விவசாயிகள் மசோதா: கடுமையாக எதிர்த்த தமிழக எம்.பி.க்கள்; ஒரே கட்சியாக ஆதரித்த அதிமுக - எம்.பி.க்கள் பேசியது என்ன?

பட மூலாதாரம், Getty Images
விவசாயிகள் வர்த்தகம், வணிகம், விற்பனை தொடர்பான மசோதாக்களை இந்திய நாடாளுமன்ற மக்களவையில் வியாழக்கிழமை தமிழகத்தை சேர்ந்த திமுக, காங்கிரஸ் மற்றும் இடதுசாரி உறுப்பினர்கள் கடுமையாக எதிர்த்தனர். ஆனால், ஒரே கட்சியாக அதை மாநிலத்தில் ஆளும் அதிமுக ஆதரித்தது.
விவசாயிகள் உற்பத்தி பொருட்கள் விலை உத்தரவாதம் மற்றும் பண்ணை சேவைகள் மசோதா உள்ளிட்ட மூன்று மசோதாக்கள் மீதான விவாதத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த உறுப்பினர்கள் மக்களவையில் வியாழக்கிழமை பேசினார்கள்.
அதிமுக உறுப்பினர் ரவீந்திரநாத் நீங்கலாக அந்த மசோதா மீது பேசிய கோயம்புத்தூர் எம்.பி பி.ஆர். நடராஜன், கரூர் எம்.பி ஜோதிமணி, பொள்ளாச்சி உறுப்பினர் கே. சண்முகசுந்தரம், தென்காசி உறுப்பினர் தனுஷ் எம். குமார் உள்ளிட்டோர் மசோதாவை எதிர்த்துப் பேசினார்கள்.
கோயம்புத்தூர் தொகுதி இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் பி.ஆர். நடராஜன் பேசும்போது, போட்டிச்சந்தையில் கார்பரேட்டுகளுடன் போட்டுபோடும் வகையில் விவசாயிகள் அழைக்கப்படுவதை மசோதா ஊக்குவிப்பதாக தெரிவித்தார்.
அத்தியாவசிய பொருட்கள் சட்டத்தின் வரம்பில் இருந்து மசோதா விலக்கி வைக்கப்பட்டிருக்க வேண்டும் என்று வலியுறுத்திய அவர், குறைந்தபட்ச ஆதார விலையுடன் வேளாண் உற்பத்தி பொருட்கள் தொடர்ந்து இருக்குமாறு பார்த்துக்கொள்ளப்பட்டிருக்க வேண்டும் என்று கூறினார்.
தாங்கள் உற்பத்தி செய்யும் பொருட்களுக்கான ஊதிய விலை, குறைந்தபட்ச ஆதார விலைக்கு மேல் இருப்பதை அரசு உறுதிப்படுத்தியிருக்க வேண்டும். ஆனால், எதுவும் செய்யப்படாத நிலையில், இந்த மசோதாவை எதிர்க்கிறேன்" என்று பி.ஆர். நடராஜன் தெரிவித்தார்.
கரூர் தொகுதி காங்கிரஸ் உறுப்பினர் ஜோதிமணி பேசும்போது, 2022ஆம் ஆண்டில் விவசாயிகளின் வருவாயை இரட்டிப்பாக்குவதாக ஆளும் அரசு தேர்தல் வாக்குறுதி அளித்ததை நினைவுபடுத்தினார். ஆனால், அந்த வாக்குறுதியை எட்டும் வகையில் தற்போது அறிமுகப்படுத்தப்பட்ட மூன்று மசோதாக்களும் இல்லை என்று அவர் கூறினார். விவசாயிகளுக்கு உதவுகிறோம் என்ற போர்வையில், சில நகாசு வேலை செய்து பன்னாட்டு நிறுவனங்களுக்கும் கார்பரேட்டுகளுக்கும் ஆதரவான வகையில் இந்த மசோதாவை அரசு கொண்டு வந்துள்ளதாகக் ஜோதிமணி குற்றம்சாட்டினார்.

பட மூலாதாரம், Getty Images
"இந்த மசோதா வரையறுக்கும் உடன்பாட்டை படித்துப் புரிந்து கொண்டு கையெழுத்திடும் அளவுக்கும் நம் நாட்டில் எத்தனை விவசாயிகள் படிப்பறிவைப் பெற்றிருக்கிறார்கள்? இந்த மசோதா விவசாயிகளுக்கு மேலும் சிக்கலாகுமே தவிர, அவர்களின் நலனை அது பாதுகாக்கப்போவதில்லை" என்று அவர் குறிப்பிட்டார்.
"ஒருவேளை போட்டிச் சந்தை வியாபாரத்தில் விவசாயி சிக்கலை சந்தித்தால் அவர் மத்தியஸ்த வாரியத்துக்கு செல்ல வேண்டும். அங்கு 30 நாட்களுக்குள் ஏதும் நடக்காவிட்டால், அவர் துணை வட்டாட்சியரிடம் செல்ல வேண்டும். அங்கும் பயனளிக்காவிட்டால் மாவட்ட ஆட்சியரிடம் அவர் செல்ல வேண்டும். இந்த நடைமுறையின் மூலம் ஏழை விவசாயிகள், கார்பரேட்டு முதலைகளுடன் மோதி சட்டப்போராட்டம் நடத்தும் நிலைக்கு தள்ளப்படுவார்கள். இவ்வளவு மனவுளைச்சலை எதிர்கொண்ட பிறகும் விவசாயிகளுக்கு நீதி கிடைக்கும் என்பதற்கு என்ன உத்தரவாதம் இருக்கிறது?" என்று ஜோதிமணி கேள்வி எழுப்பினார்.
"உதாரணமாக ஓராண்டுக்கு முன்பு குறிப்பிட்ட ஒரு வகை உருளைக்கிழங்கை விளைவித்த விவசாயிகளுக்கு எதிராக பெப்ஸி நிறுவனம் ஒரு கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடர்ந்தது. குறிப்பிட்ட அந்த ரக உருளைக்கிழங்குக்கு பெப்ஸி நிறுவனம் உரிமம் பெற்றிருந்ததை விவசாயிகள் அறிந்திருக்கவில்லை. கார்பரேட்டுகளுடன் விவசாயிகள் போட்டிபோடும் அளவுக்கு சமமான நிலை நம் நாட்டில் கிடையாது. இதனால்தான் பஞ்சாப், ஹரியாணா உள்ளிட்ட பிற மாநிலங்களில் மசோதாவுக்கு எதிராக விவசாயிகள் வீதிகளில் இறங்கிப்போராடுகிறார்கள்.
கார்பரேட்டுகள், பன்னாட்டு நிறுவனங்களின் கருணையில் இந்திய விவசாயிகள் வாழ வேண்டும் என இந்திய அரசு கருதுகிறதா? ஏற்கெனவே கடன் சுமையால் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. உற்பத்தி செலவையும், பயிர் இழப்பையும் தாங்கிக்கொள்ள முடியாமல் அவர்கள் போராட வேண்டியுள்ளது. விவசாயிகளுக்கு வாழ்வதாராமான இலவச மின்சாரத்தை தொடரும்படி அவர்கள் கோரி வருகிறார்கள். இதுதவிர பிரதமரின் விவசாய காப்பீடு என்ற பெயரில் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் அளவுக்கு இந்தியாவில் மோசடி நடந்துள்ளது. தமிழ்நாட்டில் அந்த மோசடி எண்ணிக்கை ஆயிரம் கோடி ரூபாயை கடந்து விட்டது. இப்படிப்பட்ட சூழலில் அரசு கொண்டு வரும் இந்த கொடூரமான மசோதா, விவசாயிகளை மரணப்புதைகுழியில் தள்ளுவதற்கு ஒப்பாகும். இதை திரும்பப்பெற வேண்டும்" என்று ஜோதிமணி பேசினார்.

பட மூலாதாரம், Getty Images
பொள்ளாச்சி தொகுதி திமுக உறுப்பினர் கே. சண்முகசுந்தரம் பேசும்போது, "உணவுப்பொருட்கள் தேக்கத்தை தடுக்க விவசாயிகள் சீர்திருத்தம் என்ற பெயரில் அவசர சட்டம் கொண்டு வந்து அத்தியாவசிய பொருட்கள் சட்டத்தில் திருத்தம் செய்த மத்திய அரசு, விவசாயிகள் உற்பத்தி வணிகம் மற்றும் வர்த்தகம் தொடர்பான அவசர சட்டம் கொண்டு வந்து விவசாய பொருட்கள் உற்பத்தியில் ஏகபோகத்தை நிறுத்தப்போவதாகக் கூறியது. பிறகு விவசாயிகள் அதிகாரமளித்தல் மற்றும் பாதுகாப்பு தொடர்பான விலை உத்தரவாதம் மற்றும் பண்ணை சேவைகள் அவசர சட்டத்தை கொண்டு வந்தது. இவற்றுக்கு மாற்றாக விளங்கும் தற்போதைய மசோதாவை அரசு நிறைவேற்ற திட்டமிட்டுள்ளது. ஆனால், அடிப்படையில் மாநில உரிமை தொடர்புடைய இந்த விவகாரத்தில் எவ்வாறு ஒரு மசோதாவை கொண்டு வர மத்திய அரசுக்கு அதிகாரம் உள்ளது என்பது தெளிவாகவில்லை" என்று கூறினார்.

பட மூலாதாரம், Getty Images
மசோதாவை ஆதரித்த ஒரே தமிழக எம்.பி
தேனி தொகுதி எம்.பி ரவீந்திரகுமார் பேசும்போது, "இந்த மசோதா மீது பேசக்கிடைத்த வாய்ப்புக்காக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்," என்றார்.
"பிரதமர் நரேந்திர மோதியின் ஆளுமை மிக்க தலைமை நாட்டை அறிவியல், கல்வி, விவசாயம் ஆகிய துறைகளில் அறிவாற்றல் உச்சத்துக்கு கொண்டு செல்லும் என நம்புகிறேன். வறுமை என்ற வார்த்தையை ஒழிக்கவும் விவசாயிகளின் வருவாயை இரட்டிப்பாக்கவும் பிரதமர் காட்டும் உண்மையான அர்ப்பணிப்பு, உலகில் ஒவ்வொருவரையும் வியக்கவைக்கிறது. இன்று அவரது பிறந்த நாள். எனவே, அவருக்கு நல்ல உடல் நலத்தையும் நீண்ட ஆயுளையும் தந்து நாட்டுக்கு சேவையாற்ற இறைவனை பிரார்த்தனை செய்கிறேன்."
"இந்த மசோதாவைப் பொருத்தவரை, அரசாங்கம் எப்போதும் விவசாயிகளின் பிரச்னைகளைத் தீர்ப்பதில் முன்னணியில் இருக்கிறது. இந்த மசோதா, விவசாயிகள் பாதுகாப்புக்கான பாதையாக விளங்குகிறது. விவசாயிகள் தங்களுக்கென சுயமான ஆணையத்தை கொண்டிருப்பார்கள். இனி அவர்கள் வர்த்தகர்களை நம்பியிருக்கத் தேவையில்லை. போட்டியில்லாத விலையை எதிர்கொள்ளும் நிலை அவர்களுக்கு இனி இருக்காது. பண்ணை உற்பத்தி பொருட்களை வாங்கவும் விற்கவும் தொடர்புடைய தேர்வை செய்யக்கூடிய சுற்றுச்சூழல் வாய்ப்பை அவர்கள் பெறுவார்கள். ஏற்கெனவே பல கட்டுப்பாடுகளால் இந்திய விவசாயிகள் கடுமையாக அவதிப்பட்டார்கள். விவசாயத்தை அடிப்படை தொழிலாகக் கொண்ட மாநிலம் மற்றும் மாவட்டத்தில் இருந்து நான் வருகிறேன். இந்த மசோதா நிச்சயம், தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் என்று நான் நம்புகிறேன்."
"சிறு விவசாயிகள், நீண்ட தூரம் சென்று உற்பத்தி பொருளை விற்க அவர்களின் நிதி நிலை இடம் கொடுக்காது. எனவே, அவர்கள் பயணம் செய்வதற்கான மானியத்தை வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன். இரண்டாவதாக, மின்னணு வர்த்தகத்தில் எல்லா விவசாயிகளும் நிபுணத்துவம் பெற்றவர்கள் அல்ல. அவர்களுக்கு முறையான பயிற்சியும் பாதுகாப்பு ஒழுங்குமுறை விழிப்பையும் ஏற்படுத்தி, ஆன்லைன் மோசடியை தடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்."
"கோவிட்-19 வைரஸ் பாதிப்பால் நமது பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த மசோதா, இந்திய வேளாண் விற்பனை முறையை மேம்படுத்த வாய்ப்பை வழங்கியிருக்கிறது. இந்த மசோதா மூலம் நீண்டகாலமாக நீடித்த வேளாண் வளர்ச்சி மற்றும் விவசாயிகள் வருவாய் இரட்டிப்புக்கு பாதகமான தடங்கல்களை கலைந்துள்ளது. இதன் மூலம் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு மிகப்பெரிய கொள்கை சீர்திருத்தத்தை மேற்கொண்டுள்ளது. எனவே, இந்த மசோதாவை நான் ஆதரிக்கிறேன்" என்று ரவீந்திரநாத் பேசினார்.
விவசாயிகள் பண்ணை வர்த்தக மசோதா மீதான விவாதத்தில் நரேந்திர மோதி அரசுக்கு எதிராக சீறிய பெண் எம்.பி மஹுவா மொய்த்ராயின் காணொளி:
பிற செய்திகள்:
- ”பூதம் உங்களை ஒரு நாள் காவு வாங்கும்” - மோதி அரசுக்கு எதிராக சீறிய பெண் எம்.பி
- பாபர் மசூதி இடிந்த கதை தெரியுமா? எங்கோ தொடங்கி எங்கோ சென்ற வரலாறு
- நீட் விவகாரம் தொடர்பாக சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை இல்லை - உயர் நீதிமன்றம்
- இலங்கையில் ஒரு கிலோ மஞ்சள் ரூ.4500 வரை விற்கப்படுவதற்கான காரணம் என்ன?
- இந்தியாவில் கொரோனா வைரஸ் நாம் நினைப்பதை விட பெரிய பிரச்சனையாக உருவெடுக்கிறதா?
- “வணக்கம். நான் இறந்தவன் பேசுகிறேன்” – இறுதிச் சடங்குகளில் வருமானம் ஈட்டும் நபர்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :













