லடாக் எல்ஏசியில் பிடிபட்ட சீன ராணுவ வீரரை என்ன செய்தது இந்தியா? மற்றும் பிற செய்திகள்

பட மூலாதாரம், Getty Images
இந்தியாவின் கிழக்கு லடாக் பிராந்தியத்தில் உள்ள மெய்யான கட்டுப்பாட்டுக் கோடு அமைந்த பகுதியின் டெம்சோக் பகுதியில் சுற்றிக்கொண்டிருந்த சீன வீரரை இந்திய ராணுவத்தினர் திங்கட்கிழமை பிடித்துள்ளனர்.
தற்போது கடுமையான பனி நிலவும் அந்த பகுதியில் போதுமான கவச உடை, ஆக்சிஜன் வசதியில்லாமல் யாராலும் அதிக நேரம் இயல்பாக சுவாசிக்க இயலாது. இந்த நிலையில், எல்ஏசி பகுதியில் அந்த சீன வீரர் தவறுதலாக இந்திய வீரர்கள் இருக்கும் பகுதியை நோக்கி வந்து விட்டதாக சீன ராணுவம் தரப்பில் இருந்து இந்தியாவுக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
இதையடுத்து காணாமல் போன அந்த சீன வீரரை தேடிய இந்திய படையினர், அவரை கடைசியில் கண்டுபிடித்தனர். அவருக்கு மருத்துவ உதவி, உணவு மற்றும் குளிரில் இருந்து பாதுகாக்கும் ஆடைகளை வழங்கிய வீரர்கள், அவர் கண்டுபிடிக்கப்பட்ட தகவலையும் சீன ராணுவத்திடம் தெரிவித்தனர்.
எல்லை பகுதியில் திசை மாறி தவறுதலாக வீரர்கள் பிடிபட்டால், அவரை சம்பந்தப்பட்ட நாட்டிடம் உரிய மரியாதையுடன் அவரை பிடிக்கும் நாடு ஒப்படைக்க வேண்டும் என்பது சர்வதேச அளவில் பின்பற்றப்படும் நடைமுறை.
அதன் அடிப்படையில், சுஷுல்-மோல்டோ சந்திப்பில் இரு தரப்பு உயரதிகாரிகளும் சந்தித்துக் கொள்ளும் பகுதியில், பிடிபட்ட சீன ராணுவ வீரரை ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. தற்போது அந்த ராணுவ வீரருக்கு உரிய மருத்துவ உதவி வழங்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.
இலங்கை எம்.பி ரிஷாட் பதியூதீனுக்கு 27வரை காவல்

இலங்கையின் நாடாளுமன்ற உறுப்பினரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவருமான ரிஷாட் பதியூதீன் கைது செய்யப்பட்டுள்ளார்.
குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளினால் ரிஷாட் பதியூதீன் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டதாக போலீஸ் ஊடகப் பேச்சாளரும், பிரதி போலீஸ் மாஅதிபருமான அஜித் ரோஹண தெரிவிக்கின்றார்.
கொழும்பு புறநகர் பகுதியான தெஹிவளை பகுதியிலுள்ள வீடொன்றில் மறைந்திருந்த நிலையிலேயே, ரிஷாட் பதியூதீன் இன்று கைது செய்யப்பட்டார்.
ரிஷாட் பதியூதீனை கைது செய்யுமாறு குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்ட நிலையில், ரிஷாட் பதியூதீன் தலைமறைவாகியிருந்தார்.
சுமார் 6 நாட்கள் தலைமறைவாகியிருந்த ரிஷாட் பதியூதீனை, குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் இன்று கைது செய்திருந்தனர்.
இன்று அதிகாலை தெஹிவலையிலுள்ள வீடொன்றில் கைது செய்யப்பட்ட பதியுதீனிடம் குற்றப் புலனாய்வு பிரிவினர் நீண்ட நேரம் விசாரணைகளை முன்னெடுத்த பின்னர், அவரை கோட்டே நீதவான் நீதிமன்றில் இன்று பிற்பகல் முன்னிலைப்படுத்தினர்.
இந்த நிலையில், எதிர்வரும் 27 ஆம் திகதிவரை நாடாளுமன்ற உறுப்பினர் றிசாட் பதியுதீனை விளக்க மறியலில் வைக்குமாறு, கோட்டே நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ரிஷாட் பதியூதீனை கைது செய்ய காரணம்?
கடந்த ஜனாதிபதித் தேர்தல் வாக்களிப்பு தினத்தில், புத்தளம் பகுதியிலுள்ள இடம்பெயர்ந்த மக்களை, அரச பஸ்களின் ஊடாக மன்னார் பகுதிக்கு அழைத்து சென்று வாக்களிக்க வைத்த சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அரச பஸ்களில் மக்களை அழைத்து சென்றதன் ஊடாக, பொது சொத்துக்களை முறைகேடாக பயன்படுத்தியமை, அரச நிதியை முறைகேடாக செலவிட்டமை மற்றும் தேர்தல் சட்டத்தை மீறியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களின் கீழ் ரிஷாட் பதியூதீன் உள்ளிட்ட மூவரை கைது செய்யுமாறு கடந்த 14ஆம் தேதி சட்ட மாஅதிபர் போலீஸாருக்கு உத்தரவு பிறப்பித்திருந்தார்.
இதையடுத்து, அன்றைய தினமே 6 போலீஸ் குழுக்கள் ரிஷாட் பதியூதீனை கைது செய்வதற்காக மன்னார் மற்றும் கொழும்பு பகுதிகளிலுள்ள அவரது வீடுகளில் சோதனைகளை நடத்தியிருந்தது.
எனினும், ரிஷாட் பதியூதீன் தலைமறைவாகியுள்ளதாகவும், அவர் விரைவில் கைது செய்யப்படுவார் எனவும் போலீஸார் அறிவித்திருந்தனர்.
ரிஷாட் பதியூதீனின் சகோதரர் கைதாகி விடுவிப்பு
இலங்கையில் கடந்த ஆண்டு ஈஸ்டர் தினத்தன்று நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலின் தற்கொலை குண்டுத்தாரிகளுடன் தொடர்புகளை பேணினார் என்ற குற்றச்சாட்டின் கீழ் முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீனின் சகோதரர் ரியாஜ் பதியூதீன் ஏற்கனவே கைது செய்யப்பட்டு, விடுவிக்கப்பட்டுள்ளார்.
ரியாஜ் பதியூதீன் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தாது, விடுதலை செய்யப்பட்டமை தவறானது என பல்வேறு தரப்பினரும் கோரி வந்திருந்த பின்னணியிலேயே, ரிஷாட் பதியூதீன் தற்போது கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஆன்லைன் ரம்மி மோகம்: கடன் ஏற்பட்ட விரக்தியில் புதுச்சேரியை சேர்ந்தவர் தற்கொலை

பட மூலாதாரம், Getty Images
புதுச்சேரி, வில்லியனூரை அடுத்திருக்கும் கோர்க்காடு பகுதியைச் சேர்ந்த விஜயகுமார் (வயது 38) என்பவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். தனியார் செல்போன் சிம் கார்டு நிறுவனத்தில் மொத்த விற்பனையாளராக இருந்த இவர், கொரோனா பொது முடக்க காலத்தில் பொழுது போக்கிற்காக ஆன்லைன் ரம்மி விளையாடியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, ஆன்லைன் ரம்மி விளையாட்டில் அடிமையாகி தன்னிடமிருந்த சேமிப்பு பணம் முழுவதையும் இழந்த அவர், உறவினர்கள் நண்பர்களிடம் ரூ.30 லட்சத்துக்கும் மேல் கடன் வாங்கியிருக்கிறார். அந்த ஏமாற்றத்தை தாங்கிக் கொள்ள முடியாத அவர், தன் மீது பெட்ரோல் ஊற்றிக்கொண்டு தற்கொலை செய்துகொண்டார். அவர் தற்கொலை செய்து கொள்வதற்கு முன் தனது மனைவியின் வாட்ஸ்-அப் எண்ணுக்கு உருக்கமான ஒலிப்பதிவை அனுப்பியிருக்கிறார்.
ஜெசிந்தா ஆர்டெர்ன் மீண்டும் நியூசிலாந்து பிரதமர்: வாழ்க்கை மற்றும் அரசியல் பயணம்

பட மூலாதாரம், EPA
கிரைஸ்ட் சர்ச் தீவிரவாத தாக்குதல், எரிமலைச் சீற்றம், இப்போது கொரோனா தொற்று என அனைத்திலும் நியூசிலாந்து நாட்டை வழிநடத்தி சென்ற ஜெசிந்தா ஆர்டெர்ன் அந்நாட்டின் பிரதமராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தனது முதல் குழந்தையை பெற்றெடுத்த ஜெசிந்தாவை பார்த்து, உங்களால் தாயாக இருந்துகொண்டு, பொது வாழ்விலும் வென்று காட்ட முடியுமா என்று கேட்கப்பட்டது. இப்போது அந்தக் கேள்வியே நகைப்புள்ளாகி இருக்கிறது.
ஜெசிந்தா ஆர்டெர்ன் தலைமையிலான தொழிலாளர் கட்சி அந்த நாட்டில் நடந்த பொதுத் தேர்தலில் 120 இடங்களில் 60க்கும் மேலான இடங்களைப் பெற்று பெரும்பான்மை வெற்றியைப் பெற்றுள்ளது.
நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் பதிவான வாக்குகள் பெரும்பாலும் எண்ணப்பட்டுவிட்ட நிலையில், ஜெசிந்தாவின் தொழிலாளர் கட்சி 49 சதவீத வாக்குகளை பெற்றுள்ளது. இதன் மூலம், நியூசிலாந்து நாடாளுமன்றத்தில் அறுதிப் பெரும்பான்மையுடன் இவர் மீண்டும் ஆட்சியமைக்கிறார்.
இதுகுறித்து மேலும் விரிவாக படிக்க: தீவிரவாத தாக்குதல் முதல் அரசியல் வெற்றி வரை: யார் இந்த ஜெசிந்தா?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












