இந்தியாவில் கொரோனா வைரஸ் நாம் நினைப்பதை விட பெரிய பிரச்சனையாக உருவெடுக்கிறதா?

கோவிட் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டிருக்கும் நிலையிலும், அன்றாட வாழ்க்கை தொடங்கிவிட்டது.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கோவிட் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டிருக்கும் நிலையிலும், அன்றாட வாழ்க்கை தொடங்கிவிட்டது.
    • எழுதியவர், சௌதிக் பிஸ்வாஸ்
    • பதவி, பிபிசி இந்தியா

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு ஒன்பது மாதங்கள் ஆகப் போகிறது. 51 லட்சம் பேருக்கும் மேல் நோய் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக உலகில் இந்தியா இரண்டாவது இடத்தில் இருக்கிறது. 81 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மரணங்கள் நிகழ்ந்துள்ளன.

இந்தியாவில் கோவிட் பாதிப்பு எண்ணிக்கை ``சுழல் படிக்கட்டு'' போல செங்குத்தாக மேலே போய்க் கொண்டிருக்கிறது என்று அரசு ஆராய்ச்சியாளர் ஒருவர் என்னிடம் கூறினார்.

``நிலையாக இருக்கும்'' ஒரே விஷயம், மரண எண்ணிக்கை தான் - 1.63 சதவீதம் பேர் உயிரிழக்கிறார்கள். அதிக நோய் பாதிப்புள்ள மற்ற நாடுகளுடன் ஒப்பிடும் போது இந்தியாவில் மரண விகிதங்களின் அளவு குறைவு. அதிக அளவில் பரிசோதனைகள் செய்யப்படுவதும், நோய் பாதிப்பு கண்டறியப்படும் எண்ணிக்கை அதிகரிப்புக்குக் காரணமாக உள்ளது. ஆனால் இந்த வைரஸ் பரவிவரும் வேகம் நிபுணர்களை கவலை அடையச் செய்திருக்கிறது.

முதலாவது ஒரு மில்லியன் பாதிப்புகள் 170 நாள்களில் கண்டறியப்பட்டன. கடைசி மில்லியன் பாதிப்புகள் வெறும் 11 நாட்களில் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன என்பது தான் இந்தக் கவலையை ஏற்படுத்தியுள்ளது. சராசரியாக தினசரி நோய் பாதிப்பு கடந்த ஏப்ரலில் 62 என்ற நிலையில் இருந்து, செப்டம்பரில் 87,000 என்ற அளவுக்கு உயர்ந்துள்ளது.

கடந்த வாரத்தில் இந்தியாவில் தினமும் 90 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாதிப்புகள் கண்டறியப் பட்டுள்ளன, தினமும் சுமார் 1,000 மரணங்கள் நிகழ்ந்துள்ளன. ஏழு மாநிலங்களில் நிலைமை மோசமாக உள்ளது. இந்திய மக்கள் தொகையில் 48 சதவீதம் பேர் இந்த மாநிலங்களில் வாழ்கிறார்கள்.

வரைபடம்

ஆனால் தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையிலும், பணியிடங்கள், பொதுப் போக்குவரத்து, உணவகங்கள், உடற்பயிற்சிக் கூடங்கள் ஆகியவை செயல்பட இந்தியா அனுமதித்துள்ளது. கடந்த தசாப்தங்களில் மிக மோசமாக பாதித்துள்ள பொருளாதாரத்தை மீட்கும் முயற்சியாக இந்த நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது.

உலகில் கொடூரமான நடவடிக்கையாக அமைந்துவிட்ட முடக்கநிலை காரணமாக மக்கள் வீடுகளிலேயே இருக்க வேண்டியதாயிற்று. தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டன. அமைப்புசாரா தொழிலாளர்கள் வேலையிழந்து சொந்த ஊர்களுக்கு, கால்நடையாகவும், பேருந்துகள் மற்றும் ரயில்கள் மூலமும் திரும்பினர்.

நோய் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையிலும் பொருளாதார செயல்பாடுகளைத் தொடங்கி இருப்பது ``முடக்கநிலை மயக்கத்தை'' காட்டுவதாக உள்ளது. நொமுரா இந்தியா தொழில் மீட்டுருவாக்க குறியீடு பின்வருமாறு கூறியுள்ளது.

தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கலாம்

Banner image reading 'more about coronavirus'
Banner

இந்தியாவில் இதுவரை 50 மில்லியனுக்கும் மேற்பட்டோருக்கு கோவிட் மருத்துவப் பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. தினமும் ஒரு மில்லியனுக்கும் அதிகமான சாம்பிள்கள் பரிசோதிக்கப் படுகின்றன. ஆனாலும் உலக அளவில் ஒப்பிடும்போது, இந்தியாவில் மருத்துவப் பரிசோதனை விகிதம் குறைவாகவே உள்ளது.

எனவே, இந்தியாவில் உண்மையான தொற்று பாதிப்பு இன்னும் அதிகமாக இருக்கும் என்று தொற்றுநோய் துறை நிபுணர்கள் கூறுகின்றனர்.

நாடு முழுக்க தன்னியல்பாக தேர்வு செய்யப்பட்ட மக்களிடம் நோய் எதிர்ப்பு அணுக்களைக் கண்டறிவதற்கான பரிசோதனை கடந்த மே மாதம் நடத்தப்பட்டது. சுமார் 6.4 மில்லியன் பேருக்கு கோவிட் பாதிப்பு வந்திருக்கும் என்று அப்போது மதிப்பிடப்பட்டது. ஆனால் அப்போது 52 ஆயிரம் பேருக்கு மட்டுமே கோவிட் பாதிப்பு கண்டறிந்து உறுதி செய்யப் பட்டிருந்தது.

பரிசோதனை எண்ணிக்கைகளை இந்தியா கணிசமான அளவுக்கு அதிகரித்துள்ளது.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பரிசோதனை எண்ணிக்கைகளை இந்தியா கணிசமான அளவுக்கு அதிகரித்துள்ளது.

நோய் பாதிப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் வரையில், பொருளாதாரம் முழுமையாக மீட்சி பெறுவதற்கு தாமதம் ஆகும். மருத்துவமனைகள் மற்றும் சுகாதார மையங்களுக்கு வரும் நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டிருக்கும்.

இப்போதைய தொற்று பாதிப்பு அதிகரிப்பை ``முதலாவது அலை என்பதைவிட முதலாவது பேரலைகளின் தொகுப்பு'' என்று தான் கூற வேண்டும் என்று டெல்லியைச் சேர்ந்த பொது சுகாதார அறக்கட்டளை அமைப்பின் தலைவர் கே. ஸ்ரீநாத் ரெட்டி கூறியுள்ளார்.

``அலைகள் தொடங்கும் இடத்தில் இருந்து வெளிப்புறமாக நகர்ந்து செல்லும். அதன் நேரங்கள் மாறுபடும். ஒட்டுமொத்தமாக அவை உயரமான பேரலையை உருவாக்குகின்றன. அந்தப் பேரலை இன்னும் பின்வாங்கத் தொடங்கவில்லை'' என்று அவர் விளக்கம் அளித்தார்.

பாதிப்பு எண்ணிக்கை ஏன் இன்னும் அதிகரிக்கிறது?

``மக்கள் நடமாட்டம் அதிகரித்துள்ள நிலையில், சமூக இடைவெளி பராமரித்தல், முகக்கவச உறை அணிதல் மற்றும் தனிப்பட்ட ஆரோக்கியத்தைப் பாதுகாத்தல் ஆகிய அம்சங்களில் அதிக கவனம் செலுத்தாதது ஆகியவற்றால் வைரஸ் பாதிப்பு மீண்டும் அதிகரிக்கும்'' என்று டாக்டர் முகர்ஜி கூறியுள்ளார்.

இந்தியாவில் கோவிட்-19 பாதிப்பால் 80 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் இறந்துள்ளனர் என்று அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.

பட மூலாதாரம், AFP

படக்குறிப்பு, இந்தியாவில் கோவிட்-19 பாதிப்பால் 80 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் இறந்துள்ளனர் என்று அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.

கூட்டுக் குடும்பங்களில் வாழும், தீவிர நோய் பாதிப்புக்கு ஆளான முதிய வயது நோயாளிகள் தங்களிடம் வருவதாக ராஜஸ்தானில் ஜோத்பூரில் உள்ள பெரிய மருத்துவமனை ஒன்றின் டாக்டர் தெரிவித்தார்.

இந்தியாவில் ``நோய்த் தொற்றின் பெரும் பாதிப்பு'' ஏற்படும் என்று கடந்த மார்ச் மாதத்தில், பிரபல வைரஸ் ஆராய்ச்சி நிபுணர் டாக்டர் டி. ஜேக்கப் ஜான் எச்சரிக்கை விடுத்தார்.

பரந்து விரிந்த ஒரு நாட்டில், தள்ளாட்டத்தில் இருக்கும் பொது சுகாதாரத் துறை கட்டமைப்பு உள்ள சூழ்நிலையில், எண்ணிக்கைகள் அதிகரிப்பதைத் ``தவிர்க்க முடியாது'' என்று இப்போது அவர் கூறுகிறார். ஆனால் இந்த அளவுக்கு அதிகமான பாதிப்புகளைக் குறைத்திருக்க முடியும் என்கிறார் அவர். முடக்கநிலை அமல் காலம் தவறான நேரத்தில் செய்யப்பட்டது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

நோய்த் தொற்று பரவிய சில நகரங்களில் பகுதியளவுக்கு மற்றும் நன்கு கையாளப்படும் வகையில் முடக்கநிலையை அமல் செய்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று பெரும்பாலான நிபுணர்கள் கூறுகின்றனர்.

``முடக்கநிலை என்ன நடந்திருக்கக் கூடாதோ அவை தான் நடந்தன என்பதால் அது தோல்வி அடைந்தது'' என்று உலக வங்கியின் முன்னாள் முதன்மை பொருளாதார நிபுணர் கௌசிக் பாசு கூறியுள்ளார். ``மக்கள் சொந்த ஊர் திரும்ப, நாடு முழுக்க பெருமளவில் நடந்து சென்றார்கள். அவர்களுக்கு வேறு வழி இல்லை. அதன் விளைவாக, இந்தியப் பொருளாதாரம் பாதிக்கப்பட்டது, வைரஸ் பரவல் தொடர்ந்தது'' என்று அவர் தெரிவித்தார்.

நோய்த் தொற்று காலத்தில் இந்தியாவில் பல மில்லியன் பேர் வேலைகளை இழந்தனர்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, நோய்த் தொற்று காலத்தில் இந்தியாவில் பல மில்லியன் பேர் வேலைகளை இழந்தனர்.

ஆனால் டாக்டர் ரெட்டி போன்ற பொது சுகாதார நிபுணர்கள் காப்பாற்றப்பட்டனர்.

``முடக்கநிலை காலத்தை முன்கூட்டியே திட்டமிடுவது எளிதான விஷயம் அல்ல. பிரிட்டனில் கூட முடக்கநிலை அமல் நடவடிக்கை தாமதமாக எடுக்கப்பட்டது என்றும், முன்னதாகவே முடக்கநிலை அமல் செய்திருந்தால் நிறைய உயிர்களைக் காப்பாற்றி இருக்கலாம் என்றும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.''

`ஒவ்வொரு மரணமும் நேசத்துக்குரிய ஒருவரின் முகம்'

கிடைத்திருக்கும் பலன்கள் எப்படிப்பட்டவையாக இருந்தாலும், இந்த வைரஸ் பற்றி அறிந்து கொள்ளவும், சிகிச்சை நடைமுறைகளை உருவாக்கவும், கண்காணிப்பு நடைமுறைகளை உருவாக்கவும் இதன் மூலம் இந்தியாவிற்கு அவகாசம் கிடைத்தது. மார்ச் மாதத்திற்கு முன்பு வரையில் இந்த செயல் திட்டங்கள் எதுவும் அரசிடம் கிடையாது என்று தொற்றுநோய் சிகிச்சை நிபுணர்கள் கூறுகின்றனர்.

பனிக்காலம் நெருங்கும் நிலையில் இந்தியாவில் 15,000-க்கும் மேற்பட்ட கோவிட்-19 சிகிச்சை மையங்கள் உள்ளன. ஒரு மில்லியனுக்கும் கோவிட் தனிமைப்படுத்தல் படுக்கை வசதிகள் உள்ளன.

முகக் கவச உறைகள், பாதுகாப்புக் கவச உடைகள், வென்டிலேட்டர்களுக்கு தட்டுப்பாடு எதுவும் கிடையாது. மார்ச் மாதத்தில் இருந்ததைவிட நிலைமை மிகவும் மேம்பட்டுள்ளது. கடந்த சில வாரங்களில் ஆக்சிஜன் விநியோகம் தேவைக்கு ஏற்ப உள்ளது.

``சுகாதார வசதிகள் மற்றும் கோவிட்-19 சிகிச்சை மையங்களை பலப்படுத்தியதன் காரணமாக, மரணங்களின் விகிதம் குறைவாக உள்ளது'' என்று டாக்டர் முகர்ஜி கூறினார்.

இருந்தபோதிலும், ஏற்கெனவே பலவீனமாக இருக்கும் இந்தியாவின் பொது சுகாதாரக் கட்டமைப்பு, தாங்கும் திறனை கடக்கும் நிலைக்கு அழுத்தம் ஏற்பட்டிருக்கிறது.

நாடு முழுக்க சிறப்பு கோவிட்-19 வார்டுகளில் மருத்துவர்கள் சேவையாற்றி வருகின்றனர்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, நாடு முழுக்க சிறப்பு கோவிட்-19 வார்டுகளில் மருத்துவர்கள் சேவையாற்றி வருகின்றனர்.

``இந்த நெருக்கடியான நேரத்தில், நோய்த் தொற்றின் மயக்கம் மற்றும் தாக்குபிடிக்கும் திறன் ஆகியவற்றை நாம் புரிந்து கொண்டால், குறைவான ஆதாரவளங்களை வைத்துக் கொண்டு நோய்த் தொற்றுகளையும், தீவிர நோய் பாதிப்புகளையும் பொது சுகாதார அலுவலர்கள், நோயாளிகள் மற்றும் குடும்பத்தினர் நல்ல முறையில் கையாண்டு வருகிறார்கள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்'' என்று மசாசுசெட்ஸ் தொழில்நுட்பக் கல்வி நிலையத்தின் மருத்துவ மானுடவியலாளர் டிவாய்பயன் பானர்ஜி கூறியுள்ளார்.

வேறு வகையில் சொல்வாதானால், மயக்க நிலையும், தாக்குபிடிக்கும் திறனும் இந்திய பொது சுகாதார நடைமுறையில் பரவலாக இருக்கக் கூடியவை.

ஆனால் டாக்டர்களும், சுகாதார அலுவலர்களும் மாதக்கணக்கில் ஓய்வின்றி உழைத்து வருகிறார்கள்.

``ஓய்வில்லாமல் வேலை பார்க்கிறோம். எங்களுக்கு உடல் வலுவிழந்துவிட்டது'' என்று டாக்டர் ரவி தோசி கூறினார். இந்தூரில் ஒரு தனியார் மருத்துவமனையில் இவர் 4,000-க்கும் மேற்பட்ட கோவிட்-19 நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்துள்ளார். மார்ச் மாதத்தில் இருந்து தினமும் 20 மணி நேரத்துக்கும் மேலாக தாம் உழைத்து வருவதாக அவர் தெரிவித்தார்.

பொது சுகாதாரத் துறையில் உள்ள குறைபாடுகள் ஏற்கெனவே வெளிச்சத்துக்கு வந்துவிட்ட நிலையில், நகரங்கள் முதல் கிராமங்கள் வரை நோய் பாதிப்புகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டிருக்கிறது.

வைரஸ் பரவாமல் தடுப்பதற்காக, பொது இடங்களுக்குச் செல்லும் போது பொது மக்கள் முகக்கவச உறை அணியும்படி கட்டாயப்படுத்தப் படுகிறது.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, வைரஸ் பரவாமல் தடுப்பதற்காக, பொது இடங்களுக்குச் செல்லும் போது பொது மக்கள் முகக்கவச உறை அணியும்படி கட்டாயப்படுத்தப் படுகிறது.

``அனைத்து மாநிலங்களிலும் நோய் கட்டுப்பாட்டுக்குள் வரும் வரையில் மெதுவாக சீரான வேகத்தில் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டிருக்கும்'' என்று டாக்டர் முகர்ஜி நம்புகிறார்.

தலைப்புச் செய்திகள் மூலம் மேலாண்மைச் செய்வதைக் காட்டிலும், நீண்டகால அடிப்படையிலான ஒருங்கிணைந்த மத்திய - மாநில அரசுகளின் கூட்டு அணுகுமுறை தேவைப்படுகிறது என்று அவர் கூறியுள்ளார்.

கோவிட் நோயால் பாதிக்கப்பட்டவர்களில், ஏற்படும் உயிரிழப்புகளின் விகிதம் குறைவாக இருக்கிறது என்பது தான் அவருடைய ஒரே நம்பிக்கை.

``நோய்த் தொற்று ஏற்பட்டவர்களில் மரண விகிதம் 0.1 சதவீதமாக உள்ளது என்றாலும், இந்தியாவில் 50 சதவீதம் பேருக்கு பாதிப்பு ஏற்படுமானால் 670,000 மரணங்கள் நிகழும். ஒவ்வொரு மரணமும் வெறும் புள்ளிவிவரம் கிடையாது. நேசத்துக்குரிய ஒரு முகமாக அவை பார்க்கப்பட வேண்டும்'' என்று அவர் கூறியுள்ளார்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளதாக சந்தேகிக்கப்படும் சில நோயாளிகள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவதில்லை.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :