கொரோனா வைரஸ் அச்சத்திற்கு மத்தியில் வேலை செய்யும் விவசாயிகள் - நம் உணவு தட்டிற்குப் பின்னால் உள்ள உழவர்களின் கதை

- எழுதியவர், நடராஜன் சுந்தர்
- பதவி, பிபிசி தமிழுக்காக
கொரோனா முன்னெச்சரிக்கையாக நோய்த் தொற்று பரவாமல் பாதுகாக்கப் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவால் இந்தியா முழுவதும் உள்ள நகரங்கள் மற்றும் கிராமங்களில் வசித்து வரும் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
இதனால், பொதுமக்கள் அனைவரும் வீடுகளுக்குள் முழுவதுமாக முடங்கியுள்ளனர். நகரங்களில் பெரும்பாலான தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டதாலும், அவற்றிற்கு இணையாகப் பல மென்பொருள் மற்றும் கணினி தொடர்பான நிறுவனங்கள், தங்கள் பணியாளர்களை வீட்டிலிருந்தே பணியாற்ற அறிவுறுத்தப்பட்ட காரணத்தாலும், பணிகளானது முடக்கப்படாமல் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.
விவசாயத்தை முடக்க முடியுமா?
நகரப்பகுதிகளில் இவ்வாறு இருக்கக் கிராமங்களின் பிரதான தொழிலான விவசாயத்தை முடக்க முடியுமா? என்று விவசாயிகள் கேள்வி எழுப்புகின்றனர்.
பொதுவாகவே நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவால் அனைத்துமே முடக்கப்பட்டாலும் பொதுமக்களின் அத்தியாவசிய தேவைகளைப் பூர்த்தி செய்ய அரசாங்கம் ஏற்பாடு செய்துள்ளது. இவ்வாறு தேவைப்படும் அத்தியாவசிய பொருட்கள் அனைத்துமே கிராமப்புறங்களிலிருந்து தான் தினந்தோறும் மக்களின் தேவைக்காக தடைப்படாமல் அனுப்பப்பட்டு வருகின்றன.


விவசாயத்தைப் பொறுத்தவரை முதல் போகமாக நெற்களைப் பயிரிட்டு இரண்டு மாதங்கள் கடந்த நிலையில், நெற்பயிர்கள் களையெடுத்துப் பராமரிக்கும் சரியான காலம் இதுவே. இவ்வாறான சூழ்நிலையில் கொரோனால் முடங்கி வீடுகளில் இருந்தால் சாகுபடி செய்த பயிர்கள் காய்ந்தும், நடவுகளில் களை அதிகமாகி மகசூலைக் கெடுத்துவிடும். ஆகவே, தற்போது நாற்றங்களில் வளர்ந்திருக்கும் புற்களைக் களையெடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

குறிப்பாக, புதுச்சேரி யூனியன் பிரதேசத்தை சுற்றிருக்கும் எல்லைப்பகுதிக்கு அருகே இருக்கும் புதுச்சேரி மற்றும் தமிழகப் பகுதிகள், விவசாயத்தை மட்டுமே பிரதானமாகச் செய்து வருகின்றனர்.
இதனிடையே, புதுச்சேரி அருகேயுள்ள விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயி சுப்பிரமணியன் கூறுகையில், "கால காலத்திற்குப் பயிர்களைக் களையெடுத்து, சரியாக உரம் போட்டால் மட்டுமே அதிகப்படியாக உற்பத்தி செய்ய முடியும். களையெடுக்காமல் விட்டுவிட்டால் அவை பயிர்களை நாசமாக்கி உற்பத்தியை முழுவதுமாக பாதித்துவிடும். இப்போது கொரோனா எதிரொலியால் நாங்கள் அனைவருமே பாதுகாப்பு காரணமாக வீடுகளில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளோம். ஆனால், எவ்வளவு நாட்கள் இப்படி இருக்க முடியும் நாங்கள், ஒரு ஏக்கர் நிலத்திற்கு 25 ஆயிரம் முதல் 30 ஆயிரம் வரை முதலீடு செய்து பயிரை விளைத்து இருக்கிறோம்" என்கிறார்.
எல்லை கெடுபிடி
"ஊரடங்கு உத்தரவால் விவசாய தொழிலாளர்களை பணிக்கு அழைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. மேலும் உரம் வாங்கக் கடைகளுக்குச் செல்ல வேண்டுமென்றால், புதுச்சேரி எல்லைப்பகுதிகளைக் கடந்து தான் செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது. எல்லைகளில் எங்களுக்கு அனுமதி மறுக்கப்படுவதால், விழுப்புரம் மாவட்டத்தின் நகர் பகுதிக்குச் சென்று உரம் வாங்க போனாலும் கடைகள் இருப்பதில்லை. இதன் காரணமாக, பயிர்களை பராமறிக்க முடியாமல் பெரும் இழப்பு ஏற்படுகிறது," என்று தெரிவிக்கிறார்.

தொடர்ந்து அவர் பேசுகையில், "தற்போது பயிர்களை களையெடுக்க விவசாய தொழிலார்தளுக்கு குறிப்பிட்ட அளவில் அழைத்து பணியாற்றி வருகிறோம். பணிக்கு வரும் விவசாயத் தொழிலாளர்களுக்குப் பாதுகாப்பு நலன் கருதி அரசாங்கம் அறிவித்தலின்படி முகக்கவசம் கொடுத்துள்ளோம். ஆனால், அவர்களுக்கு முகக்கவசம் அணிவதை விட முகத்தை துணி மூலம் மூடிக் கொண்டு வேலை செய்வதை வசதியாக கருதுகின்றனர்."

"பணிக்கு வருபவர்களுக்கு வழக்கமாகக் கொடுக்கப்படும் ஊதியத்தை விட, இதுபோன்ற நெருக்கடியான நாட்களில் அவர்களுக்குக் கூடுதலான ஊதியத்தையே நாங்கள் வழங்கி வருகிறோம். எங்கள் சார்பில் அரசாங்கத்திற்கு நாங்கள் வைக்கும் ஒரே கோரிக்கை தீனி, உரங்கள் வாங்க கடைகளை திறந்து வைக்கவும், எல்லைகள் கடந்து செல்லும் சூழல் இருப்பதால் எங்களுக்கு வசதியாக அடையாள அட்டை வழங்கி உதவ வேண்டும்," என்றார் நில உரிமையாளர் சுப்பிரமணியன்.
தண்டனை போல

இதுகுறித்து விவசாய நிலத்தில் பணியாற்றும் ரெங்கநாயகி கூறுகையில், "ஓய்வின்றி வேலை செய்பவர்கள் நாங்கள், இந்த கொரோனாவால் வீடுகளுக்குள் இருந்து வெளியே வராமல் இருப்பது என்பது எங்களுக்குக் கடுமையான தண்டனை போல இருக்கிறது. அன்றாடம் கூலியை நம்பி இருக்கும் எங்களுக்கு வீடுகளில் அப்படியே இருந்தால் வருமானத்திற்கு வழியில்லாமல் போய்விடும். நில உரிமையாளருக்குப் பயிர் பாதிக்கப்பட்டால் நஷ்டஈடு கிடைக்கும். அதை வைத்து அவர்கள் சமாளித்துக் கொள்வார்கள். ஆனால், நாங்கள் தொழிலுக்கு வந்தால் மட்டுமே எங்கள் வாழ்க்கையை சமாளிக்க முடியும்" என்றார்.
கூலிக்காக அல்ல
மேலும் அவர் தொடர்ந்து பேசுகையில், "கூலிக்காக மட்டும் வேலைக்கு வரவில்லை. இந்த பயிரை நடவு செய்தது இந்த கைகளால் தான். ஆனால் அது வீணாகப் போவதை எப்படி வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்க முடியும். இதற்காகவும் தான், நாங்கள் இப்போது தொழிலுக்கு வந்துள்ளோம். முகத்தை மூடிக் கொண்டு வேலை செய்வது கஷ்டமாகத் தான் இருக்கிறது. ஆனால், இதுவும் நல்லதுக்கென்று எல்லாம் சொல்லும் போது அதைக் கண்டிப்பாக கடைப்பிடித்து வேலை செய்து வருகிறோம்" எனத் தெரிவித்தார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












