விவசாய மசோதாக்களை அதிமுக ஆதரித்தது ஏன்? எடப்பாடி பழனிசாமி விளக்கம் - தமிழக அரசியல்

பட மூலாதாரம், CMO Tamilnadu facebook page
இந்திய அரசு கொண்டுவந்திருக்கும் மூன்று விவசாயச் சட்டங்களும் விவசாயிகளுக்கு நன்மை பயக்கும் சட்டங்கள் என்பதால்தான் அவற்றை எதிர்க்கவில்லையென தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி விளக்கமளித்துள்ளார்.
இந்திய நாடாளுமன்றத்தில் கடந்த சில நாட்களில் விவசாயம் தொடர்பாக மூன்று சட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அவை 1. விலை உறுதியளிப்பு மற்றும் பண்ணை ஒப்பந்தத்திற்கான விவசாயிகள் (அதிகாரம் மற்றும் பாதுகாப்பு) சட்டம், 2. விவசாயிகள் விளைபொருட்கள் வாணிபம் மற்றும் வர்த்தகம் (ஊக்குவித்தல் மற்றும் உதவுதல்) சட்டம் 3. அத்தியாவசியப் பொருட்கள் திருத்தச் சட்டம்.
இந்தச் சட்டங்கள் மக்களவையில் விவாதத்திற்கு வந்தபோது அ.தி.மு.க. அதனை ஆதரித்தது. இது தொடர்பாக அறிக்கை வெளியிட்ட எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின், இந்தச் சட்டங்கள் விவசாயிகளுக்கு எதிரானது என்றும் வேளாண் விற்பனைக்கூடங்களுக்கும் உழவர் சந்தைக்கும் எதிரானது என்றும் குற்றம்சாட்டியிருந்தார்.
இந்த நிலையில், இந்தச் சட்டங்களை தமிழக அரசு ஏன் ஆதரிக்கிறது என விளக்கமளித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார். விலை உறுதியளிப்பு மற்றும் பண்ணை ஒப்பந்தத்திற்கான சட்டத்தைப் பொறுத்தவரை, தமிழ்நாடு வேளாண்மை விளை பொருட்கள் மற்றும் கால்நடை ஒப்பந்தப் பண்ணையின் நோக்கங்களை உறுதிப்படுத்துவதுகிறது என்றும் விவசாயிகளைக் கட்டுப்படுத்தும் சரத்துகள் ஏதும் இந்தச் சட்டத்தில் இல்லை என்றும் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கோகோ, கரும்பு, கோழிப் பண்ணை ஆகியவற்றில் ஏற்கனவே ஒப்பந்த முறை நடைமுறையில் இருப்பதாகவும் தமிழக அரசு இதே போன்ற சட்டத்தைக் கொண்டுவந்தபோது தி.மு.க. ஏதும் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லையென்றும் முதல்வர் சுட்டிக்காட்டியுள்ளார்.
விவசாயிகள் விளை பொருட்கள் வாணிகம் மற்றும் வர்த்தகச் சட்டத்தைப் பொறுத்தவரை, வேளாண் விலை பொருட்களை trade area என அறிவிக்கை செய்யப்பட்ட எந்த இடத்திலும் விற்பனை செய்ய அனுமதிப்பதால், விவசாயிகளுக்கு சுதந்திரம் கிடைக்கிறது. தமிழ்நாட்டில் வேளாண் விற்பனை வளாகத்தில் பொருட்களை விற்பனை செய்யும்போது வர்த்தகர்களிடமிருந்து ஒரு சதவீதம் மட்டுமே கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆனால், பஞ்சாப் போன்ற மாநிலங்களில் நெல், கோதுமைக்கு சந்தைக் கட்டணமாக மூன்று சதவீதமும் உள்ளாட்சி மேம்பாட்டு சிறப்பு வரியாக மூன்று சதவீதமும் வசூலிக்கப்படுகிறது.
இதுதவிர இடைத் தரகர்களுக்கு 2.5 சதவீதம் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. புதிய சட்டப்படி, வேளாண் விற்பனைக் கூடங்கள் தவிர்த்த பிற இடங்களில் கட்டணம் வசூலிக்க முடியாது என்பதால் மாநில அரசுக்கு பெரிய அளவில் இழப்பு ஏற்படும் என்பதால் அங்கு எதிர்ப்பு நிலவுவதாகவும் ஆனால், இந்தச் சட்டத்தின் மூலம் விவசாயிகள் எங்கு வேண்டுமானாலும் பொருட்களை விற்பனை செய்யலாம் என்பதால் கூடுதல் விலை கிடைக்குமென முதல்வர் கூறியுள்ளார். தவிர, இந்த வணிகத்திற்குத் தேவைப்படும் நிரந்தரக் கணக்கு எண்ணைப் பொறுத்தவரை, அது வணிகர்களுக்கு மட்டுமே தேவை என்றும் விவசாயிகளுக்குத் தேவையில்லை என்றும் முதல்வர் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

பட மூலாதாரம், Getty Images
மூன்றாவதாக, அத்தியாவசியப் பொருட்களுக்கான திருத்தச் சட்டத்தைப் பொறுத்தவரை இந்தச் சட்டத்தின் மூலம் விளை பொருட்களுக்கு தேவையில்லாத இருப்புக் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதில்லையெனவும் இதனால், வியாபாரிகள், வர்த்தகர்கள், விவசாயிகள் ஆகிய மூன்று தரப்புக்குமே பலன் கிடைக்குமென்று முதல்வர் கூறியிருக்கிறார்.
விவசாயம் என்பது மாநிலப் பட்டியலில் இருந்தாலும் உணவுப் பொருட்கள் வணிகம் மற்றும் வர்த்தகம் என்பது மத்தியப் பட்டியலில்தான் இருக்கிறதென்றும் ஆகவே இந்தச் சட்டங்களை இயற்ற மத்திய அரசுக்கு அதிகாரம் உண்டு என முதல்வர் விளக்கியிருக்கிறார்.
உழவர் சந்தைக்கு இந்தச் சட்டம் தடைவிதிக்கவில்லையென்பதால், அதற்கு பாதிப்பு ஏதும் நேராது என்றும் குறைந்தபட்ச ஆதாரவிலையில் நடந்துவரும் நெல் கொள்முதல் தொடர்ந்து நடக்குமென்றும் முதல்வர் கூறியிருக்கிறார். இந்தச் சட்டங்களால் விவசாயிகளுக்கு உறுதியான வருவாய் கிடைத்து நன்மை கிடைக்குமென்பதால்தான் விவசாயியாகிய தான் இந்தச் சட்டங்களுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கவில்லையென்றும் இந்த விவகாரத்தில் தமிழ்நாட்டின் நிலை வேறு; பஞ்சாபின் நிலை வேறு என்றும் முதல்வர் விளக்கமளித்துள்ளார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












