இந்தியா, வங்கதேச கேப்டன்கள் கைகுலுக்கவில்லை: அண்டர்-19 உலகக் கோப்பையில் நடப்பது என்ன?

19-வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை, கிரிக்கெட், இந்தியா, வங்கதேசம், கேப்டன்கள்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, டாஸின் போது ஆயுஷ் மாத்ரே மற்றும் வங்கதேசத்தின் துணை கேப்டன் ஜவாத் அப்ரார் கைகுலுக்கவில்லை

இந்தியா மற்றும் வங்கதேசம் இடையே தொடர்ந்து அதிகரித்து வரும் பதற்றங்கள், தற்போது 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பை போட்டிகளிலும் எதிரொலித்துள்ளது.

புலவாயோ நகரில் இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையிலான போட்டிகளின்போது, டாஸ் போடும் போது இரு கிரிக்கெட் அணிகளின் கேப்டன்களும் கைகுலுக்கிக் கொள்ளவில்லை.

19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பை போட்டிகள் ஜிம்பாப்வே மற்றும் நமீபியாவில் ஜனவரி 15 முதல் நடைபெற்று வருகிறது.

இந்தியா விளையாடிய முதல் போட்டியில், 6 விக்கெட் வித்தியாசத்தில் (டக்வொர்த் லீவிஸ் விதிப்படி) அமெரிக்காவை தோற்கடித்தது.

சனிக்கிழமையன்று இந்தியா தனது இரண்டாவது போட்டியில் வங்கதேசத்தை எதிர்த்து விளையாடியது. இந்த போட்டியில் கேப்டன்கள் கைகுலுக்காதது உள்நோக்கமற்றது என வங்கதேச கிரிக்கெட் வாரியம் விளக்கம் அளித்துள்ளது.

இந்த இரண்டாவது போட்டியில் இந்திய அணி 18 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

கைகுலுக்காத கேப்டன்கள்

வங்கதேசத்தில் ஷேக் ஹசீனாவின் ஆட்சி கவிழ்க்கப்பட்டதில் இருந்து இந்தியா மற்றும் வங்கதேசத்திற்கு இடையிலான உறவுகள் பதற்றமாகவே இருந்து வருகின்றன. வங்கதேசத்தில் சிறுபான்மையினருக்கு எதிராக நடந்த வன்முறைச் சம்பவங்களுக்குப் பிறகு இந்தியாவிலும் போராட்டங்கள் வெடித்தன.

இந்தியாவுக்கும் வங்கதேசத்துக்கும் இடையே அரசியல் ரீதியாகவும் ராஜாங்க ரீதியாகவும் பதற்றமான நிலை நிலவிவருவதால், 2026 ஐபிஎல் தொடரிலிருந்து வங்கதேச வீரர் முஸ்தஃபிசுர் ரஹ்மானை விடுவிக்குமாறு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியிடம் பிசிசிஐ கேட்டுக்கொண்டது.

இந்த ஒட்டுமொத்த சர்ச்சையின் தாக்கம் இப்போது 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பை போட்டியிலும் காணப்பட்டது. சனிக்கிழமையன்று இந்திய கேப்டன் ஆயுஷ் மாத்ரே மற்றும் வங்கதேச துணை கேப்டன் ஜவாத் அப்ரார் ஆகியோர் டாஸ் போட வந்தபோது, இருவரும் வழக்கமான முறையில் கைகுலுக்கிக் கொள்ளவில்லை.

வங்கதேச அணியின் கேப்டன் அஜீசுல் ஹக்கீம் டாஸ் போடுவதற்கு வரவில்லை, அவருக்கு பதிலாக துணை கேப்டன் அப்ரார் வந்தார். இருப்பினும், அஜீசுல் ஹக்கீம் இந்தியாவிற்கு எதிரான ஆடும் 11 பேர் கொண்ட அணியில் இடம்பெற்றிருந்தார். டாஸ் வென்ற அப்ரார் முதலில் பந்துவீச முடிவு செய்தார்.

19-வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை, கிரிக்கெட், இந்தியா, வங்கதேசம், கேப்டன்கள்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, வங்கதேசத்திற்கு எதிரான போட்டியில் ஆயுஷ் மாத்ரே 6 ரன்களில் ஆட்டமிழந்தார்

வங்கதேச கிரிக்கெட் வாரியம் விளக்கம்

இதனிடையே வங்கதேச கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு ஒன்றில்"உடல்நிலை காரணமாக வழக்கமான கேப்டன் அஜிசுல் ஹக்கீம் டாஸில் கலந்து கொள்ள முடியவில்லை, துணை கேப்டன் ஜவாத் அப்ரார் டாஸில் பங்கேற்றார்." என கூறப்பட்டுள்ளது.

மேலும் "எதிரணி(இந்தியா) கேப்டனுடன் கைகுலுக்காதது முற்றிலும் தற்செயலானது மற்றும் கவனச்சிதறலின் விளைவாகும் என்பதை வங்கதேச கிரிக்கெட் வாரியம் (BCB) தெளிவுபடுத்த விரும்புகிறது. எதிரணியிடம் முரட்டுத்தனமாகவோ அல்லது அவமரியாதையாகவோ நடந்து கொள்ள எந்த நோக்கமும் இல்லை" என்றும் வங்கதேச கிரிக்கெட் வாரியம் (BCB) தெரிவித்துள்ளது.

சமூக வலைதளங்களில் பரபரப்பாகும் விவாதம்

U-19 (19 வயதுக்குட்பட்டோருக்கான) அணி கேப்டன்கள் கைகுலுக்காதது குறித்த விவாதங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இது தொடர்பாக எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ள விளையாட்டுப் பத்திரிகையாளர் அமோல் கர்ஹட்கர், "மைதானத்திற்கு வெளியே விசா ராஜதந்திரம். மைதானத்தில் கைகுலுக்காத கொள்கை. கிரிக்கெட் என்பது ஒரு காலத்தில் கண்ணியவான்களின் விளையாட்டாகக் கருதப்பட்டது," என்று ஆதங்கத்துடன் எழுதியுள்ளார்.

அதேபோல், வங்கதேச கிரிக்கெட் ரசிகர் ஒருவரின் எக்ஸ் வலைதளப் பதிவில், "கை குலுக்காமல் நடத்தும் நாடகம் தொடர்கிறது. இம்முறை இதில் வங்கதேசமும் சேர்ந்துள்ளது" என்று குறிப்பிட்டுள்ளார்.

ஏற்கனவே ஆசியக் கோப்பை போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் 'கைகுலுக்காத' சர்ச்சையும், அது தொடர்பான வாத-விவாதங்களும் விளையாட்டு உலகில் பிரபலமானது.

19-வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை, கிரிக்கெட், இந்தியா, வங்கதேசம், கேப்டன்கள்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இந்தியா மற்றும் பாகிஸ்தான் 'கைகுலுக்காத' சர்ச்சை

இந்தியா - பாகிஸ்தான்: 'கைகுலுக்காத' நிகழ்வு

இதற்கு முன்னதாக, ஆசியக் கோப்பையில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே 'கைகுலுக்காத' விவகாரம் அரங்கேறியுள்ளது. கடந்த ஆண்டு மே மாதம் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட ராணுவ மோதலுக்குப் பிறகு, செப்டம்பர் மாதம் நடந்த ஆசியக் கோப்பையில் இரு நாட்டு அணிகளும் முதன்முறையாக கிரிக்கெட் போட்டியில் ஒன்றையொன்று நேருக்கு நேர் எதிர்கொண்டன.

அப்போது டாஸ் போடும் போது, இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் மற்றும் பாகிஸ்தான் கேப்டன் சல்மான் ஆகா ஆகியோருக்கு இடையே வழக்கமான 'கைகுலுக்கல்' நடைபெறவில்லை. டாஸின் போது கைகுலுக்க வேண்டாம் என்று போட்டி நடுவர் ஆண்டி பைக்ராஃப்ட் இரு அணி கேப்டன்களிடமும் கூறியதாக பாகிஸ்தான் குற்றம் சாட்டியது. இது குறித்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சிஸ் ஐசிசி-இடம் பாகிஸ்தான் புகாரும் அளித்தது.

19-வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை, கிரிக்கெட், இந்தியா, வங்கதேசம், கேப்டன்கள்
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

போட்டி நடுவரை மாற்றாவிட்டால் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு எதிரான போட்டியில் விளையாட மாட்டோம் என்றும் பாகிஸ்தான் கூறிவிட்டது. இதன் காரணமாகவே ஆசியக் கோப்பையில் பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரக அணிகளுக்கு இடையிலான நாக்-அவுட் போட்டி தொடங்க தாமதமானது.

இதன் பிறகு, இந்த விவகாரத்தில் போட்டி நடுவர் ஆண்டி பைக்ராஃப்ட் மன்னிப்பு கேட்டதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்தது. இருப்பினும், 'கைகுலுக்காத கொள்கையை' இரு அணிகளும் ஆசியக் கோப்பையின் இறுதிப் போட்டி வரை கடைப்பிடித்தன. இறுதிப் போட்டியில் இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது.

வெற்றி பெற்ற இந்திய அணி, ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவரும், பாகிஸ்தான் உள்துறை அமைச்சருமான மொஹ்சின் நக்வியிடமிருந்து கோப்பையை வாங்க மறுத்துவிட்டது. அப்போதும் இரு அணிகளுக்கும் இடையே பதற்றம் காணப்பட்டது. மொஹ்சின் நக்வி அந்தக் கோப்பையைத் தன்னுடன் எடுத்துச் சென்றார், இதனால் இந்தியா தான் வென்ற ஆசியக் கோப்பையை இதுவரை பெறவில்லை.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு