`பொறியியல் மாணவர்களுக்கு ஆன்லைனில் இறுதி செமஸ்டர் தேர்வு நடத்துவதில் சிக்கல் இல்லை` – அண்ணா பல்கலைக்கழகம் தந்த விளக்கம்
இந்திய நாளிதழ்களில் வெளியான சில முக்கிய செய்திகளை இங்கே தொகுத்து வழங்குகிறோம்.
தினத்தந்தி: `பொறியல் மாணவர்களுக்கு ஆன்லைனில் இறுதி செமஸ்டர் தேர்வு நடத்துவதில் சிக்கல் இல்லை`

பட மூலாதாரம், Mayur Kakade
பொறியியல் படிப்புகளுக்கான இறுதி செமஸ்டர் தேர்வு ஆன்லைனில் நடத்தப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது என்கிறது தினத்தந்தியின் செய்தி.
வருகிற 22-ஆம் தேதி முதல் 29-ஆம் தேதி வரை ஆன்லைனில் தேர்வு நடைபெற இருக்கிறது. இதற்கான மாதிரி தேர்வு வருகிற 19 (நாளை), 20 (நாளை மறுதினம்) மற்றும் 21-ந்தேதிகளில் (திங்கட்கிழமை) நடத்தப்பட உள்ளது.
இந்த நிலையில் ஆன்லைனில் தேர்வு நடத்துவதால் கிராமப்புற மாணவர்கள் எப்படி எழுதுவார்கள்? என்று பேசப்பட்டது. இதையடுத்து அண்ணா பல்கலைக்கழகம் இதுபற்றி ஆய்வு நடத்தியதாக கூறப்படுகிறது. அதன் அடிப்படையில் சில தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
அதன்படி, இறுதி செமஸ்டர் தேர்வை எழுதும் மாணவர்கள் அனைவரிடமும் ஆன்ட்ராய்டு செல்போன் வசதி இருக்கிறது என்றும், இறுதி செமஸ்டர் தேர்வு நடத்துவதற்கு எந்த சிக்கலும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்து தமிழ் திசை: `குணமடைந்த 45,222 குழந்தைகள்`

பட மூலாதாரம், Getty Images
கொரோனா நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்ட 45 ஆயிரத்து 222 குழந்தைகளுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாக, தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார் என்கிறது இந்து தமிழ் திசை செய்தி.
சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட 542 குழந்தைகள் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர்.
மேலும், வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட 372 குழந்தைகளும், ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் கொரோனா நோய்த் தொற்றினால் பெற்றோர்களுடன் அனுமதிக்கப்பட்ட 30 குழந்தைகளும் அரசு குழந்தைகள் நல மருத்துவமனை மருத்துவர்களின் தொடர் சிகிச்சையின் மூலம் குணமடைந்துள்ளனர்.
தமிழ்நாடு முழுவதும் அரசு மருத்துவமனைகள் மற்றும் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் கொரோனா நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்ட 45 ஆயிரத்து 222 குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு குணமடைந்துள்ளனர் என விஜய பாஸ்கர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார் என விவரிக்கிறது அச்செய்தி.
தினமணி: ஸ்மார்ட் நகரங்கள் - இந்திய நகரங்கள் பின்னடைவு

பட மூலாதாரம், Jon Hicks
சா்வதேச ஸ்மார்ட் நகரங்கள் பட்டியலில் தில்லி, மும்பை, ஹைதராபாத், பெங்களூரு ஆகிய 4 நகரங்களும் பின்னடைவை சந்தித்துள்ளன என்கிறது தினமணியின் செய்தி.
சிங்கப்பூா் தொழில்நுட்ப பல்கலைக்கழமும், நிர்வாக மேம்பாட்டு கல்வி நிறுவனமும் இணைந்து 2020-ஆம் ஆண்டுக்கான சா்வதேச ஸ்மார்ட் நகரங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளன.
கொரோனா காலத்தில் இந்திய நகரங்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன. கரோனா தொற்றை எதிர்கொள்ள தயார் நிலையில் இல்லாததே அதற்குக் காரணம். மேலும், கரோனா பரவலைத் தடுப்பதில் தொழில்நுட்பத்தை போதிய அளவில் இந்திய நகரங்கள் பயன்படுத்தவில்லை என இந்த ஆய்வு குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிற செய்திகள்:
- தூங்கிக் கொண்டே மணிக்கு 150 கி.மீ வேகத்தில் கார் ஓட்டிய நபர் மீது வழக்கு
- ஹர்சிம்ரத் கெளர் பாதல் ராஜிநாமா - மோதி அமைச்சரவையில் இருந்து விலகும் முதல் பெண் அமைச்சர்
- இந்தியா Vs சீனா: "தலை வணங்கவும் மாட்டோம் தலை எடுக்கவும் மாட்டோம்" - ராஜ்நாத் சிங் மீண்டும் திட்டவட்டம்
- நரேந்திர மோதியின் 70வது பிறந்த நாள்: உலக தலைவராக உருப்பெற காத்திருக்கும் சவால்கள் என்ன?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :












