MI Vs KKIP: அடுத்தடுத்த சூப்பர் ஓவர்களில் நடந்தது என்ன? - ப்ளே ஆஃப் சுற்றுக்கு செல்லுமா சென்னை அணி?

கெயில்

பட மூலாதாரம், BCCI / IPL

ஐபிஎல் வரலாற்றில் நேற்றைய போட்டிகளை யாரும் எளிதில் மறந்துவிட முடியாது என்றே சொல்லலாம். அதுவும் இரண்டாவதாக நடைபெற்ற மும்பை மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டியில், ஐபிஎல் தொடர்களில் இதுவரை இல்லாத ஒரு பரபரப்பு என்றே சொல்ல வேண்டும்.

ஆம், நேற்றைய போட்டிகள் இரண்டுமே சூப்பர் ஓவர் போட்டிகளாக அமைந்தது, முதலில் ஐதராபாத் சன் ரைஸர்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டி சூப்பர் ஓவரில் முடிந்து கொல்கத்தா வெற்றி பெற அடுத்து நடைபெற்ற மும்பை இந்தியனஸ் மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையேயான போட்டி அடுத்தடுத்த இரு சூப்பர் ஓவருக்கு இட்டுச் சென்று ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

ஐபில் தொடரில் நேற்றைய போட்டியில் வலுவான அணியாக கருதப்படும் மும்பை இந்தியன்ஸ் அணி பஞ்சாப் கிங்க்ஸ் லெவன் அணியை எதிர்கொண்டது. பஞ்சாப் அணி, தொடர் தோல்விகளை சந்தித்திருந்தாலும், கெய்லின் வருகையும், கடந்த போட்டியில் பெங்களூரு அணியை வீழ்த்திய பெயரும் அது ’ஃபார்மில்’ உள்ள ஒரு அணி என்று பெயர் பெற்றிருந்தது.

இதை மேலும் உறுதி செய்யும் விதத்தில்தான் நேற்றையை போட்டியில் மும்பை அணியை வீழ்த்தியுள்ளது பஞ்சாப் அணி.

பரபரப்புக்கு பஞ்சமில்லை

மும்பை மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோஹித் மற்றும் குவிண்டன் டி-காக் களமிறங்கினர். ரோஹித் ஷர்மா 9 ரன்களில் அவுட் ஆக குவிண்டன் டி-காக் நின்று விளையாடினார். ஒருமுனையில் விக்கெட்டுகள் அடுத்தடுத்து விழுந்து கொண்டிருக்க நின்று விளையாடிய டி-காக் அரை சதம் கண்டார்.

பஞ்சாப் அணி

பட மூலாதாரம், BCCI / IPL

மும்பை அணி பவர் ப்ளேயின் முடிவில் மூன்று விக்கெட்டுகளை இழந்து வெறும் 43 ரன்களை எடுத்திருந்தது. அதன்பின் குவிண்டன் டி-காக்குடன் சேர்ந்து அடித்து ஆட தொடங்கிய க்ருனால் பாண்டியாவும் அவுட் ஆனார்.

அடுத்து வந்த ஹர்திக் பாண்டியாவும் ஒர் இலக்கத்தில் ரன் எடுத்து அவுட் ஆக, டி-காக்கின் விக்கெட்டையும் பறிகொடுத்தது மும்பை அணி. அதன்பின் ஜோடி சேர்ந்த பொல்லார்ட் மற்றும் நாதன், அணியின் ஸ்கோரை உயர்த்தினர். கடைசி மூன்று ஓவர்களில் அந்த இணை 58 ரன்களை எடுத்து அணியின் ஸ்கோரை 176ஆக உயர்த்தியது.

அதிரடி காட்டிய ராகுல்

177 ரன்கள் எடுத்தால் வெற்றி என களமிறங்கிய பஞ்சாப் அணியில் கேப்டன் கே.எல்.ராகுல் மற்றும் மயங்க் அகர்வால் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர்.

11 ரன்கள் எடுத்த நிலையில் மயங்க் அகர்வால் அவுட் ஆக பஞ்சாபின் அதிரடி ஆட்டக்காரர் கெயில் களமிறங்கினார். அவரது பாணியில் சிக்ஸர்களை அடித்து ஆட தொடங்கியபோது 24 ரன்களில் அவுட் ஆனார். பஞ்சாப் அணியிலும் எதிர்முனையில் ஆடியவர்கள் தொடர்ந்து அவுட் ஆகி கொண்டிருந்தாலும் கேப்டனாக பொறுப்புடன் செயல்பட்ட ராகுல் அரை சதம் கண்டார். மேக்ஸ்வெல் ரன் ஏதும் எடுக்காமல் அவுட் ஆனார்.

பின் கே.எல் ராகுல் 77 ரன்கள் எடுத்த நிலையில் பும்ரா வீசிய பந்தில் தனது விக்கெட்டை பறிக்கொடுத்தார்.

விறுவிறுப்பான கடைசி ஓவர்

பஞ்சாப் அணியின் ஜோர்டன் மற்று ஹுடா களத்தில் நிற்க கடைசி ஓவரில் அந்த அணிக்கு 9 ரன்கள் எடுக்க வேண்டிய சூழலில் கூடிய பரபரப்பு இரு சூப்பர் ஓவர்களுக்கு இட்டுச் சென்றபின்தான் அடங்கியது.

கடைசி ஒரு பந்தில் இரு ரன்கள் தேவைப்பட அந்த பந்தை எதிர்கொண்ட ஜோர்டன் இரண்டாவது ரன்னுக்கு ஓடும்போது ரன் அவுட் ஆனார். எனவே போட்டி டை ஆகி சூப்பர் ஓவருக்கு சென்றது.

அடுத்தடுத்த சூப்பர் ஓவர்கள்

மும்பை அணி

பட மூலாதாரம், BCCI / IPL

சூப்பர் ஓவரில், போட்டியில் இரண்டாவதாக விளையாடிய அணிதான் முதலில் ஆட வேண்டும் எனவே அந்த விதிப்படி பஞ்சாப் அணி முதலில் களமிறங்கியது அந்த அணியின் கே.எல்.ராகுல் மற்றும் பூரன் களமிறங்கினர். மும்பை அணி சார்பில் பும்ரா பந்து வீசினார்.

சூப்பர் ஓவரில் ரன் ஏதும் எடுக்காமல் பூரன் அவுட் ஆக, கடைசி பந்தை எதிர்கொண்ட ராகுல் அடித்து ஆட முயற்சி செய்தபோது அவரும் அவுட் ஆனார் எனவே அந்த அணி சூப்பர் ஓவரில் ஐந்து ரன்களை எடுத்தது.

மும்பை அணியின் சார்பாக கேப்டன் ரோஹித் மற்றும் டி-காக் களமிறங்கினர். பாஞ்சாப் அணியில் ஷமி பந்து வீசினார். சூப்பர் ஓவரிலும் ஒரு பந்தில் இரு ரன்கள் எடுக்க வேண்டும் என்ற நிலை வந்தது பந்தை எதிர்கொண்ட டி- காக், இரண்டாவது ரன்னுக்கு ஓட அவுட் ஆனார். எனவே முதல் சூப்பர் ஓவரும் டையில் முடிந்தது.

சூப்பர் ஓவர் 2.0

முந்தைய சூப்பர் ஓவரில் அவுட் ஆன வீரர்கள் மீண்டும் களமிறங்க கூடாது. அதேபோன்று இரண்டாவது சூப்பர் ஓவரில் மும்பை அணி முதலில் களமிறங்கியது.

அந்த அணியின் சார்பாக போலார்ட் மற்றும் ஹர்திக் பாண்டியா களமிறங்கினர். அந்த அணி 11 ரன்களை எடுத்து பஞ்சாப் அணிக்கு 12 ரன்களை இலக்காக வைத்தனர். பஞ்சாப் அணியின் சார்பாக கெயில் மற்றும் மயங்க் அகர்வால் களமிறங்கினர். கெயில் தனது பாணியில் ஒரு சிக்ஸர் அடித்தார், பஞ்சாப் அணியின் இலக்கு சற்று இலகுவானது, அதன்பின் மயங்க் அகர்வால் ஒரு பவுண்டரியை தட்டிவிட பஞ்சாப் அணி வெற்றியை நோக்கி சென்றது. மூன்றாவது பந்தை எதிர்கொண்ட மயங்க் அகர்வால் மீண்டும் பவுண்டரி அடிக்க, இரண்டு பந்துகள் மீதம் இருக்க வெற்றி பெற்றது பஞ்சாப் அணி.

சென்னை அணிக்கு அச்சுறுத்தல்

நேற்றைய போட்டியால் தரவரிசை பட்டியலில் ஏழாவது இடத்தில் இருந்த பஞ்சாப் அணி ஆறாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. இதனால் ஆறாம் இடத்திலிருந்த சென்னை ஏழாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இதனால் சென்னை அணி அடுத்து வரும் ஐந்து போட்டிகளிலும் சிறப்பாக விளையாடி வெற்றி பெற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அதேபோல பஞ்சாப் அணியும் அடுத்து வரும் ஐந்து போட்டிகளிலும் வெற்றி பெற வேண்டும். இதனுடன் பிற அணிகளின் ஆட்டங்களும் சென்னை அணி ப்ளே ஆஃப் சுற்றிற்கு செல்வதை முடிவு செய்யும்.

தரவரிசை பட்டியலில் தற்போது டெல்லி அணி முதல் இடத்திலும், மும்பை அணி இரண்டாம் இடத்திலும், பெங்களூரு அணி மூன்றாம் இடத்திலும் உள்ளன.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: