"இந்திய பொருளாதாரத்தை பாதித்தது கொரோனா வைரஸ் அல்ல, பொது முடக்கம்தான்" - நரேந்திர மோதியின் பொருளாதார ஆலோசனை குழு உறுப்பினர்

மந்த நிலையில் கட்டுமானத் துறை.

பட மூலாதாரம், AFP/Getty Images

படக்குறிப்பு, மந்த நிலையில் கட்டுமானத் துறை.
    • எழுதியவர், ஜுகல் புரோகித்
    • பதவி, பிபிசி

இந்தியா - சீனா இடையே எல்லையில் நிலவும் பதற்றமும், சீனா உடனான உலக நாடுகளின் நிகழ்கால உறவும் இந்தியாவுக்கு பல்வேறு புதிய வாய்ப்புகளை அளிக்கிறது. குறிப்பாக, சீனாவுடனான வர்த்தக உறவில் உள்ள நீண்டகால பிரச்சனைகளை களைந்து, புதிய தொடக்கத்தை அமைப்பதற்கான வாய்ப்பு இந்தியாவுக்கு கிடைத்துள்ளது.

இந்த நிலையில், இந்திய பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழுவின் பகுதி நேர உறுப்பினரான டாக்டர் ஆஷிமா கோயல், பிபிசிக்கு அளித்த பிரத்யேக பேட்டியில், "இந்தியா ஒரு கடுமையான நிலைப்பாட்டை எடுத்து, இருநாடுகளுக்கிடையேயான வர்த்தகத்தில் சமமான அணுகலை பேச்சுவார்த்தையின் மூலம் பெற வேண்டும். வர்த்தக உறவை பொருத்தவரை, சீனா இன்னும் திறந்த மனப்பான்மையுடன் இருப்பதே இருவருக்கும் வெற்றியாக அமையும். நீண்ட கால அடிப்படையில், நாம் சீனாவுடன் வர்த்தகம் செய்தே ஆக வேண்டும்" என்று அவர் கூறினார்.

சீனாவுடனான வர்த்தக உறவில் மாற்றத்தை மேற்கொள்வதற்கான சரியான நேரம் இந்தியாவிற்கு கனிந்துள்ளதாக அவர் மேலும் கூறுகிறார்.

ஆனால், நாட்டின் எல்லையில் பதற்றம் நிலவுவது இந்தியாவின் வளர்ச்சியை பாதிக்காதா?

"இது இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகத்தின் நீண்டகால வளர்ச்சி வாய்ப்புகளை பாதிக்கும் என்று நான் கருதவில்லை. சீனாவும் நிறைய இழப்புகளை சந்தித்து வருவதால், ஒட்டுமொத்தத்தில் இந்தியாவே ஆதாயம் பெறும்" என்று அவர் மேலும் கூறுகிறார்.

2014ஆம் ஆண்டு முதல், இந்தியா - சீனாவுக்கிடையேயான இருவழி வர்த்தகத்தின் மதிப்பு 70 பில்லியன் அமெரிக்க டாலருக்கும் அதிகமாக இருந்து வந்துள்ளது. குறிப்பாக, இது 2018இல் 95.7 பில்லியன் அமெரிக்க டாலர்களை எட்டியிருந்தது. இருப்பினும், 2019ஆம் ஆண்டு ஜனவரி முதல் நவம்பர் வரையிலான காலகட்டத்தில், இந்தியாவிலிருந்து சீனாவிற்கான ஏற்றுமதியும், சீனாவிலிருந்து இந்தியாவில் இறக்குமதி செய்வதும் குறைந்துள்ளது

இந்த நிலையில், கடந்த 2018ஆம் ஆண்டிலிருந்து சீனாவுடன் மிகப் பெரிய வர்த்தக பற்றாற்குறையை இந்தியா சந்தித்து வருவதாக மத்திய அரசு வெளியிட்டிருந்த அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இது இந்தியா வர்த்தகம் மேற்கொள்ளும் மற்ற அனைத்து நாடுகளை விடவும் அதிகமான பற்றாற்குறையாகும்.

ஜிடிபி

பட மூலாதாரம், GIDEON MENDEL/GETTY IMAGES

வர்த்தக பற்றாற்குறை என்றால் என்ன?

சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால், இந்தியாவிடமிருந்து சீனா வாங்குவதை விட சீனாவிடமிருந்து இந்தியா அதிகமாக வாங்குகிறது.

ஆனால், இந்த நிலை இந்தியாவுக்கு ஏற்பட்டது எப்படி?

சீனாவுடனான வர்த்தக பற்றாக்குறையின் வளர்ச்சிக்கு இரண்டு விடயங்கள் காரணமாக இருக்கலாம் என்று இந்திய அரசு கருதுகிறது. அதாவது, இந்தியா குறிப்பிட்ட சில வகையான பொருட்கள் மற்றும் சேவைகளை மட்டுமே சீனாவிற்கு ஏற்றுமதி செய்து வருவதாகவும், இவற்றை தவிர்த்து இந்தியா அதிகளவில் உற்பத்தி செய்யப்படும் விவசாய பொருட்கள், மருந்துப்பொருட்கள் உள்ளிட்டவற்றையும் தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட சேவை துறை சார்ந்த வர்த்தகத்தையும் சீனாவுடன் மேற்கொள்வதில் அணுகல் சார்ந்த பிரச்சனைகள் உள்ளதாக இந்திய அரசின் அறிக்கையொன்று கூறுகிறது.

Banner image reading 'more about coronavirus'
Banner

2018 மற்றும் 2019ஆம் ஆண்டுகளில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோதிக்கும் சீன அதிபர் ஷி ஜின்பிங்கிற்கும் இடையிலான முறைசாரா உச்சிமாநாட்டின் போது கூட வர்த்தக ஏற்றத்தாழ்வு குறித்த பிரச்சனைகள் தொடர்பாக விவாதிக்கப்பட்டன.

இந்த ஆண்டின் தொடக்கத்தில், சீன வெளியுறவு அமைச்சகம், "நாங்கள் இந்தியாவுடன் வர்த்தக உபரியை ஒருபோதும் வேண்டுமென்றே கடைப்பிடிக்கவில்லை. சமீபத்திய ஆண்டுகளில், அரிசி மற்றும் சர்க்கரை இறக்குமதியை அதிகரித்தல் மற்றும் இந்தியாவில் இருந்து மருத்துவ மற்றும் விவசாய சார்ந்த பொருட்களை இறக்குமதி செய்வதற்கான பணிகளை விரைவுபடுத்துதல் உள்ளிட்ட தொடர்ச்சியான நடவடிக்கைகளை சீனா எடுத்துள்ளது" என்று விளக்கம் அளித்திருந்தது.

பருப்பொருளியல், சர்வதேச நிதியம் ஆகியவற்றில் வல்லுநராக கருதப்படும் கோயலின் கூற்றுப்படி, "இதுபோன்ற சமயத்தில், பல நாடுகள் ஒன்றிணைந்து செயல்படுவது நீண்டகால அடிப்படையில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும் என்று நான் கருதுகிறேன். இதன் மூலம், சூழ்நிலையை மோசமடையாமல் பாதுகாக்க முடியும்."

சீனாவை சேர்ந்த பல்வேறு திறன்பேசி செயலிகளுக்கு இந்திய அரசு தடை விதித்துள்ளது தொடர்பாக கருத்துத் தெரிவித்த அவர், "இந்தியா ஒரு கடினமான நிலைப்பாட்டை எடுக்க வேண்டியிருந்தது. நாட்டின் தரவை பாதுகாப்பு என்பது மிகவும் முக்கியமானது" என்று அவர் கூறுகிறார்.

"தொகுப்புதவி திட்டத்தை அறிவிக்க வேண்டிய நேரமிது"

ஜிடிபி

பட மூலாதாரம், Reuters

சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு குறைந்த வட்டியில் கடனுதவி வழங்கும் திட்டங்கள், அரசின் நிதியுதவி பலன்களை மக்களுக்கே நேரடியாக வழங்குதல், வங்கிகள் எளிதில், விரைந்து கடனுதவி வழங்குவதை உறுதிசெய்தல் உள்ளிட்டவை குறித்த அறிவிப்புகளை இந்திய அரசும், ரிசர்வ் வங்கியும் வெளியிட்டுள்ள நிலையில், ஏழைகளுக்கு உதவ அரசு மேலும் என்னென்ன திட்டங்களை வைத்திருக்கிறது என்று வல்லுநர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

கடந்த மார்ச் மாதம் முதல் மூன்று மாதங்களுக்கு வழங்கப்பட்டு வந்த நியுதவி திட்டத்தை ஜூன் மாதத்தோடு மத்திய அரசு நிறுத்தி கொண்டது. மத்திய அரசு இந்த திட்டத்தை தொடர வேண்டுமென்ற தற்போதைய தலைமை பொருளாதார ஆலோசகர் கே.வி. சுப்பிரமணியனின் கருத்து ஏற்றுக்கொள்ளப்படவில்லை.

ரிசர்வ் வங்கி (ரிசர்வ் வங்கி) நிதியுதவியுடன் மும்பையில் செயல்படும் இந்திரா காந்தி இன்ஸ்டிடியூட் ஆப் டெவலப்மென்ட் ரிசர்ச் (ஐஜிஐடிஆர்) கல்வி நிறுவனத்தில் பேராசிரியராக இருக்கும் கோயல், "பாதிக்கப்பட்டவர்களுக்கு மத்திய அரசு தொடர்ந்து உதவ வேண்டும். வேலையின்மை அதிகரித்து வருவதற்கான அறிகுறிகள் உள்ளன. மேலும், அறுவடைக்காலம் முடிந்தவுடன், அதிகளவிலான மக்கள் புதிய வேலைவாய்ப்புகளைத் தேடுவார்கள். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உத்தரவாதச் சட்டம் 100 நாட்களுக்கு மட்டுமே வேலைவாய்ப்பை வழங்குகிறது. இதுபோன்ற சூழ்நிலையில், இந்தியாவில் தற்காலிக நகர்ப்புற வேலைவாய்ப்பு காப்பீட்டு திட்டத்தின் தேவை அதிகரித்துள்ளது. இது நாட்டின் பொருளாதாரத்தை மீண்டும் கட்டமைக்க தேவையான தொழிலாளர்களை மீண்டும் நகரங்களை நோக்கி படையெடுக்க வைக்கும். மேலும், பண்டிகை காலம் நெருங்கி வரும் நிலையில், இது மற்றொரு தொகுப்புதவி திட்டத்தை அறிவிப்பதற்கான சரியான நேரம் என்று நான் நினைக்கிறேன்" என்று அவர் கூறுகிறார்.

ஜிடிபி

பட மூலாதாரம், DANIEL BEREHULAK

"மத்திய அரசு நேரடியாக உள்ளாட்சி அமைப்புகளுக்கும் அவர்களிடமிருந்து தேவைப்படும் நபர்களுக்கும் நிதியை மாற்ற முடியும். உள்கட்டமைப்பை உருவாக்கும் போது நமது செலவுகளையும் அதிகரிக்க வேண்டும். நமது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 2 சதவீதத்தை செலவிடுவதன் மூலம் இவை அனைத்தும் சாத்தியமாகும். இதனால் பெரிய நிதிசார்ந்த பிரச்சனை ஏற்பட்டுவிடாது."

ஆனால், கோயல் மட்டுமல்ல எண்ணற்ற பொருளாதார வல்லுநர்களும், மத்திய உடனடியாக தொகுப்புதவி திட்டத்தை அறிவிக்க வேண்டுமென்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள்.

இதுபோன்ற முன்மொழிவுக்கான அரசின் பதில் என்னவென்று அவரிடம் கேட்டபோது, "இதுபோன்ற பல்வேறு கலந்துரையாடல்கள் நடைபெற்றன. பல யோசனைகள் முன்வைக்கப்பட்டன. ஆனால், இறுதியில், அரசுதான் முடிவெடுக்க வேண்டியுள்ளது" என்று அவர் கூறுகிறார்.

"வைரஸை விட முடக்க நிலையால்தான் பிரச்சனை"

இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதாகவும், உண்மையில் பரிசோதனையை அதிகரித்துள்ளதே புதிய நோய்த்தொற்றுகள் அதிகளவில் கண்டறியப்படுவதற்கு காரணம் என்றும் மத்திய அரசு கூறுகிறது. ஆனால், இந்தியாவில் நாள்தோறும் புதிய தொற்றுகளின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. மேலும், பிரேசிலை பின்னுக்குத் தள்ளி கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் பட்டியலில் இந்தியா இரண்டாவது இடத்திற்கு சென்றுள்ளது.

நாட்டின் பொருளாதாரத்தை மீண்டும் திறப்பதற்கான நடவடிக்கைகளை அரசு எடுத்து வரும் நிலையிலும் நோய்த்தொற்றின் தீவிரம் அதிகரித்த வண்ணம் உள்ளது.

முறைசாரா பொருளாதாரம்.

பட மூலாதாரம், Daniel Berehulak

படக்குறிப்பு, முறைசாரா பொருளாதாரம்.

இந்த நிலையில் அரசின் தற்போதைய பொருளாதார மீட்பு நடவடிக்கைகள் சரியான திசையில் செல்கிறதா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், "படிப்படியாக நாட்டின் பொருளாதாரத்தை திறக்கும் தற்போதைய நடைமுறை பொருளாதார மீட்சிக்கான ஒரு நல்ல பாதையாகும். நாம் வைரஸுடன் வாழ கற்றுக்கொள்ள வேண்டும். மேலும், முடக்க நிலையை அமல்படுத்துவதன் மூலம் நோய்த்தொற்று பரவலை முடிவுக்கு கொண்டுவந்துவிட முடியாது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். கொரோனா பரவத் தொடங்கிய ஆரம்ப நாட்களிலேயே நாட்டின் பொருளாதாரத்தை பொது முடக்கத்தின் மூலம் முடக்கியது மிகப் பெரிய சேதத்தை ஏற்படுத்தியது. பொருளாதாரத்தில் பிரச்சனையை ஏற்படுத்தியது கொரோனா அல்ல, பொது முடக்கம்தான். ஆனால், பெரிய கூட்டங்கள், திரையரங்குகள் உள்ளிட்டவை தொடர்ந்து மூடியிருக்க வேண்டும் என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன்" என்று கூறினார்.

இந்திய பொருளாதாரம் எப்போது இயல்புக்கு திரும்பும்?

நாட்டின் பொருளாதாரம் பொது முடக்கத்தின் முதல் இரண்டு மாதங்களில் கிட்டத்தட்ட 25 சதவீதம் பாதிக்கப்பட்டாலும், அந்த தற்காலிக சூழ்நிலை முடிவுக்கு வந்து, ஜூன் மாதம் முதல் பொருளாதார மீட்சி தொடங்கியதை காண முடிவதாக கோயல் கூறுகிறார்.

"வணிக வளாகங்கள், சில்லறை விற்பனைகள் உள்ளிட்டவை வருவாய் இழப்பை ஈடுசெய்வது எளிதல்ல. ஆனால் புதிய வாய்ப்புகளும் இல்லாமல் இல்லை. எடுத்துக்காட்டாக, மருந்து உற்பத்தித்துறை, அதிவேகமாக நுகரும் நுகர்வோர் பொருட்கள் போன்ற தொழில்கள் வளர்ச்சியைக் காட்டுகின்றன" என்று அவர் கூறுகிறார்.

"நோய்த்தொற்று முடிவுக்கு வரும்வரை பொருளாதாரம் மீண்டும் பழைய நிலைக்கு திரும்ப முடியாது. இதனால் அடுத்த ஆண்டு நாட்டின் வளர்ச்சி 6-7 சதவீதமாக இருக்கும் என்று மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன. எனினும், அரசு நீண்ட கால சீர்திருத்த நடவடிக்கைகளை தொடர்வதும், ஒப்பீட்டளவில் குறைவாக உள்ள தனிநபர் வருமானம் அதிகரிப்பதற்கு வாய்ப்புள்ளதும் நமக்கு ஆறுதலளிப்பதாக உள்ளது. நாடு விரைவான வளர்ச்சிப் பாதைக்கு செல்ல 3-5 ஆண்டுகள் ஆகும் என்று நான் நினைக்கவில்லை. இரண்டு ஆண்டுகள் போதுமானதாக இருக்கும்."

தரவு குறித்த சந்தேகம்

ஜூன் வரையிலான காலாண்டில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 23.9 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், "உங்கள் வருவாயிலோ அல்லது நீங்கள் எதை உற்பத்தி செய்கிறீர்களோ அதில் கால் பகுதி குறைந்துவிட்டது என்பதுதான் இதன் பொருள். இது ஒரு பெரிய விடயம். இது ஏமாற்றமளித்தாலும், ஓரளவுக்கு எதிர்பார்க்கப்பட்டதுதான்" என்று அவர் கூறுகிறார்.

இருப்பினும், உள்நாட்டு உற்பத்தியை கணக்கிட பயன்படுத்தப்பட்ட தரவு குறித்து இவர் சந்தேகம் எழுப்புகிறார்.

மொத்த உள்நாட்டு உற்பத்தியின் தரவை வெளியிட்ட தேசிய புள்ளிவிவர அலுவலகம் (என்எஸ்ஓ) கூட, அதன் வழக்கமான தரவு சேகரிக்கும் வழிமுறைகளில் சிலவை முழுமையற்றதாக இருக்கலாம் என்பதை ஒப்புக்கொண்டது.

எனவே, கணிக்கப்பட்டதை விட உள்நாட்டு உற்பத்தி சிறப்பாக இருந்திருக்குமா என்ற கேள்விக்கு பதிலளித்த கோயல், "அது சிறப்பானதாகவும் இருந்திருக்கலாம், இன்னும் மோசமானதாகவும் இருந்திருக்கலாம். ஏனெனில், முறைசாரா பொருளாதாரம் சரிவர கணக்கிடப்படுவதில்லை" என்று அவர் கூறுகிறார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: