முதல் முறையில் நீட் தேர்வில் வெற்றிபெற்றுள்ளனர்.

மருத்துவ படிப்பிற்கான கட்டாய நுழைவு தேர்வான நீட் தேர்வை எதிர்கொள்ள ஆயிரக்கணக்கில் பணம் செலுத்தி படிக்கும் மாணவர்களுக்கு மத்தியில், இந்த இரண்டு மாணவிகளும் தனியார் பயிற்சி மையங்களின் உதவியின்றி தேர்வை எதிர்கொண்டுள்ளனர்.

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் உள்ள வெள்ளியங்காடு அரசு உயர்நிலைப் பள்ளியில் படித்த இந்த மாணவிகளுக்கு மருத்துவம் படிக்க சீட் கிடைக்கும் பட்சத்தில், இவர்களுக்கான படிப்பு செலவுக்கு உதவி செய்ய ஆசிரியர்களும் முன்வந்துள்ளனர்.

பிபிசி தமிழிடம் பேசிய மாணவி ரம்யா, இதயநோய் மருத்துவராக வேண்டும் என்பதே தனது லட்சியம் என்று குறிப்பிட்டார்.

பெற்றோர் இருவரும் கூலி வேலை செய்துவருவதாகவும், தனது இரண்டு இளைய சகோதரிகளுக்கும் தான் மட்டுமே வழிகாட்டியாக இருப்பதாகவும் மாணவி ரம்யா தெரிவித்தார். ரம்யா பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர்.

''இணையம் மூலம் தமிழக அரசு வழங்கும் பயிற்சியை பெற்றுக்கொள்வதற்கு செல்போன் கிடையாது. என்னிடம் உள்ள பள்ளிக்கூட புத்தங்களை மட்டுமே படித்தேன். நீட் தேர்வுக்காக வேறு புத்தகங்களை வாங்க முடியவில்லை. கொரோனா ஊரடங்கு காரணமாக ஆசிரியர்களை நேரில் சென்று சந்தேகங்களை கேட்டறிய முடியவில்லை. முழுகவனத்துடன் என்னிடம் உள்ள 11 மற்றும் 12ம் வகுப்பு மாநில அரசு பாடத் திட்டத்தில் உள்ள பகுதிகளை மட்டும் படித்திருந்தேன். நீட் தேர்வில் 145 மதிப்பெண் பெற்றுள்ளேன். மருத்துவ படிப்பில் சேருவேன் என நம்பிக்கையோடு இருக்கிறேன்,'' என்கிறார் ரம்யா.

தனியார் பயிற்சி இன்றி நீட் தேர்வில் வெற்றி

பட மூலாதாரம், Getty Images

மற்றொரு மாணவியான பிஸ்டிஸ் பிரிஸ்ஸா 167 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். இவர் பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர். தந்தை பிரபாகரன் தையல் தொழிலாளி. பிஸ்டிஸ் பிரிஸ்ஸாவும் ரம்யாவைப் போலவே 11 மற்றும் 12ம் வகுப்பு படங்களை நன்கு படித்துள்ளார். மேலும் பள்ளியில் அளிக்கப்பட்ட மாதிரி தேர்வு தாள்களை கொண்டு பயிற்சி செய்திருக்கிறார்.

ரம்யா மற்றும் பிஸ்டிஸ் பிரிஸ்ஸா நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளது பெற்றோர்களுக்கு மகிழ்ச்சி தருவதோடு, மாணவர்களுக்கு ஊக்கம் தருவதாகவும் உள்ளது என கூறுகிறார் அரசு பள்ளி தாவரவியல் ஆசிரியரான அயீஷா பேகம்.

''அரசு பள்ளி மாணவர்களுக்கு தேர்வுக்கான பாடங்கள் தமிழ் மொழியில் வழங்கப்படவேண்டும். நீட் தேர்வில் விலக்கு தற்போது கொடுக்கப்படவில்லை என்ற நிலையில், மாணவர்களுக்கு தேவையான பயிற்சியை மேலும் செம்மைப்படுத்தவேண்டும். அவர்களுக்கு அந்த பயிற்சி புத்தகங்கள் சென்று சேருவதை உறுதி செய்யவேண்டும். கோவை மாணவிகளின் சாதனை நமக்கு இதைதான் உணர்த்துகிறது. இதுபோன்ற மாணவிகளை ஊக்குவிப்பது அரசின் கடமை,'' என்றார் அயீஷா பேகம்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: