இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 11 நிதியாண்டுகளில் இல்லாத அளவிற்கு சரிவு

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், நிதி ராய்
- பதவி, பிபிசி செய்தியாளர், மும்பை
2019-20ஆம் நிதியாண்டில் கடைசி காலாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 3.1% ஆக குறைந்துள்ளது.
ஜனவரி முதல் மார்ச் மாதம் வரையிலான மூன்று மாதங்களுக்கான இந்த விவரம் இன்று இந்திய அரசால் வெளியிடப்பட்டுள்ளது.
சென்ற நிதியாண்டின் நான்கு காலாண்டுகளுக்குமான தரவுகள் வெளியாகியுள்ள நிலையில், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 2019-20இல் 4.2% ஆக உள்ளது.
இதுதான் கடந்த 11 நிதியாண்டுகளிலேயே மிகவும் குறைவான வளர்ச்சி விகிதமாகும்கொரோனா வைரஸ் முடக்கநிலை காரணமாக தொழில்துறை முடங்கியபின் முதல் முறையாக இந்திய பொருளாதார வளர்ச்சி குறித்த தரவுகள் வெளியாகியுள்ளன.இதற்கு முந்தைய மூன்றாவது காலாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 4.7% ஆக இருந்தது.
கொரோனா வைரஸ் பரவலால் கிட்டத்தட்ட அனைத்து துறைகளும் முடங்கியுள்ளதால் இந்தியப் பொருளாதார வளர்ச்சி விகிதம் எப்படியும் சரியும் என்று நிபுணர்கள் கணித்திருந்தனர். எனினும், சென்ற நிதியாண்டு முடிய சில நாட்கள் மட்டுமே எஞ்சியிருந்த நிலையில் முடக்கநிலை அறிவிக்கப்பட்டதால், கொரோனா வைரஸால் உண்டான முழுமையான பொருளாதார பாதிப்பு நடப்பு நிதியாண்டில் முதல் காலாண்டுக்கான தரவுகள் வெளியாகும்போது தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கணிப்புகள் கூறியது என்ன?
ஆசியாவின் மூன்றாவது பெரிய பொருளாதாரமான இந்தியா, கடந்த ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் பொருளாதார வளர்ச்சியில் வலுவான முன்னேற்றத்தை கண்டதாகவும், ஆனால் மார்ச் மாதத்தில் தொடங்கிய நாடு தழுவிய முடக்க நிலை வளர்ச்சியைக் கடுமையாகக் குறைத்துள்ளது என்று பொருளாதார வல்லுநர்களை கொண்டு ராய்ட்டர்ஸ் செய்தி முகமை நடத்திய கருத்துக் கணிப்பில் தெரியவந்தது.
கடந்த நிதியாண்டில் கடைசி காலாண்டில் இந்திய பொருளாதாரம் வெறும் 2.1 சதவீத வளர்ச்சியை மட்டுமே கண்டிருக்கக் கூடும் என்று 52 பொருளாதார வல்லுநர்களை கொண்டு ராய்ட்டர்ஸ் நடத்திய கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது. இது கடந்த 2012ஆம் ஆண்டுக்கு பிறகான காலகட்டத்தில் பதிவாகும் குறைந்தபட்ச வளர்ச்சியாக இருக்கும்.

பட மூலாதாரம், Reuters
மொத்த உள்நாட்டு உற்பத்தி என்பது ஒரு குறிப்பிட்ட காலப்பகுதியில் ஒரு நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் மற்றும் சேவைகளின் மொத்த மதிப்பைக் குறிக்கிறது.
கொரோனா வைரஸ் நோய்த்தொற்று பரவுவதற்கு முன்பே, இந்தியப் பொருளாதாரம் வீழ்ச்சியை நோக்கி சென்று கொண்டிருந்தது. அதைத்தொடர்ந்து நோய்த்தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்காக அமல்படுத்தப்பட்ட முடக்க நிலை கிட்டத்தட்ட நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதாரத்தை மென்மேலும் வீழ்ச்சிக்கு கொண்டுசென்றுவிட்டது.
நோமுரா, எச்எஸ்பிசி, ஐசிஆர்ஏ மற்றும் பாங்க் ஆப் அமெரிக்கா செக்யூரிட்டீஸ் போன்ற பல சந்தை மதிப்பீட்டு நிறுவனங்களும் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கடுமையான வீழ்ச்சி இருக்கும் என்றே கணித்திருந்தன.
கடந்த மூன்று தசாப்தங்களில் முதல்முறையாக நடப்பு ஆண்டில் இந்தியப் பொருளாதாரம் எதிர்மறையான வளர்ச்சிப் பாதைக்குள் நுழையப் போகிறது என்று பல பொருளாதார வல்லுநர்கள் கருதுகின்றனர். இருப்பினும், வீழ்ச்சியின் அளவு என்னவாக இருக்கும் என்பதில் கருத்துகள் வேறுபட்ட கருத்துகள் இருந்தன.

பட மூலாதாரம், GIDEON MENDEL/GETTY IMAGES
துறை வாரியான தாக்கத்தை பொறுத்தவரை, உற்பத்தி மற்றும் சேவை துறைகள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கும் என்றும் இதனால் ஏற்பட்ட பாதிப்பை வேளாண்துறை ஓரளவுக்கு கட்டுப்படுத்தும் என்றும் கேர் ரேட்டிங்ஸ் என்ற சந்தை மதிப்பீட்டு நிறுவனம் கூறுகிறது. "இந்தியாவின் பொருளாதாரத்தை பொறுத்தவரை, வேளாண் துறையும், அரசின் செலவினங்களும் தான் ஏறுமுகமாக இருக்க வாய்ப்புள்ளது. பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான தேவை குறைந்துள்ளதும், ஏற்றுமதியில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சியும் உள்நாட்டு வளர்ச்சியை பெரிதும் பாதிக்கும் என்று கருதப்படுகிறது" என்று கூறுகிறார் அந்த நிறுவனத்தை சேர்ந்த பொருளாதார வல்லுநரான ருச்சா ரனதேவ்.மார்ச் மாதத்தின் கடைசி வாரத்தில்தான் இந்தியாவில் முடக்க நிலை அமல்படுத்தப்பட்டது என்பதால் இன்று அறிவிக்கப்பட்ட தரவு, நிகழ்கால பொருளாதார சூழ்நிலையை முழுவதும் பிரதிபலிக்காது என்று பொருளாதார வல்லுநர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். "கடந்த காலாண்டிற்கான பொருளாதார வளர்ச்சி குறைந்த அளவில்தான் இருக்கும். ஆனால், நடப்பு காலாண்டின் போக்குதான் இந்திய பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள உண்மையான பாதிப்பை வெளிப்படுத்தும்" என்று கூறுகிறார் பொருளாதார வல்லுநரான ஜோசப் தாமஸ்.












