கொரோனா வைரஸ் அதிகரிப்பு: இந்தியா சந்திக்கவுள்ள மிகப்பெரிய சவால் என்ன?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், செளதிக் பிஸ்வாஸ்
- பதவி, பிபிசி இந்தியா
இதுவரை மேலோட்டமாக பார்த்தால், கொரோனா வைரஸ் தொற்றால் இந்தியா கடுமையாக பாதிக்கப்படவில்லை என்பது போன்று தோன்றலாம்.
ஜனவரி மாத இறுதியில் இந்தியாவில் முதல் கொரோனா தொற்று பதிவாகியது. மே இறுதியில் இங்கு சுமார் ஒன்றரை லட்சத்திற்கும் மேற்பட்டோர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். 4000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
இந்தியாவில் கொரோனா வைரஸ் நிலவரம் குறித்து இன்னும் சற்று ஆழமாகவும் விரிவாகவும் பார்க்கலாம்.
தரவுகள் சொல்வது என்ன?
மே 22ஆம் தேதி வரை இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில் வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டவர்களின் விகிதம் (testing positivity rate) 4 சதவீதம். இறப்பு விகிதம் 3%ஆக இருந்தது.
கொரோனா தொற்று இரட்டிப்பாவது, அதாவது கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை இரட்டிப்பாக 13 நாட்கள் ஆனது. மேலும் குணமடைபவர்களின் விகிதம் 40 சதவீதமாக இருந்தது,

பட மூலாதாரம், Getty Images
இந்த அனைத்து தரவுகளும் கொரோனாவால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளுடன் ஒப்பிடுகையில் குறைவாகவே இருக்கிறது. மற்ற நாடுகளை போலவே இந்தியாவிலும், கொரோனா மையப்பகுதிகள் இருந்தன.
மகாராஷ்டிரா, தமிழ்நாடு, டெல்லி, குஜராத் மற்றும் மத்திய பிரதேசம் ஆகிய ஐந்து மாநிலங்களில்தான் இந்தியாவில் 80 சதவீத கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.இதில் மும்பை, டெல்லி மற்றும் அகமதாபாத் ஆகிய 5 முக்கிய நகரங்களில் 60 சதவீதத்தினர் இருக்கிறார்கள். இவையெல்லாம் அதிகாரப்பூர்வ தரவுகள் ஆகும்.
உயிரிழப்புகளை கட்டுப்படுத்திய ஊரடங்கு
60 வயதிற்கு மேற்பட்டவர்கள் மற்றும் உடல்நலப்பிரச்சனைகள் இருப்பவர்களே அதிகம் இதனால் இறந்திருக்கிறார்கள். இரண்டு மாதத்திற்கும் மேலாக இந்தியாவில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது, சுமார் 37,000 முதல் 78,000 உயிரிழப்புகளை தவிர்த்துள்ளதாக அதிகாரப்பூர்வ தரவுகள் தெரிவிக்கின்றன.
எட்டு வார ஊரடங்கால் சுமார் 20 லட்சம் நபர்களுக்கு தொற்று பரவுவதையும், 60,000 உயிரிழப்புகளையும் தவிர்க்க முடியும் என்றும் ஹாவர்ட் பல்கலைக்கழக ஆய்வு ஒன்று கூறுகிறது.

பட மூலாதாரம், Getty Images
"ஒரு சில பகுதிகளில் மட்டுமே அதிக கொரோனா பாதிப்பு இருக்கிறது. இதனால், மற்றப் பகுதிகளை திறப்பது குறித்த நம்பிக்கையை எங்களுக்கு அளிக்கிறது. இதுவரை நகர்ப்புறப் பகுதிகள் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளன," என்கிறார் கோவிட் 19 தொற்றுக்கான மருத்துவ அவசரநிலை நிர்வாக திட்டத்துக்கு தலைமை வகிக்கும் வி.கே பால்
ஆனால் இந்தக் கூற்றுகள் எல்லாம் ஓர் நிச்சயமற்ற நிலைக்குள் நுழைந்திருப்பது போல இருக்கிறது.
போதுமான பரிசோதனைகள் செய்யப்படுகிறதா?
ஏனெனில், தற்போது இந்தியா உலகிலேயே கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் முதல் 10 இடத்தில் உள்ளது.
நாளுக்கு நாள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
ஊரங்கு பிறப்பிக்கப்பட்டதில் இருந்து செய்யப்படும் பரிசோதனைகளை விட, தொற்று பாதிப்பு உடையவர்களின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டு வருகிறது.ஏப்ரல் மாதத்தில் இருந்து செய்யப்படும் கொரோனா பரிசோதனை இரட்டிப்பானாலும், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நான்கு மடங்கு அதிகரித்துள்ளது.
கொரோனா பரிசோதனை செய்வது அதிகமாகி இருப்பதால், தொற்று பாதிப்பு இருப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகமாகி இருக்க வாய்ப்பு இருப்பதாக தொற்று நோய் நிபுணர்கள் கூறுகிறார்கள்.
கடந்த வாரம் வரை நாள் ஒன்றுக்கு இந்தியா சுமார் ஒரு லட்சம் பரிசோதனைகள் செய்கிறது. அறிகுறி இல்லாதவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்வது தொடங்கப்பட்டுள்ளது.

எனினும் மக்கள் தொகை அடிப்படையாகக் கொண்டு பார்க்கும்போது இந்தியாவில் செய்யப்படும் பரிசோதனைகள் மிகவும் குறைவே. 10 லட்சம் மக்களில் 2,198 பேருக்கு மட்டுமே கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது.
அடுத்து, கொரோனா தொற்று நகர்ப்புறங்களில் மட்டுமே இருப்பதாக கூறப்படுகிறது.
ஆனால், வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கள் லட்சக்கணக்கான முறைசாரா தொழிலாளர்கள் வேலையிழந்து நகரங்களில் இருந்து கிராமங்களுக்கு திரும்பி வருகின்றனர்.கடந்த 3 வாரங்களில் சுமார் 40 லட்சம் புலம்பெயர் தொழிலாளர்கள் பலர் நடந்தும், சிறப்பு ரயில்களிலும் தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பியுள்ளனர். நகர்ப்புறங்களில் இருந்த, கிராமப்புறங்களுக்கு கொரோனா தொற்று ஏற்கனவே பரவ தொடங்கிவிட்டது என்பதற்கு இதுவே ஆதாரம்.
மேலும், இந்த மாதத் தொடக்கத்தில் சரியான திட்டமிடல் இல்லாமல் தளர்த்தப்பட்ட ஊரடங்கு நகரங்களில் கொரோனா அதிகம் பரவும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு மற்றும் குறைந்த இறப்பு விகிதம் இருப்பது, இளவயதினருக்கு லேசான கொரோனா பாதிப்பு இருப்பதையும், அறிகுறிகள் அற்ற கொரோனா பாதிப்பு இருப்பதையும் காண்பிக்கிறது என்கிறார் நிடி ஆயோகின் தலைமை நிர்வாக அதிகாரி அமிதாப் கண்ட் தெரிவிக்கிறார்.
உயிரிழப்புகளை குறைத்து, குணமடைவர்களின் விகிதத்தை அதிகரிப்பதில் நாம் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் கூறுகிறார்.

பட மூலாதாரம், Getty Images
ஆனால், கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பதாகவும், "அடுத்த சில வாரங்களில் நிலைமை மோசமாகலாம்" என்றும் தொற்று நோய் நிபுணர்கள் தெரிவித்தனர்.
அச்சத்தில் மருத்துவர்கள்
கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகமாவதை கண்கூடாக பார்த்து வரும் டெல்லி, மும்பை போன்ற நகரங்களில் இருக்கும் மருத்துவர்கள், மருத்துவமனைகளில் உள்ள படுக்கை வசதிகள் மற்றும் அவசர நிலை வசதிகள் போதுமான அளவிற்கு இல்லை என்று கவலை தெரிவிக்கிறார்கள்.
இந்தியாவில் ஜூலையில் கொரோனா பாதிப்பு உச்சத்தை அடையும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், போதிய படுக்கை வசதிகள் இல்லாதது, பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் தாமதம், வென்டிலேட்டர் பற்றாற்குறை போன்ற விஷயங்கள் தவிர்க்க முடியாத உயிரிழப்புகளை ஏற்படுத்தும்.
"இதுதான் உண்மையான கவலை. தீவிர நிலையில் இருக்கும் நோயாளிக்கு ஆக்சிஜன் குழாய், வென்டிலேட்டர், மருத்துவர்கள் மற்றும் போதுமான மருத்துவப் பணியாளர்கள் அவசியம். இவை அனைத்தும் அப்போது அழுத்தத்திற்கு உள்ளாகும்" என்கிறார் இந்தோரில் கொரோனா வார்டுக்கு தலைமை வகிக்கும் மருத்துவர் ரவி தோசி.
அம்மருத்துவமனையில் 50 படுக்கைகள் கொண்ட தீவிர சிகிச்சை பிரிவு ஏற்கனவே கொரோனா நோயாளிகளால் நிறம்பி இருக்கிறது.
கணக்கில் வராத உயிரிழப்புகள்
ஒவ்வொரு நாளும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையை கணக்கிடுவதால், இந்த வைரஸ் எவ்வாறு பரவுகிறது என்பதை கண்டறிய முடியாது. ஒரு நாளைக்கு எவ்வளவு புதிய பரிசோதனைகள் செய்யப்பட்டது, எவ்வளவு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பதை பார்த்தால் ஓரளவிற்கு நிலையான தரவுகளை பெற முடியும் என்கிறார் இந்திய பொது சுகாதார அமைப்பின் தலைவர் ஸ்ரீநாத் ரெட்டி
அதேபோல, மக்கள் தொகை அடிப்படையில் கொரோனா இறப்புகளை கணக்கிட வேண்டும். அதாவது10 லட்சம் மக்களில் எத்தனை பேர் இறந்துள்ளனர் என்பதை கண்டறிவது மூலம் சரியான இறப்பு விகிதத்தை பெற முடியும் என அவர் நம்புகிறார்.
பரவலான மற்றும் நிலையான தரவுகள் இல்லாமல், எதிர்காலத்தில் இத்தொற்றின் எதிர்கால பாதையை கணிப்பதற்கு இந்தியா போராடுகிறது.
மேலும், எத்தனை கொரோனா மரணங்கள் பதிவாகாமல் இருக்கிறது என்பதும் இன்னும் தெளிவாக இல்லை. எனினும், அதிகளவில் கொரோனா உயிரிழப்புகள் "மறைக்கப்பட்டதற்கான" எந்த ஆதாரமும் இல்லை
கொரோனா பரிசோதனையை அதிகப்படுத்த வேண்டும்
இந்தியாவில் போதிய கொரோனா வைரஸ் பரிசோதனைகள் செய்யப்படாததால், தொற்று பரவலை குறித்து சரியாக புரிந்துகொள்ள முடியவில்லை என தொற்று நோய் நிபுணர்கள் கூறுகிறார்கள்.

பட மூலாதாரம், Getty Images
தனிமைப்படுத்தப்படுபவர்கள், கொரோனா அறிகுறிகள் இருப்பவர்கள், இல்லாதவர்கள் என பரிசோதனை செய்வதையும், பரவல் மூலம் கொரோனா பாதிப்பு ஏற்பட்ட தொற்றாளர்களையும் கண்டறிவதை அதிகப்படுத்த வேண்டும் என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
"கொரோனா வைரஸ் நம்முடன் இனி இருக்கப் போகிறது என்பதால், நம் தினசரி வாழ்வில் ஆபத்தை எப்படி குறைப்பது என்பதை நாம் கற்றுக்கொள்ள வேண்டும் " என்று மிசிகன் பல்கலைக்கழகத்தின் தொற்று நோய்க்கான பேராசிரியர் ப்ரமர் முகர்ஜி கூறினார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












