விவசாய மசோதா குறித்து மாநிலங்களவையில் எதிர்த்துப் பேசிய அ.தி.மு.க. எம்.பி

பட மூலாதாரம், Getty Images
மத்திய அரசின் மூன்று புதிய விவசாயச் சட்டங்களுக்கு மக்களவையில் ஆதரவு தெரிவித்தது ஏன் என தமிழக முதல்வர் நேற்று விளக்கமளித்திருந்த நிலையில், மாநிலங்களவையில் இந்த மசோதாக்களுக்கு அ.தி.மு.க. எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.
இந்திய நாடாளுமன்ற மக்களவையில் சமீபத்தில் விவசாயம் தொடர்பாக மூன்று சட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அவை 1. விலை உறுதியளிப்பு மற்றும் பண்ணை ஒப்பந்தத்திற்கான விவசாயிகள் (அதிகாரம் மற்றும் பாதுகாப்பு) சட்டம், 2. விவசாயிகள் விளைபொருட்கள் வாணிபம் மற்றும் வர்த்தகம் (ஊக்குவித்தல் மற்றும் உதவுதல்) சட்டம் 3. அத்தியாவசியப் பொருட்கள் திருத்தச் சட்டம்.
இந்தச் சட்டத்திற்கு தமிழகத்தைச் சேர்ந்த தி.மு.க., காங்கிரஸ், சி.பி.எம். உறுப்பினர்கள் கடுமையான எதிர்ப்புத் தெரிவித்த நிலையில், அ.தி.மு.க. உறுப்பினர் ஓ.பி. ரவீந்திரநாத் மசோதாவை ஆதரித்துப் பேசினார்.
இந்த நிலையில் இது தொடர்பான மசோதாக்களை எதிர்கட்சிகளின் கடும் எதிர்ப்பை மீறி மாநிலங்களவையில் மத்திய வேளாண்மை துறை அமைச்சர் நரேந்திரசிங் தோமர் தாக்கல் செய்தார்.
இந்த மசோதாவுக்கு தி.மு.க., காங்கிரஸ் உறுப்பினர்கள் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்த நிலையில், அதிமுகவின் மாநிலங்களவை உறுப்பினர் எஸ்.ஆர். பாலசுப்ரமணியமும் இந்த மசோதாவுக்கு எதிர்ப்புத் தெரிவித்துப் பேசினார். இந்த வேளாண் மசோதாக்களால் மாநில அரசின் அதிகாரம் பறிக்கப்படுவதாக குற்றம்சாட்டினார்.
இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
YouTube பதிவின் முடிவு
"இம்மாதிரி ஒரு அவசரச் சட்டத்தைக் கொண்டுவர என்ன நெருக்கடி இருக்கிறது? பெரும்பாலான விவசாயிகள் சிறு, குறு விவசாயிகள்தான். ஒப்பந்த முறை விவசாயம் என்பது உலக அளவில் தோல்வியைச் சந்தித்திருக்கிறது. மத்திய அரசானது விவசாயத் துறை சீர்திருத்தங்களை அழித்தொழிக்க இந்த கோவிட் பெருந்தொற்று காலத்தைப் பயன்படுத்திக்கொண்டு அவசரச் சட்டங்களைக் கொண்டுவருகிறதோ என்ற சந்தேகம் இருக்கிறது" என்று தெரிவித்தார் எஸ்.ஆர். பாலசுப்ரமணியம்.
மேலும், "ஒப்பந்த முறை விவசாயத்தை சட்டபூர்வமாக்க அவசரச் சட்டம் கொண்டுவரப்பட்டிருக்கிறது. இது இந்திய விவசாயத் துறையை பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் எம்என்சிகளுக்கும் தனியார் மயமாக்கம் செய்வதைப் போன்றது. இதனால், கார்ப்பரேட் நிறுவனங்கள் பெரும் எண்ணிக்கையில் விவசாயத் துறையில் நுழைவார்கள். இது உற்பத்தியை அதிகரிக்கும். ஆனால், அதற்கான விலை என்ன? விவசாயிகள் தங்கள் நிலத்திலேயே விவசாயக் கூலிகளாக மாற்றப்படுவார்கள். ஒப்பந்தத்தில் பிரச்சனை வந்தால், அதைத் தீர்க்க விரிவான ஏற்பாடு இருக்கிறது. ஆனால், ஒரு சிறிய விவசாயியால், பெரிய நிறுவனங்களை எதிர்த்து இவற்றைப் பயன்படுத்த முடியுமா?" என்று கேள்வியெழுப்பினார் எஸ்.ஆர்.பி.
ஒழுங்கு முறை வேளாண் விற்பனைக் கூடங்கள் மூலம் விவசாயிகள் தங்கள் பொருட்களை நல்ல விலைக்கு விற்க முடிகிறது. அவற்றை அழிப்பது பெரு நிறுவனங்களுக்கே சாதகமாக இருக்கும் என்றும் நீண்ட கால நோக்கில் பார்த்தால், முடிவில் விவசாயிகள் கார்ப்பரேட் நிறுவனங்களின் கைகளை எதிர்நோக்கி நிற்பவர்களாக மாறிவிடுவார்கள். இந்தச் சட்டத்தில் குறைந்தபட்ச ஆதரவு விலை குறித்து ஒன்றும் சொல்லப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
"நாட்டின் 30 சதவீதத்திற்கும் மேற்பட்ட மக்கள் விவசாயத்தையே நம்பி வாழ்கிறார்கள். இதில் ஒப்பந்த விவசாயம் என்பது, இரு சமமற்ற சக்திகளுக்கு இடையிலான ஒப்பந்தமாகவே இருக்கும். இந்தச் சட்டங்கள் நிறைவேற்றப்பட்டால், பதுக்கல், கறுப்புச் சந்தையில் விற்பது, அதீத லாபம் சம்பாதிப்பதைத் தடுப்பது போன்றவற்றில் மாநில அரசுக்கு எந்தக் கட்டுப்பாடுமே இருக்காது. மாநில அரசுகள் வேடிக்கை பார்ப்பதைத் தவிர வேறு எதுவும் செய்ய இயலாது.
தமிழ்நாட்டில் விவசாயிகள் தங்கள் பொருட்களை நல்ல விலைக்கு விற்க சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதனால் விவசாயிகளும் நுகர்வோரும் திருப்தியாக உள்ளனர். இதை மாற்றக்கூடாது. விவசாயிகளின் வருவாயை இருமடங்காக, எம்.எஸ். சுவாமிநாதன் கமிட்டியின் பரிந்துரைகளை அப்படியே நிறைவேற்ற வேண்டும்" என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.
மக்களவையில் இந்த மசோதாக்களுக்கு அ.தி.மு.க. ஆதரவு அளித்தது தொடர்பாக, தி.மு.க. கடுமையான விமர்சனங்களை முன்வைத்தபோது, இந்தச் சட்டங்கள் எப்படி விவசாயிகளுக்குச் சாதகமானவை என விரிவான அறிக்கை ஒன்றை முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி வெளியிட்டார்.
அந்த அறிக்கையில், "இந்தச் சட்டங்களால் விவசாயிகளுக்கு உறுதியான வருவாய் கிடைத்து நன்மை கிடைக்குமென்பதால்தான் விவசாயியாகிய தான் இந்தச் சட்டங்களுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கவில்லையென்றும் இந்த விவகாரத்தில் தமிழ்நாட்டின் நிலை வேறு; பஞ்சாபின் நிலை வேறு" என்றும் முதல்வர் தனது அறிக்கையில் விளக்கமளித்திருந்தார்.
இது குறித்துக் கேட்டபோது, "அது அவருடைய சொந்தக் கருத்து. கட்சியின் கருத்தல்ல. மக்களவையில் கட்சி ஆதரித்து வாக்களித்துள்ளது. ஆனால், தலைமையோடு கலந்தாலோசித்து பேசியிருக்க வேண்டும். அதில் இருக்கும் நன்மை - தீமையைப் பேசியிருக்கிறார். மசோதாவை ஆதரிப்பது என்பதுதான் கட்சியின் முடிவு" என்கிறார் அ.தி.மு.கவின் செய்தித் தொடர்பாளரான வைகைச் செல்வன்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












