கொரோனா வைரஸ் ஊரடங்கால் புலம்பெயர் தொழிலாளர்களின் இன்னலுக்கு யார் பொறுப்பு - போலிச் செய்திகளா நரேந்திர மோதி அரசா?

பட மூலாதாரம், INDRANIL MUKHERJEE/Getty Images
- எழுதியவர், அனந்த் பிரகாஷ்
- பதவி, பிபிசி இந்தி
"லாக்டவுன் காலத்தில் வெளிவந்த பல போலிச் செய்திகளினால் அச்சம் அடைந்த ஏராளமான புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் வெளியேறத் தொடங்கினர் . மேலும் மக்கள், குறிப்பாக புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் இடம்பெயர இது வழிவகுத்தது, உணவு, குடிநீர், சுகாதார சேவைகள் மற்றும் தங்குமிடம் போன்ற அடிப்படைத் தேவைகள் போதுமான அளவில் கிடைக்குமா என்பது குறித்து கவலை அடைந்தனர். மத்திய அரசு இதை அறிந்திருந்தது , அதனால் தவிர்க்கமுடியாத லாக்டவுன் காலகட்டத்தில் எந்தவொரு குடிமகனும் உணவு, குடிநீர், மருத்துவ வசதிகள் போன்ற அடிப்படை வசதிகளை இழக்காமல் இருக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்தது."
மேற்கண்ட கருத்தோடு, இந்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் நாடாளுமன்றத்தில் இரண்டு சொற்களில் குறிப்பிடப்படும் ஓர் அறிக்கையை வெளியிட்டார், பிரிவினைக்குப் பிறகு, இந்திய வரலாற்றில் மிகப்பெரிய மனித நெருக்கடி ஏன் ஏற்பட்டது , அதற்கு அவர் சொன்ன அந்த வார்த்தைகள் - போலிச் செய்திகள்.
ஆனால் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் இடம்பெயர்வுக்கு போலிச் செய்திகளை இந்திய அரசு குற்றம் சாட்டியது இது முதல் முறை அல்ல.
லாக்டவுன் தொடங்கியதிலிருந்து, பல வாரங்கள் வரை உச்ச நீதிமன்றத்தில் இருந்து தொலைக்காட்சி சேனல்கள் வரை புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் இடம்பெயர்ந்ததற்கு, எதிர்க்கட்சிகள் மற்றும் போலிச் செய்திகளை மத்திய அரசு குற்றம் சாட்டியது .
இத்தகைய சூழ்நிலையில், புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் சித்திரவதைக்கு போலிச் செய்திகள்தான் உண்மையில் காரணமா என்ற கேள்வி எழுகிறது .
இதற்கு, அரசு சொன்ன,எழுத்து மூலம் கொடுத்த மற்றும் வழங்கிய ஒவ்வோர் அறிக்கையையும் நீங்கள் படித்து புரிந்து கொள்ள வேண்டும்.

பட மூலாதாரம், Getty Images
நான்கு மணி நேரத்தில் நாடு முடங்கியது
இந்த விஷயம் எப்போது தொடங்கியது என்றால், மார்ச் 24, செவ்வாய்க்கிழமை, மாலை எட்டு மணிக்கு, பிரதமர் நரேந்திர மோதி, "நள்ளிரவு 12 மணி முதல் நாடு முழுவதும், முழுமையான லாக்டவுன் அமல்படுத்தப்படும் . இந்தியாவை காப்பாற்ற, இந்தியாவின் ஒவ்வொரு குடிமகனையும் காப்பாற்ற, உங்களை காப்பாற்ற, உங்கள் குடும்பத்தை காப்பாற்ற, இன்று இரவு 12 மணி முதல், வீடுகளை விட்டு வெளியேறுவதற்கு முழு தடை உள்ளது,"என்றார்
பிரதமர் மோதி "இந்த நேரத்தில் நீங்கள் நாட்டில் எங்கிருந்தாலும் அங்கேயே இருங்கள். தற்போதைய நிலைமையில் , நாட்டில் இந்த லாக்கடவுன் 21 நாட்கள் இருக்கும். இது மூன்று வாரங்கள் இருக்கும். அதனால் வீட்டில் இருங்கள், வீட்டில் மட்டும் தங்கி இருங்கள்," என்றும் சொன்னார் .

- கொரோனா சந்தேகங்கள்: முக்கிய கேள்விகளும் அதற்கான பதில்களும்
- கொரோனா வைரஸ்: உங்களை தற்காத்துக் கொள்வது எப்படி?
- கொரோனா வைரஸ் சிகிச்சைக்கு மருந்து எப்போது கிடைக்கும்?
- கொரோனா வைரஸ்: எந்தெந்த பரப்புகளில் எவ்வளவு நேரம் உயிர் வாழும்?
- கொரோனா வைரஸ் : இதுவே கடைசி கொள்ளை நோய் அல்ல
- கொரோனா வைரஸ்: கோவிட் - 19 பற்றி நமக்கு தெரியாத விஷயங்கள் என்ன?

ஆனால், பல மாடி கட்டடங்களை நிர்மாணிக்கும் கட்டுமானத் தொழிலாளிகள் , சேரிகளிலோ அல்லது நடைபாதைகளிலோ படுத்து உறங்கும் மக்கள் பற்றி பிரதமர் எதுவும் கூறவில்லை.
அந்த நேரத்தில, அடுத்த 21 நாட்களுக்கு சமூகத்தின் இந்தப் பிரிவு எவ்வாறு வாழப் போகிறது என்பதைப் பற்றி சிந்திப்பது, கொரோனா தொற்றுநோய் பரவாமல் தடுக்க கவலைப்படுவதை விட முக்கியமானதாகத் தெரியவில்லை.
பொதுவாக, ட்விட்டரில் மிகவும் சுறுசுறுப்பாக செயல்பட்டு வரும் பிரதமர் மோதி, புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு தனது அரசாங்கம் என்ன ஏற்பாடுகளை செய்யப் போகிறது எனப்து குறித்து எதுவும் கூறாமல் இருந்தார்.

பட மூலாதாரம், DIBYANGSHU SARKAR/AFP VIA GETTY IMAGES
இது மட்டுமல்லாமல், மார்ச் 24 முதல் மார்ச் 29 வரை நாட்டின் ஒவ்வொரு தொலைக்காட்சி சேனல் முதல் சமூக ஊடகம் வரை புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் பிரச்சனையை விவாதித்துக் கொண்டிருந்தபோது, பிரதமர் நரேந்திர மோதி தனது ட்விட்டர் பக்கங்களில் இந்த விவகாரத்தை பற்றி ஒரு ட்வீட் கூட செய்யவில்லை.
இருப்பினும், இந்த ஐந்து நாட்களில் பிரதமர் நரேந்திர மோதி, பி.எம்.கேர்ஸ் நிதிக்கு நன்கொடை அளித்தவர்களுக்கு மட்டும் , நன்றி தெரிவித்துக் கொண்டிருந்தார்.
புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மீது அக்கறையின்மை இருந்ததா?
புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் தினசரி கூலித் தொழிலாளர்கள் பற்றிய தகவல்கள் அரசிடம் இருந்தன என்றும் லாக்டவுன் நடைமுறைப்படுத்தப்படுவதற்கு முன்னர் அவர்களுக்காக முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்காலாம் என்று நிபுணர்கள் நம்புகின்றனர்.
இந்த காரணத்தினால்தான்,தொழிலாளர்கள் மீது அலட்சிய மனப்பான்மையை அரசாங்கம் கடைப்பிடித்ததாக குற்றம் சாட்டப்பட்டது. லாக்டவுனின் போது, இந்த தினக்கூலித் தொழிலாளர்களுக்கு இன்னும் சில மணிநேரங்களில் வாழ்க்கை நெருக்கடி ஏற்படும் என்று அச்சம் இருந்தபோது, இந்த மக்களுக்கான ஏற்பாடுகள் பற்றி ஏன் குறிப்பிடப்படவில்லை என்று கேள்விகள் எழுந்தன.
புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் கவலைகள் குறித்து மத்திய அரசு எச்சரிக்கையாக இருந்ததாக மத்திய அமைச்சர் நித்யானந்த் ராய் தனது அறிக்கையில் கூறியிருந்தார்.
ஆனால் மார்ச் 25 அன்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அளித்த அறிக்கையை கேட்டால், மார்ச் 25 வரை கூட புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் குறித்து, மத்திய அரசிடம் சொல்வதற்கு அதிகம் ஏதும் இருக்கவில்லை என்பதற்கான அறிகுறிகள் உள்ளன.
லாக்டவுனிற்கு பின் மார்ச் 25 அன்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் தினகூலி தொழிலாளர்கள் குடிபெயர்வதை தடுக்க அல்லது அவர்களுக்கு வசதி செய்து தருவதற்கான எந்தவொரு அரசாங்கத் திட்டத்தையும் ஜவடேகர் குறிப்பிடவில்லை.
இந்த செய்தியாளர் கூட்டத்தில்,டெல்லி முதல் சூரத் வரை மற்றும் அனைத்து நகரங்களிலும், குடிபெயர்ந்த தொழிலாளர்கள் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்,அவர்களை அனுப்ப அரசாங்கம் ஏதாவது நடவடிக்கை எடுக்குமா என்று ஒரு பத்திரிகையாளர் அவரிடம் கேட்டார்.
இந்த கேள்விக்கு, ஜவடேகர், "இந்த நிலைமை குறித்து அரசு கண்காணித்து வருகிறது , ஆனால் அவர்கள் இங்கு பணிபுரிவதால் , அவர்கள் எங்காவது வசித்துக் கொண்டிருக்கு வேண்டும் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். எனவே இப்போது அரசாங்கத்தின் அறிவுரை என்னவென்றால், 21 நாட்கள் வரை அவர்கள் இப்பொது தங்கி இருக்கும் இடத்திலேயே இருக்க வேண்டும்."

பட மூலாதாரம், Getty Images
ஜவடேகரின் பதிலில் இருந்து, மார்ச் 25 ஆம் தேதி வரை, புலம்பெயர்ந்த தொழிலாளர்களை தங்க வைப்பதற்கும், பேருந்து அல்லது ரயில் மூலம் அவர்களது கிராமங்களுக்கும் வீடுகளுக்கும் கொண்டு விடுவதற்கும் மத்திய அரசிடம் தெளிவான ஏற்பாடு இல்லை என்பது தெளிவாகிறது.
இத்தகைய சூழ்நிலையில், புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் கவலைகளை அரசாங்கம் அறிந்திருப்பதாக நித்யானந்தா ராய் எந்த அடிப்படையில் கூறுகிறார் என்ற கேள்வி எழுகிறது.
இருப்பினும், மே மாதத்தில், மோதி அரசாங்கம் 'தற்சார்பு இந்தியா' திட்டத்தை அறிவித்தது மற்றும் புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் எண்ணிக்கை பற்றி அதிகாரப்பூர்வமாக , அதாவது எட்டு கோடி புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு தங்கள் அரசாங்கம் சிறப்பு ஏற்பாடுகளை செய்து வருவதாக ஒப்புக் கொண்டது .
தொழிலாளர்கள் ஏன் வீதிகளில் இறங்கினார்கள்?
போலிச் செய்திகளால் ஏற்பட்ட அச்சத்தின் காரணமாக புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பெருநகரங்களை விட்டு வெளியேறத் தொடங்கினார்களா என்பது குறித்த ஒரு கேள்விக்கு இன்னும் பதில் இல்லை .
புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் துயரத்தை கேட்டால், இந்த காரணம் வெளிப்படவில்லை . மாறாக, அரசின் மீதான நம்பிக்கையின்மைதான் குடியேற்றத்திற்கு ஒரு முக்கிய காரணமாக இருந்தது என்பது தெளிவாகிறது.
பிபிசி நிருபர் நிதின் ஸ்ரீவஸ்தவா மார்ச் 25ஆம் தேதி, லாக்டவுனின் முதல் நாளன்று காலை, டெல்லியில் இருந்து பரத்பூர் வரை நடந்து சென்றுக் கொண்டிருந்த சில தொழிலாளர்களுடன் பேசினார்,
இந்த தொழிலாளர்கள், "நாங்கள் டெல்லியில் உள்ள பஸ்சிம் விஹாரில் இருந்து வருகிறோம், காலை ஆறு மணிக்கு புறப்பட்டோம், நாங்கள் கல் வேலை செய்கிறோம். நான்கு-ஐந்து நாட்களாக வேலை நிறுத்தப்பட்டுள்ளது. சாப்பிட எதுவும் இல்லை. இனி என்ன செய்வது. இங்கே நாங்கள் பட்டினி கிடந்து சாகிறோம். அதனால்தான் நாங்கள் கிராமத்திற்குச் செல்கிறோம்"என்று கூறினர்.

பட மூலாதாரம், Reuters
இது இந்திய வரலாற்றில் மிகக் கொடூரமான மனித துயரத்தை, துவக்கி வைத்த அச்சுறுத்தும் மனித நெருக்கடியின் துவக்கமாக மட்டுமே இருந்தது.
இதன் பின்னர், நாடு முழுவதும் உள்ள சாலைகளில் புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு மணி நேரமும் அதிகரித்து வருவதைக் காண முடிந்தது.
அடுத்த மூன்று நாட்களுக்குள், அதாவது மார்ச் 28 க்குள் நாட்டின் சாலைகள், ரயில் பாதைகள் மற்றும் கரடுமுரடான சாலைகளில், புலம்பெயர்ந்த தொழிலாளர் தோள்களில் மூட்டை முடிச்சுக்களுடன் , குழந்தைகளுடன் வெளியேறுவதை காண முடிந்தது .
மும்பையிலிருந்து டெல்லி மற்றும் அகமதாபாத் வரை பஞ்சாபின் பெரிய நகரங்கள் வரை புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் வேறு வழியில்லாத நிலையில் நடந்தே தங்கள் வீடுகளுக்குச் செல்லத் தொடங்கினர்.
பலருக்கு ,சில கிலோமீட்டர் தூரத்தை கடக்கவே ஆறு நாட்கள் பிடித்தன.
பலர் வழியிலேயே இறந்தனர்.பல தாய்மார்கள் தெருவில் குழந்தைகளைப் பெற்றெடுத்தனர். இன்னும் பல குழந்தைகள் சாலையில் நடந்து சென்றனர், சில பச்சிளம் குழந்தைகள் தாயின் மடியிலேயே இறந்தனர்.

பட மூலாதாரம், Getty Images
புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பிரச்சனைக்கு மன்னிப்பு கேட்ட நரேந்திர மோதி
ஐந்து நாட்கள் மௌனத்திற்குப் பிறகு தனது மன் கி பாத் நிகழ்ச்சியில் லாக்டவுன் காரணமாக மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளுக்கு பிரதமர் நரேந்திர மோதி மன்னிப்பு கேட்டார்.
அவர்,"நாட்டு மக்கள் அனைவரிடமும் நான் மனதார மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன், நீங்கள் என்னை மன்னிப்பீர்கள் என்று நினைக்கிறேன்" என்றார் .
அவர் கூறினார், "சில முடிவுகள் எடுக்கப்பட்டதால் , உங்களுக்கு பல சிரமங்களை ஏற்பட்டது . என் ஏழை சகோதர சகோதரிகளை பற்றி சொல்ல வேண்டுமென்றால், எந்த மாதிரி ஒரு பிரதமர் கிடைத்திருக்கிறர், நம்மை சிக்கலில் ஆழ்த்தி விட்டார் என நினைக்க கூடும், நான் இதயப்பூர்வமாக அவர்களிடம் மன்னிப்பு கேட்கிறேன். "
நரேந்திர மோதி மற்றும் அவரது அரசாங்கம், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சந்தித்த இன்னல்களை கொஞ்சம் கூட உணரவில்லையா என்ற கேள்வி எழுகிறது. இந்த வேதனை நிரம்பிய கதைகள் உலகளவில் கவனத்தை ஈர்த்தன.
இந்த கேள்வி முக்கியமானது, ஏனென்றால் ஒருபுறம், புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் பெருநகரங்களை விட்டு வெளியேற வேண்டியிருந்த நிலையில், அவர்கள் ஒவ்வொரு மாவட்டத்தின் எல்லையிலும் காவல்துறையினரிடமிருந்து துன்புறுத்தல்களை எதிர்கொண்டனர்.
இத்தகைய சூழ்நிலையில், தொழிலாளர்களின் நிலை குறித்து மத்திய அல்லது மாநில அரசுகள் கூட கொஞ்சம் உணர்ந்திருந்தால், புலம்பெயர்ந்த தொழிலாளர்களை அன்போடு நடத்த வேண்டும் என்று ஏன் உத்தரவு பிறப்பிக்கவில்லை.

சிறந்த தகவல் அமைப்புக்கு பெயர் பெற்ற மோதி அரசு , தலைநகரான டெல்லியில் இருந்து பல மாநிலங்களுக்கு புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு அவர்கள் எங்கு செல்ல வேண்டும், எந்த ரயில் கிடைக்கும் அல்லது எந்த பஸ் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று எந்த ஒரு நிலைமயம் தெளிவாகத் இருக்கவில்லை என்பது எப்போதும் நினைவிருக்கும் .
பசி, தாகத்துடன் குழந்தைகள்
பசி, தாகத்துடன் குழந்தைகளுடன் வெறுங்காலுடன்,புலம்பெயர்ந்த தொழிலாளர்களுடன் பிபிசி நிருபர் சல்மான் ராவி பேசினார்.
தனது குழந்தைகளுடன் நடந்தே சொந்த ஊர் சென்ற புலம் பெயர்ந்த தொழிலாளி, "மோதிஜி என்ன செய்தரோ, அவர் சிறப்பாகவே செய்துள்ளார். அவர் எங்களுக்குச் சரியாகச் செய்திருக்கிறார். எப்படியும் நாங்கள் இதை அனுபவிக்கத்தான் வேண்டும். ஆனால் அவருக்கென்ன,ஒரே இடத்தில் தானே இருக்கிறார். அவர் குறைந்தது ஏழை மக்க்ளை பற்றி நினைக்க வேண்டும், அவர்களுக்கும் பிரச்சனைகள் இருக்கும், அவர்களுக்காக ஏதாவது செய்ய வேண்டும்.வேண்டுமா, இல்லையா ?....சரி,போகட்டும் எப்படியிருந்தாலும் நாங்கள் கிளம்பி விடுவோம். இறந்துகூட போகலாம், பரவாயில்லை கிளம்பிவிடுவோம் குழந்தைகளுடன். மிகவும் பிரச்சனையில் இருக்கிறோம்.யாரிடமோ உடைந்த சைக்கிளை வாங்கினேன் ஐநூறு ரூபாய்க்கு. இன்று ஆறு நாட்கள் ஆகின்றன. இன்னும் நடந்து கொண்டிருக்கிறோம்," என்றார்.
இந்த புலம்பெயர்ந்த தொழிலாளி, அம்பலாவிலிருந்து டெல்லிக்கு செல்லும் வழியில் பல இடங்களில் போலீசாரிடமிருந்து துன்புறுத்தலை எதிர்கொள்ள நேர்ந்ததாக கூறினார்.
"நீங்கள் இங்கிருந்து சென்றால், போலீஸ்காரர்கள் தடியால் அடிப்பார்கள்,ஒருவர் அங்கிருந்து விரட்டுவார் . இப்போதுதான் ஒருவரை தடியால் அடித்து அடித்தே தாக்கினார்கள் " என்றார்.
ஒரு நாளைக்கு ரூ .280 சம்பாதிக்கும் இந்த தொழிலாளர்கள், அம்பலாவிலிருந்து மத்திய பிரதேசத்தின் சதர்பூருக்கு சென்று கொண்டிருந்தனர்.
லாக்டவுன் ஆனவுடனேயே, புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மனிதாபிமானமற்ற முறையில் நடத்தப்பட்ட பல சம்பவங்கள் நாடு முழுவதிலுமிருந்து வெளிவந்தன.
தொழிலாளர்கள் காவல்துறையினரால் தாக்கப்படுவது, அவர்கள் மீது ரசாயனம் தெளிப்பது , இருண்ட கட்டடங்களில் உணவு மற்றும் தண்ணீர் இல்லாமல் விலங்குகளை போல பூட்டி வைப்பது போன்ற து போன்ற சம்பவங்களும் தெரிய வந்தன.
புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு அரசு உதவி

பட மூலாதாரம், Getty Images
லாக்டவுன் அறிவிக்கப்பட்ட ஒரு மாதத்திற்குப் பிறகு, மே மாதத்தில், தற்சார்பு இந்தியா திட்டத்தின் கீழ் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உணவுப் பொருட்களை வழங்குவதாக மத்திய அரசு அறிவித்தது. இந்த திட்டத்தின் கீழ், ஒவ்வொரு புலம் பெயர்ந்த தொழிலாளர் குடும்பத்திற்கும் ஐந்து கிலோ தானியமும் ஒரு கிலோ கிராம் கடலை வழங்குவதாகவும் அறிவிக்கப்பட்டது.
ஆனால் நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகத்தின் தரவுகளின்படி, செப்டம்பர் மாதத்திற்குள், இந்த திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்ட 8 லட்சம் கிலோ உணவு தானியங்களில் 33 சதவீதம் மட்டுமே புலம்பெயர்ந்த தொழிலாளர் குடும்பங்களுக்கு விநியோகிக்க முடிந்தது .
வீட்டு சொந்தக்காரர்கள் வாடகை கேட்கக்கூடாது, பணிகளிலிருந்து நீக்கப்படக்கூடாது என்ற அரசாங்கத்தின் வேண்டுகோளும் போதுமானதாக இருக்க வில்லை.
இந்திய பொருளாதார கண்காணிப்பு மையத்தின் (சி.எம்.ஐ.இ) தரவுகளின்படி, லாக் டவுன் அறிவிக்கப்பட்ட ஒரு மாதத்திற்குப் பின் கிட்டத்தட்ட 12 கோடி மக்கள் வேலை இழந்துள்ளனர். பெரும்பாலான மக்கள் அமைப்புசாரா மற்றும் கிராமப்புறங்களைச் சேர்ந்தவர்கள்.
இத்தகைய சூழ்நிலையில், புலம்பெயர்ந்த தொழிலாளர்களை மீண்டும் வேலைக்கு கொண்டு வருவதற்கான அரசாங்கத்தின் முயற்சிகள் எவ்வளவு வெற்றிகரமாக உள்ளது என்ற கேள்வி எழுகிறது.

பட மூலாதாரம், Getty Images
உணவு பற்றாக்குறை
மத்திய அமைச்சர் நித்யானந்த் ராய் தனது 88 வார்த்தை அறிக்கையில், "தவிர்க்க முடியாத லாக்டவுன் காலகட்டத்தில் உணவு, குடிநீர், மருத்துவ வசதிகள் போன்ற அடிப்படை வசதிகளை எந்தவொரு குடிமகனும் இழக்காமல் இருக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அரசாங்கம் எடுத்துள்ளது" என்று கூறினார்.
ஆனால் டெல்லியில் இருந்து பிகார் செல்லும் தொழிலாளர்களுக்கான அனைத்து ரயில்களிலும், புலம் பெயர்ந்த தொழிலாளர்களை மனிதாபிமானமற்ற முறையில் நடத்தும் வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருவதைக் காண முடிந்தது. இந்த ரயில்களில், அதிக எண்ணிக்கைகளில் தொழிலாளர்கள் திணிக்கப்பட்டனர். இதற்கு பின், ரயிலில் இருந்த குழந்தைகள் பல மணி நேரம் பசியும் தாகமுமாக அவதிப்பட்டனர் .
இதே சித்திரவதையிலிருந்து தப்ப விரும்பிய பூஜா குமாரி, " என் அறையில் சாப்பிடவும் குடிக்கவும் எதுவும் இல்லை.மூன்று நாட்களுக்கு நாங்கள் சர்க்கரையை கலந்து குடித்தோம். அரிசி - பருப்பு எதுவும் இல்லை. என் காசும் தீர்ந்து விட்டது. பின்னர் 100 என்ற எண்ணை அழைத்தோம். அதுதான் ஹெல்ப்லைன் எண் என்று தொடங்கினார்களே, அவர்களைைஅழைத்தோம்."

பட மூலாதாரம், Getty Images
"அவர்கள் உணவு கொண்டு வருவதாக சொன்னார்கள்,நாங்கள் காத்திருந்தோம... இதற்குப் பிறகும், ரேஷன் வரவில்லை, ஆனால் ஏழாம் எண் தெருவில் தயாரிக்கப்பட்ட உணவைக் எடுத்துக் கொண்டு வந்தோம்.ஆனால் சாப்பிடப் போகும் போது, என் கணவர் காவல்துறையினரால் தடியால் தாக்கப்பட்டு கீழே விழுந்தார்."
அதாவது சாப்பிடக்கூட போக விடவில்லை . எப்படியோ 3 நாட்களை கழித்ததோம் . அதற்கு பின் சொல்ல முடியாத அளவிற்கு நிலைமை மோசமடைந்தது ...பின் வீட்டிற்கு திரும்ப காவல் நிலையத்தில் ஆதார் கார்ட் மற்றும் லொகேஷன் பற்றி தகவல் கொடுத்தோம். அல்லது செய்தி மொபைலில் கூட வரவில்லை. ஆனால் மொபைலில் எந்த செய்தியும் வரவில்லை. மெசேஜும் கிடைக்கவில்லை , ரூமில் சாப்பிடவும் வசதியில்லை , வீட்டுக்காரர் அறைக்கு வாடகை கேட்டுக்கொண்டிருந்தார். பிறகு எதுவும் நடக்காது என்று, நடந்தே செல்ல நினைத்தேன். வெகு தூரம் நடந்தே சென்றோம். "
"நொய்டாவிலிருந்து மோடினகரை அடைந்தோம். பின்னர் நிர்வாகம் எங்களை நிறுத்தி,தடியால் அடித்து மீண்டும் அறைக்குச் செல்ல சொன்னார்கள். நாங்கள் ஏன் அறைக்குச் செல்ல வேண்டும்...வீட்டு சொந்தக்காரர் வாடகை கேட்கிறார். என்ன செய்வது என்றோம் .. . பின்னர் அவர்கள் கிளம்பி விட்டனர். சிறிது நேரம் கழித்து நாங்கள் மோடிநகரில் ஒரு இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டோம".
"அங்கே வண்டி வரும் என்று நாங்கள் காத்திருந்தோம். மறுநாள் மதியம் 1 மணியளவில் வண்டி வந்தது. இதன் பிறகு நாங்கள் காஜியாபாத்தில் ரயிலில் அமர்ந்தோம். ஆனால் ரயிலில் எந்த வசதியும் இல்லை, ரயிலில் தண்ணீர் கூட கிடைக்கவில்லை."
"ரயிலில் ஒரு பெண் இருந்தாள், அவளுக்கு வழியெல்லாம் ஒரே வலியாக இருந்தது . பின்னர் பத்திரிகைக்காரர்களை அழைத்தோம் . அவள் பசி மற்றும் தாகத்தால் அவதிப்படடுக் கொண்டிருந்தாள் .மீடியாகாரர்களை அழைத்தபோது, அவர்கள் சோளம், தண்ணீர் பாட்டில் கொடுத்தார்கள். இதற்குப் பிறகு, சசராமில் ஏதோ கிடைத்து , ஆனால் காய எல்லாம் வீணாகி இருந்தது . "
உத்தரப் பிரதேசத்தில் உள்ள கான்பூர் ரயில் நிலையத்தில், புலம் பெயர்ந்த தொழிலாளர்களிடையே உணவுப் பொதிகள் தொடர்பாக ஒரு மோதல் காணப்பட்டது .
என்டிடிவியின் செய்தியின்படி, மக்கள் மத்தியில் சலசலப்பு ஏற்பட்ட ரயிலில் பயணித்த பயணிகள், ரயிலின் கழிப்பறையில் தண்ணீர் இருக்கவில்லை என்று கூறியுள்ளனர்.
மற்ற ஊடக நிறுவனங்கள் மற்றும் பிபிசியுடன் பேசிய ஷ்ராமிக் ரயில்களின் பயணிகள் தண்ணீர் பாட்டில்களுக்கான போராட்டத்தையும், ரயிலில் மிகவும் தீவிரமான போராட்டங்களையும் சந்திக்க வேண்டி வந்ததாக உறுதிப்படுத்தியுள்ளனர்.
இதற்கிடையில், தொழிலாளர்களுக்கான ரயில்கள் இயக்கப்பட்டுக் கொண்டிருந்தபோது, ரயிலில் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் இறந்ததாகவும் உறுதிப்படுத்தப்படாத ஆதாரங்களில் இருந்து செய்திகள் வந்தது.
ஆனால் முசாபர்பூர் ரயில் நிலைய சம்பவம் உட்பட சில சம்பவங்கள் உறுதி செய்யப்பட்டன.
தொழிலாளரகளுக்கான ரயிலில் ஒரு பெண் இறந்த பிறகு, முசாபர்பூர் மாவட்ட நீதபதி சந்திரசேகர் சிங், ஏதோ ஒரு நோய் காரணமாக அந்த பெண் இறந்துவிட்டார் என்றும், ரயிலில் உணவு மற்றும் பானங்களுக்கு பஞ்சமில்லை என்றும் தெளிவுபடுத்தியிருந்தார்.
எத்தனை பேர் இறந்தார்கள்?
லாக்டவுன் போது வீடு திரும்பிய எத்தனை பேர் இறந்தனர்? இது போன்ற ஒரு கேள்விக்கு மத்திய அரசிடம் பதில் இல்லை.
மத்திய மந்திரி நித்யானந்த் ராய், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் சொந்த மாநிலத்திற்கு திரும்பும்போது, இறந்தவர்களின் எண்ணிக்கை தொடர்பான விவரங்களை மத்திய அரசு சேகரிக்கவில்லை என பதிலளித்துள்ளார.

பட மூலாதாரம், Getty Images
இதோடு, செப்டம்பர் 14 ஆம் தேதி மக்களவையில், மத்திய தொழிலாளர் அமைச்சர் சந்தோஷ் கங்வாரிடம் வீடு திரும்பும் போது எத்தனை புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் இறந்தனர் என்றும், பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு அரசாங்கம் ஏதேனும் இழப்பீடு அல்லது நிதி உதவி வழங்கியுள்ளதா என்றும் கேட்கப்பட்டது.
இந்த கேள்விக்கு பதிலளித்த மத்திய அமைச்சர் கங்வார், இதுபோன்ற தரவு எதுவும்
சேகரிக்கப்படவில்லை என்றார் . இந்த பதிலை மனதில் கொள்ளும்போது , இரண்டாவது கேள்விக்கு அவசியமே இல்லை என்று தெரிகிறது. இத்தகைய சூழ்நிலையில், இதுபோன்ற தகவல்கள் மத்திய அளவில் இல்லை என்று மத்திய அரசு நாட்டின் நாடாளுமன்றத்தின் முன் கூறியுள்ளது.
ஆனால் தி வயர் இந்தி செய்தி அறிக்கையின்படி, தகவல் அறியும் உரிமை விண்ணப்பத்திற்கு பதிலளிக்கும் விதமாக, ரயில் பயணத்தின் போது இதுவரை மொத்தம் 80 பேர் உயிரிழந்துள்ளதாக இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது.
பிபிசி பல்வேறு மட்டங்களிலிருந்து தரவுகளை சேகரித்து, மார்ச் 24 முதல் ஜூன் 1 வரை 304 பேர் இறந்துள்ளனர். இவர்களில் சோர்வு காரணமாக 33 பேர், ரயில் விபத்துக்களில் 23 பேர், பிற காரணங்களால் 14 பேர், தொழிலாளர் சிறப்பு ரயில்களில் 80 பேர் இறந்ததாக தெரிவித்துள்ளது.
புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு ஏற்பட்ட நிலைமைக்கு யார் பொறுப்பு?
போலிச் செய்திகளைப் காரணம் காட்டி , மத்திய அரசு கடைசியில்,இந்த பொறுப்பிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டு விட்டது.
ஆனால் நாட்டில்,எப்போதெல்லாம் லாக்டவுன் பற்றிய பேச்சு வருகிறதோ, அப்போதெல்லாம், புலம்பெயர்ந்த தொழிலாளர்களிடம் பிரதமர் மோதி மன்னிப்பு கேட்டது நினைவிற்கு வரும்.
அவரும் அவரது அரசும் நூற்றுக்கணக்கான தொழிலாளர்களைக் காப்பாற்ற முடியாத அளவுக்கு திறமையற்றவர்களா என்ற கேள்வியும் எழும்.
பிற செய்திகள்:
- மாநிலங்களவையில் விவசாய மசோதாக்களை எதிர்த்துப் பேசிய அ.தி.மு.க. எம்.பி
- ஐ.பி.எல் 2020 தொடரில் புதிய கிரிக்கெட் நட்சத்திரங்களாக உருவாக வாய்ப்புள்ள வீரர்கள் யார் யார்?
- கொரோனா பொதுமுடக்கம் - கடுமையான வறுமை: குழந்தை தொழிலாளர்களாக மாற்றப்படும் மாணவர்கள்
- பாலிவுட் இயக்குநர் அனுராக் கஷ்யப் மீது பாலியல் துன்புறுத்தல் புகார் தெரிவித்துள்ள நடிகை
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












